16 February 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் வாழ்த்து (31.7.86)

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், பொறுப்பை ஒப்படைத்த 31.7.1986இல்,  ஆய்வாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பிய வாழ்த்துக்கடிதம் வாசிப்போரை மனம் நெகிழவைக்கும்படி இருந்தது.

அவர் காலத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து பணியாற்றியது நினைவில் நிற்கும் அனுபவம். 



தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம்                                                                    
துணைவேந்தர்                                                                                                        நாள்: 31.7.86
வாழ்த்து

இன்று (31.7.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல் பிறர்கையில்  மகிழ்ச்சியுடன் விட்டுச்செல்லும் உணர்வு ஏற்படுகிறது. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயற்பாடும், உறவுமுறையும், தமிழுக்காகச் செய்கின்றோம் என்ற மன நிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்ற ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவுசான்ற சிலரே இடம் பெற  முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப்போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயற்படவேண்டும்.

என்று ஆய்வின் தரங் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும். பொருள் முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலை குலைந்துவிடும். இதனை ஒவ்வொருவரும் நினைவிற் கொள்வது நன்று. இதன் வாழ்வும், வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர்/அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம்.

'அறநெறி தவறாமல் செயற்படுவதே பெரும் அரச வெற்றி' என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம் 

தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன், பிற மாநிலத்தார்கூட  உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல்மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில் அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சியிருப்பின் என் முகம் வாடும்.

அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால் நான் காலமானபின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக. 

நீங்களனைவரும் வளமுற வாழ்த்துகிறேன்.

(ஒம்).....................................
(வ.அய்.சுப்பிரமணியம்)
துணைவேந்தர்



தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட முகப்பில்
இடம் பெற்றுள்ள வாழ்த்தைக் கொண்ட நினைவுச்சின்னம்


அன்னாருடைய அஸ்தியின் ஒரு பகுதி அவர் விருப்பப்படி துணைவேந்தர் இல்ல வளாகத்தின் அருகேயுள்ள மரத்தடியில் புதைக்கப்பட்டு அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுப்பொறிப்பு

-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் 
அவர்களின் 
நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

1 comment:

  1. தமிழ்ப்பணியில் தம்மை முழுதாக ஒப்படைத்த ஒருவரின் மனம் இப்படிதான் இருக்கும்.

    ReplyDelete