21 February 2016

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் : இந்து சமய அறநிலையத்துறை

2016 மகாமகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள சிறப்பு மலர் 256 பக்கங்களுடன்  சுமார் 40 கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. மகாமகம், தீர்த்தங்கள், சைவம், வைணவம், சிறப்பான தலங்கள் என்ற நிலையில் பன்னோக்கில் கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது இம்மலர்.

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் முகப்பட்டை

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் பின் அட்டை


தமிழக முதலமைச்சர் மற்றும் செய்தி, உணவு இந்து சமயம் மற்றும அறநிலையத்துறை அமைச்சரின் வாழ்த்துச்செய்திகள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலரின் முன்னுரை, தருமபுர ஆதீனம், காசி மடம், ஸ்ரீஅஹோபில மடம் ஆகிய மடாதிபதிகளின் ஆசியுரைகள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ள இம்மலர் ஆர்ட் தாளில் அருமையான வண்ணப்படங்களுடன் அமைந்துள்ளது.

தெய்வம் (திரு வி.க.), மகாமகம் (உ.வே.சாமிநாதையர்), இறை வழிபாடு (கிருபானந்தவாரியார் சுவாமிகள்), குடந்தைக் கும்பேசர் (தொ.மு.பாஸ்கர தொண்டைமான்), காவிரிக் கரை நாகரிகம் (மா.இராசமாணிக்கனார்), கவின் கலைக்கல்லூரி மாணவர்களின் கலை ஓவியங்கள் உள்ளிட்ட பல பதிவுகள் மலருக்கு அணி சேர்க்கின்றன.

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி, திருநாகேஸ்வரம் அருள்மிகு ஒப்பிலியப்பன், அருள்மிகு நெல்லையப்பர், அருள்மிகு பார்த்தசாரதி, அருள்மிகு ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் முழு பக்க வண்ணப்படங்களில் நமக்கு காட்சி தருகின்றனர்.

கும்பகோணம், மகாமகம்: குடம் உருளக் குடந்தை உயர்ந்தது, மகாமகத் திருக்குளம், முப்பத்து முக்கோடி தேவர்கள், டிகிரி கல்லூரி முதல் டிகிரி காபி வரை, மகாமகத் திருவிழா, மகாமகத் தீர்த்தங்கள், இந்தியத் தத்துவச் சிந்தனையில் நீராடல் மரபுகள், தீர்த்த நீராடற் சிறப்பும், அதன் கருத்தும். 

சமயம், நெறி : ஆகமங்கள், வேதங்களில் காணப்படும் காவிய ரசம், இறை வழிபாடு, அறுவகைச் சமயங்கள், இதுதான் இந்து மதம், நலம் நல்கும் நமசிவாயம்,  சைவம் காட்டும் நன்னெறி நான்கு, வைணவ வளர்ச்சி, பாசுரம் போற்றும் மகாமகம்,  சித்தாந்தம், ஒழுக்கம், திருமங்கையாழ்வாரின் விசித்திரப் பாசுரங்கள், கலி காலத்தின் வினைப் பயன்கள், சரீரக் கூறுகள், மானுட இயக்கமும் சக்தியும்.
  
கலை, பண்பாடு :  காவிரிக் கரை நாகரிகம், கோயிற்கலை போற்றும் மகாமகம், திருத்தேர், திருக்கோயில் வாகனங்கள், திருக்கோயில் விக்கிரகங்கள், கோயில் அமைப்பு, பஞ்சலோகத் திருமேனிகள். 

கோயில்கள் : குடந்தைக் கும்பேசர், கருடன் அமைத்த குடவாயில் கோணேசம், பழையாறையில் சோழ மாளிகை, தாராசுரம் இயக்க நிலை அசைவூட்டுச் சிற்பங்கள், திருப்புறம்பியத் திருப்பணிக் கொடைகள், தேனபிஷேக விநாயகர், சிறப்பு பெற்ற சில திருத்தலங்கள் (திருப்பட்டீச்சரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருக்கருக்காவூர், திருவையாறு, திருவலஞ்சுழி, திருமணஞ்சேரி), நவக்கிரகத் தலங்கள் (சூரியனார் கோயில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம்). 

பெருமக்கள் : அருணகிரிநாதர், ஆளவந்தார், இராமலிங்க வள்ளலார், பாம்பன் சுவாமிகள்.

மேற்கண்ட கட்டுரைகளுடன் தமிழுக்காக முருகன் நடத்திய திருவிளையாடல், ஆன்மீக எழுச்சி உரை, காவல் தெய்வங்கள், சீவசமாதிகள், எண்ணும் எழுத்தும், கல் கருட சேவை, திருக்கோயில்களில் அன்னதானம், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

மலரின் வடிவம், பக்க அமைப்பு, புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ள முறை, கட்டுரைகளுக்கான முதன்மைத் தலைப்பு, துணைத்தலைப்புகள் போன்றவற்றுக்கான எழுத்துருக்கள் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைப்பு போன்றவை படிக்கும் ஆவலை மேம்படுத்துகிறது. கோயில் நகராம் கும்பகோணம், முதன்மை விழாவான மகாமகம், கும்பகோணம் அருகேயுள்ள கோயில்கள், சமயம், கலை, பண்பாடு என்ற நிலைகளில் கட்டுரைகள் செறிவாக அமைந்துள்ளன. மகாமக விழாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இம்மலரை வாசிப்போம். இம்மலர் வடிவம் பெற உதவிய மலர்க்குழுவினர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுவோ

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர்
பதிப்பாசிரியர் : மலர்க்குழு
வெளியிடுவோர் : இந்து சமய அறநிலையத்துறை, சென்னை 600 034 
ஆண்டு : 2016
விலை : ரூ.200

மகாமக மலர் வேண்டுவோர் தொடர்பு கொள்ள :
முகவரி : ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை 600 034
மின்னஞ்சல் : thirukkoil@tnhrce.org
இணைய தளம் : www.tnhrce.org
தொலைபேசி : 044-28334811/12/13
------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் அண்மையில் வெளியான கட்டுரை, வாய்ப்பிருக்கும்போது அவ்வலைப்பூவினைக் காண வருக.
மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம் : தினமணி
------------------------------------------------------------------------

20 February 2016

இறைவனுக்கு விலகிய நந்தி : தினமணி

19.2.2016 நாளிட்ட தினமணி நாளிதழில் இறைவனுக்கு விலகிய நந்தி என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையை வெளியிட்ட தினமணி இதழுக்கு மனமார்ந்த நன்றி. கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 



கும்பகோணத்தில் வருகிற 2016 பிப்ரவரி 13 முதல் 22 வரை மகாமகப்பெருவிழா நடைபெறவுள்ள இந்த இனிய வேளையில் ஜனவரி 29 அன்று குடமுழுக்கு கண்ட பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் செல்வோம்.

பட்டீஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரியின் தென்கரையில் உள்ள 53ஆவது தலமான பட்டீஸ்வரம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். ஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் வழங்கிய தலமும் இதுவே. ஞானசம்பந்தர் முத்துப்பந்தல் பெற்ற நாள் சிறப்பான விழாவாக ஆனி மாதத்தில் முதல் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்ததால் பட்டீஸ்வரம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
கிழக்கு கோபுரம்
ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த நாளை நினைவுகூரும்போது இத்தலத்தின் பெருமையை அறியலாம். அன்பர்களுடன் இறைவனைப் பாடிக்கொண்டே வருகிறார் ஞானசம்பந்தர். பட்டீஸ்வரம் நோக்கி நிலத்தின்மீது அன்பர்களுடன் நடந்து வந்தருளும் ஞானசம்பந்தர், பாம்புகளாகிய மாலைகளைச் சூடிய இறைவன் அளித்த கருணைப் பெருக்கினைப் போற்றியபடியே வருகிறார். அவர் அவ்வாறு எழுந்தருள வரும்போதே இடப தேவர்களை விலக்கி இறைவன் நேர்காட்சி தருகிறார். ஆளுடையப்பிள்ளையார் வருகின்ற அழகான காட்சியைக் கண்டு ரசிப்பதற்காக இறைவன் நந்தியை விலகக் கூறுகிறார். இவ்வாறு இறைவன் கூறியதால் இங்குள்ள நந்திகள் சன்னதியிலிருந்து சற்றே விலகியிருப்பதைக் காணமுடியும். 
இரண்டாவது கிழக்கு கோபுரம் முன் விலகிய நிலையில் நந்தி
இதுபோலவே இறைவன் வேண்ட ஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய மற்றொரு தலம் திருப்பூந்துருத்தியாகும்.  திருச்சத்திமுற்றத்தின் தெற்கே அடுத்த வீதியிலும் திருமலைராயன் ஆற்றுக்கு வடகரையிலும் உள்ள இத்தலத்திற்கு அவர் எழுந்தருளும் அழகை இனிய தமிழால் வடிக்கிறார் சேக்கிழார்.  பட்டீஸ்வரம் வந்த அவர் திருவாயிலின் வெளியே வணங்குகிறான். பின் உள்ளே புகுந்து செல்கின்றார். வெற்றி பொருந்திய விடையினை உடைய இறைவனின் திருக்கோயிலை வலம் வருகிறார். வெள்ளைக்கொம்மையுடைய பன்றி வடிவமெடுத்த  திருமால் நிலத்தைக் கிளைத்தும் காணமுடியாத திருவடித்தாமரைகளைக் கண்டு திருமுன்பு தொழுகின்றார். நிலத்தில் விழுந்து எழுந்து சொல்மாலையால் இறைவனைத் துதிக்கின்றார். இவ்வாறெல்லாம் வணங்கித் தரிசித்தபின் இறைவனின் கருணைப்பெருக்கின் திறத்தினைப் போற்றுகின்றார். அப்போது அவருக்கு அளவிடற்கரிய ஆனந்தம் கிடைக்கிறது. மாறன்பாடிக்கருகே பிள்ளையார் நடந்து சென்றருளியபோது பாதத்தாமரை நொந்ததனைக் கண்ட இறைவன் முத்துச்சிவிகையருளினார். ஆனால் பட்டீஸ்வரத்திலோ  அடியாருடன் நடந்துவந்ததைக் கண்ட இறைவன் வெயிலின் வெப்பம் தணிக்க பந்தல் இட்டு அருளினார். இறைவனின் பெருங்கருணைக்கும் அவன் ஞானசம்பந்தப்பெருமான்மீது காட்டிய அன்பு அளப்பரியது.

தெற்கு கோபுரம்
இத்தகு பெருமையுடைய பட்டீஸ்வரர் கோயில் எனப்படும் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இரு கிழக்கு கோபுரங்கள், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் அமைந்துள்ளன. வடக்கு கோபுரம் வழியாக வந்தால் துர்க்கையம்மன் சன்னதியை காணமுடியும். கிழக்கு கோபுரம் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் விலகிய நிலையில் நந்தியைக் காணமுடியும். அடுத்து விநாயகர் சன்னதி, கொடி மரம் காணப்படுகிறது. இடப்புறம் கோயிலின் குளமான ஞானவாவி தீர்த்தம் காணப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில் வலப்புறம் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது.  
இரண்டாவது கிழக்கு கோபுரம்
தேனுபுரீஸ்வரர் சன்னதிக்குச் செல்வதற்கு இரண்டாவது கிழக்கு கோபுரத்தினைக் கடக்கவேண்டும். இக்கோபுரத்தின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். 

மண்டப முகப்பு
இக்கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அழகான மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் முகப்பில் இறைவனும் இறைவியும் நடுவில் இருக்க ஞானசம்பந்தர் அவர்களின் இடப்புறம் உள்ள சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபத்திற்கு அருகில் உள்ள திருச்சுற்றில் பைரவருக்கான தனி சன்னதி உள்ளது. மண்டபத்தில் உள்ள நந்தியும் விலகிய நிலையில் உள்ளது. சன்னதியில் மதவாரணப்பிள்ளையார் காணப்படுகிறார். பட்டீஸ்வரர் என்றும் தேனுபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்ற மூலவர் கருவறையில் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். நடராஜர் சன்னதி, பள்ளியறை இம்மண்டபத்தில் உள்ளன. பராசக்தி ஒற்றைக்காலில் நின்ற தவம் செய்யும் காட்சியுடன் கூடிய  தபசு அம்மனையும் இங்கு காணலாம. 

மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர், ஏரம்பரிஷி, சந்திரசேகரர், வில்வேந்திய சுப்பிரமணியர் குறிப்பிடத்தக்கவையாகும். சில தூண்களில் சிங்கம் யாளியின் உருவங்களுடன் காணப்படுகிறது. 

இறைவனை வணங்கிவிட்டு வெளியே வரும்போது இடப்புறம் அம்மனின் சன்னதி காணப்படுகிறது. அம்மன் ஞானாம்பிகை என்றும் பல்வளைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள மண்டபம் அழகான தூண்களைக் கொண்டுள்ளது. அத்தூண்களில் அழகான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். திருச்சுற்றில் சில ஓவியங்கள் காணப்படுகின்றன.
அம்மன் சன்னதி முன் மண்டபம்

அம்மன் சன்னதி திருச்சுற்றில் ஓவியம்

அம்மன் சன்னதி திருச்சுற்றில் ஓவியம்
இறைவனையும் இறைவியையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது இடப்புறம் துர்க்கையம்மன் சன்னதி காணப்படுகிறது. 

வடக்கு கோபுரம் (துர்க்கையம்மன் சன்னதி)
சன்னதியைச் சுற்றி மண்டபம் உள்ளது. சன்னதியில் துர்க்கையம்மன் நின்ற கோலத்தில் புன்னகை சிந்தும் முகத்தோடு உள்ளார். இவரை விஷ்ணு துர்க்கை என்றும் துர்க்காலட்சுமி என்றும் அழைக்கின்றனர். தன்னைச் சரணடையும் பக்தர்களுக்கு உடனே அருள் பாலிக்க காலை எடுத்து வைத்துப் புறப்படுகின்ற தோற்றத்தில் துர்க்கை நிற்கிறார். காக்கும் கரம் (அபய முத்திரை),  வழிகாட்டும் கரம் (சங்கு முத்திரை) , எதிரிகளை அழிக்கும் கரம் (சக்ர முத்திரை), வில் அம்பு போல சரியான திசையில் முயற்சி செய்யும் கரங்கள் (தனுர், பாண முத்திரைகள்), வாள் கேடயமாக விளங்கும் கரங்கள் (கட்க, கேட முத்திரைகள்), கிளியிருக்கும் கரம் (சுகர் முத்திரை) என்ற நிலைகளில் எட்டு கரங்களைக் கொண்டுள்ளார். சாந்தமான முகத்தோடு இருந்து அருள் பாலிக்கிறார்.   

கும்பகோணத்தில் பிப்ரவரி 13இல் சிவன் கோயில்களிலும், பிப்ரவரி 14இல் வைணவக்கோயில்களிலும் கொடியேற்றத்துடன் மகாமக விழா தொடங்குகிறது. பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களிலும் அனைத்துக் கோயில்களும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். அபிமுகேஸ்வரர் கோயிலிலும், நாகேஸ்வரர் கோயிலிலும் பிப்ரவரி 21இலும், கும்பேஸ்வரர் கோயிலில் பிப்ரவரி 22இலும் தேரோட்டம் நடைபெற்று பிப்ரவரி 22 அன்று மகாமக விழா நிறைவு பெறவுள்ள நிலையில்  அண்மையில் குடமுழுக்கு கண்ட தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கும், அங்குள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கும் செல்வோம்.
குடமுழுக்கு காணும் இரண்டாவது கிழக்கு கோபுரம்
குடமுழுக்கிற்காக அமைக்கப்பட்ட யாகசாலை

கொடி மரம், நந்தி மற்றும் விநாயகர் சன்னதி
குடமுழுக்கு காணும் தேனுபுரீஸ்வரர் விமானம்

குடமுழுக்கு காணும் ஞானாம்பிகை விமானம்

குடமுழுக்கு நாளில் துர்க்கையம்மன் சன்னதி

குடமுழுக்கு நாளில் துர்க்கையம்மன் சன்னதி
நேற்று இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்ட கும்பகோணம் மகாமகம் 2001 சிறப்பு மலர் முகப்பட்டை பற்றி பிறிதொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் முகப்பட்டை

கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் பின் அட்டை


19 February 2016

Mahamaham 2004 : The Hindu, Unique in many ways, 3 March 2004


2004 மகாமகத்தின்போது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் துவக்க நாளிலும், நிறைவு நாளிலும் சிறப்பு இணைப்புகளை வெளியிட்டது. அவ்விதழின் நான்கு மகாமக வாசகன் நான். விழாவின் துவக்க நாளான 26 பிப்ரவரி 2004இல் வெளியான நாளிதழை அண்மையில் பார்த்தோம். நிறைவு நாளான 6 மார்ச் 2004இல் வெளியிடப்பட்ட இணைப்பிதழைக் காண்போம். 

During the Mahamaham of 2004, The Hindu, brought out special supplements on the inaugural and the final days of Mahamaham festival. I am a regular reader of The Hindu for nearly more Mahamahams. Earlier we saw the issue dated 26th February 2004, Now let us have a look of The Hindu of 6th March 2004, with due thanks to The Hindu. 
6.3.2004 நாளிட்ட இணைப்பின் முதல் பக்கம்








Courtesy: The Hindu

18 February 2016

மகாமகம் 1980 : குடந்தை மகாமக விழா மலர்

2016, 2004, 1992 மகாமக மலர்களைப் பார்த்ததும் 1980இல் வெளிவந்த மகாமகம் மலரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி நாள்களில் அதிகம் நாங்கள் நேரத்தைச் செலவழித்த இடங்களில் ஒன்று கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்.  கும்பகோணத்தில் தனக்கென தனியான ஒரு இடத்தைப் பெற்று சிறந்த முறையில் சேவை செய்துகொண்டிருக்கிறது இந்நூலகம். இந்நூலகத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையைத் தனியாக ஒரு பதிவில் பார்ப்போம். பொன்னியின் செல்வன் தொடங்கி பல வரலாற்றுப் புதினங்களை நான், நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு படிக்கக் களமாக இருந்தது இந்நூலகமே. 

இந்நூல் நிலையத்தில் 50 வருடங்களுக்கு முன்பு வந்த தீபாவளி மலர்களைப் பார்த்துள்ளேன்.  அவற்றுடன் 1980இல் வெளியான மகாமக மலரைப் பார்த்த நினைவு எனக்கு. நூல் நிலையத்தில் தொடர்புகொண்டு பேசியபோது அவர்கள் அப்போது தனியார் வெளியிட்ட மலர் இருப்பதாகக் கூறவே, அன்று (8 பிப்ரவரி 2016) மாலையே கும்பகோணம் சென்று மலரைப் பார்த்தேன்.

70 பக்கங்களைக் கொண்ட திம்மி 1/8 அளவில் இருந்த அம்மலரில் கும்பகோணம் தொடர்பான பல கட்டுரைகள் இருந்தன. ஆவலோடு வாங்கிப் பார்த்து சிறிதுநேரம் படித்தேன். விளம்பரங்களும் அதிகமாக இருந்தன. ஆசிரியர் புலவர் கி.ஞானசுந்தரம், தொகுப்பாசிரியர் கு.பாலசுப்பிரமணியன் என்று அம்மலரில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

முகப்பட்டையில் மகாமகக்குளம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே குடந்தை மகாமக மலர் என்ற தலைப்பின்கீழ் புகைவண்டி, பேருந்து கால அட்டவணையுடன் என்று அடைப்புக்குறிக்குள்  குறிப்பு காணப்பட்டது. கீழ்க்கண்ட  தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.


  • கும்பகோண ஷேத்ர ஆதி வரலாறு (தொகுப்பு: என்.சுந்தரராஜுலு நாயுடு, கும்பகோணம்)
  • குடந்தை மகாமக வரலாறு
  • மகாமகக்குளம்
  • குடந்தை மாநகரைச் சூழ்ந்துள்ள தெய்வ மணம் கமழும் திருத்தலங்கள் (தொகுப்பு: இரா.ரவிச்சந்திரன்)
  • மகாமகத்தின் மாண்பு (ஜி.சீனிவாசன்)
  • குடந்தை நகர் வாழ்ந்த கோமான்கள் (புலவர் இரா. சொக்கலிங்கம்)
  • குடந்தையின் பெருமை (தொகுப்பு: என்.சுந்தரராஜுலு நாயுடு, கும்பகோணம்)


ரத்தினச்சுருக்கமாக செய்திகளைக் கொண்டு மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்ட மகாமக மலரை மூன்று மகாமகங்கள் கழித்து பார்த்தபோது வியப்பாக இருந்தது.

அக்டோபர் 1980இல் அம்மலர் நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தரப்பட்டதற்கான குறிப்பு நூலின் முதல் பக்கத்தில் காணப்பட்டது. இந்நூல் கீதா வெளியீட்டகம், 90ஏ, அ, அரசலார் ரோடு, கும்பகோணம் என்ற முகவரியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி :
நூலைப் பற்றிய விவரத்தைக் கூறிக் கேட்டபோது அதனைக் கண்டுபிடித்து (நூலக எண்.5884அ, 12860) தொலைபேசிமூலம் தெரிவித்து, அதனைப் பார்க்க உதவிய திரு தயாளன் மற்றும் நூலக அலுவலர்களுக்கு என் நன்றி.

பிற மகாமக மலர்கள் : 

17 February 2016

மகாமகம் 1992 : மகாமகம் மலர் 1992

2016 மகாமகம் மலரையும், 2004 மகாமகம் மலரையும் பார்த்த நாம் 1992 மகாமகம் மலரைப் பார்ப்போம். 1992 மகாமகத்தின்போது அரசு வெளியிட்ட மகாமகம் சிறப்பு மலர், அருளாளர்களின் ஆசி, தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வாழ்த்துச்செய்திகளுடன் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 276 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் விளம்பரங்களும் காணப்படுகின்றன.

மலரின் முன் அட்டை

  • மஹாமகம்
  • குடமூக்கில் மகாமகம்
  • மாமகப்பெருவிழா
  • நவகன்னியரும் மகாமகமும்
  • குடமூக்கு ஒரு நோக்கு
  • 11 ஆண்டுகளில் மகாமகம்
  • குடந்தைக் கீழ்க்கோட்டம்
  • இரகுநாதன் எடுத்த இராமன் கோயில்
  • சார்ங்கபாணி திருக்கோயில்
  • மகாமகமா? வாருங்கள், வாருங்கள்
  • மன்னர் குல மணிவிளக்கு
  • மாசி மகம்-சில வானியல் சிந்தனைகள்
  • பழையாறைத் திருக்கோயில்கள்
  • அறவழி காட்டும் திருமடங்கள்
  • கோவிந்த தீட்சிதர்
  • தஞ்சையில் ஸ்ரீசமர்த்த ராமதாஸர்
  • பொன்னிக்கரையில் பொங்கிய கங்கை
  • ஸ்ரீசேதுபாவா ஸ்வாமிகள்
  • பாஸ்கர ராயர்
  • தமிழகத்தில் கோயில் அமைப்பு
  • சோழமாதேவி கயிலாயமுடையார் கோயில்
  • மறைந்துபோன வணிக நகரம் மதுராந்தகபுரம்
  • குடந்தைக் கீழ்க்கோட்டக் கல்வெட்டுகள்
  • ஒருமைப்பாடு செழிக்கும் தஞ்சைத்தரணி
  • தஞ்சை மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வு
  • கலைகளின் தாயகம் தஞ்சை
  • தஞ்சை கலைக்கூடம்
  • நடந்தாய் வாழி காவேரி
  • செப்புத்திருமேனி
  • தஞ்சை டபீர் பண்டிதர்
  • இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்
  • தஞ்சைக்குப் பெருமை சேர்க்கும் சரசுவதி மகால் நூலகம்
  • புதிய பார்வையில் சார்ங்கபாணி கோயிற்கரணங்கள்
  • தண்குமரியும் தஞ்சைச்சோழரும்
  • சக்கரசாமந்தம் கல்வெட்டு
  • நீராட்டப்பெருவிழா
  • பஞ்சமுக வாத்தியமும் எழுவகை ஆடலும்
  • மகாமகத் தீர்த்தங்கள் அளிக்கும் பலன்கள் 
மலரின் பின் அட்டை

மலரின் முதல் பக்கம்
மேற்கண்ட தலைப்புகளுடன் உள்ள கட்டுரைகளும், கும்பகோணத்திலுள்ள சைவ மற்றும் வைணவக்கோயில்களைப் பற்றிய கட்டுரைகளும், புகைப்படங்களும் இம்மலரில் காணப்படுகின்றன. கோயில்களைப் பற்றிய அரிய செய்திகள் உரிய புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ள விதம் அருமையாக உள்ளது. ஒரு கட்டுரையில் கும்பகோணத்திலுள்ள கோயில்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. துணுக்குகளாகத் தரப்பட்டுள்ள பெட்டிச் செய்திகள் நாம் அறிந்திராத நுட்பமான செய்திகளைத் தருகின்றன.

பிற மகாமக மலர்கள் : 
2016 மகாமகம் மலர் : சரசுவதி மகால் நூலகம்
2004 மகாமகம் சிறப்பு மலர்
1980 மகாமகம் மலர்

16 February 2016

மகாமகம் 2016 சிறப்பு மலர் : சரஸ்வதி மகால் நூலகம்

2016 மகாமகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு மலர் 260 பக்கங்களுடன்  50 கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. மண்ணின் பெருமையையும், விழாவின் பெருமையையும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைத் தருகிறது இம்மலர்.
மலரின் முகப்பு அட்டை
மலரின் பின் அட்டை
மகாமக இலச்சினையைக் கொண்டு அமைந்துள்ள முதற்பக்கத்தில் மகாமகக்குள சோடச மண்டபங்கள் காணப்படுகின்றன. பின் அட்டையில் சோடச மண்டபங்களும், மகாமகக்குளமும் உள்ளன.  நடுவில் மகாமகத்திற்கான ஆங்கில இலச்சினை உள்ளது.
மலரின் முதற்பக்கம்

மலர்க்குழு, மலர் பதிப்புக்குழு உறுப்பினர்கள் விவரம்
கட்டுரைகளின் தலைப்பு
உள்ளே முதல் பக்கத்தில் திருவையாறு அய்யாறப்பர் கோயிலின் நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மலர்க்குழு மற்றும் மலர் பதிப்புக்குழு உறுப்பினர்களின் விவரம் உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சரஸ்வதி மகால் நூலக இயக்குநரின் பதிப்புரைக்கு அடுத்த பக்கத்தில் கட்டுரைகளின் தலைப்புகள் காணப்படுகின்றன. 260 பக்கங்களைக் கொண்ட இம்மலர் முழுக்க முழுக்க ஆர்ட் தாளில் அச்சிடப்பட்டுள்ளது. 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதியுள்ள மகாமகம் என்ற தலைப்பிலான கட்டுரை முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. கீழ்க்கண்டவாறு கும்பகோணம் மற்றும் மகாமகத்தின் பெருமை, இலக்கியங்கள், கோயில்கள், கலை என்ற பல்வேறு நிலைகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. 

மகாமக விழா : பாரத தேசம் போற்றும் மகாகம் ஒரு தேசியத் திருவிழா, வரலாற்று நோக்கில் மகாமகத் திருவிழா, மகாமக தீர்த்த யாத்திரை, 18ஆம் நூற்றாண்டு ஆவணங்களில் மகாமகத் திருவிழாவும் மராட்டிய மன்னர்களின் பங்களிப்பும்,  மகாமகத்தில் தமிழ்த்தாத்தா, மகாமகத் தொடக்கமும் அதன் சிறப்பும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் காணும் ஆன்ம நேய ஒருமைப்பாடு, மகிமைமிக்க மகாமகம், இந்தியாவும் புனித நீராடலும், 11 ஆண்டுகளில் மகாமகம், தீர்த்தங்களும் மண்டபங்களும், சரஸ்வதி மகால் நூலகத்தின் வளர்ச்சியும் மகாமகப் பங்களிப்பும்.

மகாமகக்குளம், கோயில்கள், நூலகம் மற்றும் மடங்கள் : குடந்தைக் கும்பேசர், நற்சூதராம் மூர்க்கரும் குடந்தைப்பதியும், குடந்தைக் கீழ்க்கோட்டத்துக் கூத்தனார், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், குவலயம் போற்றும் குடந்தை மாநகர், ஒட்டக்கூத்தரும் குடந்தையும், குடந்தையின் கருவூலங்கள், குடந்தை சார்ங்கபாணி திருக்கோயிலும் ஆழ்வார்களும், கோயில் நகரம் குடந்தை, அறவழி காட்டும் திருமடங்கள்,  குடந்தையில் கோயில் கொண்ட குலகுரு, மகாமகக்குளத்தை நிர்மாணித்த கோவிந்த தீட்சிதர்.

அருகிலுள்ள கோயில்கள் : தாராசுரத்து ஐராவதேசுவரர், குடமூக்கில் பழையாறை, பழையாறைப் பெருநகர், தஞ்சை மாவட்ட வைணவத் தலங்கள், தஞ்சை மாவட்டத்துத் தேவாரத் திருத்தலங்கள்.  

இலக்கியங்கள் : மகாமக அந்தாதிக்கும்மி, கும்பகோணம் கோயில்களின் புராணம், சங்க இலக்கியம் மற்றும் திருமுறை உணர்த்தும் குடந்தை, சிவ ரகசியத்தில் குடந்தை, சேஷாசல நாயுடு யாத்த கும்பகோணம் மகாமக அலங்காரம், திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் குடந்தை.

கலை : இசைக்கலை வளர்ச்சியில் திருக்குடந்தை, தஞ்சை கலைக்கூடம், நாட்டியக்கலை வளர்ச்சியில் குடந்தை, குடந்தை திருச்சேறையில் சாளுக்கிய-சோழன் விக்கிரமனின் கல்வெட்டுகள்,  கும்பகோணம் மகாமகத்தில் வடமொழி நாடகங்கள், கும்பேசர் குறவஞ்சி நாடகம் ஒரு பார்வை

மேற்கண்ட கட்டுரைகளுடன் உருத்திராக்கம், சிவாலய அமைப்பும் பிரதிஷ்டா மூர்த்திகளும்,  தஞ்சை மாவட்ட ஆட்சியரலுவலக அருங்காட்சியகம், கவிதைகள், குடந்தை கவின்கலைக் கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள், மகாமகம் 2016 திட்டப்பணிகள் போன்றவையும் காணப்படுகின்றன. 

கும்பகோணத்தைப்பற்றியும், மகாமகத்தைப் பற்றியும் பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ள இம்மலர் உரிய புகைப்படங்களுடன் காணப்படுகிறது. பெட்டிச் செய்திகளாகத் தரப்பட்டுள்ளனவற்றில் அரிய செய்திகளும், வியப்பையூட்டும் செய்திகளும் காணப்படுகின்றன. வரலாறு, இலக்கியம், கலை என்ற நிலைகளில் அதிக முயற்சி மேற்கொண்டு அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமையாக உள்ளது. பல நூற்றாண்டுகள் பெருமை பேசும் மகாமகத்தினைப் பற்றிய ஓர் அரிய மலரைத் தந்த மலர்க்குழுவினரை மனதாரப் பாராட்டுவோம். 1992இலும், 1980இலும் வெளியான மலர்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மகாமகம் 2016 சிறப்பு மலர்
பதிப்பாசிரியர் : மலர்க்குழு
வெளியிடுவோர் : இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் 
ஆண்டு : 2016
விலை : ரூ.300

பிற மகாமக மலர்கள் : 
2004 மகாமகம் சிறப்பு மலர்
1992 மகாமகம் மலர்
1980 மகாமகம் மலர்