பள்ளி நாள்கள் (1970களில்) முதல் கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்திற்குச் சென்று வருகிறேன். கல்கியின் பொன்னியின் செல்வன் தொடங்கி பல வரலாற்றுப் புதினங்களை இங்கு நானும் நண்பர்களும் போட்டி போட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தோம். எனக்கும், பள்ளிக்கால நண்பர்கள் பலருக்கும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது இந்நூல் நிலையம். தமிழ்ப்பல்கலைக்கழகம் 36ஆம் ஆண்டு துவங்கும் நாளில் (15.9.2016) - நான் தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காலகட்டத்தில் (16.8.2016) - இதன் வரலாற்றையும், அரிய பணிகளையும் காண அழைக்கிறேன். வாருங்கள், கும்பகோணம் செல்வோம்.
தோற்றம்
1947ஆம் ஆண்டில் கும்பேஸ்வரர் கோயிலில்
அறங்காவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தேர்த்திருவிழா ஏற்பாட்டிற்காக ஜி.எஸ்.சுவாமிநாத
செட்டியார் தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கேயிருந்த ஞானசம்பந்தம் நூல் நிலையம்
அமைக்கப்பட்டிருக்கும் முறை அவரைக் கவர்ந்துவிட்டது. அப்போது அவருடைய மனதில் அவருடைய தந்தையின் தந்தை
கோபு சிவகுருநாதன் செட்டியார் எம்.ஏ., பி.எல்., பெயரில் நூல் நிலையம் அமைக்கும் எண்ணம்
உருவானது. அவர் பெயரில் சில ஆண்டுகள் கல்லூரியில்
பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார். அவ்வாறு பயின்ற பலர் நல்ல நிலையில் வாழ்வதை அறிந்த
அவர் நூல் நிலையம் ஒன்றும் அவர் பெயரில் அமைத்தால்
அனைவரும் பயனடைவர் என்று எண்ணினார். இந்நூலகம் உருவாவதற்கு அடிப்படை இதுவேயாகும்.
சிவகுருநாதன்
செட்டியார் வாழ்க்கை
கி.பி.1865இல் பிறந்த சிவகுருநாதன் செட்டியார்
வழக்கறிஞர் பணியினை மேற்கொண்டார். அவர் திருவாவடுதுறை,
குன்றக்குடி ஆதீனங்களின் வழக்கறிஞராகவும், அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
1899 முதல் 1901 வரை கும்பகோணம் நகரத்தின் அவைத்தலைவராக விளங்கி பல நற்பணிகளைச் செய்துள்ளார்.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் டெல்லிக்கு வந்தபோது திருவாளர் செட்டியாரின் பெருமைகளைக் கேள்விப்பட்டு
அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். குடந்தை சாதுசேஷய்யா நூல் நிலைய அமைப்பாளர்களில்
இவரும் ஒருவராக இருந்துள்ளார். பல கோயில்களில் அறக்கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளார். பெரும்புலவர்களான மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை,
தியாகராஜ செட்டியார், மகாமகோபாத்தியாய டாக்டர்
உ.வே.சாமிநாதய்யர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், மறைமலையடிகள் போன்றோர் இவரது ஆதரவைப் பெற்றிருந்தனர்.
கும்பகோணத்தில் நாணயக்காரத் தெருவில் இருந்த அறுபத்துமூவர் மடத்தில் சைவ வளர்ச்சிக்கென
ஒரு சங்கம் அமைத்து அதன் தலைவராகவும் விளங்கினார்.
1925இல் தனது 60ஆவது ஆண்டு நிறைவு விழாவின்போது
குடந்தை பேட்டைத்தெருவில் தனக்குச் சொந்தமான லட்சுமி சத்திரத்தை நகராட்சி தொடக்கப் பள்ளிக்கென
நன்கொடையாக வழங்கினார். (இன்றும் அது பேட்டைத்தெருவில்
கோபு சிவகுருநாதன் தொடக்கப்பள்ளியாக விளங்கிவருகிறது.) இவர் 63ஆவது வயதில் 1928இல் இயற்கையெய்தினார்.
நூலகம் உருவாகுதல்
இத்தகு பெருமைகளைக் கொண்டு வாழ்ந்த சிவகுருநாதன்
செட்டியார் பெயரில் சிவகுருநாதன் செந்தமிழ்
நூல் நிலையம் தற்போதுள்ள இடத்தில் (நாணயக்காரத் தெரு, கும்பகோணம்) அமைக்கத் திட்டமிடப்பட்டு, 21.5.1958இல் அண்ணாமலைப்
பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் சென்னை
மேல்சபை உறுப்பினர் செந்தமிழ்க்காவலர் பேராசிரியர் டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார்
அவர்களால் நூல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
9.11.1959இல் நூல் நிலையம் சென்னை மேல் சபை உறுப்பினர்
தமிழகவேள் சர் பி.டி.ராஜன் பார் அட் லா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இலவசமாக யாவரும்
வந்து அமர்ந்து படித்து இன்புறுவதற்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் இந்நூல் நிலையம்
கொண்டு அமைந்தது. கும்பகோணத்தில் இத்தகைய நூல்
நிலையம் வேறில்லை என்று துணிந்து கூறும் அளவில் சிறப்பு பெற்றது. செந்தமிழ் நூல்களை
மட்டுமே கொண்ட அரிய கலைப் பெட்டகமான இந்நூலகத்தில் 10,000 நூல்கள் சேர்க்கப்பெற்ற விழாவும்,
நூல் நிலையத்தின் 12ஆவது ஆண்டு விழாவும்
23.5.1971இல் கொண்டாடப்பட்டது. 27.2.2010 அன்று பொன்விழா நடைபெற்று, அதற்கான கல்வெட்டு மருத்துவர் திரு சு.திருஞானசம்பந்தம் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது.
ஆரம்ப கால நன்கொடையாளர்கள்
நூலகம் உருப்பெறும் காலகட்டத்தில் ஆதீனங்கள்,
கோயில்கள், கல்வியாளர்கள், வணிகர்கள், தனிநபர்கள் என்ற நிலையில் பல நன்கொடையாளர்கள்
மனமுவந்து நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர்.
அவர்களில் திருவாவடுதுறை ஸ்ரீலஸ்ரீ மகாசன்னிதானம் (216 நூல்கள்), தருமபுரம்
ஸ்ரீலஸ்ரீ மகாசன்னிதானம் (152 நூல்கள்), திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ மகாசன்னிதானம்
(15 நூல்கள்), கும்பகோணம் ஜகத்குரு காமகோடி
பீடம் (35 நூல்கள்), அ.சிதம்பரநாத செட்டியார் (661 நூல்கள்), ப.சுந்தரேசன் (120 நூல்கள்),
என்.சொக்கலிங்க செட்டியார் (101 நூல்கள்), ஆசிரியர் பி. ஸ்ரீனிவாச அய்யர் (68 நூல்கள்),
எஸ்.வி.தியாகராஜ பிள்ளை (60 நூல்கள்), ஜி.கே.வைத்தியநாதன் செட்டியார் (51 நூல்கள்),
ஜி.என்.சதாசிவம் (46 நூல்கள்), கோபு.அ.ராமலிங்கம்
செட்டியார் (40 நூல்கள்), ஜி.ஆர்.ராமானுஜம் (44 நூல்கள்), எஸ்.எம்.பஞ்சநதம் செட்டியார் (33 நூல்கள்), ஏ.ஆர்.ராமசாமி (31 நூல்கள்), கலியாணசுந்தர முதலியார்
(30), சக்கரபாணி செட்டியார் (24 நூல்கள்),
ஏ.எஸ்.ஏ.துரைசாமி செட்டியார் (24 நூல்கள்), ஏ.எஸ்.ஏ.சீதாராமன் (19 நூல்கள்), சி.ராமன் (16 நூல்கள்), ஆடுதுறை எம்.என்.சொக்கலிங்க செட்டியார் (16 நூல்கள்), சாக்கோட்டை எம்.டி.டி.வி.மில் (14 நூல்கள்), காரைக்கால் வி.ஏகாம்பரம் (13 நூல்கள்), திருவிடைமருதூர்
தேவஸ்தானம் (10 நூல்கள்) உள்ளிட்ட பலர் அடங்குவர்.
ஆசி மொழி வழங்கிய பெரியோர்கள்
நூலகம் உருப்பெற்ற காலத்தில் திரு த.ச.மீனாட்சிசுந்தரம்பிள்ளை, திருவாவடுதுறை ஆதீன வித்வான் (20.11.1957), பர.முத்துவேலன் (2.2.1958), ஊரன் அடிகள், வடலூர் (8.3.1968), கி.வா.ஜகந்நாதன், கலைமகள் ஆசிரியர், சென்னை (14.6.1960), கிருபானந்தவாரியார், சென்னை (24.6.1965), புலவர் கீரன், லால்குடி (8.3.1968) உள்ளிட்ட ஆதீனங்கள், கோயில்கள், கல்வியாளர்கள், வணிகர்கள், என்ற நிலையில் பல பெரியோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பதிவேட்டுப்
பட்டியல்கள்
இந்நூலகத்தில்
உள்ள நூல்கள் பல்துறை நூல்கள் என்ற தலைப்பில் இரு நூற்பட்டியல்களிலும், பத்திரிக்கைகள்
என்ற தலைப்பில் இரு சிறிய பதிவேடுகளிலும், ஆங்கிலப்புத்தகப் பட்டியலைக் குறிக்கும்
ஒரு சிறிய பதிவேட்டிலும் பதியப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு நூலின் தலைப்பு, ஆசிரியர், அதற்கான
எண் என்ற விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
முதல் புத்தகத்
தொகுப்புப்பட்டியல்
நூலகம் அமைந்த காலகட்டத்தில் முதன்முதலாக
44 பிரிவுகளைக்கொண்டு 5,000 நூல்களின் பட்டியல் முதலில் தொகுக்கப்பட்டது. இப்பட்டியலில்
புராணம், தலபுராணம், சாத்திரம், தோத்திரம், திருமுறை, சமயம், சங்க நூல், பிரபந்தம்,
அகவல், அந்தாதி, உலா, கலம்பகம், சதகம், தூது, பரணி, பிள்ளைத்தமிழ், மாலை, வெண்பா, கீதை,
இதிகாசம், வைணவம், நீதி நூல், அகராதி, இலக்கணம், நிகண்டு, கணிதம், சங்கீதம், புதுமைக்கவி, மொழிபெயர்ப்பு, கல்வெட்டுகள், சிற்ப நூல், உலக வரலாறு, யாத்திரை, வாழ்க்கை வரலாறு, உயிர் நூல், உடற்பயிற்சி, வைத்தியம், மாந்தரீகம், சோதிடம், கட்டுரை, மன நூல், வரலாறு உள்ளிட்ட தலைப்புகள் அடங்கும். இந்நூலில் பிற்சேர்க்கையும், திருத்தமும் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது புத்தகத்
தொகுப்புப்பட்டியல்
முதல் பட்டியலில் விடுபட்ட துறைகளான
அரசியல், அறிவியல், வேளாண்மை, இசுலாமிய, கிறித்தவ நூல்கள், நாடகம், புதினம் ஆகியவை
கொண்ட 5,000 நூல்களின் தலைப்புகளைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
நூல் நிலைய
விதிகள்
இந்நூலகத்திற்கு வாசிக்க வருவோர் கடைபிடிக்க
வேண்டிய விதிகளாக பின்வருவன கூறப்பட்டுள்ளன. ஆண்டாண்டு
காலமாக வரும் வாசகர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.
- இந்த நூல் நிலையத்தில் சாதி மத வேறுபாடின்றி
ஆடவர், மகளிர் யாவரும் நூல்களை எடுத்துப் படிக்கலாம்.
- புத்தி மாறாட்டம் உள்ளோரும், தொழுநோயால் பீடிக்கப்பட்டோரும்,
தூயஉடையின்றி அழுக்காடை அணிந்து வருவோரும் நூல் நிலையத்திலே நுழைவதற்கு அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
- 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கட்கு நூல் நிலையப்
புத்தகங்கள் கொடுப்பதில்லை.
- வியாழக்கிழமை தவிர மற்றைய நாட்களில் நூல் நிலையம்
திறக்கப்பட்டிருக்கும். வேறு நாட்களிலே விடுமுறை இருக்குமாயின் முன்னரே அறிவிக்கப்படும்.
- நூல் நிலை அலுவல் நாட்களில் காலை 9 மணி முதல்
11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி
வரையிலும் நூல் நிலையம் திறக்கப்பட்டிருக்கும்.
- நூல் நிலையம் திறந்த அரை மணி நேரம் கழித்தே
படிப்போருக்குப் புத்தகம் எடுத்து அளிக்கப்படும்.
- நாய் முதலிய செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அவைகளுடன்
நூல் நிலையத்துக்குள் வரச் சிறிதும் அனுமதி கிடைக்கப்பட மாட்டாது.
- தூங்குதல், எச்சில் துப்புதல், வெற்றிலை பாக்கு
போட்டுக்கொள்ளுதல், புகை பிடித்தல் முதலியவைகட்கு நூல் நிலையத்தில் இடமில்லை.
- படிப்பவர்கட்கு இடைஞ்சலாக இரைந்து பேசுதல்,
வீண் வார்த்தையாடுதல், வம்பளத்தல் முதலியன செய்தல் கூடாது.
- படிப்பவர்கள் புத்தகத்தைப் பழுதுபடாதவண்ணம் ஒழுங்காக
வைத்துக் கொண்டு படித்தல் அவசியம். புத்தகங்களோ அல்லது நூல் நிலையத்தில் உள்ள ஏனைய பொருள்களோ
பழுது நேரும்படி உபயோகிக்கக்கூடாது. பழுதுபடுமாயின் நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும்.
- நூல் நிலையத்திலே படிப்பதற்கு வருவோர்கள் தாங்கள்
கொண்டுவரும் குடை, கைத்தடி முதலியவைகளையும், தமது சொந்தப்புத்தகம் முதலியவற்றையும்
குறிப்பிட்ட ஓரிடத்திலே வைத்துவிடவேண்டும்.
அந்தப் பொருள்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நூல் நிலையத்தாரைச் சேர்ந்ததல்ல என்பதும்
அறிவிக்கப்படுகிறது.
- நூல் நிலையத்திற்குச் சொந்தமான புத்தகங்களிலே
பென்சில், பேனா முதலியவற்றால் கோடிடுதல், எழுதுதல் முதலிய எந்தச் செயலும் செய்யக்கூடாது.
- புத்தகங்களிலிருந்து படம் முதலியவற்றை ‘டிரேஸ்’
செய்யக்கூடாது.
- படித்தவர்கள் அதற்கெனக் குறிப்பிட்டுள்ள பட்டியலில்
கையொப்பமிட்டுச் செல்லவேண்டும். புத்தகங்களை மேஜையின்மீது ஒழுங்காக வைத்தல் வேண்டும்.
1993இல் பௌத்தம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய முதல் இங்கு சென்று பல நூல்களைப் படித்துக் குறிப்பு எடுத்துள்ளேன். அவற்றில் பூர்வாச்சாரியார்கள் அருளிய ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரப்ரபாவம் (பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928), தமிழர் மதம் (மறைமலையடிகள், திருமகள் அச்சுக்கூடம், பல்லாவரம், 1941), தென்னிந்திய சிற்ப வடிவங்கள் (க.நவரத்தினம், சுன்னாகம் திருமகள் அழுத்தகம், யாழ்ப்பாணம், 1941), புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் (உவேசா, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1945), பிற்காலச்சோழர் சரித்திரம் (சதாசிவப்பண்டாரத்தார், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், 1951), முதற்குலோத்துங்கசோழன் (சதாசிவப் பண்டாரத்தார், பாரி நிலையம், 1955), பூம்புகார் (புலவர் ப.திருநாவுக்கரசு, அஸோஸியேஷன் பப்ளிசிங் ஹவுஸ், சென்னை, 1957), தமிழக வரலாறு (அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை, 1958) உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும்.
தற்போது இந்நூலகம் 35,000 நூல்களைக் கொண்டுள்ளது. நூலகத்தினை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் கொள்ளப்பட்டுவருகின்றன. காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 8.00 வரையும் செயல்பட்டு வரும் இந்நூலகத்திற்கு வியாழக்கிழமை விடுமுறை நாளாகும். நூலக நாட்களில் நூலகத்திற்கு வந்து அங்குள்ள நூல் பட்டியலைப் பார்த்து படிக்க வேண்டிய நூலின் எண்ணை எழுதித் தந்தால் அந்நூலை படிக்கத் தந்துவிட்டு, அதற்கான எண்ணை அங்குள்ள கரும்பலகையில் எழுதிவிடுவர். தொடர்ந்து படிக்க வரும் வாசகர்கள் கரும்பலகையில் உள்ள எண்ணைக் கொண்ட நூல்களைத் தவிர பிற நூல்களை எடுக்க இவ்வசதி உதவியாக உள்ளது. வாசகர்களுக்கு ஒரு முறைக்கு இரு நூல்கள் தரப்படுகின்றன. வாசிப்பதற்கும், தேவையான குறிப்புகள் எடுப்பதற்கும் உதவியாக மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1995இலும், 2015இலும் பார்வையாளர் குறிப்பேட்டில் நூலகத்தைப் பற்றிய எனது கருத்தை பதியும் வாய்ப்பு கிடைத்தது. கும்பகோணத்தில் இந்நூலகம் அரை நூற்றாண்டிற்கும் மேலாக நகர மக்களின் வாசிப்புத்தேவையைப் பூர்த்தி செய்துவருகின்றது. மக்களிடையே படிக்கும் பழக்கத்தை வளர்க்கவும், கல்வியறிவை மேம்படுத்தவும் இந்நூலகம் செய்துவரும் பணி போற்றுதற்குரியதாகும். கோயில் நகரமாம் கும்பகோணத்திற்குப் பெருமை சேர்க்கும் இந்நூலகத்திற்குச் செல்வோம், அரிய நூல்களை வாசிக்கும் வாய்ப்பினைப் பெறுவோம், வாருங்கள்.
|
புதிய பெயர்ப்பலகையுடன் காணப்படும் நுழைவாயில் |
நன்றி
நூலகப் பொறுப்பாளர்களுக்கும், நூலகப் பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
திரு எஸ்.தயாளன், நூல் நிலையத் தலைவர் (அலைபேசி 9486407156)
திரு கோ.மாறன், பொருளாளர்
திரு எஸ்.சோமசுந்தரம், நூலகர் (0435-2427156)
திரு எஸ்.சண்முகம், கணினி உதவியாளர்
22 செப்டம்பர் 2016 தி இந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க பின்வரும் இணைப்பை சொடுக்கலாம்.
என் பள்ளிக்காலம் தொடங்கி, ஆய்வுக்காலத்தில் தொடர்ந்து நான் சென்று வருகின்ற, என் எழுத்திற்குத் துணை நிற்கின்ற கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு என் புதிய நூலை (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து
Manonmani Pudhuezuthu காவேரிப்பட்டிணம் 635 112, 2022, அலைபேசி +91 9842647101, +91 6374230985) வழங்கிய இனிய தருணங்கள். (ஒளிப்படத்தில் நூல் நிலையத்தலைவர் எஸ்.தயாளன், நூலகர் சரண்யா)
23 நவம்பபர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.