31 March 2018

திருஏடகம் ஏடகநாதர் கோயில்

தஞ்சாவூரில் 8 அக்டோபர் 2017 அன்று ஏடகம் (ஏடு+அகம் = ஏடு இருக்கும் இடம்) என்ற அமைப்பு நண்பர் திரு மணி.மாறன் முயற்சியாலும் நண்பர்களின் ஒத்துழைப்போடும் தொடங்கப்பெற்று இலக்கியம், வரலாறு, சுவடியியல் என்ற பல துறைகளில் பங்களிப்பினை ஆற்றிவருகிறது. அந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது, ஏடகம் என்ற சொல்லோடு தொடர்புடைய, மதுரை அருகே உள்ள திருவேடகம் கோயிலுக்கு டிசம்பர் 2015இல் சென்றது நினைவிற்கு வந்தது. வாருங்கள், அக்கோயிலுக்குச் செல்வோம்.

திருஏடகம் (திருவேடகம்) ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டம் வட்டத்தில் சோழவந்தான் அருகில் திருவேடகம் என்னுமிடத்தில் அமைந்துள்ள, ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும்.  நகரப் பேருந்துகள் மதுரையிலிருந்து சோழவந்தானுக்கு உள்ளன. சோழவந்தான் தொடர் வண்டி நிலையம் கோயிலிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருவேடகம், ஞானசம்பந்தரின் திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தினை எதிர்த்து கரையை அடைந்த பெருமையைக் கொண்ட ஊராகும். வைகையின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றபோது பாண்டிய மன்னரின் மந்திரி குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி வைகையாற்றின் நீரோட்டத்தினை எதிர்த்துச் செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து சென்றதாகவும், வைகையாற்றின் கரையில் அது ஒதுங்கியதாகவும், ஏடு ஒதுங்கிய இடத்தில் சிவலிங்கத்தைக் கண்ட மன்னர் அங்கு ஒரு கோயில் அமைத்ததாகவும் கூறுகின்றனர். 

இக்கோயிலில் உள்ள மூலவர் ஏடகநாதர் ஆவார். இறைவி ஏழவார்குழலி. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன.












அடுத்தடுத்து மூலவர் சன்னதியும், இறைவி சன்னதியும் தனித் தனியாக கோபுரங்களைக் கொண்டு அமைந்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து இரு சன்னதிகளும் தனித்தனியாக இரு சிறிய கோபுரங்களைக் கொண்டுள்ளன.

ஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறையில், இப்பதிகத்தின் பாடலில் ஏடு வைகையாற்றின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல வரலாற்றின் சான்றாகக் கூறப்பட்டுள்ள பாடலின் பொழிப்புரையைக் காணலாம்.
"யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டு வரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்ற திருவேடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற இறைவனை நாடிப் போற்றிய, அழகிய புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன் ஓதவல்லவர்களுக்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினைகளில் இருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்."



திருவேடகம் சென்று திரும்பும்போது ஞானசம்பந்தர் பாடல் பெற்ற மற்றொரு தலமான திருவாப்புடையார் கோயிலுக்குச் சென்றோம்.  திருஆப்பனூர் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் மூலவர் இடபுசேரர், ஆப்புடையார், அன்னவினோதன் என்றழைக்கப்படுகிறார். இறைவி குரவங்கழல் குழலி ஆவார். கோயில் பூட்டியிருந்தபடியால் உள்ளே செல்லமுடியாமல் போனது. இருப்பினும் அடுத்தடுத்து ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலங்களுக்குச் சென்ற மன நிறைவோடு, வாசலில் இருந்தே இறைவனை தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.


மதுரை மாவட்டத்தில் பாடல் பெற்ற தலங்களாக திருஆலவாய் (மதுரை), திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருஏடகம், கொடுங்குன்றம், திருப்புத்தூர், திருப்புனவாயில், இராமேஸ்வரம், திருஆடானை, திருக்கானப்பேர், திருப்பூவணம் (திருப்புவனம்), திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி ஆகிய 14 தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மதுரை, திருப்பரங்குன்றம், திருப்புத்தூர், இராமேஸ்வரம், திருப்புவனம், குற்றாலம், திருநெல்வேலி ஆகிய தலங்களுக்குச் சென்றுள்ளேன். 7 டிசம்பர் 2015இல் திருஏடகம் மற்றும் திருஆப்பனூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மீதமுள்ள பிற கோயில்களுக்குச் செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். 

துணை நின்றவை:
திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில் (விக்கிபீடியாவில் உள்ள புகைப்படங்கள் நான் கோயிலுக்குச் சென்றுவந்தபின் இணைக்கப்பட்டவை)

24 March 2018

மைசூர் : மெழுகுச் சிலை அருங்காட்சியகம்

ஆகஸ்டு 2017 மைசூர் பயணத்தின்போது மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். மைசூர் அரண்மனையிலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலுள்ள இந்த அருங்காட்சியகம் Melody World Wax Museum என்றழைக்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுநர்  திரு ஸ்ரீஜி பாஸ்கரன் என்பவரால் அக்டோபர் 2010இல் இது நிறுவப்பட்டதாகும். இதுபோன்ற மெழுகுச்சிலை அருங்காட்சியங்களை இவர் உதகமண்டலத்தில் மார்ச் 2007இலும், பழைய கோவாவில் சூலை 2008இலும் அமைத்துள்ளார்.  



வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் தலைவர்களையும், முக்கியப் பிரமுகர்களையும் மெழுகுச் சிலைகளாக, நேரில் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது போல படித்திருந்தபோதிலும் அவ்வாறான சிலைகளைக் காணும் வாய்ப்பு மைசூர் சென்றபோது எங்களுக்குக் கிடைத்தது.

90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. மெல்லிசை உலகம் என்றழைக்கப்படுகின்ற இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த பல வகையான இசைக்கருவிகள் காணப்படுகின்றன. கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான இசைக் கருவிகளை இங்கு காணலாம். ஆளுயர (life size) சிலைகள் இங்குள்ளன. இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைக்கலைஞர்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. 

19 பிரிவுகள் இங்கு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இசையின் நுணுக்கத்தையும், கலையின் சிறப்பான அனுபவத்தையும் காண முடியும். பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 110 ஆளுயர மெழுகுச் சிலைகள் இங்கு உள்ளன. இந்திய செவ்வியல் இசையான இந்துஸ்தானி, மற்றும் கர்நாடகா, பஞ்சாபி பங்கரா, மத்தியக் கிழக்கு, சீனா, மலையகம், ஜாஸ், ஹிப்ஹாப், ராக் உள்ளிட்ட பல குழுக்களைக் குறிக்கின்ற வகையில் இசைக்குழுக்கள் உள்ளன.

மைசூரின் அந்நாளைய மன்னரான நால்வடி கிருஷ்ணராஜ வாடியாரின் சிலை இங்குள்ளது. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற முக்கிய சிலையாக அது உள்ளது. பல சிலைகள் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றன. ஆளுயர மெழுகுச் சிலையை இரண்டிலிருந்து நான்கு மாதத்தில் உருவாக்கலாம் என்றும் அதனை உருவாக்க 50 கிலோவிற்கு மேற்பட்ட மெழுகு தேவைப்படும் என்றும் தெரிவித்தனர். சிலை அமைக்கப்பட்டவுடன் அதற்குப் பொருந்தும் வகையில் உரிய ஆடையும், அணியும் அதற்கு அணிவிக்கப்படுகின்றனவாம்.

பல வகையான இசைக்குழுக்களும் மேடை அமைப்புகளும் காணப்படுகின்றன. மெழுகுச் சிலைகள் சிற்பியின் திறமையையும், சிற்பியின் கலை தாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. இளையோர் முதியோர் என அனைவரையும் கவர்கிறது இந்த அருங்காட்சியகம். ஒரு மெழுகுச்சிலையைத் தயாரிக்க ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சம் வரை ஆகிறது. சிலையின் கண்களும் பற்களும் செயற்கையானவை. உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக பெரும்பாலும் சின்தெடிக் அல்லது உண்மையான முடி பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள சிலைகள் விற்பனைக்கு அல்ல. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பகுதியில் பார்வையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு இசைக்கருவிகளை இசைக்கும் வசதி உள்ளது. நாங்கள் சென்றிருந்தபோது பலர் குழுவாகவும், தனியாகவும் அந்த இசைக் கருவிகளை இசைத்து மகிழ்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. அவ்வாறு உள்ளே செல்பவர்களுக்கு வெளியே வர மனமில்லாமல் உள்ளது. மாறிமாறி இசையெழுப்பிக்கொண்டு ரசனையாக அவர்கள் அதனை அனுபவிக்கின்றனர். 



மைசூர் மன்னர் நரசிம்மராஜ வாடியார்















மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ வாடியார்
அந்தந்த பிரிவுகளில் உள்ள காட்சிக்கூடங்களில் அந்த சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது ஒரு புதிய உலகிற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது. அவ்வாறே இசைக்கருவிகள் கண்ணாடிப்பேழைக்குள் உரிய குறிப்புகளோடு நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. அவற்றின் வேலைப்பாடும், நுணுக்கமும் நம்மை வியக்கவைக்கின்றன.

காலை 9.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். விடுமுறை நாள் கிடையாது. பார்வையாளருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டில் கேமராவிற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது இந்த அருங்காட்சியகம் செல்லலாம்.

புகைப்படங்கள் எடுக்க உதவி : 
என் மனைவி திருமதி பாக்கியவதி, இளைய மகன் திரு சிவகுரு

நன்றி: 
------------------------------------------------
கர்நாடக உலா : இதற்கு முன் பார்த்த இடங்கள்/வாசித்த பதிவுகள்
------------------------------------------------

17 March 2018

பாப் அப் ஷாப் : உலக மகளிர் தினம்

கடந்த மாதம் Syndicate என்ற சொல்லுக்கான பொருளையும், பயன்பாட்டையும் அறிந்தோம். அண்மையில் அயலக இதழ்களை வாசிக்கும்போது மகளிர் தினத்தை முன்னிட்டு pop up shop அமைக்கப்படுவதாக ஒரு செய்தியைப் படித்தேன். அதற்கான பொருளைத் தேடிச் சென்றதன் அடிப்படையில் அமைந்தது இப்பதிவு. 

Pop-up retail என்பதானது pop-up store (ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்தில் pop-up shop) என்பதானது குறுகிய காலத்தில் அமைக்கப்படுகின்ற விற்பனைக்கான இடமாகும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக குறிப்பிட்ட காலம் மட்டுமே அமைக்கப்படுகின்ற தற்காலிகக் கடையாகும். 

நம் நாட்டில் திருவிழாக் காலங்களில் குறிப்பாக கோயில் விழாக்களின்போது இவ்வாறாகத் தற்காலிகக் கடைகள் அமைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நவராத்திரியின்போது காணப்படுகின்ற கடைகளே எனக்கு நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு வருடமும் அவ்விழாவின்போது பொருள்களை வாங்குவதையே பலர் வழக்கமாகக் கொண்டுள்ளதை நான் நேரில் கண்டுள்ளேன். 

பாப் அப் ஷாப்பின் முக்கியமான இலக்குகள் வருமானத்தை மேம்படுத்துதல், குறிப்பிட்ட பொருள் தொடர்பான விழிப்புணர்வினை உண்டாக்குதல், வாடிக்கையாளர்களை தம் பக்கம் ஈர்த்தல் என்பனவாகும். முதன்முதலாக லாஸ் ஏஞ்சல்சில் அறிமுகமான இந்த கடை தற்போது அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. சொல்லுக்கான பொருளைக் கண்டோம். இவ்வாறான ஒரு தற்காலிகக் கடை மகளிர் தினத்தை முன்னிட்டுத் திறக்கப்பட்டிருந்ததை இனி பார்ப்போம்.

உலக மகளிர் தினம் மற்றும் மகளிர்க்கான வாக்களிப்பு உரிமை நீடிப்புச்சட்ட நூற்றாண்டு தினம் ஆகிய இரு தினங்களையும் நினைவுகூறும் வகையில்  லைக் எ உமன் (Like a woman) என்ற தற்காலிகப் புத்தகக் கடையை  (pop-up shop), உலகப்புகழ் பெற்ற புத்தக நிறுவனமான பெங்குவின் நிறுவனம், வாட்டர்ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து  2018 மார்ச் 5 முதல் 9 வரை லண்டனில் ரிவிங்டன் தெருவில் திறந்தது. 240க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களின் நூல்கள் இதில் இடம்பெற்றன.   


ஆங்கில பெண் எழுத்தாளரான விர்ஜீனியா ஊல்ப் (1882-1941), கனடா நாட்டு பெண் எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் (பி.1939) ஆகியோரின் நூல்களுக்கு இடம் உண்டு என்றும், அயர்லாந்தின் புதின ஆண் எழுத்தாளரான ஜேம்ஸ் ஜாய்ஸ் (1882-1941), பிரிட்டனைச் சேர்ந்த புதின ஆண் ஆசிரியர் (பி.1949) ஆகியோரைப் போன்றோரின் நூல்களுக்கு இங்கு இடமில்லை என்றும் இந்நிறுவனம் கூறுகிறது. கிழக்கு லண்டனில் திறக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கடையில் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாற்றத்திற்காகப் போரிட்ட பெண்களின் நிலைபேற்றினைக் கொண்டாடும் வகையிலான புத்தகக்கடை என்கிறது பெங்குயின்.



அந்தந்த நூலாசிரியர்கள் பண்பாடு, வரலாறு மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் நூல்களின் தலைப்புகள் பகுப்பு அமைந்திருந்தது. “மகளிர் வாசிக்கவேண்டியவை, “எழுச்சியுறும் இளம் வாசகர்கள்”, “கவனிக்கப்படவேண்டிய மகளிர்”, “மாற்றம் கொணர்வோர்” உள்ளிட்ட பல பிரிவுகள் இதில் அடங்கும்.


குழந்தைகளுக்கான பெண் எழுத்தாளர்களான மலோரி பிளாக்மேன் (பி.1962), ஜாக்குலின் வில்சன் (பி.1945)  மற்றும் ஐரிஸ் மர்டோ (1919-1999), கெய்ட்லி மோரன் (பி.1975), மலாலா யூசுப்சையி (பி.1997), ஜாடி ஸ்மித் (பி.1975), ஆகியோரின் நூல்கள் இதில் இடம்பெறவுள்ளன. 100 அசாதாரண மகளிரின் கதைகளைக் கொண்ட குட்நைட் ஸ்டோரீஸ் ஃபார் ரிபல் கேர்ல்ஸ்  (Goodnight Stories for Rebel Girls) என்ற நூலை இணைந்து எழுதிய இத்தாலிய பெண் எழுத்தாளரும் தொழில் முனைவோருமான எலினா ஃபாவிலி மற்றும்  இத்தாலிய பெண் எழுத்தாளரும் தொழில் முனைவோரும் நாடக இயக்குநருமான  ஃப்ரான்சஸ்கா காவல்லோ ஆகியோரின் படைப்புகளும் இடம் பெறும். இலக்கியப் பிரிவில் கட்டே அட்கின்சன் (பி.1951) மற்றும் ஏலிஃப் சஃபாக் (பி.1971), கிலாசிக் வரிசையில் ஆன் பிராங்க் (1929-45) மற்றும்  மேரி உல்ஸ்டன் கிராப்ட்  (1759-1797) உள்ளிட்டோரின் நூல்கள் இடம் பெற்றிருந்தன.

எங்கும் பெண்களின் குரல்கள் கேட்கப்படுவதுடன் உன்னிப்பாக கவனிக்கப்படும் நிலையில் பாலின சமத்துவத்தைக் கொணர இது ஒரு திறவுகோலாக இருக்கும் என்றும், இவை போன்ற குரல்கள் வெளிப்படவும், கொண்டாடப்படவும் இதுபோன்ற புத்தகக்கடை பெரும் பங்களிப்பு செய்யும் என்றும் பெங்குயின் ராண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் படைப்பு மேலாளர் ஜைனாப் ஜுமா கூறுகிறார். மேலும் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர்களையும், ஆர்வலர்களையும், முன்னோடிகளையும் காண்பதற்கான ஓர் அரிய வாய்ப்பினைத் தந்துள்ளதாகவும், அவர்கள் மூலமாக வாசகர்கள் முன்னுக்குச் செல்வதற்கான ஒரு தூண்டுகோலைப் பெறுவதோடு மாற்றத்தினையும் உணர்வர் என்றும் கூறினார்.
விழா நாட்களில் இந்த புத்தகக்கடையில் பல இலக்கிய நிகழ்வுகளும், பணிப்பட்டறைகளும் நடைபெற்றன. மகளிரின் நூல்களும் வெளியிடப்பட்டன.
மகளிரின் குரலை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்ற  இவ்வாறான வித்தியாசமான புத்தகக்கடையைத் திறப்பது என்பதானது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது என்கிறார் வாட்டர்ஸ்டோன்ஸ் விழா மேலாளர் லூசி கிரைய்ன்கெர்.  
புத்தகக்கடை திறப்பு மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகளை பெங்குவின் தன் இணையதளத்தில் (https://www.penguin.co.uk/likeawoman/) தொடர்ந்து வெளியிட்டு வந்தது. மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடிய அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுவோம். 

துணை நின்றவை 

10 March 2018

Yours sincerely : K. Natwar Singh

கடந்த இரு வாரங்களாக கோயில் உலாவும், வரலாற்று உலாவும் சென்று வந்துள்ள நிலையில் இந்த வாரம் வாசிப்பு அனுபவத்தைக் காண்போம். நான் ரசித்துப் படித்த நூல்களில் கே.நட்வர்சிங் எழுதிய Yours Sincerely என்ற நூலும் ஒன்றாகும். நட்வர்சிங்கின் கட்டுரைகளை அவ்வப்போது The Hindu இதழில் படித்துள்ளேன். பல்வேறு பொறுப்புகளில் அவர் இருந்தபோது எழுதிய கடிதங்களும், அவருக்கு வந்த கடிதங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவருடைய Walking with lions நூலை மிகவும் விரும்பிப் படித்துள்ளேன். 

அவருடைய மொழிநடையை நான் அதிகம் ரசித்ததுண்டு. நூலின் முன்னுரையில் பின்வரும் சொற்றொடர் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரே சொற்றொடரில் தன்னுடன் தொடர்புள்ளவர்களின் குணாதிசயங்களை மிக அழகாகக் கூறியுள்ளார். "In my mind are stored the memories of Indira Gandhi's grace and gravitas, Forster's subtlety of mind, his genuine gift for friendship, His Holiness the Dalai Lama's luminous spirituality, Rajaji's calm self-awareness, Morarji Desai's refrigerated acerbity, P.N.Haksar's equanimity and wit, Mountbatten's cynosural narcissism, Julius Nyerere's Calvinism, J.R.Jawardhane's composure, Kenneth Kaunda's Afracanised Gandhism, Hiren Mukherjee's Marxist prose, Mulk Raj Anand and Ahmed Ali's benign prolixity, Raja Rao's sublime impractibility, Vijayalakshmi Pandit's staggering candour, her sister Krishna Hutheesing's valetudinarianism, Thakazhi Sivasankara Pillai's rural charm, Han Suyin's ruffled disquiet, R.K.Narayanan's anti-hero stance, Husain's artistic genius, Nirad C.Chaudhari's schadenfreude, Nadine Gordimer's literary triumphs............." (p.viii). இனி அவருக்குப் பிறர் எழுதிய கடிதங்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம். (எழுதியவர் பெயரும், எழுதிய நாளும் தரப்பட்டுள்ளன)

இந்திரா காந்தி/7.11.1970
...எங்களைவிட நீங்கள் அருமையாகத் திட்டமிடுகின்றீர்கள்... எனக்கு ஒரு மகள் வேண்டும் என்ற ஆசையுண்டு. ஆகையால் ஜகத்துக்கு தங்கை பிறந்திருக்கிறாள் என்பதை அறியும்போது நீங்கள் எந்த அளவு மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது...... (ப.5)


இந்திரா காந்தி/13.10.1974
...உலகின் பல பகுதிகளில் மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பகிர்வதற்கு நன்றி...உள்நாட்டுக் குழப்பம் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன்....அதிக நூல்களை சேகரிக்கிறேன், ஆனால் சில மாதங்களாக படிக்க எனக்கு நேரமில்லை... (ப.12)

ஈ.எம்.போர்ஸ்டெர்/31.3.1959
...இப்பொழுதுதான் பி.ராஜன் எழுதிய The Dark Dancer நூலைப் படித்து முடித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். எனக்கு அந்த நூல் மிகவும் பிடித்துவிட்டது..சௌத்ரியின் Passage to England நூலின் மெய்ப்பினைப் பார்த்தேன்......  (ப.102)

விஜயலட்சுமி பண்டிட்/24.1.1966
...இறுதியில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு ஒரு பெண்ணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்துவின் வெற்றி பெரிய வரலாற்றைப் படைத்துவிட்டது......இந்தத் தேர்தலை உலகம் பாராட்டியவிதம் இதயத்திற்கு இதமளிக்கிறது.... (ப.102)


நர்கீஸ் சுனில் தத்/10.7.1976
....என்னை நேசித்த மக்களே தற்போது என்னைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்....நான் ஒரு குற்றவாளியைப் போல உணர்கிறேன்...எனக்காக நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறேன்.  நீங்கள் மட்டும் முயற்சி எடுத்திராவிட்டால் என் மக்களாலேயே நான் கொல்லப்பட்டிருப்பேன். அல்லது அவமானத்தைத் தாங்க முடியாமல் நானே இறந்திருப்பேன்...தங்கள் முயற்சிக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் திருமதி இந்திரா காந்தியை சென்று பார்த்து நடந்தனவற்றைக் கூறுவேன்.....  (ப.106)

ஷப்னா ஆஸ்மி/13.5.1999
...இதுவரை அறிந்திரப்படாத புகழ்பெற்ற பல ஆண்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் உங்கள் நூலில் அதிகமான செய்திகள் உள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால் ஆர்.கே.நாராயணனின் Refrigerator Storyஐ நான் மிகவும் ரசித்தேன்....(ப.122)

ஆர்.கே.நாராயணன்
....நீங்கள் எழுதிய Tiger of Malgudi கட்டுரையைப் படித்தேன். மிக அருமை. 1955இல் மறக்க முடியாத நாளான நம் சந்திப்பிலிருந்து நம் தொடர்பைப் பற்றி அழகாக நினைவுகூர்ந்து எழுதியுள்ளீர்கள். அந்த இனிமையான நிகழ்வு நடந்து 30 வருடங்கள் ஓடிவிட்டன என்பதை என்னால் நம்பமுடியவில்லை.. நீங்கள் எழுதும் நடை சிறப்பாக உள்ளது...உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனக்கு எழுதுங்கள்...(ப.123)


ஆர்னால்டு டாய்ன்பி/13.10.1964
...நேருவைப் பற்றி நீங்கள் எழுதவுள்ள நூலுக்கு நான் கட்டுரை அனுப்ப விழைகின்றேன்....இப்போது உள்ள அதிகமான பணிப்பளுவின் காரணமாக புதிதாக எழுத இயலா நிலையில் உள்ளேன். எனவே, நீங்கள் கேட்டுக்கொண்டபடி முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையை அனுப்புவேன்.... (ப.130)

தகழி சிவசங்கர பிள்ளை/28.10.1964
...14 அல்லது 15 வயதில் நான் எழுத ஆரம்பித்தேன். அது நானாக எடுத்த முடிவல்ல. எழுதினேன், எழுதினேன், எழுதிக்கொண்டே இருந்தேன்...இன்னும் எழுதுகிறேன். என் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பிரெஞ்சு எழுத்தாளர்களான Flaubert, Balzac,Mauppasant, Hugo, ரஷ்ய எழுத்தாளர்களான Dostoyevsky, Gogol,. Turgenev, Tolstoy மற்றும் பலர். என் எழுத்துக்கு எந்த இந்திய எழுத்தாளரும் காரணமல்ல. காரணம் மலையாளம் தவிர எனக்கு எந்தமொழியும் தெரியாது....(ப.132)

அபு அப்ரஹாம்/26.8.1967
...The Statesman மார்ச் இதழில் வெளியான முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதம மந்திரிகளின் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். சுதந்திர தினத்தன்று The Guardian இதழில் இந்திரா காந்தி வரைந்திருந்த படம் வெளியாகியிருந்தது....(ப.137)

ஜுபின் மேதா/8.3.1984
...நான் புதுதில்லி வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது...என் இசைக் குழுவினருடன் புதுதில்லி வரவுள்ளேன்..தற்போது அங்குள்ள நிலை குறித்து எழுதவேண்டுகிறேன். நான் வருவதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. இது தொடர்பாக அவ்வப்போது நியூயார்க்கில் புபுல் ஜயகரைச் சந்தித்துவருகிறேன்...(ப.148)

புரியாத அல்லது ஊகிக்க முடியாத இடங்களில்...........என்று புள்ளி வைத்துள்ளார். சில இடங்களில்------------என்று கோடிட்டுள்ளார்.  காலவரிசைப்படி எழுதியிருந்தால் வரலாற்றுரீதியாகச் செய்திகளைப் புரிந்துகொள்ள எளிதாக இருந்திருக்கும். சில கடிதங்களில் நபரைப் பற்றிய குறிப்பும், சில கடிதங்களில் நாளும் காணப்படவில்லை. இருப்பினும் இவ்வாறாக பல ஆண்டுகளாகத் தொகுத்துவைத்த கடிதங்களைத் தொகுத்துத் தெரிவு செய்து வெளியிட்டது ஓர் அரிய முயற்சியாகும். அம்முயற்சியைப் பாராட்டும் வகையில் இந்நூலை வாசிப்போம். 

நூல் : Yours Sincerely, 
ஆசிரியர் : K.Natwar Singh
பதிப்பகம் :  Rupa & Co., New Delhi
ஆண்டு :  2010
விலை :  Rs.395

இதற்கு முன் நாம் வாசித்த இவருடைய நூல்கள் தொடர்பான பதிவுகள்
மனிதரில் மாணிக்கங்கள் : தினமணி புத்தாண்டு மலர் 2014 Walking with lions Tales from a diplomatic past: K. Natwar Singh

06 March 2018

ஏடகம் : வரலாற்று உலா : 25 பிப்ரவரி 2018

தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட ஏடகம் அமைப்பின் நோக்கங்களில் ஒன்று பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் தமிழகக் கலையியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும்,  கட்டட மற்றும் சிற்பங்கள் சார்ந்த பண்பாட்டுப் பதிவுகளைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவதும் ஆகும். அவற்றின் அடிப்படையில் ஏடகம் தன்னுடைய முதல் வரலாற்று உலாவினை அண்மையில் தொடங்கியது. நண்பர் திரு மணி.மாறன் அழைப்பின்பேரில் அவ்வுலாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

25 பிப்ரவரி 2018 காலை காலை சுமார் 6.00 மணிக்கு சுவடிப்பயிற்சி மாணவர்களும், உள்ளூர் பெருமக்களும் உள்ளடக்கிய 15 பேர் அடங்கிய குழுவினர் தஞ்சாவூர் மேலவீதியிலிருந்து இந்த உலாவில் கலந்துகொண்டனர். 

தாழமங்கை சௌந்தரமௌலீஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயிலுக்கு முன்பாக சாலையின் மேற்புறம் உள்ளது) தஞ்சாவூரிலிருந்து வேனில் புறப்பட்டு செல்லும் வழியில் சக்கராப்பள்ளி சப்தமங்கைத்தலங்களில் ஒன்றான தாழமங்கை (சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை)  சௌந்தரமௌலீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பசுபதிகோயிலுக்கு முன்பாக இக்கோயில் உள்ளது. கோயில் பூட்டியிருந்த படியால் உள்ளே செல்லமுடியவில்லை. தொடர்ந்து பயணித்தோம்.

புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டை அருகே செல்லும்போது வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் சாலையில் உள்ளது)  



அடுத்து காவிரியின் தென் கரையிலுள்ள, ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயிலுக்குச் சென்றோம். சூரியன் சற்று வெளியே வர கோயில் வளாகத்தின் கண்கொள்ளாக்காட்சியை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம். இக்கோயில் முதற்பராந்தக சோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்தது. கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாகும். கருவறையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள மிக நுட்பமான சிற்பங்கள் கலையார்வலர்களால் போற்றப்படக்கூடியனவாகும். இதுவும் சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்களில் ஒன்றாகும். பார்க்கப் பார்க்க ஆவலைத் தூண்டும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.  

பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கில் 0.5 கிமீ தொலைவில் பிரிவு சாலையில் உள்ளது)
அங்கு சென்றபோது உடன் வந்த நண்பர் திரு தில்லை கோவிந்தராஜன் அருகே காளாபிடாரி சிலையைக் காணலாம் என்று கூறினார். அவருடைய ஆலோசனைப்படி அங்கிருந்து சாலையின் குறுக்கே சென்று பசுபதிகோயில் என்னும் சிற்றூரிலுள்ள பசுபதீஸ்வரர் கோயில் சென்றோம்.  கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றான இக்கோயில் பிற்காலத்தில் காவிரியின் வெள்ளத்தாலும் மாலிக்காபூர், ஆற்காடு நவாப் போன்றோரின் படையெடுப்பின் காரணமாகவும் பேரழிவினைச் சந்தித்தது. வாசலில் இருந்து கோயிலைப் பார்த்துவிட்டு காளாபிடாரியைக் காணச் சென்றோம்.

காளாபிடாரி சிலை  (பசுபதீஸ்வரர் கோயிலின் எதிரே வயலில் 1 கிமீ நடந்து சென்றால் சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது) 

பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள வயல் வரப்புகளைக் கடந்து சுமார் 1 கிமீ அனைவரும் நடந்து சென்றோம். காலை உணவு உண்ணாத நிலையில் அவ்வாறாகச் செல்வது உடன் வந்தோருக்கு சற்றுச் சிரமமாக இருந்தபோதிலும் அனைவரும் ஒத்துழைத்தனர். சற்றே உயர்ந்த இடத்தில், மேடான பகுதியில் அந்த காளாபிடாரி சிலையைக் காணமுடிந்தது. புள்ளமங்கை கோயிலின் கல்வெட்டில் மதுராந்தக சோழன் காலத்திலும், ஆதித்த கரிகாலன் காலத்திலும் நடுவிற்சேரி ஸ்ரீகாளாபிடாரி என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சிலப்பதிகாரத்தில் உரகக்கச்சுடை முளைச்சி என்று குறிக்கப்படும் காட்சியை இந்த சிற்பத்தில் காணமுடிகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தகு பெருமை வாய்ந்த அன்னையின் சிலையைப் பார்த்த அனைவரும் வியந்தனர். அழகான தேவியின் சிற்பத்தின் முகத்தில் தற்போது ஆங்காங்கே சில வேலைப்பாடுகளை தற்போது செய்ததுபோலக் காணமுடிந்தது. காளாபிடாரிக்கு சிறிய கோயில் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அடுத்து அய்யம்பேட்டை சென்று காலை உணவினை முடித்துக்கொண்டு தாராசுரம் நோக்கிப் பயணித்தோம்.  

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவலஞ்சுழியை அடுத்து, கும்பகோணத்திற்கு சற்று முன்பாக உள்ளது)




இரண்டாம் ராஜராஜனால் (கி.பி.1014-1044) கட்டப்பட்ட இக்கோயில், தஞ்சாவூர் பெரிய கோயிலையும், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலையும் நினைவுபடுத்தும். இந்த மூன்று கோயில்களும் கிட்டத்தட்ட ஒரே பாணியில் அமைந்தவையாகும். நந்தியின் அருகே உள்ள பலிபீடத்தில் காணப்படுகின்ற படிக்கட்டு பலவித இசையை எழுப்பும். தேர் வடிவில் அமைந்துள்ள ராஜகம்பீரன் மண்டபத்திலுள்ள சிற்பங்களும், பெரிய புராணக் கதையை விளக்கும் சிற்பங்களும் மிகவும் புகழ் பெற்றனவாகும். தஞ்சாவூர், கங்கைகொண்டசோழரம் கோயில்களோடு ஒப்பிடும்போது இது சற்றே சிறியதாக இருப்பினும் நுட்பமான, சிறிய சிற்பங்கள் இக்கோயிலின் சிறப்பாகும். கும்பகோணத்தில் என் பள்ளிக்காலம் முதல் நான் அடிக்கடி சென்றுவரும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். நாங்கள் ரசிப்பதைப் போல ஒரு வெளிநாட்டவர் கூர்ந்து ஆர்வமாக ரசித்து வருவதைப் புகைப்படமெடுத்தோம். நம் கோயிலின் கலையழகினை வெளிநாட்டவர் ரசிக்கும்போது நமக்குப் பெருமையாக இருக்கிறதல்லவா?

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயில் (அரியலூர் மாவட்டத்தில் உள்ளது)






தாராசுரத்திலிருந்து எங்கள் பயணம் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கித் தொடர்ந்தது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஒரே பாணியில் அமைந்த கோயிலைப் பார்க்கப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியை அனைவருடைய முகத்திலும் காணமுடிந்தது. முதலாம் ராஜேந்திரனால் (கி.பி.1012-1044) கட்டப்பட்ட இக்கோயில் தஞ்சாவூர் கோயிலுள்ளவாறே பெரிய துவாரபாலகர்களைக் கொண்டுள்ளது. கருவறையிலுள்ள மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் நந்தி அமைக்கப்பட்டுள்ளது. கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக சந்திரகாந்தக்கல் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர். கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அலைபேசிவழியாக நாங்கள் தொடர்புகொள்ள முயன்ற பொறியாளர் திரு கோமகன் அவர்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அங்குள்ள சிற்பங்களைப் பற்றிய அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களையும் சந்தித்தோம். கலையார்வலர்கள் சந்திக்கும்போது ஏற்படும் நெகிழ்ச்சியினை எங்களுக்குள் உணர்ந்தோம். 

இராசேந்திரசோழன் வரலாற்று அகழ்வைப்பகம் (கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் மிக அருகில் உள்ளது)
எம்பெருமான் தரிசனம் முடித்தபின்னர் அருகிலுள்ள இராசேந்திரசோழன் வரலாற்று அகழ்வைப்பகம் சென்றோம். அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது முழுக்க முழுக்க கோயில்களைப் பார்த்த நிலையிலிருந்து சற்றே மாற்றத்தை உணர்ந்தோம். அருமையான தொல்பொருள்கள், பல மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த அரிய சிற்பங்களைக் கண்டோம். என் பௌத்த ஆய்வு தொடர்பாக இங்கு பல முறை வந்துள்ள போதிலும், நண்பர்களோடு வருவது என்பதானது சற்றே வித்தியாசமாக இருந்தது. காட்சிப்பேழையில் இருந்த, நான் முன்னர் பார்த்த வலங்கைமானைச் சேர்ந்த  புத்தர் சிலையின் கீழ் கங்கைகொண்ட சோழபுரம் என்ற குறிப்பினைக் கண்டேன். இதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகக் காண்போம்.   

மாளிகைமேடு (கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ளது)

அங்கிருந்த அருங்காட்சியக நண்பரிடம் மாளிகைமேட்டிற்குச் செல்வதற்கான வழியைக் கேட்டுக்கொண்டு மாளிகைமேடு சென்றோம். சோழ மன்னர்களால் ஆயிரமாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரண்மனை இருந்த இடத்தில் அக்கால கட்டட அமைப்புகளைக் கண்டோம். 1980 முதல் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் செங்கற்களால் கட்டப்பட்ட அரண்மனை சுவர்கள்,  இரும்பு ஆணிகள், தந்தத்திலான பொருள்கள், வண்ண வளையல்கள் உள்ளிட்ட பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இரட்டைக்கோயில் (அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் மேலப்பழுவூருக்கு சற்று முன்பாக உள்ளது).


மாளிகைமேட்டிலிருந்து இரட்டைக்கோயில் செல்லக்கோயில் செல்லத் திட்டமிட்டு அக்கோயிலை நோக்கிப் பயணித்தோம். செல்லும் வழியில் மதிய உணவினை உண்டோம். பயண அனுபவத்தை பேசிக்கொண்டே இரட்டைக்கோயில் சென்றுசேர்ந்தோம். சோழர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையரின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியான கீழையூரில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அவனிகந்தர்ப்பஈசுவரகிரக வளாகத்தில் இரு கோயில்கள் உள்ளன. வடபுறத்தில் உள்ள கோயில் சோழீச்சரம் என்றும் தென்புறத்தில் உள்ள கோயில் அகத்தீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முற்காலச் சோழர் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயில்கள் விளங்குகின்றன. காலையிலிருந்து பயணித்த நிலையில் இக்கோயிலின் திருச்சுற்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். 

மேலப்பழுவூர்  மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் (அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது).

பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக மேலப்பழுவூரிலுள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மூலவரான லிங்கத்திருமேனியைச் சுற்றி வரும் வகையில் சிறிய வழி அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளதைப் போன்று இக்கோயிலில் இந்த அமைப்பு உள்ளது. இக்கோயிலின் நந்தி வித்தியாசமான கலையமைப்போடு இருந்ததைக் கண்டோம்.

காளாபிடாரி சிற்பத்தைத் தவிர மற்ற கோயில்களுக்கும், அருங்காட்சியகத்திற்கும் முன்னர் பல முறை சென்றுள்ளேன். இருந்தாலும் தற்போது ஒரே நாளில் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களைப் பார்த்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, தொடர்ந்து பயணித்து நிறைவாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். வேனை விட்டு இறங்கும் போதே அடுத்த பயணத்திற்கான திட்டமிடலையும், நாளையும் மனம் ஆவலோடு எதிர்பார்த்ததை உணர்ந்தேன். என் எதிர்பார்ப்பை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டு  விடை பெற்றேன். 

நன்றி
அருமையான வரலாற்று உலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற ஏடகம் அமைப்பிற்கும்,  பொறுப்பாளர்களுக்கும் என் சார்பாகவும், உடன் வந்தோர் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

துணை நின்றவை
அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004