11.10.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது. தஞ்சாவூரிலிருந்து நண்பர்கள் குழாமாகக் கிளம்பி புதுக்கோட்டையில் விழா நிகழ்விடத்திற்கு வந்தோம். வரவேற்பு, வருகைப்பதிவு, சக வலைப்பதிவர்கள் வருகை, விருந்தினர்களின் பொழிவுகள், விருந்தோம்பல், என ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டபடி மிக சிறப்பாக அமைந்திருந்ததைக் காணமுடிந்தது.
![]() |
விழாவின் ஒரு நிகழ்வாக முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் என்ற விருதினை, விக்கிமீடியா இந்தியாவின் திட்ட இயக்குநர் திரு அ.இரவிசங்கர் அவர்களிடமிருந்து பெறும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது.
தமிழ் விக்கிபீடியாவில் தொடர்ந்து கட்டுரை எழுதிய என்னை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருதினை வழங்க முடிவெடுத்த திரு முத்துநிலவன் அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினருக்கும், என் சக வலைப்பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் பிப்ரவரி 2011 முதல் எழுதி வருகிறேன். இது முழுக்க முழுக்க வரலாற்றுரீதியாக சோழ நாட்டில் பௌத்தம் பரவியிருந்ததைப் பகிரும் வகையில் கட்டுரைகளைக் கொண்டமைந்தது. திரு கரந்தை ஜெயக்குமார் கூறிய ஆலோசனையின்படி பிற தலைப்புகளில் பொதுவாக எழுத ஆரம்பிக்க நினைத்து நான் படித்ததை, பார்த்ததை, ரசித்ததைப் பகிரும் நோக்கில் முனைவர் ஜம்புலிங்கம் என்ற தலைப்பில் டிசம்பர் 2013 முதல் எழுதிவருகிறேன்.
| திரு இரவிசங்கர் அவர்கள் எனக்கு விருதினை வழங்கல் |
முனைவர் பட்ட ஆய்விற்காக நான் மேற்கொண்ட களப்பணிகளும், பல கோயில்களுக்குச் சென்றுவந்த பின் வலைப்பூவில் எழுதிய பதிவுகளும் என்னை விக்கிபீடியாவில் எழுதுவதற்கு ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது. முதலில் எழுத ஆரம்பித்தபோது சற்று சிரமமாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகத் தோன்றியது. கும்பகோணம் கோயில்கள், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள், கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையிலுள்ள நூலகங்கள், அறிஞர்கள் மற்றும் நூல்கள் அறிமுகம் என்ற நிலையில் எனது பதிவுகள் தொடர்கின்றன. இந்நிலையில் இவ்வாறான விருது என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்த அனுபவம், ஆங்கில விக்கிபீடியாவில் தடம் பதிக்க உதவியாக அமைந்தது.
-----------------------------------------
புதுக்கோட்டையில் வரலாறு படைத்த பதிவர் விழாவின் சிறப்பு அம்சங்கள்
- கவிதை மற்றும் ஓவியக் கண்காட்சி
- பதிவர்களின் நூல் கண்காட்சி மற்றும் விற்பனை
- வலைப்பதிவர் கையேடு வெளியீடு
- இடையிடையே தமிழிசைப் பாடல்கள்
- முதன்மைப் பேச்சாளர்களின் பொழிவுகள்
- திரு கரந்தை ஜெயக்குமார் மற்றும் திரு தவரூபன் நூல்கள் வெளியீடு
- போட்டியில் வெற்றி பெற்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தல்
- மூத்த பதிவர்கள் புலவர் இராமானுசம், திரு மதுரை சீனா, திரு திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்குச் சிறப்பு விருதுகள்
இவ்வலைப்பதிவர் திருவிழா பல நண்பர்களைச் சந்திக்க பெரும் வாய்ப்பாக இருந்தது. சிறப்பாக விழாவினைத் திட்டமிட்டு நிறைவேற்றிய அனைத்துக்குழுவினருக்கும் நன்றி.
சித்தாந்த இரத்தினம் (திருவாவடுதுறை ஆதீனம், 1998), அருள்நெறி ஆசான் (அருள்நெறி திருக்கூட்டம், தஞ்சாவூர், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை, 2001) ஆகிய விருதுகளைத் தொடர்ந்து இது நான் பெறுகின்ற நான்காவது விருதாகும்.
புகைப்படங்கள் உதவி:
திரு முத்துநிலவன் வலைப்பூதிரு கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ
வலைப்பதிவர் சந்திப்பு வலைப்பூ
-------------------------------------------------------------------------------------------
நன்றி: கணினித் தமிழ்ச் சங்கம், புதுக்கோட்டை
-------------------------------------------------------------------------------------------
28.2.2026இல் மேம்படுத்தப்பட்டது.


