14 October 2017

The Hindu : 40 வருட வாசகனின் கடிதங்கள்

வலைப்பூவில் 200ஆவது பதிவு
எழுத்திற்குத் துணைநிற்கும் வலைப்பதிவர்கள், நண்பர்கள், உறவினர்கள், 
ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

The Hindu வாசகனாக வாசிப்பு அனுபவத்தை The Hindu   40 வருட வாசிப்பு என்ற பதிவில் 28 அக்டோபர் 2016இல் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதில் இந்த வாசிப்புப் பழக்கமானது மொழி நடை, பயன்பாடு, உத்தி, அமைப்பு, ஒப்புநோக்கல் புதியனவற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்பன போன்ற பல நிலைகளில் என்னை உயர்த்தியுள்ளதை அனுபவத்தில் கண்டதையும் குறிப்பிட்டிருந்தேன். 

1970களின் இடையில் The Hindu இதழை நான் வாசிக்க ஆரம்பித்தாலும், கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் அக்காலகட்டத்தில் என்னுள் தோன்றவில்லை. வாசிப்புக்கே முக்கித்துவம் கொடுத்தேன். எந்த செய்தியை முதலில் படிப்பது, எப்படி புரிந்துகொள்வது என்ற உத்திகளை அறிய ஆரம்பித்தேன்.

1983இல் முதன்முதலாக வங்கித்தேர்வில் கடைபிடிக்கப்படுகின்ற முறை தொடர்பாக அதில் உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு, The Hindu மற்றும் Indian Express இதழ்களுக்குக் கடிதம் எழுதினேன். அவற்றில் நான் எழுதிய கடிதம் Indian Express இதழில் வெளியானது. அதே பொருளில் மாயவரத்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது The Hindu இதழில் கடிதம் எழுதியிருந்ததைக் கண்டேன். நான் வாசிக்கும் இதழில் கடிதம் வரவில்லையே என்ற குறை மனதில் தோன்றியது. 

ஆரம்பத்தில் தட்டச்சிட்டு கடிதங்களை அனுப்பினேன். பின்னர் அஞ்சலட்டையில் எழுதியோ, தட்டச்சிட்டோ அனுப்ப ஆரம்பித்தேன். அண்மைக்காலமாக மின்னஞ்சலில் அனுப்பிவருகிறேன். பொதுவாக நான் அனுப்பி வெளியாகின்ற கடித நகல்களை மட்டுமே பாதுகாத்து வருகிறேன். அவ்வகையில் அப்போது நான் அனுப்பிய கடிதம் இதோ. 
இரு இதழ்களுக்கும் நான் அனுப்பிய கடிதம்

தொடர்ந்து வாசகர் கடிதங்களை எழுத ஆரம்பித்தேன். அப்போது செவ்வாய்க்கிழமைகளில் வெளியான Know Your English பகுதிக்கு 'cre'me de la cre'me' என்ற சொல்லுக்கான பொருளைக் கேட்டு எழுதியிருந்தேன். நான் கேட்ட கேள்விக்கான மறுமொழி 19 செப்டம்பர் 1989இல் வெளியானது.  அடுத்து இதே பத்தியில் (Coffee Table Book, 15 டிசம்பர் 1998), (Kafkaesque, 22 ஆகஸ்டு 2000)(Mouse jornalism, 14 மார்ச் 2006)  போன்ற சொற்களுக்கான பொருள்களை அறியும் வாய்ப்பினைப் பெற்றேன்.
The Hindu இதழில் வெளியான முதல் பதிவு, 19 செப்டம்பர் 1989
  • நவம்பர் 1990இல் The Hindu மாணவர்களுக்காக Young World என்ற இதழை முதன்முதலாக அறிமுகப்படுத்தியபோது அதனைப் பாராட்டி எழுதினேன். The Hindu அலுவலகத்திடமிருந்து எனக்கு 19.12.1990 நாளிட்ட கடிதம் வந்தது. அது நான் பெற்ற முதல் கடிதம்.  "Dear Jambulingam, Thank you for writing to us. Your views are valuable and we will be happy if you continue to correspond with us. We hope you will continue to enjoy Young World. Happy Reading!....Yours sincerely, (Sd) Nirmala Lakshman, Deputy Editor"   
  • நவம்பர் 1991இல் Young World  முதலாண்டை நிறைவு செய்தபோது அவ்விதழில் வெளியானவற்றைப் பாராட்டி (World play, Crayon corner, Eureka, Do it yourself, Spaced out, Discovery, Crossword, Mind quiz, Prof Doodles, Batman, News on India and outside and other columns) எழுதினேன். அவர்களிடமிருந்து நன்றிக்கடிதம் வந்தது. அடுத்து 13 பிப்ரவரி 1993, 20 மார்ச் 1993 ஆகிய நாள்களில் Young Worldஇல் வெளியான கட்டுரைகளைப் பற்றிய என் கடிதங்கள் வெளியாயின. 
  • 1999 நவம்பர் வாக்கில் இதழில் வண்ணப்படங்களுடன் செய்தி சென்னைப்பதிப்பில் வெளியானதை அறிந்து பாராட்டி எழுதினேன். அப்போது "...It is hoped that The Hindu will be in colour in other centres too at early date" என்று மறுமொழி வந்தது. 
  • 30 ஆகஸ்டு 2000இல் இணைப்பு (Opportunities) வண்ணமாக வெளிவந்தபோது பாராட்டி எழுதினேன்.
  • நான் எழுதிய வாழ்வில் வெற்றி என்ற நூல் New Arrivals பகுதியில் 22 அக்டோபர் 2002இல் வெளியானபோது நான் அதிக மகிழ்ச்சியடைந்தேன். 
  • 13 டிசம்பர் 2007இல் The Hindu இதழில் முதன்முதலாக முதல் பக்கம் முழு விளம்பரம் வந்திருந்தது. இவ்வாறான விளம்பரங்கள் ஏற்புடையதல்ல என்று கூறி நான் எழுதிய கடிதத்தைப் பற்றி Readers' Editor தன் பத்தியில் விவாதித்திருந்தார். இதுதொடர்பாக அவர் விவாதித்தபோது என் கடிதத்தினையே முதன்முதலாகக் குறிப்பிட்டிருந்தார்.
The Hindu நாளிதழில் வெளியான கடிதங்களில் சிலவற்றை வெளியான நாள் விவரத்துடன் கீழே தந்துள்ளேன். அவற்றுள் The Hindu இணைப்புகள் மற்றும் வடிவமைப்பில் மாற்றம், சுற்றுச்சூழல், கலை, அரசியல், சமூகம், வாசிப்பு போன்றவை தொடர்பாக வெளியான கடிதங்கள் அமையும்.
தாஜ்மகால், 4 ஜனவரி 1999

 வடிவமைப்பில் மாற்றம், 20 ஏப்ரல் 1999

அரசியலுக்கு வயது  தடையல்ல, 5 ஆகஸ்டு 2000

தாராசுரம் கோயில், 25 அக்டோபர் 2002

125ஆம் ஆண்டு நிறைவு, 29 ஆகஸ்டு 2003

கும்பகோணத்தில் பௌத்த சான்று, 11 ஆகஸ்டு 2006

முதல் பக்க முழு விளம்பரம், 11 ஆகஸ்டு 2006


மேற்கண்ட வாசக ஆசிரியரின் பத்தியில் என் கருத்து
தமிழில் தல புராணங்கள், 24 பிப்ரவரி 2008

இந்திரா காந்தி மறைவு 25 ஆண்டுகள் நிறைவு, 3 நவம்பர் 2009

சுற்றுச்சூழல் தொடர்பாக 45 நாடுகளில் 56 நாளிதழ்கள் வெளியிட்ட 
ஒரே தலையங்கம், 9 டிசம்பர் 2009
தஞ்சாவூர் பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு விழா,
29 டிசம்பர் 2009
தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டடக்கலை,
17 ஜனவரி 2010

ஆத்தாக்களைப் பற்றிய கட்டுரை, 20 ஏப்ரல் 2010
நாளிதழைப் பற்றி குஷ்வந்த் சிங்கின் கடிதம், 21 அக்டோபர் 2011
காமராஜர் திட்டம், 31 ஆகஸ்டு 2012

தி இந்து ஆசிரியர் இயற்கையெய்தியபோது, 22 செப்டம்பர் 2012
 வடிவமைப்பில் மாற்றம், 2 ஜுலை 2013
தந்தி சேவை, 21 ஜுலை 2013
வாசக ஆசிரியர் பத்தாண்டு நிறைவு, 2 மார்ச் 2016
 வடிவமைப்பில் மாற்றம், 18 பிப்ரவரி 2017


வடிவமைப்பில் மாற்றம், 27 பிப்ரவரி 2017
மேற்கண்ட வாசக ஆசிரியரின் பத்தியில் என் கருத்து
1983இல் வாசகர் கடிதம் எழுதத் தொடங்கியபோது இருந்ததைவிட என் எழுத்தில் மாற்றம் இருப்பதை அனுபவம் மூலம் உணர்கிறேன். ஆரம்பத்தில் நான் எழுதிய கடிதங்கள் பெரும்பாலும் பாராட்டு என்ற நிலையிலேயே அமைந்திருந்தன. தொடர்ந்து எழுதிய பழக்கமானது கூடுதல் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உத்தியை எனக்குத் தந்தது. 1993இல் பௌத்த ஆய்வில் ஈடுபட ஆரம்பித்தபோது வாசிப்பு, களப்பணி என்ற நிலையில் என் எழுத்து நிலையிலும் மாற்றம் வருவதைக் கண்டேன். வாசகன் என்ற நிலையையும் தாண்டி ஆய்வாளனாக பல கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக The Hindu எனக்குத் துணைநின்றது.  

ஆரம்பத்தில் வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டபோது நான் அதனை ரசித்தேன். என் இரு மகன்களும் (பாரத், சிவகுரு) அவர்களுடைய பள்ளிக்காலம் தொடங்கி இவ்விதழின் வாசகர்களாயினர். அவர்களுக்கு ஆரம்ப கால வடிவமைப்பு மாற்றத்தில் உடன்பாடில்லை. ஆனால் போகப்போக அதில் வரும் மாற்றத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். மாறாக, அண்மைக்கால வடிவமைப்பு மாற்றங்களை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் செய்திகளைத் தரும் விதம், நம்பகத் தன்மை உள்ளிட்ட பல கூறுகளில் வாசிக்கத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இவ்விதழ் தனித்து நிற்பதை வாசகனாக என்னால் உணரமுடிகிறது. நன்றி, The Hindu.

English abstract:
The Hindu: Selected letters from a four decade old reader
As a four decade old reader of The Hindu I feel happy to share some my published letters in the issue. The reading practice led me to writing practice. The newspaper made me to improve myself from being a reader to a scholar and helped me to discuss on various topics. 

11 October 2017

ஏடகம் : வாழ்க, வளர்க

ஏடகம், தஞ்சாவூரில் 8 அக்டோபர் 2017 அன்று உதயமானது. வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரணியன் அவர்கள் குத்துவிளக்கேற்றி அகத்தின் செயல்பாடுகளைத் துவக்கிவைத்தார். இலக்கியம், வரலாறு, சுவடியியல் என்ற பல துறைகளில் பெரும் பங்களிப்பினை வழங்கவுள்ள ஏடகம் அமைப்பின் தொடக்க விழாவினைக் காண நண்பர்களும் அறிஞர்களும் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்தனர். 
ஞாயிறு முற்றம் முதல் சொற்பொழிவு நிகழ்வு

முதற்கட்டமாக, ஏடகத்தின் பிரிவாக ஞாயிறு முற்றம் அமைப்பின் முதல் பொழிவு ஆரம்பமானது. திரு மணி.மாறன் (9443476597, 8248796105) வரவேற்புரை நிகழ்த்தினார். ஏடகம் ஆற்றவுள்ள பணிகளை அவர் எடுத்துரைத்தார். 

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் (தலைவர், பணி நிறைவு, வணிகவியல் துறை, திரு புட்பம் கல்லூரி)  தலைமையுரையாற்ற ஆடிட்டர் திரு டி.என்.ஜெயகுமார், திரு சி.அப்பாண்டைராஜ், திரு எம்.வேம்பையன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கும் பேறு எனக்கும் கிடைத்தது.திரு பி.கணேசன் நன்றியுரையாற்றினார்.

வரலாற்றுப்பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் "காவிரியுடன் ஒரு பயணம்" என்ற தலைப்பில் ஒளி ஒலிக்காட்சியுடன் சிறப்புரையாற்றினார். காவிரியின் தொடக்கம் முதல் அது கடலில் கலக்கும் பூம்புகார் வரை அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இலக்கியங்கள், கல்வெட்டுகள் பிற சான்றுகளைக் கொண்டு காவிரியின் பயணத்தை அவர் பகிர்ந்தபோது காவிரித்தாயின் பெருமையினை உணரமுடிந்தது. வந்திருந்த விருந்தினர்களும், பார்வையாளர்களும், ஆய்வாளர்களும், அறிஞர்களும், ஊடகவியல் நண்பர்களும் மிகவும் ஆர்வமாகக் ஈடுபாட்டோடு கலந்துகொண்டனர். சிறிய மழைத்தூறல் இருந்தபோதிலும் விழா மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

நன்றி : தினமணி, 9 அக்டோபர் 2017

நன்றி : தினமணி, 9 அக்டோபர் 2017
விழா அழைப்பிதழை வித்தியாசமாக வடிவமைத்திருந்தார் திரு. மணி. மாறனின் மாணவர் திரு ஜெயப்பிரகாஷ். நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் விழா நிகழ்வினை சுருக்கமாக முகநூல் பக்கத்தில் பதிந்திருந்தார்.   


நன்றி : திரு ஜெயப்பிரகாஷ் 

நன்றி : திரு கரந்தை ஜெயக்குமார்
நண்பர் மணி.மாறனின் தன்விவரக்குறிப்பு அவர் எழுதியுள்ள கட்டுரைகளையும், நூல்களையும் பட்டியலிடுகிறது. தமிழ், வரலாறு, நூலகவியல், சுவடியியல் உள்ளிட்ட பல துறைகளில் தன்னுடைய முத்திரையைப் பதித்துவருகின்ற அவர் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.  


ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறன்று ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். ஏடகத்தின் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன். 

09 October 2017

என்றென்றும் நாயகன் சே குவாரா : லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ்

பொலிவியாவில் சேகுவாராவின் மரணத்திற்கு 50 வருடங்களுக்குப் பின்னரும் இன்னும் சர்ச்சையிலேயே அவருடைய மரபுப்பண்பு  : 
லாரன்ஸ் பிளைர், டான் காலின்ஸ், கார்டியன்
கட்டுரையின் சுருக்கமான என் மொழிபெயர்ப்பு
இன்றைய தி இந்து நாளிதழில், அவ்விதழுக்கு நன்றியுடன்

நவம்பர் 1966, நடுத்தர வயதுடைய, உருகுவே நாட்டைச்சேர்ந்த வணிகரான அடோல்போ மேனா கான்சாலெஸ்  பொலிவியாவிலுள்ள லா பாஸ் என்னுமிடத்திற்குச் செல்கிறார். பனிசூழ்ந்த உயர்ந்த இல்லுமானி மலையை ரசித்துக்கொண்டிருக்கும்படி அதன் எதிரே அமைந்துள்ள ஒரு விடுதியில் தங்குகிறார். கண்ணாடியில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்கிறார், சற்று பருத்த உடம்பு, வழுக்கைத்தலை, வாயில் எரிந்துகொண்டிருக்கும் சுருட்டுடன். உண்மையில் அவர் அர்ஜன்டைனாவில் பிறந்த புரட்சிக்காரரான, கியூபாவில் அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற புரட்சியை ஒடுக்கிய, ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து அமெரிக்காவிற்கு தன் செய்தியை விடுத்த, மார்க்சீயக் கோட்பாடுகளைப் பற்றியும் கொரில்லா போர்முறையைப் பற்றியும்  எழுதிய, உலகெங்கிலும் சோசலிசத்தைப் பரப்ப விரும்பிய சே குவாரேவே தவிர, வேறு யாருமல்ல. 
சே குவாரா உயிருடன் உள்ள கடைசி புகைப்படம், அவர் கொல்லப்படும் சில வாரங்களுக்கு முன் எடுத்தது (வலது புறம் அமர்ந்த நிலையில்)
11 மாதங்கள் கழித்து. அவருடைய மற்றொரு உருவம் கொண்ட புகைப்படம் உலகமெங்கும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஒரு படுக்கையில், உயிரற்ற அவரது உடல், தலை முடி கலைந்த நிலையில், கண்கள் முழுமையாகத் திறந்த நிலையில். அமெரிக்க உளவுத்துறை அவரது மரணத்தை அறிவிக்கிறது. அழுக்காகவும், ரத்தமாகவும் இருந்த அவரது உடலை சுத்தம் செய்ய உதவிய செவிலியரான சுசானா ஒசிநாகா கூறுகிறார் : “அவர்கள், அவரைப் பார்க்க இயேசுவைப் போல இருப்பதாகக் கூறினர்,” ”மக்கள் அவரை இன்னும் புனித எர்னெஸ்டோ என்று கருதி வழிபடுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் அவர் இன்னும் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று”. அடுத்த திங்கள்கிழமை, 9 அக்டோபர் 2017, அவர் கொலை செய்யப்பட்ட 50ஆம் ஆண்டு. இதனை நினைவுகூறும் வகையில்  ஈவோ பொலிவிய அதிபரான மொரேல்ஸ், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான குரலை எழுப்புவது உள்ளிட்ட  பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

1965இல் காங்கோவின் தோற்றுப்போன பயணத்திற்குப் பின் சே பொலிவியாவை தன் போராட்டக் களமாகக் கொள்கிறார்.   1960களில் எதனையும் சாதிக்கலாம் என்ற சூழல் அமைந்திருந்தது. இருந்தபோதிலும் சேயும் அவரது 47 பேர் கொண்ட படையும் நான்சாகுவா பகுதிக்கு வந்தபின் அனைத்தும் எதிர்பார்த்ததற்கு மாற்றாக அமைந்தது. அவர்களுக்கு கியூபாவுடனான ரேடியோ இணைப்பு கிடைக்கவில்லை. தேவைப்படுகின்ற பொருள்களின் வரத்து குறைந்தது. அனைவரும் நோயினாலும், கொடிய பூச்சிகளாலும் பாதிக்கப்பட்டனர்.

சே பொலிவியாவில் இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது அமெரிக்கா. அவருடைய படையிலிருந்த வீரர்களில் பாதிக்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தம் முயற்சியில் முயன்று தோற்றனர். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட சே, ஒரு கழுதை மீது பயணித்து லா ஹிகேரா என்ற கிராமத்தை அடைந்தார்.  அப்பகுதியில் இருந்த ஒரு விவசாயி அவர்களுக்கு இந்த செய்தியைத் தெரிவித்துவிட்டார். துப்பாக்கிச்சண்டைக்குப் பிறகு ஒரு குண்டு சே ஒரு பெட்டியில் வைத்திருந்த சிறு துப்பாக்கிகளை அழித்தது. காயப்பட்ட சே, 28 வயதான கேரி பிராடோ என்ற அமெரிக்க படைத்தளபதியால் பயிற்சி பெற்ற படையிடம் சரணடைந்தார்.

 சேகுவாராவைப் பிடித்த காரி பிராடோ 
 “சுடாதீர்கள், நான்தான் சே. நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு இன்னும் பயனாக இருக்கும்,” என்று சே கூறியதாகச் சொல்லப்படுகிறது.  

கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் பிராடோ அப்போது நடந்ததை நினைவுகூர்ந்தார். “அவர் அழுக்காகவும், களைத்துப் போயும் இருந்ததைக் கண்டு நான் பரிதாபப்பட்டேன்,” என்றார் பிராடோ. “அவர் ஒரு ஹீரோ என்று உங்களால் நினைத்துப் பார்க்கமுடியாது, எவ்விதத்திலும்.”

சேயையும், அவரது தோழர்களையும் லா ஹிகேராவில் இருந்த ஒரு பள்ளி வீட்டிற்கு அழைத்துச்சென்று தனித்தனி அறைகளில் அடைத்தனர்.  பிராடோ அப்போது சேயுடன் பேசியதாகவும், அவருக்காக உணவு, காபி, சுருட்டுகளைக் கொண்டு வந்து தந்ததாகவும் கூறினார். “நாங்கள் அவரை மிகவும் மரியாதையுடன் நடத்தினோம். வீரர்கள் கொல்லப்பட்ட போதிலும்கூட அவர் மீது எங்களுக்குக் கோபமில்லை,” என்றார் அவர்.

என்னை என்ன செய்யப்போகின்றீர்கள் என்று சே கேட்டபோது பிராடோ சேயிடம் சாந்தா குருஸ் என்னுமிடத்தில்  நீதிமன்றத் தீர்ப்புக்கு அவர்  உட்படுத்தப்படுவார் என்றும் கூறினார். “அதைக் கேட்ட அவர் நீதிமன்றத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணினார்,” என்றார் பிராடோ. ஆனால் விசாரணை நடைபெறவில்லை. அடுத்த நாளே பிராடோவுக்கு அவரைத் தீர்த்துக்கட்டும்படி ஆணை வந்துவிட்டது.

அந்த பொறுப்பினை 27 வயதான  ராணுவ சார்ஜென்டான மாரி டெரான் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டார். மெசின் துப்பாக்கியினைக் கொண்டு இரண்டே சூட்டில் சேயின் வாழ்க்கையை அவர் முடித்தார். பின்னர் அவரது உடலை அருகிலிருந்த வாலேகிராண்டே என்னுமிடத்திற்கு ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து உலக ஊடகங்களுக்கு முன்பாக கைகளற்ற அவருடைய உடல் காட்சிப்படுத்தப்பட்டது. அவருடைய தோழர்கள் அடையாளமிடப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டனர். சுமார் 30 வருடங்கள் அவர்களைப் பற்றி எவ்வித விவரமும் அறிவிக்கப்படவில்லை.

செயின் கொலையில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை என்ற பிராடோ, அவ்வாறான நடத்தைகள் அக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

கொல்லப்பட்ட அடுத்த நாள் சேகுவாராவின் உடல் பொலிவியாவில் வல்லேகிராண்டே என்னுமிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல்

 

“அவர் கொல்லப்பட்டது கண்டிக்கத்ததக்கதே. ஆனால் அப்போது நடந்தனவற்றை நினைத்துப் பார்க்கவேண்டும்…..அக்காலகட்டத்தில் அது நியாயப்படுத்தப்பட்டது,“ என்றார் அவர். சேயின் தோழர்கள் துப்பாக்கிக்குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் சுவடுகள் உள்ளன. சே அடைக்கலம் புகுந்த பாறாங்கல்லில் இப்போது ஓவியங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.  

அதிகமாக வளர்ந்துள்ள பசுமையான செடிகளுக்கிடையே விவசாயக் கருவிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. சே தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ள, ஒரு வயதான மூதாட்டியின் அழிந்த நிலையிலான குடிசை, பொலிவியாவின் சென்ட்ரல் பேங்கில் தற்போது பாதுகாக்கப்படுகிறது. 75 குடும்பத்தார் வசித்து வந்த இந்த கிராமத்தில் தற்போது கிட்டத்தட்ட 15 குடும்பத்தார் வசித்து வருகின்றனர். 

“எங்களிடம், அவர்கள் பெண்களைக் கற்பழிப்பார்கள், குழந்தைகளைத் திருடுவார்கள், அனைத்து முதியவர்ளையும் கொன்றுவிடுவார்கள் என்று எங்களிடம் கூறப்பட்டது.” என்று 1967இல் 15 வயதான, புதிதாகத் திருமணமான கிரெசென்சியா சாராட்டே நினைவுகூறுகிறார்.

அக்காலத்தில் விரோதமான உணர்வு பரவியிருந்த போதிலும்கூட, 50 வருடங்களுக்கு முன்பாக சே அங்கு இருந்ததால் லா ஹிகேரா என்ற அவ்விடத்திற்கு புதிய வாழ்க்கைக் கிடைத்தது. அரை டஜன் உணவு விடுதிகள் அக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டன. “சே மட்டும் இங்கு வந்திருக்காவிட்டால், எங்களுக்கு வேலை கிடைத்திருக்காது,” என்கிறார் சே கொலை செய்யப்பட்ட இடமான, தற்போது புதுப்பிக்கப்பட்ட பள்ளிவீட்டின் பொறுப்பாளர்களில் ஒருவர். 

உள்ளே எங்கு பார்த்தாலும் உலகெங்கிலுமிருந்து வரும் யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ள அஞ்சலிகள் காணப்படுகின்றன.  சேயின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்கும், அவரும் அவருடைய தோழர்களும் புகைப்பட்ட இடங்களுக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் பயணிகளை அழைத்துச் சென்று வருகின்றனர்.

லா ஹிகேரா மற்றும் வல்லேகிராண்டேக்கு 9 அக்டோபர் 2017 அன்று 10,000க்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிடுவார்கள் என்றும் அவர்களில் சமூக ஆர்வலர்கள், உள்ளூர் தலைவர்கள், கியூப அலுவலர்கள், சேயின் குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது.  

பொலிவியாவிலுள்ள வல்லேகிராண்டேயில் சேகுவாராவின் நினைவுச்சின்னம்
பயன்படுத்தப்படாத விமான ஓடுதளம் விழாக்காலக் கொண்டாட்டமாக அமைக்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட சே குவாரா பண்பாட்டு மையம் புதுப்பொலிவு பெறுகிறது. கியூப மருத்துவரும், செவிலியரும் சே தொடர்பான நினைவுச்சின்னங்களில்  புதிதாக வண்ணம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஊரே விழாக்கோலம் பெறுகிறது.


சேயின் உடல் பகுதியை கண்டுபிடிக்க உதவிய குழுவில் ஒருவரான, உள்ளூர் வழிகாட்டியான கோன்சாலோ கஸ்மேன் கூறுகிறார். “அப்போது எனக்கு சே யாரென்று தெரியாது. கியூபாவின் விசாரணைக் குழுவினர் எங்களிடம் கூறினர், ‘இப்போது நீங்களும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டீர்கள் என்று,’” அவர் தொடர்கிறார். “எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு ஹீரோதான் “.

நன்றி : Che Guevara's legacy still contentious 50 yearsafter his death in Bolivia, Guardian [கட்டுரையாசிரியர்கள் : லாரன்ஸ் பிளைர் (லா ஹிகேரா) மற்றும் டான் காலின்ஸ் (சாந்தா க்ரூஸ்)], கார்டியன்

என்றென்றும் நாயகன் சே குவாரா, தி இந்து, 9 அக்டோபர் 2017

07 October 2017

அயலக வாசிப்பு : செப்டம்பர் 2017

நாய் வழிபாடு (சீனா), ஹார்வே சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய பெண்மணி (ஹுஸ்டன்), குறைவான தூக்கத்தின் விளைவு பற்றி ஆய்வாளர்கள் கருத்து (இங்கிலாந்து),  அடுத்த நாள் வெளிவரவுள்ள இதழின் முகப்புப் பக்கங்கள் (இங்கிலாந்து), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதும் முறை மாற்றம் (கேம்பிரிட்ஜ்), பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக ஒரு பெண்மணிக்கு அபராதம் விதிக்கப்படல் (நெதர்லாந்து), சே இறந்து 50 ஆம் ஆண்டு நினைவுகூறப்படல் (தென் பொலிவியா), புற்று நோயை எதிர்கொண்ட பெண்மணியின் புதிய வாழ்க்கை (ஜார்ஜியா),  நீதிமன்ற வளாகத்தில் பசியால் அழுத, குற்றம் சாட்டப்பட்டவரின் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டிய காவல் துறை அதிகாரியின் மனித நேயம் (சீனா) உள்ளிட்ட பல செய்திகளை அயலகச் செய்தியில் காண்போம், வாருங்கள். 
சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு திருவிழா. மனிதர்களுக்கு ஆடை அணிவிப்பதைப் போல நாய்க்கு அணிவித்து ஒரு நாற்காலியில் அமர வைத்து, கடவுளாக வழிபடுகின்றனர். கிசௌ மாகாணத்தில் (Guizhou province) உள்ள ஜியோபாங்க் (Jiaobang) கிராமத்தில் உள்ள மயாவோ (Miao) மக்கள் ஒவ்வோராண்டும் "நாயைத் தூக்கிச் செல்லும் விழா"வினைக் (The Dog Carrying Day festival) கொண்டாடுகின்றனர். முதன்முதலில் அப்பகுதியில் குடியேறியவர்கள் தாகத்திற்காகத் தவித்தபோது அப்பகுதியில் நீர் இருக்கும் இடத்தை ஒரு நாய் காட்டியதாம். அதனடிப்படையில் அந்நிகழ்வினை தெய்வீகத்தின் ஓர் அடையாளமாக அவர்கள் கருதினராம். (நன்றி : இன்டிபென்டன்ட்)ஹார்வே சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய டேனியல் பால்மர் (Danielle Palmer) சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப்பட்டுள்ளார். ஹுஸ்டனில் வெள்ளத்தைக் கண்ட, மிசௌரியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் அனைத்தையும் இழந்து தவிப்பவர்களுக்கு ஏதாவது வகையில் உதவ விரும்பியுள்ளார். “அனைத்தையும் இழந்திருக்கும் நிலையை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும், குழந்தைகளுக்கும் என்னால் பிரார்த்தனை செய்ய மட்டுமே முடிந்தது “. என்று கூறிய அவர் உபரி தாய்ப்பாலை தானமாகத் தந்துள்ளார். (நன்றி : இன்டிபென்டன்ட்)குறைவான தூக்கம் மன அளவிலான பிரச்சினைகளை உண்டாக்குவதாகவும், உறக்கத்திற்கும் மன நலனுக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 26 பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3,700 மாணவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். 3 வாரங்கள், 10 வாரங்கள், 22 வாரங்கள் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக உளவியலாளர்கள் தெரிவித்தனர். (நன்றி : கார்டியன்)பல வெளிநாட்டு இதழ்கள் அடுத்த நாள் வெளிவரவுள்ள தத்தம் இதழ்களின் முகப்புப்பக்கத்தை முதல் நாள் வெளியிடுகின்றன. பெரும்பாலான இதழ்களை அந்தந்த தளங்களில் காணமுடியும். இன்றைய முகப்புப்பக்கங்களை நேற்றே வெளியிட்டுள்ள சில இதழ்களைப் பார்ப்போம்.(புகைப்படங்கள் நன்றி :http://suttonnick.tumblr.com/) (ட்விட்டரில் இத்தளத்திலும் காணலாம் : https://twitter.com/hashtag/tomorrowspaperstoday)

தெளிவற்ற கையெழுத்து காரணமாக 800 வருடப் பாரம்பரியான எழுதுதல் என்பதனை விடுத்து இனி தேர்வுக்கு மடிக்கணினியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். எழுதும் திறமையினை மாணவர்கள் இழந்துகொண்டிருப்பதாக ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். முழுக்க அவர்கள் மடிக்கணினியை நம்பியுள்ளார்கள். 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு மாணவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போதோ தேர்வினைத் தவிர பிற நேரங்களில் பெரும்பாலும் எழுதுவதே இல்லை என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்தின் மூத்த பேராசிரியர் மூத்த ஆசிரியர். (நன்றி : கார்டியன்)

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் கீர்ட் பெனிங் (Geerte Piening, 23) என்ற பெண்மணி பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக அபராதம் செலுத்தும்படி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சற்றே சங்கடமாக இருந்தாலும் அவர் ஆடவர் கழிவறையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார். இப்பிரச்னை பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தையும் விவாதத்தையும் உண்டாக்கியுள்ளது. கழிவறை அருகே சுமார் 10,000 மகளிர் ஒன்றுசேர்ந்து தம் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளனர். ஆம்ஸ்டர்டாமில் 35 பொது கழிவறைகள் ஆடவருக்காகவும், மூன்றே மூன்று கழிவறைகள் மகளிருக்காகவும் உள்ளன. பெனிங் கூறுகிறார்: “இது மகளிர் எதிர்கொள்ளும் பெரிய பிரச்னை...இப்பிரச்னை வெளியே தெரியப்படவேண்டும்...மகளிர் எங்குமே செல்ல வழியில்லை என்பது ஒரு தர்மசங்கடமான நிலையே.” (நன்றி : கார்டியன்)

தென் பொலிவியா – வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள். முன்னர் வகுப்பறையாக இருந்து தற்போது கிட்டத்தட்ட புனித இடமாகக் கருதப்படும் இடம். இந்த பள்ளி வீட்டில்தான் 50 வருடங்களுக்கு முன் உலகின் மிகப் புகழ்பெற்ற புரட்சிவீரர் சே கொல்லப்பட்டார். 9 அக்டோபர் 1967இல் சே குவாரா (39) கொல்லப்பட்ட அந்த இடம் இப்போது படங்களாலும், செய்திகளாலும், கொடிகளாலும், வாகன உரிமங்களாலும் அங்கு வருகின்ற பார்வையாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது. 50 வருடங்களுக்கு முன் சே இறந்தாலும் அவருடைய இருப்பை தக்க வைத்துள்ளார் ஈவா மொரேல்ஸ். சேயின் பெயர் பொலிவியாவில் எங்கும் உச்சரிக்கப்படுகிறது. : “சே, எப்போதையும்விட இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே உணரப்படுகிறார்.” (நன்றி : கார்டியன்)

புற்று நோயை எதிர்கொண்ட மொன்டானா பிரவுன் என்ற பெண்மணி, ஜார்ஜியாவில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் செவிலியராகச் சேர்ந்துள்ளார். இரண்டு வயதிலும், தொடர்ந்து 15 வயதிலும் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தன் அடையாள அட்டையைக் காட்டி அவர் பெருமைபட்டுக் கொள்கிறார். தன் கண்களில் கண்ணீர் வந்துவிட்டன என்கிறார். இறைவன் தனக்கு இந்த வாழ்வை அளித்துள்ளதாகவும், 24 வயதில் இவ்வாறான ஒரு கனவு நினைவாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையாகவும், பருவப்பெண்ணாகவும் இருந்தபோது தான் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையில் இப்பணியைப் பெற்றுள்ளதைப் பெருமையாக உள்ளது என்றும் கூறுகிறார். (நன்றி : இன்டிபென்டன்ட்)

லினா என்ற சீனப்பெண்மணி உலகளாவிய நிலையில் பலருடைய இதயத்தைத் தொட்டுவிட்டார். எப்படி? நீதிமன்றத்தில், சந்தேகத்திற்கிடமானவர் என்று கைது செய்யப்பட்ட ஒரு பெண்மணியினுடைய, பசியால் அழுத குழந்தைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தாய்ப்பாலூட்டினார் அவர். சீனாவில் நான்கு மாத குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நின்றபோது அன்பு மனம் படைத்த காவல் துறை அதிகாரியான லினா அக்குழந்தைக்குப் பாலூட்டிய புகைப்படம் அனைவருடைய இதயத்தையும் தொட்டுவிட்டது. நீதிமன்ற அறையில் குழந்தை அழ ஆரம்பித்தபோது அவர், அக்குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று பாலூட்டியுள்ளார். உடன் பணியாற்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் அந்நிகழ்வினை படமெடுத்துள்ளார். நீதிமன்ற சமூக ஊடகத் தளங்களில் அந்த புகைப்படம் பதியப்பட்டபோது பலரால் பகிரப்பட்டுள்ளது. அண்மையில் குழந்தை பெற்றெடுத்த லினா குழந்தை அழுவதை நிறுத்தவேயில்லை என்றும், அனைவரும் கவலையடைந்தார்கள் என்றும், தானும் தாய் என்ற நிலையில் குழந்தையின் தாயின் உணர்வை அறிந்ததாகவும், தன்னால் முடிந்த வரை அந்தக் குட்டிக் குழந்தையின அழுகையை நிறுத்த நினைத்ததாகவும் அவர் கூறினார். (நன்றி : டெலிகிராப்)