27 July 2019

பேராசிரியர் இரா.பாவேந்தன் (13 ஏப்ரல் 1970 - 20 ஜுலை 2019)

முனைவர் இரா.பாவேந்தன் மூன்று மாதங்களாக கல்லீரலின் செயலிழப்புக்கும், நம் போன்றோரின் நலவிருப்புக்கும், மருத்துவர்களின் முயற்சிக்குமிடையே நடந்த போராட்டத்தில் 20 ஜுலை 2019 அன்று காலை இன்னுயிரை ஈத்தார். அன்று மாலை திருச்சி கீழ்க்கண்டார்கோட்டையில் நடைபெற்ற அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது அங்கு வந்திருந்த பல அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள் பாவேந்தனின் உழைப்பைப் பற்றிப் பேசியவை என்றும் என் நினைவில் இருக்கும். தமிழ்த்தாகம் கொண்டு வாழ்ந்தவர் தன் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என எண்ணி நாங்கள் வருந்தினோம். அவரது மனைவி திருமதி ஜெயலட்சுமி, குழந்தைகள், தம்பி மருத்துவர் இரா.  அமுதக்கலைஞன் மற்றும் குடும்பத்தாருக்கு என்னுடைய மற்றும் எங்கள் குடும்பத்தாருடைய சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.  



தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக, 1990களின் இடையில் அறிமுகமானவர் திரு இரா. பாவேந்தன். பழகுவதற்கு மிகவும் இனியவர். எப்பொழுதும் புன்னகையுடன் இருப்பார். எழுத்து, வாசிப்பு என்ற நிலையில் நன்கு விவாதிப்பார். 


ஆய்வாளராக இருந்தபோது மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவருடைய நன்மதிப்பினையும் பெற்றவர். தற்போது புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் எங்கள் நண்பர் முனைவர் சு. மாதவன் அவர்களும் இரட்டையர்களாக இணைந்து அக்காலகட்டத்தில் பல நற்பணிகளைச் செய்தனர். தமிழியல் ஆய்வு, தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வு மாணவர் மன்றம், மாணவர் உரிமைகளுக்கான போராட்டம், மாணவர் விடுதி கட்ட போராட்டம், விடுபட்ட பணியிடங்களை மீட்பதற்கான போராட்டம், ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் என்பனவற்றுக்கிடையே இருவரும் இணைந்து தமிழியலாய்வில் பங்காற்றினர். 

1990களின் இறுதியில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் எழுதிய தமிழில் அறிவியல் இதழ்கள் (சாமுவேல் ஃபிஷ்கறீன் பதிப்பகம், கோவை, 1998) நூலினை அன்பளிப்பாகத் தந்தார். அதிகமான முதல்நிலைத் தரவுகளைக் கொண்டது அந்நூல். இத்துடன் கீழ்க்கண்ட நூல்களையும், பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.







  •  சமூகப்புரட்சியாளர் ஜோதிராவ்ஃபூலே (சிந்தனைப்பேரவை, கோயம்புத்தூர், 1994)
  •  ஆதிதிராவிடன் இதழ்த்தொகுப்பு (சந்தியா பதிப்பகம், சென்னை, 2008, தமிழ் வளர்ச்சித்துறையின் 2008ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசு பெற்றது)
  • பாழ்நிலப்பறவை லீலாகுமாரி அம்மா (கோ.நாகராஜ் உடன் இணைந்து, சந்தியா பதிப்பகம், சென்னை, 2008)
  • கறுப்பு சிகப்பு இதழியல் (கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2009),
  • திராவிட சினிமா (வீ.எம்.எஸ்.சுபகுணராஜன், உடன் இணைந்து, கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2009)
  • திராவிட நாட்டுக்கல்வி வரலாறு (கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2013)

அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு உருவாக்கம் பெறும் நிலையில் தட்டச்சு, திருத்தம், மேம்படுத்தல் தொடர்பாக எங்கள் இல்லத்திற்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அதன்மூலம் எங்கள் குடும்பத்தவர் அனைவரோடும் நன்கு பழகி, குடும்ப நண்பரானார். அவருடனான கலந்துரையாடல் என்பது எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கும். Institute of Asian Studies வெளியிட்ட Archaeological Atlas of the antique remains of Buddhism in Tamil (1997) என்ற நூலைப் பற்றி அவர் மூலமாகவே நான் அறிந்தேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் முனைவர் பட்ட ஆய்வேட்டினை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளித்த பின்னர்தான் (1999) இந்நூல் அவர் மூலமாக எனக்கு அறிமுகமானது.  
கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தபின்னர் நட்பு தொலைபேசியிலும், அலைபேசியிலும் தொடர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் முகநூலில் தமிழியல் ஆய்வுகள் (Tamil Studies) என்ற பக்கத்தினைத் தொடங்கினார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றியவர் என்ற நிலையில் கல்வி, ஆய்வு அனுபவங்களை அத்தளத்தில் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அந்த பக்கத்தில் ஆரம்ப காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், தமிழ்ப்பல்கலைக்கழகக் காலாண்டிதழான தமிழ்க்கலை மற்றும் Tamil Civilization தொடர்பான பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப காலத்தில் பணியாற்றிய பேராசியர்களுடனான என் அனுபவத்தையும் அப்போது பகிர்ந்தேன்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆய்வில் ஆர்வமுடைய மாணவர்கள் பழைய மாணவர்கள் சங்கம் ஒன்றை அமைத்து அதன்மூலமாக பற்பல ஆய்வுகளுக்கு வித்திட வேண்டும் என்று அண்மையில் பேசிக்கொண்டிருந்ததை நண்பர்கள் பகிர்ந்துள்ளதைப் பார்க்கும்போது தமிழாய்வின்மீதான அவருடைய ஆர்வத்தினை உணரமுடிகிறது. அவருடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசும்போதோ எதையாவது சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும், இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும், தமிழுலகிற்கு நம்மாலான பங்களிப்பினைத் தொடர வேண்டும், என்று கூறிக்கொண்டே இருப்பார். சிறந்த கல்வியாளர். திராவிட இயக்கச் சித்தாந்தவாதி. சமூக ஆர்வலர். சாதிக்க நினைக்கத் துடித்த ஓர் அரிய இளைஞர், ஆய்வாளர், பேராசிரியர் என்ற பன்முகப்பரிமாணம் கொண்டவரை தமிழ் ஆய்வுலகம் இழந்துவிட்டது. அவருடைய கனவுகள் மெய்ப்படுத்தப்பட இனிவரும் ஆய்வாளர்களும், நண்பர்களும் அவருடைய வழித்தடத்தில் பயணிப்போம்.

தகவல் உதவி : 
விக்கிபீடியா
முனைவர் சு.மாதவன் மற்றும் நண்பர்களின் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பதிவுகள் 

என் மூத்த மகன் ஜ.பாரத் எழுதிய முகநூல் பதிவு

நினைவேந்தல்
திரு பாவேந்தனின் நினைவேந்தல் திருச்சியில் 18 ஆகஸ்டு 2019இல் நடைபெறவுள்ளதாகவும், உரிய நேரமும், இடமும் குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவருடைய சகோதரர் திரு அமுதக்கலைஞன் (9443217556) வாட்ஸ்அப் வழியாகத் தெரிவித்துள்ளார். அதில் பங்குபெற விரும்பும் நண்பர்கள் அவரைத்  தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

20 July 2019

அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா : ஆலோசனைக்கூட்டம்

1972-75இல் நாங்கள் பயின்ற அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாகவும், அது தொடர்பாக 1956 முதல் 1970 வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 16 ஜுன் 2019இல் நடைபெற்றதாகவும் நாளிதழ் மூலமாக அறிந்தேன். தாமதமாக அறிந்ததால் அக்கூட்டத்திற்குச் செல்ல முடியவில்லை. 

16 ஜுன் 2019 (மாணவர்கள் சந்திப்பு)



14 ஜுலை 2019 
கும்பகோணத்தில் ஆசிரிய நண்பர் திரு செல்வசேகரன் அவர்களைத் தொடர்புகொண்டபோது அடுத்த கூட்டம் 14 ஜுலை 2019 அன்று நடைபெறுவதாக அறிந்தேன். அக்கூட்டம் தொடர்பாக திரு வடிவேலு அவர்கள் எழுதியிருந்த கடிதத்தினை அவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கும்பகோணத்திலும், பிற ஊர்களிலும் உள்ள பல நண்பர்கள் முகநூலிலும், அண்ணா பள்ளி நூற்றாண்டு விழா என்ற பெயரிலும், தத்தம் பெயரிலும் வாட்ஸ்அப் மூலமும் விழா தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். 
கூட்டம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்த ஆசிரியர் திரு செல்வசேகரன்
திரு வடிவேலு 
கும்பகோணம் சென்று சேர்ந்ததும், வழக்கம்போல கும்பகோணத்திலுள்ள நண்பர்கள் அனைவரிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துவிட்டு, பள்ளிக்குச் சென்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் உள்ளே சென்றபோது மனக்குதிரை மிகவும் வேகமாகப் பறந்தது. அந்நாளைய நினைவுகள் வந்துகொண்டேயிருந்தன. இதனைப் பற்றி மனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-75) என்ற தலைப்பில் முன்பொரு பதிவில் விவாதித்துள்ளேன். 

அப்போது எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர் நினைவிற்கு வந்தனர். ஒலிபெருக்கியில் கேமரா என்று எங்களை பயமுறுத்தியது, ஓவிய ஆசிரியர் மயில் ஓவியம் வரைந்தது, நான்மானக்கூடம் சொல் குறித்து ஆசிரியர் விளக்கியது, பள்ளி விழாக்களில் ராஜ நாகம் திரைப்படப்பாடலைப் போட்டது, ஆசிரியர் பி.கே. ராஜராஜசோழன் திரைப்படம் வந்த காலகட்டத்தில் ராஜராஜசோழனைப் போல மீசை வைத்திருந்தது உள்ளிட்ட பல நினைவுகள் சுற்றிசுற்றி வந்தன. எஸ்.எஸ்.எல்.சி.யில் என் தேர்வு எண் 132430 என்பதும் நினைவிற்கு வந்தது.   1972இல் சேர்ந்தபோது நகராட்சி உயர்நிலைப்பள்ளியாக இருந்த அப்பள்ளி, பின்னர் மேல்நிலைப்பள்ளியாகவும், தொடர்ந்து அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியாகவும் மாறியது. நாங்கள் படித்த 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு கட்டடங்கள் முற்றிலுமாக மாறியிருந்தன. பல புதிய கட்டடங்களைக் காணமுடிந்தது.

நூற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிப்புப்பலகையில் கண்டேன். முதல் கூட்டம் 16 ஜுன் 2019இல் நடைபெற்றதாகக் கூறினர்.
கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக பள்ளி வளாகத்தினை ஆசைதீர சுற்றிவந்தேன். முன்னாள் மாணவர்கள் வர ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நானும் பலரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 
அப்பள்ளியில் படித்த, அரை நூற்றாண்டு கால  நண்பர், நாகராஜனுடன்
1952 முதல் படித்த மாணவர்கள் தொடங்கி அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். வந்திருந்தோர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பான கருத்துகளை முன்வைத்தனர். என் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  
 




வலமிருந்து: பள்ளியின் தலைமையாசிரியர் திரு சாரதி, திரு செந்தில்நாதன், ஜம்புலிங்கம், எங்கள் ஆசிரியர் திரு பி.கே. 
1972-75இல் நான் படித்தபோது 1972இல் எனக்கு வகுப்பு எடுத்த
ஆசிரியர் திரு பி.கே.அவர்களுடன் 




















ஆலோசனைக்கூட்டத்தில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
  • 11 நவம்பர் 2019இல் நூற்றாண்டு விழா கொண்டாடுதல்
  • பழைய மாணவர் சங்க 50ஆவது ஆண்டு விழா கொண்டாடுதல்
  • விழா சிறப்பாக நடத்துவதற்காக குழுக்களை அமைத்தல்
  • விழாக்குழுத்தலைவர், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தல்
  • பள்ளிக்கு நிலம் வழங்கிய குருநாதன் பிள்ளை அவர்களின் படத்தினைத் திறத்தல்
  • நூற்றாண்டு விழா நினைவாக நூற்றாண்டு விழா அமைத்தல்
  • விழா மலர் வெளியிடல்
  • பள்ளி வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் நூல் வெளியிடல்
  • தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்
  • அறக்கட்டளை ஒன்றினை நிறுவுதல்
  • நிலையான கட்டடம் ஒன்றைக் கட்டுதல்
  • ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து வெளியிடல்
  • நூலகம் அமைத்தல், உரிய நூல்களைப் பரிசாக வழங்கல்
  • வசூல் கமிட்டி அமைத்தல்
  • உறுப்பினர் கட்டணமாக ரூ.200 பெறல்
  • நன்கொடையாக அவரவர் வசதிக்கேற்ப அளிக்கக் கேட்டுக்கொள்ளல்
ஆலோசனைக்கூட்டம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட கீழ்க்கண்ட நாளிதழ்கள் உள்ளிட்ட அனைத்து இதழ்களுக்கும் நன்றி.




21 ஜுலை 2019 
21 ஜுலை 2019 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முந்தைய கூட்டத்திற்கு வராத பல புதிய மாணவர்கள் வந்திருந்தனர். 44 ஆண்டுகளுக்குப் பின், அப்போது எங்களுடன் படித்த திரு ஷண்முகசுந்தரத்தினைக் கண்டேன். கும்பகோணத்தில் நாங்கள் இருந்தபோது குடும்ப மருத்துவராகவும் நண்பராகவும் இருந்த மருத்துவர் செல்வராஜ் அவர்கள் வந்திருந்தார்.  1952 ஆண்டு முதல் படித்த மாணவர்களும், அவர்களில் தலைமையாசிரியராக இருந்தவர்களும் வந்திருந்தனர். கூட்டத்திற்கு திரு பன்னீர்செல்வம் (1961-62 பிரிவு முன்னாள் மாணவர்) தலைமை வகித்தார்
அப்பள்ளியில் படித்த நண்பர் ஷண்முகசுந்தரத்துடன்

தலைமை வகித்த திரு பன்னீர்செல்வம் அவர்களுடன்

எங்கள் குடும்ப மருத்துவரும் நண்பருமான மருத்துவர் செல்வராஜ் உரையாற்றுகிறார்


 










  







ஆலோசனைக்கூட்டத்தில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
  • முன்னாள் மாணவர் சங்கத்தினைப் பதிவு செய்தல்
  • தற்போது உறுப்பினர் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கம் பதிவு செய்தபின் நன்கொடைகளைப் பெற ஆரம்பித்தல்
  • விழாவிற்கான தேவைகளை வரையறுத்துத் திட்டமிடல்
  • மழைநீர் சேகரிப்பு அமைத்தல்
  • சூரிய சக்தி பெறும் அமைப்பு உருவாக்கல்
  • கூட்டத்தில் வராதவர்களுக்குத் தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளல்
  • தற்காலிகக் குழுக்கள் அமைத்தல் 
அடுத்த ஆலோசனைக்கூட்டம் 4 ஆகஸ்டு 2019 அன்று நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

4 ஆகஸ்டு 2019 
4 ஆகஸ்டு 2019 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு வந்ததைப்போல மாணவர்கள் வந்திருந்தனர். ஆண்டு உறுப்பினர் கட்டணமாக ரூ.200உம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக ரூ.2000உம் வசூலிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன.



18 ஆகஸ்டு 2019 (ஆலோசனைக்கூட்டம்)
18 ஆகஸ்டு 2019 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள், நினைவு மலர் அமையவேண்டிய விதம் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. 




கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தலைவர் : திரு கே.கிருஷ்ணமூர்த்தி
துணைத்தலைவர் :  திரு வி.ஐகுந்தன்
செயலாளர் : திரு ஆ.வடிவேலு
பொருளாளர் : திரு மா.ந.பரதன்

6 அக்டோபர் 2019
6 அக்டோபர் 2019 அன்று நடந்த கூட்டத்திற்கு முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் விழாவினை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான கருத்துகளை எடுத்துரைத்தனர். முன்னாள் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக தாம் செய்து வரும் பணிகள் குறித்து விவாதித்தனர். தலைமையாசிரியரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
20 அக்டோபர் 2019
இன்று காலை காரைக்கால் பண்பலை வானொலியில் நம் பள்ளியில் நடைபெறும் இக்கூட்டம் பற்றிய செய்தி ஒலிபரப்பானது. முன்னாள் மாணவிகளின் இறை வணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்திற்கு முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்களான திரு பி.கே. திரு ஜே.எஸ்.குலசேகரன், திரு சீ. சந்திரசேகரன், திரு கிருபாமூர்த்தி, திரு ராமச்சந்திர உடையார், திரு சுந்தரம்,  ஆகியோர் உள்ளிட்ட ஆசிரியர்கள் வந்திருந்தனர். திரு பட்டீஸ்வரம் செல்வம் வரவேற்புரை வழங்கினார். தலைமையாசிரியரும் கலந்துகொண்டார். விழாவிற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக அவர் கூறினார். தலைவர், துணைத்தலைவர், செயலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்கள் தர்மராஜன் கே.கே.எஸ்.ராஜா, வாசுதேவன், ஆடிட்டர் கல்யாணசுந்தரம்,  வழக்கஞறிஞர் செந்தில்நாதன், வீரப்பன் உள்ளிட்டோர் தாம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர்.  (இக்கூட்டத்தில் விழாவிற்கு நன்கொடையாக ரூ.5,000 வழங்கினேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக சந்தித்த நண்பர் திரு வெற்றி திருநாவுக்கரசு இங்கு ஆசிரியராகச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.) அடுத்த கூட்டம் 10 நவம்பர் 2019 அன்று நடைபெறவுள்ளது. 

  
10 நவம்பர் 2019
10 நவம்பர் 2019 அன்று பள்ளிக்கு வருவோருக்கு மகிழ்ச்சியளிக்கின்ற நற்செய்தி காத்திருப்பதாக நண்பர்கள் செய்தி அனுப்பியிருந்தார். நண்பர்கள் அனைவரையும் கண்டதே மகிழ்ச்சி என்றனர். முன்னாள் மாணவர் திரு மதியழகன் அனைவரையும் வரவேற்று அழைப்புச் செய்தி விடுத்திருந்தார்.  

சென்னையைச் சேர்ந்த முன்னாள் மாணவியான திருமதி ராதாபாய் இப்பள்ளியில் படித்த தன்னுடைய சகோதரிகளுடன் வந்திருந்ததோடு நன்கொடையையும் வழங்கினார். 
முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தம் கருத்துகளைக் கூறினர். திரு ஐகுந்தன் முன்னிலை வகித்தார். திரு செல்வம், திரு திருஞானசம்பந்தம், திரு குலாம் மைதீன், திரு ராமகிருஷ்ணன், திருமதி தகைச்செல்வி, திரு பழனிநாதன், திரு செந்தில்நாதன், திரு கரும்பாயிரம், திரு சிவகுருநாதன், முனைவர் ஜம்புலிங்கம், முனைவர் செல்வசேகரன், மருத்துவர் செல்வராசன் உள்ளிட்டோர் விழா நிகழ்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பற்றி தத்தம் கருத்துகளைத் தெரிவித்தனர். திரு வடிவேலு நன்றி கூறினார். 
என் நண்பன் தயாளனின் சகோதரியும் என்னுடைய உடன் பிறவா சகோதரியுமான திருமதி தகைச்செல்வி 30 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டு பேசும் வாய்ப்பினைப் பெற்றேன். பள்ளிக்காலம் தொடங்கி என்னை நெறிப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். ஒருவரையொருவர் அறியாமலே (அவர் என்னை வாங்க, போங்க என்றும் நான் அவரை அம்மா என்றும்) பேசிக்கொண்டிருந்தோம். என் பெயரைக் கேட்டதும் தயாளனின் நண்பன்தானே? என்று கேட்க, நான் ஆம் என்றதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடன் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர் நாகராஜன் இருந்தார். அவரும் அவரை அறிவார். கூட்டம் முடிந்த பின்னர் 30 வருட குடும்ப நிகழ்வுகளை இருவரும் மனம் விட்டுப் பேசினோம். பற்றற்ற பற்று விரவியிருக்கும் இக்காலகட்டத்தில் அவருடைய பற்றானது என்னை கடந்த காலத்திற்கு இட்டுச் சென்றுவிட்டது. நாங்கள் மூவருமே அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள். எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா என்பதை நினைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.   







புகைப்படங்கள், நாளிதழ் நறுக்குகள் நன்றி : 
முனைவர் செல்வசேகரன், திரு சிவ.கோ.சண்முகவேலு, அரிமா திரு பாலசுப்ரமணியன், திரு மதியழகன் மற்றும் பிற முன்னாள் மாணவர்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுவினர்




அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவினை மேற்கண்ட இணைப்பில் காணலாம். இப்பள்ளியில் படித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியப்பெருமக்கள், நண்பர்கள் இப்பள்ளி தொடர்பான செய்திகளை வலைதள இணைப்புடனோ, பிடிஎப் வடிவிலோ எனக்கு (drbjambulingam@gmail.com) அனுப்பிவைத்தால் விக்கிபீடியாவிலுள்ள நம் பள்ளி தொடர்பான பதிவினை மேம்படுத்த முடியும். இருக்கும். இந்த முன்னாள் மாணவனின் முயற்சிக்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு பெரிதும் உதவும்.

நாங்கள் இப்பள்ளியில் படித்த இனிய அனுபவங்களை மேற்கண்ட இணைப்பில் காணலாம். 

13 நவம்பர் 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

பள்ளி தொடர்பான பிற இணைப்புகள்: