17 November 2025

85 வயது இளைஞர் திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம்

மூத்த வலைப்பதிவர்களில் ஒருவரான திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் இயற்கையெய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  85 வயது இளைஞர் என்று அவரைக் கூறலாம். எப்போதும் நற்சிந்தனை, அதனைப் பகிர்தல், சமுதாயம் மீதான அவருடைய ஈடுபாடு என்ற வகையில் அவருடைய குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வலைப்பூவில் அவர் எழுதுகின்ற பதிவுகள் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். சில பதிவுகள் நீண்டு இருந்தாலும் அதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் அதிகமாக இருப்பதைப் பார்த்துள்ளேன். 

திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம்
ஒளிப்படம் நன்றி : எங்கள் ப்ளாக் வலைப்பூ

முன்பெல்லாம் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். அண்மைக்காலமாக அவருடைய பதிவு அவ்வப்போது வெளிவந்ததைக் காணமுடிந்தது. கடைசியாக அவர் எழுதிய பதிவின் ஸ்கிரீன்ஷாட்டைக் கீழே தந்துள்ளேன். இலக்கியம், கவிதை, கட்டுரை, குடும்ப உறவு, ஆன்மீகம், சமுதாயம், அரசியல், வெளிநாட்டுப்பயணம் என்ற வகையில் அவர் எழுதாத துறையே இல்லை என்று கூறலாம். அண்மையில் கடவுளுடன் ஒரு நேர்காணல் என்ற அவருடைய பதிவைக் காணமுடிந்தது. அவருடைய பல மொழியாக்கங்கள் படிப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அவருடைய வலைப்பூ சுமார் 10,00,000 பக்கப் பார்வையினைக் கொண்டிருந்தது என்பதன்மூலமாக அவரைத் தொடர்பவர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அவருடைய நட்பு வளையமானது மிகவும் பெரியதாகும். அதிகமாக எழுதுவார். ஆனால் தனக்குத் தெரிந்தது குறைந்ததே என்று தன்னடக்கமாக தன் எழுத்தில் வெளிப்படுத்துவார். மனதில் பட்டதைத் தெளிவாக, தைரியமாக எழுதுவார். என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் அச்சுப்பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வலைப்பூ பதிவுகளை தொடர்ந்து படிக்க இயலா நிலையில் இருந்தேன். அவ்வப்போதுதான் அவருடைய பதிவுகளையும் அண்மைக்காலத்தில் பார்த்தேன்.

என் பதிவுகளில் புத்தர், சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய வேறுபாட்டினையும், களப்பணி தொடர்பான அனுபவங்களைப் பாராட்டியும் பல முறை அவர் எழுதியிருந்தார்.


சக வலைப்பதிவர்களின் பதிவுகளில் அவருடைய பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவருடைய வாசிப்பின் ஆர்வத்தை உணரமுடியும். எந்தப் பொருண்மையிலான பதிவென்றாலும் அதற்கேற்ற வகையில் அவர் மறுமொழி தருவது காண்போரை வியக்கவைக்கும். 

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பின்போது மூரான திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருடைய வாழ்வின் விளிம்பில் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தந்ததோடு, தன் எழுத்து தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரைச் சந்தித்தபோது அவரைப் பற்றி மேலும் அறிந்துகொண்டேன்.

அவருடைய வாசிப்பும், பகிர்வும் போற்றத்தக்கதாகும். வலைப்பூவில் பலரை எழுத வைக்கவும், பின்னூட்டம் இடவும் வைத்து அவர்களின் எழுத்தார்வத்திற்கு மிகவும் தூண்டுகோலாக இருந்தவர். எங்கள் பிளாக் தளத்தில் கேட்டு வாங்கிப்போடும் கதையில் அவர் எழுதிய கதை இடம்பெற்றிருந்தது. அவரைப் பற்றிப் பேசாத, எழுதாத சக வலைப்பதிவர்களே இல்லை எனலாம். 

ஒரு நல்ல மனிதரை, பண்பாளரை, பெருமனது கொண்ட ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாரும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எழுத்துக்களின் மூலமாக என்றும் வாழ்வார்.

10 November 2025

விக்கிப்பீடியாவில் எழுதுதல் : அ.வ.வ.கல்லூரி

மயிலாடுதுறை, அ.வ.வ. கல்லூரித் தமிழாய்வுத் துறையின் ஸ்ரீலோசனி வரதராஜுலு அறக்கட்டளை சார்பாக 7.3.2024இல் விக்கிப்பீடியாவில் எழுதுதல் என்னும் பொருண்மையில் நிகழ்ச்சி நிரலில் கண்டபடி பயிலரங்கு நடைபெற்றது.






அப் பயிலரங்கில் திருவாரூர், கருவூலத் துறை துணை அலுவலரும், சக விக்கிப்பீடியருமான திரு கி மூர்த்தி அவர்களுடன் நானும் பயிற்சி உரை வழங்கினோம். நிகழ்விற்குக் கணிப்பொறித் துறைத் தலைவர் தலைமையுரையாற்றினார்.

இப்பயிலரங்கில் விக்கிப்பீடியாவில் எழுதுவது தொடர்பான ஓர் அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விக்கிப்பீடியாவில் நான் எழுத ஆரம்பித்தது முதல், நான் எழுதிவருகின்ற பொருண்மைகளைக் குறித்துப் பேசியதோடு, கட்டுரைகளை ஆரம்பிப்பது மிகவும் எளிதானது என்றும் அந்தந்தப் பகுதி தொடர்பாக மாணவர்கள் கட்டுரை எழுதலாம் என்றும் கூறினேன். திரு கி.மூர்த்தி அவர்களின் உரை மூலமாகப் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 

பேராசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களின் ஈடுபாடு பாராட்டும் வகையில் இருந்தது. அவர்கள் கேட்ட ஐயங்களுக்கு நாங்கள் இருவரும் மறுமொழி கூறினோம்.   மாணவர்களும் ஆசிரியர்களும் எழுதும் நிலையில் இரண்டாவது நிலையில் பயிலரங்கு தொடரும் எனத் தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் தமிழ்வேலு தெரிவித்தார். அவருடைய முயற்சி சிறக்க என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

06 November 2025

ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்) : ஆ.ஜான் ஜெயக்குமார்

திரு ஆ.ஜான் ஜெயக்குமார் எழுதியுள்ள  ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்) என்னும் நூல் தஞ்சாவூர் மண்டலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சியும் ஜெபமாலைபுரமும், தூய ஜெபமாலை மாதா ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம், அந்தோணியார் பொங்கல், ஜெபமாலை மாதா மன்றம், ஜெபமாலைபுரம் பாஸ்கா, புனித அருளானந்தர் பங்கு ஆலயம், மரியாவின் சேனை, புனித வின்செண்ட் தே பால் சபை, இராஜாராம் டாக்கீஸ், ஊராட்சி மன்றம், ஊர்த்திருவிழா உள்ளிட்ட 27 உட்தலைப்புகளைக் கொண்டு  அமைந்துள்ளது. 


இந்நூலை எழுதுவதற்கானப் பின்புலத்தை நன்றியுரையில் அவர் கூறியுள்ளார்.  "நான் வாழ்ந்து வந்த தடம் முன்னோர்களை நினைக்க வைத்துள்ள சில துளிகள். என் முன்னோர்கள் அதாவது என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, என் தலைமுறையினர் என அனைவரது காலத்திலும் நடந்தவை, நடைபெற்று வருபவை என எண்ணிய, என் சிந்தனையில் தோன்றிய உண்மைகளைக் கண்டதும் கேட்டதும் என்ற அடிப்படையில்..என் ஊரில் உள்ள உயர்ந்தோர், உயர் பதவி வகித்து ஓய்வுபெற்றுள்ள அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள் வழி எனக்குக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில்..ஜெபமாலைபுரத்தின் வழி அவர்களுக்குக் கிடைத்த நன்மைகள் போன்ற என் மனதை ஆழமாகத் தொட்டதால் என் ஊர்ப் பெருமைகளை, ஒரு ஒளிவட்டத்தை, நாம்தான் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனித்த என் சிந்தைக்கு மதிப்பளித்து இந்நூலை எழுதியுள்ளேன்". 

தஞ்சாவூரின் சிறப்பைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையைத் தரும் அவர், தான் பிறந்த ஜெபமாலைபுரத்தைப் பற்றிய ஒரு வரலாற்றுக்கண்ணோட்டத்தைப் பல்வேறு தலைப்புகளில் தொகுத்துத் தந்துள்ளார். 

தஞ்சைக்கருகே ஜெபமாலை செய்து விற்கும் கிராமம் ஒன்று உள்ளது என்பது தெரிய வருவதாகவும், ஜெபமாலைபுரத்தில் அவர்கள் ஜெபமாலைகள் வாங்கிவந்ததாக தம் முன்னோர்களால் சொல்லப்பட்டு வருவதாகவும் கூறும் ஆசிரியர், தம் ஊரானது ஊர் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் ஏழு பிரிவினராகப் பிரிக்கப்பட்டு, ஏழு குடும்ப நாட்டாண்மைகளாக இயங்கிவருவதாகக் கூறுகிறார்.  அவர்கள் மேற்கொண்டு வருகின்ற மக்கள் நலப்பணிகளையும் பட்டியலிடுகிறார்.

தற்போது ஜெபமாலைபுரத்தைச் சார்ந்தவர்கள் அனைத்து அரசுத்துறைகளிலும் அடிப்படைப்பணியிலிருந்து உயர் அலுவலகத் தலைமைப்பொறுப்பு வரை பல நிலைகளில் பணிபுரிந்ததாகவும், பணிபுரிந்துவருவதாகவும் பெருமையோடு கூறுகிறார். 

தம் முன்னோர்கள் வாய்மொழி செய்திவழி ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் தம் ஊர் மக்களால் தூய ஜெபமாலை மாதா ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதாகப் பதிவு செய்யும் நூலாசிரியர், அவ்வூரில் அமைந்துள்ள பிற ஆலயங்களைப் பற்றியும், விழாக்களைப் பற்றியும் விவரிக்கிறார். பாஸ்கா நாடகம் தொடங்கி, ஆலய வழிபாடு, பிற நிகழ்வுகள் தொடர்பான பல புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. 

தன்னைப்பற்றியும், தன்னுடைய சமுதாயப் பணிகளைப் பற்றியும் குறிப்பிடும் நூலாசிரியர், தன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைப் பற்றியும், ஊரிலுள்ள குறிப்பிடத்தக்க பெருமக்களைப் பற்றியும் உரிய புகைப்படங்களோடு ஆவணப்படுத்தியுள்ளார்.  இவ்வாறான ஒரு தொகுப்பினை வெளியிடுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சியை நூல் மூலம் தெளிவாக உணரமுடிகிறது. பணிக்குத் துணைநின்ற சான்றோரையும் ஆங்காங்கே நினைவுகூர்கிறார். நூலைப் படிக்கும்போது ஜெபமாலைபுரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றினை அறியமுடிகிறது. பொதுமக்களுக்கும், வளரும் தலைமுறையினருக்கும் தான் பிறந்த மண்ணின் பெருமையை மிகவும் தெளிவாகப் புரியும் வகையில் எழுதியுள்ள நூலாசிரியரின் ஈடுபாடு போற்றத்தக்கதாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி 2024இல் அலுவலக உதவியாளராகப் பணிநிறைவு பெற்றவர் ஜான் ஜெயக்குமார், பல்கலைக்கழகத்தில் நான் பணியில் சேர்ந்த காலகட்டத்தில், 1980களின் ஆரம்பத்தில், எனக்கு அறிமுகமானவர். சக பணியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் அளவிற்குப் பணியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை நான் அறிவேன். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அலுவல்நிலையில் பணியாற்றி நூல்களை வெளியிட்டோர் வரிசையில் இந்நூலாசிரியரும் சேர்ந்துள்ளார் என்பதும், பணி நிறைவு பெற்ற நாளில், தான் எழுதிய இந்நூலை அனைவருக்கும் அன்பளிப்பாகத் தந்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கச் செய்திகளாகும். அவர் மென்மேலும் பல நூல்களை எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்)
ஆசிரியர் : ஆ.ஜான் ஜெயக்குமார் (அலைபேசி 99940 42699)
வெளியீடு : ஸ்ரீசக்தி புரமோஷனல் லித்தோ புரொசெஸ், கோயம்புத்தூர்
பதிப்பாண்டு : ஜூலை 2024
பக்கங்கள் : 248
விலை : ரூ. 200

9.11.2025இல் மேம்படுத்தப்பட்டது.