30 June 2018

தஞ்சையில் சமணம் : நன்றி

தஞ்சையில் சமணம் நூலின் வெளியீட்டு விழா நேற்று (29 ஜுன் 2018) மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  வரவேற்புரையில் அனைவரையும் வரவேற்ற பின்னர், இந்நூல் உருவாக அமைந்த பின் புலத்தைப் பகிர்ந்துகொண்டேன். 
திரு மணி.மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், முனைவர் அ.இலட்சுமிதத்தை, ஸ்வஸ்திஸ்ரீஇலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய ஸ்வாமிகள்,  திரு ச.அப்பாண்டைராஜ், திரு இரா.செழியன், திரு தில்லை கோவிந்தராஜன்
புகைப்படம் நன்றி : திரு வீரமணி

 
விழா மேடையில் பெற்ற அன்பளிப்பு
1993-2018
என்னுடைய பௌத்த ஆய்வு தொடர்பாக  1993 முதல் மேற்கொண்ட வந்த களப்பணியின்போது புத்தர் சிலைகளுடன் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டேன். கடந்த 25 ஆண்டுகளாக 16 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் துணையோடும் கண்டேன். இவற்றில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த சிலைகளும் பிற மாவட்ட சிலைகளும் அடங்கும்.


சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஜெயங்கொண்டம் (டிசம்பர் 1998), தப்ளாம்புலியூர் (நவம்பர் 1998),  ஆலங்குடிப்பட்டி (மே 1999),  செங்கங்காடு (பிப்ரவரி 1999), தஞ்சாவூர் (ஜுன் 1999), பெருமத்தூர் (மார்ச் 1999), அடஞ்சூர் (மார்ச் 2003) ஆகிய இடங்களில் தனியாகவும், செருமாக்கநல்லூர் (ஜுன் 2009), சுரைக்குடிப்பட்டி (பிப்ரவரி 2010), பஞ்சநதிக்குளம் (ஆகஸ்டு 2010), தோலி (நவம்பர் 2011) ஆகிய இடங்களில் திரு தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்தும், கவிநாடு (அக்டோபர் 2013) என்னுமிடத்தில் முனைவர் சந்திரபோஸ் உடன் இணைந்தும், நாட்டாணி (மார்ச் 2015) என்னுமிடத்தில் திரு மணி.மாறன் உடன் இணைந்தும் கண்டேன்.


டிசம்பர் 1998
டிசம்பர் 1998இல் ஜெயங்கொண்டத்தில் முதல் களப்பணியின்போது நான் பார்த்த சிற்பம் அடுத்த களப்பணியின்போது அங்கு காணப்பெறவில்லை. ஜெயங்கொண்டத்தில் இருந்த புத்தரைக் காணச் சென்றபோது இந்த சமணர் சிலையைக் கண்டேன். சிலையின் அளவினையும் எடுத்தேன். இருந்தாலும் முதலில் போகும்போது புகைப்படக் கருவியினை எடுத்துச்செல்லாத நிலையில் அச்சிற்பத்தை புகைப்படம் எடுக்கவில்லை. அதனை ஒரு பெரிய இழப்பாகக் கருதினேன். முதலில் பார்த்த சிற்பத்தை ஆவணப்படுத்தப் பட இயலா நிலை என்னை அடுத்தடுத்த சிற்பங்களைப் பார்த்தபோது ஆவணப்படுத்த உதவியது. 

மே 2010
தஞ்சாவூரில் பௌத்தம் என்ற என்னுடைய ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை அடியொற்றி, தஞ்சையில் சமணம் என்ற தலைப்பில் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை ஒரு திட்டத்தினை மேற்கொள்ளக் கூறியபோது அவரும் இசைந்தார். அவருக்கு நெறியாளராக இருந்து புதுதில்லி நேரு டிரஸ்ட் உதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.   
 
டிசம்பர் 2011
தீபங்குடியில் 25 டிசம்பர் 2011இல் நடைபெற்ற நல்ஞான தீபத் திருவிழாவில் நானும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் சிறப்பு சொற்பொழிவாளர்களாகக் கலந்துகொண்டோம். (முக்குடை, ஜனவரி 2012. ப.26)  அப்போது சோழ நாட்டில் உள்ள சமணத் தடயங்களைப் பற்றிய ஆய்வினைப் பற்றி எடுத்துரைத்தோம். விழாவின்போது திரு அப்பாண்டைராஜன் உள்ளிட்ட பெருமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்களது ஆய்வினை நூலாகக் கொணர்வோம் என்று நாங்கள் கூறினோம். 

அக்டோபர் 2017
அக்டோபர் 2017இல் தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பு தொடங்கப்பட்டபோது  திரு மணி.மாறன் அவர்களிடம் திரு அப்பாண்டைராஜன் அவர்கள் தன் ஏக்கத்தினை வெளிப்படுத்தியதை நூலின் ஆசியுரையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வப்போது நாங்களும் நூலாக்க முயற்சி பற்றி பேச ஆரம்பித்தோம். எங்களது முயற்சி கைகூட இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.


நவம்பர்  2017
நாங்கள் முன்பு களப்பணியில் கண்ட சுரைக்குடிப்பட்டி, ஒரத்தூர், நாட்டாணி ஆகிய இடங்களில் காணப்படுகின்ற சமண தீர்த்தங்கரர் சிலைகளை 19 நவம்பர் 2017இல் திரு அப்பாண்டைராஜன் அவர்களின் தலைமையில் அகிம்சை நடையின்போது காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நூலாக்கத்திற்கான ஆர்வம் அதிகமானது. 


பிப்ரவரி  2018
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் 5 பிப்ரவரி 2018இல் வெளியிட்ட பிரெஞ்சு தமிழக சமணர் தளங்களைக் கொண்ட குறுந்தகட்டிலுள்ள புகைப்படத் தொகுப்பில் தமிழகத்தில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் களப்பணியின்போது எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிலைகள் உரிய ஒப்புகையுடன் இடம் பெற்றுள்ளன. சுரைக்குடிப்பட்டி சமணர் சிலை பற்றிய குறிப்பில் சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.


ஜுன்  2018
இந்நூலின் ஆசிரியர்களில் ஒருவராக அமைந்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். நூலாக்கத்தில் உதவிய நண்பர்கள் திரு தில்லை கோவிந்தராஜன், திரு மணி.மாறன் ஆகியோருக்கும், இந்நூலினை முதல் வெளியீடாகக் கொணர்ந்தமைக்காக ஏடகத்திற்கும் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றி. நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

23 June 2018

பட்டீஸ்வரம் முத்துப்பந்தல் : 15 ஜுன் 2018

1999இல் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது "பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியபோது ஞானசம்பந்தப்பெருமான் முத்துப்பந்தல் பெறும் காட்சியைக் காணும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. அது 15 ஜுன் 2018 அன்று நிறைவேறியது. 

முத்துப்பந்தல் விழாவோடு தொடர்புடைய திருமேற்றளிகை மற்றும் திருச்சத்திமுற்றம் கோயில்களுக்கு முன்னர் பலமுறை சென்றபோதிலும் இப்போது திருச்சத்திமுற்றம் சென்று பின்னர் பட்டீஸ்வரம் சென்றோம். வைகாசி பிரம்மோற்சவ விழாவின்போது இங்கு கீழ்க்கண்ட நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதை அறிந்தோம். 
* திருமுலைப்பால் அளிக்கும் விழா
* ரிஷப வாகனத்தில் வீதியுலா
* முத்துக்கொண்டை,முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளித்து வீதியுலா
* முத்துத் திருஓடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலா
* முத்துப்பல்லக்கில் எழுந்தருளும் விழா
* முத்துப்பந்தலில் வந்து இறைவனை தரிசிக்கும் விழா

விழா நாளன்று காலை முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவதைக் காண ஆவலோடு இருந்தபோதிலும் மதியவாக்கில்தான் பட்டீஸ்வரம் சென்றடைய முடிந்தது. திருமடாலயத்திலிருந்து பல்லக்கில் ஞானசம்பந்தப்பெருமான் திருமேற்றளிகை செல்கிறார். அங்கிருந்து திருச்சத்திமுத்தம் வந்தடைகின்றார். அங்கிருந்து கிளம்பி வரும்போது இறைவன் தருகின்ற முத்துப்பந்தலில் வந்து பட்டீஸ்வரர் ஆன தேனுபுரீஸ்வரரை வழிபடுகிறார். 

ஞானசம்பந்தப்பெருமான் பட்டீஸ்வரரை நோக்கி மேள தாளங்கள் முழங்க, பக்திப்பாடல்கள் பாடப்பெற, இசைக்கருவிகள் இசைக்கப்பெற, பூதகணங்கள் தாங்கிவருகின்றமுத்துப்பல்லக்கில் வரும் காட்சியைக் காண பல மணி நேரமாக பக்தர்கள் ராஜகோபுரத்தின் வாயிலில் காத்திருப்பதைக் காண முடிந்தது. நாங்களும் அவரைக் காணக் காத்திருந்தோம்.  

இங்கிருந்துகொண்டே நாம் ஞானசம்பந்தப்பெருமான் வந்ததை, சேக்கிழார் பாடிய காலம் நோக்கிச்சென்று பார்ப்போமா?
பட்டீச்சரப்பதியை ஞானசம்பந்தப்பெருமான் நெருங்கும்போது வெப்பத்தை மிகுதியாய்த் தருகின்ற முதுவேனில் வெம்மையாக இருக்கிறது. இப்பதியில் தான் பெறற்கரிய பேற்றினை அவர் பெறுகின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அடியார்களுடன் ஞானசம்பந்தப்பெருமான் நடந்துவரும்போது இருக்கும் வெப்பத்தைக் காண விரும்பிய பரம்பொருள், அவருக்கு முத்துப்பந்தரை அளிக்கிறார். பிறர் கண்ணுக்குத் தெரியாதபடி முத்துப்பந்தரைப் பூதங்கள் தாங்கிப்பிடிக்கின்றன. பந்தரைப் பிடித்துக்கொண்டே ஒரு பூதம், இது பட்டீசர் திருவருள் என்றது. அதைக் கண்ட ஞானம்பந்தப்பெருமான் புளகாங்கிதமடைந்து நிலத்தில் விழுந்து வணங்கினார். இதனைச் சேக்கிழார் தம் காப்பியத்துள் மிகவும் அழகாக வடிக்கின்றார்.

"அவ்வுரையும் மணிமுத்தின் பந்தரும்ஆ காயம்எழச்
செவ்வியமெய்ஞ் ஞானமுணர் சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன் மேதினியின் மிசைத்தாழ்ந்தார்" (பாடல் எண்.2291)

தொண்டர் கூட்டமானது ஆரவாரம் செய்யவும், மறைகளின் பேரொலி எட்டு திசைகளிலும் நிறைந்து ஒலிக்கவும் எழுந்தருளி வருகின்ற பிள்ளையார், வெண்மையான முத்துப்பந்தரின் நிழலானது தம்முடியின்மீது நிழல் பரப்பிப் பொருந்தப் பெறுவதால் பொன்னம்பலத்தில் கூத்தபபிரானின் தூக்கிய திருவடி நிழலில் அமர்ந்திருத்தலைப் போல அமர்ந்திருந்ததாக வருணிக்கிறார் சேக்கிழார். அச்சமயத்தில் இனிய மொழியுடைய தமிழ்மறைத் தலைவராக பிள்ளையார்மே தேவர்கள் பொழிந்த மந்தாரம் போன்ற தெய்வ மரங்களின் மலர்கள் முத்துப்பந்தரை பூம்பந்தராக்கிவிட்டதாக உவகை கொள்கிறார்.  


ஞானசம்பந்தப்பெருமான் அன்று வந்ததை சேக்கிழார் பெருமான் கூறியதை இன்று கண்டோம். தொண்டர் கூட்டமானது ஆரவாரம் செய்யவும், மறைகளின் பேரொலி எட்டு திசைகளிலும் முழங்கவும் ஞானசம்பந்தப்பெருமான் பல்லக்கில் பட்டீசர் கோயிலின் ராஜகோபுரத்தின் முன்பாக வந்தார்.



பூதகணங்கள் தாங்க முத்துப்பல்லக்கில் ராஜகோபுர நுழைவாயிலின் வழியாக, நந்தி மண்டபத்தையும், கொடி மரத்தையும் கடந்து கோயிலுக்கு உள்ளே வந்த ஞானசம்பந்தப்பெருமான் அங்கிருந்து இறங்கி பட்டீசரைக் காண உள்ளே செல்கிறார். பல்லக்கில் வந்த பெருமானை இப்போது பக்தர்கள் தூக்கிச் செல்கின்றனர். 


அவர் கோயிலுக்குள் நுழையும்போது இரு புறமும் தன்னை மறந்து தென்னாடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தர்களின் குரல் விண்ணைப் பிளக்கின்றது. ஞானசம்பந்தரை வரவேற்றுக்கொண்டே முழுமுதற்பெருமானை வாயாறத் துதிக்கின்றார்கள்.  








நன்றி:
ஞானசம்பந்தப்பெருமானைக் காணச்சென்றபோது உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி, என் இளைய மகன் திரு சிவகுரு.
துணை நின்றவை:
பா.ஜம்புலிங்கம், பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர், பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர், பதிப்பாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன், வெளியீடு நவகோடி நாயகி ஸ்ரீதுர்காம்பிகை அறக்கட்டளை, சென்னை 600 102, 1999, பக்.36-38






விழா சென்றுவந்த பின் விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த கட்டுரை

16 June 2018

காலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து

திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து எழுதியுள்ள காலம் செய்த கோலமடி என்னும்  புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt Memorial அருகில், மாலை 5.00 அளவில்) நடைபெறவுள்ள நிலையில் அந்நூலுக்கு நான் வழங்கிய அணிந்துரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


அணிந்துரை

     புதினம் என்ற சொல்லுக்கு புதுமை, நூதனம், செய்தி, அதிசயம் என்ற பொருள்களைத் தருகிறது தமிழ் அகராதி (Tamil Lexicon, Vol V, University of Madras, Rpt. 1982). Novel என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகலப் புனைகதை, இத்தாலிய கலைஞர் பொக்காசியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத்தொடரில் ஒரு கதை, பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை, புதிய, புதுமை வாய்ந்த, புதுவகையான, வியப்பளிக்கிற, முன்னம் அறிந்திராத என்ற பொருள்களைத் தருகிறது ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம். (English-Tamil Dictionary, University of Madras, Rpt 2010).  நாவல் என்ற சொல்லுக்கு ஒரு கதையை உரைநடையில் விரிவாகக் கூறும் ஓர் இலக்கிய வடிவம் என்றும், புதினம் என்ற சொல்லுக்கு புதுமை, வேடிக்கை, (புதிய) செய்தி என்றும் பொருள்களைக் கூறுகிறது க்ரியா. (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, மறுபதிப்பு 2009).

       தமிழ் இலக்கிய வரலாறு (நறுமலர்ப்பதிப்பகம், சென்னை,  1992, 21ஆம் பதிப்பு) என்னும் தன்னுடைய நூலில் தமிழறிஞர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன், “தமிழில் வரலாற்றுப் புதினங்களை முதன் முதல் சிறக்க எழுதிப் பின் வந்தோர்க்கு வழிகாட்டியாய் விளங்கியவர் கல்கியே. இத்துறையின் தந்தை இவரே. முதலில் இவர் எழுதிய வரலாற்றுப்புதினம் பார்த்திபன் கனவு ஆகும்.,,,,…கல்கியை அடியொற்றிப் பலர் சரித்திர நாவல்களை எழுதி வருகின்றனர்” என்கிறார். அவர் நாவல் என்ற சொல்லையும், புதினம் என்ற சொல்லையும் பயன்படுத்துவதை இதன்மூலம் அறியமுடிகிறது.

     நாவல் என்ற சொல்லுக்கு ஈடாக தமிழில் புதினம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலம் செய்த கோலமடி என்னும் இந்த புதினத்தின் ஆசிரியரான திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து, புதினம் என்ற சொல்லின் பொருளுக்கேற்றாற்போல மூன்று புதுமைகளை முன்வைக்கின்றார். முதல் புதுமையாக இப்புதினத்தை எழுதி முடிக்க 32 ஆண்டுகள் காத்திருந்ததாகக் கூறுகிறார்.   அடுத்த புதுமையாக இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான மூன்று கதாபாத்திரங்களின் சிந்தனைகள் மற்றும் நினைவலைகளின் வழியாகவே எல்லா நிகழ்வுகளும் பயணிக்கின்றன என்கிறார். அவர் கூறுகின்ற மூன்றாவதான, அதே சமயம் முக்கியமான, புதுமை வாசகரை வியப்புக்குள்ளாக்கும். 22 வயது இளைஞன் மனதில் ஓடுவதை 22ஆம் வயதிலும், 55 வயது மனிதனின் மனதில் ஓடுவதை  55 வயதிலும் கண்டும், கேட்டும், வாசித்தும் உணர்ந்தும் எழுத முடிந்திருக்கிறது என்று கூறுகிறார்.

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் இயக்குநர் கே.பாலசந்தர், முதல் அத்தியாயம் என்று தொடங்கி, பல அத்தியாயங்களாக கதாநாயகி கவிதாவின் வாழ்க்கையைப் பிரித்து, ஒவ்வொரு மாற்று சூழலிலும் புதிய அத்தியாயத்தை நம் முன்கொண்டு வந்து இறுதியில் மீண்டும் முதல் அத்தியாயம் என்று நிறைவு செய்திருப்பார். திரைப்படம் பார்த்தல் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு திரைப்பட ரசிகரையும் ஒரு பாத்திரமாக ஆக்கியிருப்பார் பாலசந்தர். அதுபோல இப்புதின ஆசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் அத்தியாயம் ஒன்றில் துரைராஜ், அத்தியாயம் ஒன்றில் கோபால், அத்தியாயம் ஒன்றில் லதா என்று தொடங்கி இறுதி வரை எவ்வித தொய்வுமின்றி எடுத்துச்சென்றுள்ளார். நம்மை கதாபாத்திரங்களோடு நெருக்கமாகக் கொணர அவர் மேற்கொண்டுள்ள முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று கதாபாத்திரங்களை முப்பரிமாணமாக வாசகர் முன் கொணர்ந்து சற்றே வித்தியாசமான நோக்கில் அவரவர் கண்ணோட்டத்தில் நிகழ்வுகளைப் பதிந்து, வாழ்வியலின் நடப்புகளை மிகவும் அநாயாசமாக முன்வைத்துள்ளார்.

     முப்பரிமாண நிலையில் அமைந்துள்ள இப்புதினத்தை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமாகவும் நோக்கும்படி நூலாசிரியர் எழுதியுள்ளார். வாசகர்கள் அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி அவரவர் நோக்கில் வாசிக்கும்போது கிடைக்கின்ற வேறுபாட்டினைப் எளிமையாகப் புரிந்துகொள்ளும் சூசகத்தையும் தந்துள்ளார் ஆசிரியர். புதினத்தைப் படிக்கும்போது சில அத்தியாயங்களில் உணர்வுகளின் வழிமாற்றம் காரணமாக ஏற்படுகின்ற செயல்களைப் பற்றி எழுதும்போது வாசகர் சற்றே நெளியும் நிலைக்கு தள்ளப்படுவதை உணரும் ஆசிரியர் அதற்கான யதார்த்தத்தையும் முன்வைக்கின்றார். அச்சூழலில் அவருடைய நியாயப்படுத்துதலையும் சற்றே நாம் நோக்கி ஏற்க வேண்டியுள்ளது. 

முதல் அத்தியாயத்தின் கதாபாத்திரமான துரைராஜ் தளத்தில் இருந்து நடப்பனவற்றைச் சற்றே பார்ப்போம். நன்றியோடு நினைத்தல் (“தாத்தா! உங்க ஆசிர்வாதம்! வாழ்க்கையில நான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருக்கேன்.”),  நெருக்கத்தை உண்டாக்கல் (இந்தக் கல்லூரி வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல. உங்களில் ஒவ்வொருவருக்கும் இது உங்கள் வீடேதான்.),  சூழலை முன் கொணர்தல் (1961லிருந்து ஹாஸ்டலில் தங்கிப் படித்த இறுதி வருட மாணவர்கள் என்றெழுதிய புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன.), பயத்தைத் தெளிவுபடுத்துதல் (“அட அசடே! கனவுதானே! அப்படி எல்லாம் வரும்.”), மாணவர்களின்மீதான அக்கரை (கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற நான்கிலும் மாணவர்களுக்குப் பயிற்சி தேவை.), காமத்தின் விளைவு (காமத்தால் மனிதனுக்குப் பகுத்தறிவுக் கண் குருடாகி விடுகிறது.), தனிமையின் துயரம் (கடந்து போன கசந்த நாட்கள் பல வேளைகளில் தனிமையில் என் இதயத்தைத் துளைக்கத் தவறுவதே இல்லைதான்.), திருந்த வாய்ப்பு (“அப்ப உன்னை நம்பலாம். இனிமேல அந்தத் தப்பைப் பண்ண மாட்டேல்ல.”), எதிர்பாரா அதிர்ச்சி (வாழ்க்கையே திடீரென பாலைவனமாய் மாறியது போல் ஓர் உணர்வு. உயிருடன் இருக்கும் போதே இறந்த மனிதனாய் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தேன்.) என்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இறுதிப்பகுதியில் 30 ஆண்டு கால இடைவெளியினை மிகவும் நுணுக்கமாக இணைத்து அவர் உடன் பழகுகின்ற, அவருடைய எழுத்துக்கு ஊக்கம் தருகின்ற நண்பர்களையும் அறிமுகப்படுத்தி  அவர்களையும் கதாபாத்திரங்களாக ஆக்கியுள்ளார்.

இரண்டாம் அத்தியாயத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் 33 ஆண்டுகளுக்குப் பின்னர், லதா, கோபாலைப் பார்க்கும்போது அவள் மனம் படும் பாடு, ஏக்கம், வருத்தம் ஆகியவற்றில் மிகவும் நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ள விதம் பாராட்டத்தக்கது. முரண்பாடான உறவு, துரோக வெளிப்பாடு, மாறுபட்ட உணர்வு, வேறுபட்ட எண்ணங்கள், தவறான சிந்தனைகள் என்ற அடிப்படையில் ஒரு காலகட்டத்தில் பார்க்க விரும்பாத முகத்தை இப்போது, மீண்டும் பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்திலும் தவிப்பிலும் பார்க்க ஆசைப்படும் நிலையும் அதற்குத் துணையாக இறைவனை அழைப்பதும் வாசகர்களின் மனதில் ஏற்படுகின்ற பாரத்தினைக் குறைத்துவிடுகிறது. கட்டாய சூழலில், அபாண்டமான தவறைச் செய்த ஒருவர் 33 ஆண்டு காலத்திற்குப் பின்னர் சந்திப்போது ஏற்படுகின்ற எண்ண அலைகளை அருமையாகப் பதிந்துள்ளார்.

மூன்றாம் அத்தியாயமானது நல்ல கனவுகளோடு வந்த ஒருவன் தடம் மாறிச் சென்று, கூடா நட்பாலும், தவறான போக்கினாலும் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்து அதனால் மனம் தவிப்பதைக் கொண்டு அமைந்துள்ளது. அத்தகைய தவறிழைத்தவன் பல வருடங்களுக்குப் பின் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகில் தன்னால் பாதிக்கப்பட்டவளைக் கண்டபோது, படியில் உட்கார்ந்துபேசவேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தும் போது அவள் அதனை ஏற்பது வாசகருக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது.  எதிர்ப்பேதும் இல்லாமல் அவள் அதே படியில்  இடைவெளி விட்டு லதாவும் உட்கார்வதை நன்கு படம்பிடித்துள்ளார். “நித்யா என் பொண்ணுதான்” என்று சொல்லி, பின்னர், “என் பொண்ணு மட்டுமில்ல!……….. உங்க பொண்ணும்தான்!” என்றபடி கைகளால் முகத்தை மூடித் தேம்பி அழ ஆரம்பிக்கும்போது புதினத்தின் இறுதிப்பகுதியை நாம் அடைகிறோம். அவ்விடத்தில் அவர்கள் ஒன்று சேரல் என்பதானது காலத்தின் கோலமாக அமைவதை ஆசிரியர் நன்றாக அமைத்துள்ளார். காலத்தின் கோலமடி என்ற தலைப்பும், உள்ளே காணப்படுகின்ற பல செயன்மைகளும் எதிர்மறைப் பண்புகளாகக் காட்டப்பெற்றாலும் சமூகத்தின் அவலங்களாகவே அவை நமக்குப் புலப்படுகின்றன. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அருமையான நடையில் முக்கோண பாணியில் புதினத்தை அமைத்துள்ளார் ஆசிரியர்.

ஒவ்வொரு பகுப்பிலும் பல முடிச்சுகள், அதனை அவிழ்க்க எடுக்கப்படும் முயற்சிகள், அதில் கிடைக்கின்ற வெற்றிகள் என்ற வகையில் புதினத்தை புதுமையாகப் படைத்துள்ளார் ஆசிரியர் திரு துளசிதரன் வே.தில்லைஅகத்து. கால இடைவெளியையும், வயது வேறுபாட்டு உணர்வினையும், அதற்கேற்றாற்போல சமுதாயப் போக்கையும் மிகவும் சிரமப்பட்டு ஒன்றிணைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.  ஒரு முறை படித்துவிட்டு இல்ல நூலகத்தில் பாதுகாப்பாகவும் அழகாகவும் வைக்கப்படும் புதினம் என்பதற்கு மாறாக இப்புதினம் அமைந்துள்ளதே இதன் சிறப்பாகும். மாறுபட்ட நிலையில் தொடர்ந்து அவ்வப்போது வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு வாசிப்பின்போதும் வாசகனின் மன நிலையில் முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் வெளிப்படும் அளவிற்கு நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் வித்தியாசமான முயற்சியைப் பாராட்டுகிறேன். அவர் மென்மேலும் பல நூல்களைப் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.                                                                                                                                                                               பா.ஜம்புலிங்கம்

நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


நூல் : காலம் செய்த கோலமடி
ஆசிரியர் : துளசிதரன் வே. தில்லையகத்து (94475 35880)
பதிப்பகம் : ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ், 32/1, கங்கையம்மன் கோயில் தெரு, 
வட பழனி, சென்னை 600 026, (98843 34821)
முதல் பதிப்பு : மே 2018
விலை : ரூ.200

நூலாசிரியரின் வலைப்பூ : Thillaiakathu chronicles


நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டதைப் பற்றி 
என் மகன் 17 ஜுன் 2018 அன்று தன் முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு

19 டிசம்பர் 2019இல் மேம்படுத்தப்பட்டது.

09 June 2018

இந்திய ரயில்வேயின் ஆன்மீகச் சுற்றுலா : கார்டியன்

அண்மையில் அலைச்சறுக்கினைப் பற்றி கார்டியன் இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பினைக் கண்டோம். இப்பதிவில் ஹைதராபாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ள ரயில் பயணம் பற்றிய கட்டுரையின் மொழிபெயர்ப்பினைக் காண்போம்.

இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு ஒவ்வொரு ஆண்டும் பாரத் தர்ஷன் என்ற சுற்றுலாவை நடத்துகிறது. இலட்சக்கணக்கான இந்துக்கள் முக்கியமான சமயம் சார்ந்த இடங்களுக்குச் செல்ல இச்சுற்றுலா உதவுகிறது.  ஒரு நாளைக்கு ரூ.1000 என்ற நிலையில் இச்சுற்றுலாக் கட்டணத்தில் போக்குவரத்து, தங்கும் வசதி, சைவ உணவு, தேவையான அளவு தேநீர் உள்ளிட்டவை அடங்கும். ஹைதராபாத்திலிருந்து தொடங்கிய என் (Richard Eilers, கட்டுரையாளர்) ஏழு நாள் பயணம் தமிழ்நாடு வரை தொடர்ந்தது. பல அருமையான கோயில்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

ஒரு வாரமாக கிட்டத்தட்ட 800 பயணிகளுடன் பயணிக்கின்றபோதிலும் அவர்களுடன் உரையாட முடியாதது எனக்குக் குறையே. நடைமேடையில் காத்திருந்தபோதுகூட நான் சற்றே பரபரப்போடு இருந்தேன்.  அவ்வப்போது பேரிறைச்சல்களும், சிரிப்புகளும், வெளிச்சமும் என்னை விழிக்கவைத்தன. ரயில்வேப்பெட்டி முழுவதும் பெட்டிகளும் பைகளுமாக இருந்தன. என் அருகே அமர்ந்தவர்கள் ஹைதராபாத்தின் தென் பகுதியில் புகைவண்டியில் ஏறியவர்கள். அவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தனர். எங்களின் முதல் நிறுத்தம் அங்கிருந்து 1000 கிமீ தொலைவிலுள்ள திருச்சி.

காலை 6.00 மணிவாக்கில் தேநீர் விற்கும் சிறுவன் சூடான பிளாஸ்டிக் கோப்பையில் தேநீரைத் தந்தான்.  பிறகு காலை உணவின்போது எங்களின் அறிமுகம். என் அருகில் இருந்த 13 பேர் கொண்ட குடும்பத்தார் என்னை உற்றுநோக்கியபடியே இருந்தனர். அக்குடும்பத்தின் தலைவர் நல்ல ஆங்கிலத்தில், எங்களுக்கு நெருக்கமாக இருங்கள். நான் சொல்வதைக் கவனித்துக்கொள்ளுங்கள். பின்னர் எந்த சிக்கலும் இருக்காது,” என்றார். இருந்தாலும் புகைவண்டி தாமதமாக வருவதற்கு அவரால் ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்த நாள் காலை பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு திருச்சி வந்தடைந்தோம். எங்களது பயணத்தின் முதல் தரிசனத்தை நிறைவு செய்ய சற்றே சிரமப்படும் நிலை. மிகவும் ஈடுபாட்டோடு அனைவரும் தரிசனம் செய்ததைக் காண முடிந்தது. கோயில்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படுவதால் சில நொடிகள் மட்டுமே தெய்வத்தைக் காண்பதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளது.  அலைந்து திரித்த பேருந்துகள் எங்களை அங்கிருந்து சில மைல் தூரத்தில் உள்ள திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துச் சென்றது. அங்கு அரங்கநாதருக்கான பெரிய கோயிலைக் கண்டோம்.  என் உடன் வந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நிற்க ஓடினார்கள். இந்து அல்லாத நிலையில் கருவறையில் நான் அனுமதிக்கப்படாதததால் (சில கோயில்கள் இந்து அல்லாதோரை அனுமதிக்கின்றன. சில அனுமதிப்பதில்லை) அப்பெரிய கோயிலின் பிரகாரங்களையும், விமானங்களையும், சன்னதிகளையும் பார்த்தேன்.  சென்றிருந்த பயணிகள் சில மணி நேரத்தில்  வெற்றிகரமாகத் திரும்பினர். தமக்குள் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு பேருந்தில் ஏறினர். பெண்கள் பக்திப்பாடல்களை உச்சரிப்பதைக் காணமுடிந்தது.   அருகிலிருந்த ஒரு இளம் மாணவர் தரிசனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவர்களுடைய பெற்றோர் விவசாயிகள் என்றும், வங்கியில் கடன் பெற்று இக்கோயில்களைக் காண வந்ததாகவும், அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய தொகை. இருந்தாலும் அந்த கோயில்களைக் காண்பதை அவர்கள் பெருமையாக நினைக்கின்றார்கள்” என்றும்  கூறினார்.

திட்டமிடப்பட்ட நிலையில் வசதியான இரவுகள், பாண்ட்ரி காரில் தயாரிக்கப்பட்ட உணவுகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்கள், சுத்தமான குளியலறைகள் என்ற வகைகளோடு பயணம் தொடர்ந்தது.
 இயல்புக்கு மாறானதும் வியப்பையும் தந்தது ராமேஸ்வரத்திலுள்ள இராமநாதஸ்வாமி கோயில். அங்கு பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு அப்படியே உள்ளே வந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் (கிணறுகளும் குளங்களும்) குளிக்கின்றார்கள். அங்கிருந்து நீர் சிறிய வாளி மூலமாக இறைக்கப்பட்டு தெளிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நனைந்த ஆடையுடன் சற்றே இருட்டாகக் காணப்படுகின்ற அந்த வளாகத்தினைச் சுற்றி வருவதைக் காணமுடிகிறது. நனைந்த ஆடையுடன் குழந்தைகளும் அவர்களுடன் வருகிறார்கள். இது என் மனதை அதிகம் நெகிழ வைத்தது. ராமேஸ்வரப் பயணம் முடிந்து அன்றைய இரவு சற்றே வித்தியாசமாக இருந்தது. நனைந்திருந்த ஆடைகள் புகைவண்டியின் ஜன்னல்களில் ஆங்காங்கே காயப்போடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அந்த புகைவண்டியில்  இருந்த மேற்கத்தியர் நான் மட்டுமே. வித்தியாசமான அனுபவங்களைப் பெற்றபோதிலும் அவர்கள் அனைவரும் நட்போடு நடந்துகொண்டதை உணர்ந்தேன்.  எனக்கு நல்ல பொழுது கிடைத்தது. அதிசயத்தக்க மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். இந்து சமயத்தைப் பற்றி சிலவற்றை அறிந்தேன்.  இந்திய வாழ்க்கை முறையின் சில கூறுகளை அறிந்தேன். 

பயணத்திட்டம் : 
நாள் 1 : தென்னகம் நோக்கி பயணம்
நாள் 2 : திருச்சி : 50 சன்னதிகளையும், 21 விமானங்களையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய கோயிலான 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றுள்ள சோழர் காலத்து பிரகதீஸ்வரர் கோயில் திருச்சி ரங்கநாதநாதஸ்வாமி கோயில்.
நாள் 3 : காலை : இராமேஸ்வரம் : விஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமருக்கான, லட்சக்கணக்கான இந்துக்களால் வழிபடப்படுகின்ற இராமநாதஸ்வாமி கோயில். மதியம் : மதுரை :  ஆயிரக்கணக்கான இறைவன், இறைவி, மற்றும் பலசிற்பங்களையும் ஓவியங்களையும் கொண்டமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில்
நாள் 4 : கன்னியாகுமரி : இந்தியத்துணைக்கட்டத்தின் நுனியில் அமைந்துள்ள குமரியம்மன் கோயில்.
நாள் 5 : திருவனந்தபுரம் : கேரளாவில் கோவளம் கடற்கரையில் குளியல். இந்துக்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்படுகின்ற பத்மநாபஸ்வாமி கோயில்.
நாள் 6 : காஞ்சீபுரம் : எண்ணற்ற கோயில்களைக் கொண்டுள்ள காஞ்சீபுரம். காமாட்சியம்மன் கோயில். நான் அதிக நேரம் செலவழித்த இந்துக்கள் அல்லாதோரும் அனுமதிக்கப்படுகின்ற,  8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கைலாச நாதர் கோயில்.
நாள் 7 : திருப்பதி : திருப்பதி மலையின்மீது அமைந்துள்ள, நூற்றுக்கணக்கான பக்தர்களைக் கவர்ந்திழுக்கின்ற, சில நேரங்களில் மூலவர் தரிசனத்திற்காக ஒரு நாள்கூட காத்திருக்கவேண்டிய, வெங்கடேஸ்வரர் கோயில். இக்கோயிலில் பல பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக மொட்டையடித்துக்கொள்வதால், எங்கு பார்த்தாலும் மொட்டைத்தைலையுடன் பக்தர்களைக் காணமுடிகிறது. 
நாள் 8 : பயணம் நிறைவு செய்து திரும்பல்

நன்றி : தி கார்டியன்
சுருக்கமாக தமிழில் :  பா.ஜம்புலிங்கம்
கார்டியன் இதழின் இக்கட்டுரையினை An Indian railway adventure : the pilgrim train from Hyderabad to Tamil Nadu, The Guardian, Richard Eilers, 4 May 2018 என்ற இணைப்பில் வாசிக்கலாம். 

02 June 2018

சித்தப்பா : கரந்தை ஜெயக்குமார்

வலையுலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்து, தொடர்ந்து எழுதிவருபவர் நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார். வரலாறு, கலை, அறிவியல், தனிநபர் வாழ்க்கை, சமூக அவலம் என்ற அனைத்துத் துறைகளிலும் பதிவுகளைத் தொடர்ந்து எழுதி சிறந்த வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளவர். கடந்த மாதம் ராஜராஜன் விருது பெற்றவர். அவர், தன்னுடைய சித்தப்பா நினைவாக அண்மையில் எழுதியுள்ள நூல் அவருடைய சித்தப்பா அமரர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மே 2018) வெளியிடப்பட்டது.

அமரர் சி. திருவேங்கடனாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்
திருவையாற்றில் வெளியிடப்பட்ட நினைவு மலரின் முகப்பட்டை
விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பாக அன்று கடையடைப்பு. இருந்தாலும் திருவேங்கடனாரை நினைவுகூற அவருடைய நண்பர்களும், அறிஞர்களும் திருவையாற்றில் திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள பாபு திருமண மண்டபம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. நேரம் ஆக ஆக, அரங்கமே நிரம்பி வழிய ஆரம்பித்தது. இளங்கோ கம்பன் இலக்கியக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அவ்விழாவில் திருவேங்கடனாரைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ளமுடிந்தது.  





அரிதின்முயன்று கட்டுரைகளையும், கவிதைகளையும், அனுபவங்களையும் திரட்டி இந்நூலை நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார்.  திருவேங்கடனாரின் பன்முக குணங்களையும், சிறப்பையும் இதில் காணமுடிந்தது.
  • நல்லாசிரியர், மனித நேயப்பண்பாளர்
  • வாழ்நாள் முழுவதும் ஆசிரியப்பணி மேற்கொண்டவர் 
  • சிறந்த ஓவியர்
  • கவிதைகள் எழுதுவதில் வல்லவர்
  • ஆடம்பரம் விரும்பாதவர்
  • சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காணாதவர் 
  • தமிழிசை மன்றம் தோற்றுவித்தவர்களில் ஒருவர்
  • தமிழிசை மேடையினை கோயிலின் கருவறை போலக் காக்கவேண்டும் என்றவர்
  • எந்த சூழலிலும் எவரையும் அலட்சியப்படுத்தாதவர்
  • இளங்கலை அறிவியல், ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றவர்
  • மாணவர்களுக்கு எளிதாகப் பாடம் சொல்லித் தந்தவர்
  • மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் பயிற்றும்போதே தமிழ் இலக்கியச் சொல்வளம் நிரம்பியவர்
  • மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்
  • அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்தவர் 
  • தியாகராசர் தெலுங்குப் பாட்டிசை விழாவைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியவர்
  • அரசியல் போராட்டத்தில் வெளிப்படையாகத் தொடர்புபடுத்திக்கொள்ளாதவர்
  • முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாவேந்தர் திறனாய்வு மன்றம், பாவலர் மன்றம் உள்ளிட்ட அரங்குகளில் பங்கேற்றவர்
  • நட்பை கற்பு போல காத்தவர்
  • பிறர் துன்பம் கண்டு துடித்தவர்
  • தன் துன்பம் கண்டு துவளாதவர்
  • நிறைந்த ஞானம், இனிய சொற்கள், எளிய வாழ்க்கை என்று வாழ்ந்தவர்
  • தன் கணையாழியை பிணையம் வைத்து கலைஞர்களுக்கு உதவி செய்தவர் 
  • பணி நிறைவுக்குப் பின்னரும் கல்விப்பணியாற்றியவர்
  • அழகான கையெழுத்தினைக் கொண்டவர்
  • பொதுவுடைமையில் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்
ஓர் அரிய மாமனிதரை சித்தப்பாவாகக் கொண்டிருந்த நூலாசிரியர், அவருடைய புகழையும், சிறப்பையும் இவ்வுலகிற்கு எடுத்துக் கூறும் வகையில் இந்நூலினை சிறப்பாகக் கொணர்ந்துள்ளார். அவரோடு தொடர்பு கொண்டோரிடம் செய்திகளைப் பெற்று தொகுத்துத் தந்துள்ள விதம் மிகவும் போற்றத்தக்கதாகும். திருவேங்கடனாரின் புகழை வெளிக்கொணர்ந்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு தந்த நண்பர் திரு கரந்தை ஜெயக்குமாரைப் பாராட்டவேண்டியது நம் கடமையாகும்.

4 ஜுன் 2018இல் மேம்படுத்தப்பட்டது.