28 May 2016

ஆறாம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்

தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க ஆரம்பித்து, அண்மையில் ஆறாம் திருமுறையினை நிறைவு செய்துள்ளேன்.  

நான்கு மற்றும் ஐந்தாம் திருமுறைகளில் இருப்பன போலவே இத்திருமுறையிலும் இறைவன், இயற்கை, பக்தி, இறைவனை அடையும் வழி என்ற பல நிலைகளில் நாவுக்கரசப்பெருமான் பாடுகின்றார். ஆறாம் திருமுறையிலிருந்து அவரது பாடல்களில் சிலவற்றைப் படிப்போம். 


  1) திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூர்க் கோடீச்ரமும்
இவ்விரு கோயில்களுக்கும் நான் சென்றுள்ளேன். ஒரே பதிகத்தில் இரு கோயில்களைப் பாடும் வகையில் இப்பதிகம் சிறப்பு பெறுகிறது. 
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமருங் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. 
(பதிகத்தொடர் எண்.286 பாடல் எண்.1) 

நிறம்  வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனுமாகிய சிவபெருமான் நீலமணி போல் திகழும் அழகு மிக்கவனும் கல்லால மர நிழலில் இருந்தவனும், பெரிய மாணிக்க மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்று போல் காட்சி அளிக்கும் மேலோனும், தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரம் அருளும் வரதனும் ஆவான்.

 2) திருவீழி்மிழலை
வௌவால்நத்தி மண்டபம் என்ற சிறப்பான மண்டபத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது திருவீழிமிழலைக் கோயில். அக்கோயில் பற்றிய பதிகத்தில் சமணப்பற்றை நீக்கியதைப் பற்றிக் கூறுகிறார்.
தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண்
காமனுடல் வேவித்த கண்ணினான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.
(பதிகத்தொடர் எண்.265 பாடல் எண்.3) 

விண்ணிழிதண் வீழிமிழலையான் தண்மை வெம்மை என்ற இரு திறமும் உடையவனாய்த் திருமாலுக்குச் சக்கரத்தை அருளியவனாய், மூன்று கண்களை உடையவனாய், காபாலக்கூத்து ஆடுபவனாய், காமன் உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணனா, என் உள்ளத்தில் இருந்த சமண சமயப் பற்றினை நீக்கி என்னை ஆட்கொண்டவனாய், பிரமன் திருமால் இருவருக்கும் தீப்பிழம்பாய்க் காட்சி வழங்கியவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு உள்ளான்.

3) திருஆவடுதுறை
சிவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்கிறார் திருவாவடுதுறைப் பதிகத்தில் நாவுக்கரசர்.
துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன்
துணைமாலை சூட்ட நான் தூயே னல்லேன்
பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச்
செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
ஆவடுதண் டுறையும் அமர ரேறே.
(பதிகத்தொடர் எண்.260 பாடல் எண்.10)

ஆவடுதுறைத் தேவர் பெருமானே. துறந்தவர் செல்லும் தூய நெறியிலே வாழ்கின்றேன் அல்லேன். உனக்கு இணையான மாலைகளைச் சூட்டும் தூய்மை உடையேன் அல்லேன். உன் திருவருளைப் பற்றிப் பேசியும் அப்படிப் பேசாத நாள்களைப் பயனற்ற நாள்களாகக் கணக்கிட்டு வாழ்கின்றேன். செறிவாகப் பொருந்திய மதில்களை உடைய இலங்கை அரசனாகிய இராவணனைச் செறிவான கயிலை மலைக்கீழ் நசுக்கிப் பின் அவனுக்கு அருளிய உன் செயல்களை எல்லாம் அறிந்த அடியேனை அஞ்சேல் என்பாயாக.

4) திருப்பழனம்
இப்பதிகத்தில் சூலை நோயை நீக்கி இறைவன் ஆட்கொண்டதைப் பற்றிப் பாடுகின்றார்.
அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே
அமரர்களுக் கருள்செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே
கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே
சிலையால் புரமூன் றெரித்தார் தாமே
தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே
பழன நகரெம் பிரானார் தாமே.
(பதிகத்தொடர் எண்.249 பாடல் எண்.1)
   
திருப்பழனத்திலே உகந்தருளி உறையும் எம் பெருமான் அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர். தேவர்களுக்கு அருள் செய்யும் முதற்பொருள். உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர். தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர். வில்லால் திரிபுரத்தை எரித்தவர். கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட்கொண்டவர். பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர்.

5) திருச்செங்காட்டாங்குடி
இப்பதிகத்தில் தன்னை நாயேன் என்கிறார்.
கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னை
கதிரவிடுமா மாணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச்
சடையான் தன்னைசராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
(பதிகத்தொடர் எண்.297 பாடல் எண்.4)

மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒரு பாகத்தொடு தன் பாகம் விளங்குபவனும், இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும், நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்த இலக்கண நெறியின்  அமைந்த தமிழ் மாலையை யான் பாடச் செய்து அதனால் என் மனத்து மண்டிய மயக்கத்தைப் போக்கிய திருவருளைச் செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டாங்குடியில் கண்டேன்.
------------------------------------------------------------------------------------------------
பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008  

21 May 2016

உரிய நேரத்தில் உறங்கச் செல்லும் குழந்தைகள் செய்யும் குறும்பு குறைவே :அலெக்ஸான்ட்ரா டாப்பிங்

sleeping baby


பெற்றோரால் காலங்காலமாக முயற்சிக்கப்பட்டு சாதிக்கமுடியாதது  ஒன்று உண்டெனில் அது உரிய நேரத்தில் குழந்தைகளைச் உறங்கச் செல்லவைக்கமுடியாததாகும். உறங்கச்செல்லும் சேரம் சரியான நேரமாக இருப்பின் அது பெற்றோருக்கு அதிக மன நிம்மதியைத் தரும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. உரிய நேரத்தில் உறங்கச் செல்லும் குழந்தைகள் குறைவாகவே குறும்புகள் செய்கின்றனவாம்.

மாறுபட்ட நேரங்களில் உறங்கச் செல்லும் குழந்தைகளால் பல பிரச்சினைகள் எழுகின்றன. அவற்றில் இயல்புக்கு மீறிய செயல்கள், சக குழந்தைகளுடனான பிரச்சினைகள் மற்றும் உணர்வு சார்ந்த சிரமங்கள் போன்றவை அடங்கும். நீண்ட நேர விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு உள்ளூர் நேரம் வேறுபடும்போது வழக்கமாக உண்டாகும் களைப்புணர்ச்சி போன்ற நிலையினை அதில் காணமுடியும்.

அதிக நேர இடைவெளிவிட்டு படுக்கைக்குச் செல்கின்ற, நேரம் முறையாக இல்லாத, சூழலில் குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு தூக்கமின்மைக்கு இட்டுச் செல்கிறது.  இதன் காரணமாக மூளை வளர்ச்சியடையும் நிலையும், குழந்தைகளின் நன்னடத்தையும் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது என்று இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியால் (University College London)10,000 குழந்தைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. 

இருப்பினும் முறையற்ற தூக்க முறைகளின் தாக்கத்தை மாற்றமுடியாது என்று கூறமுடியாது; ஆசிரியர்களைப் போலவே குழந்தைகளை எப்போதும் ஒரே மாதிரியான நேரத்தில் உறங்க வைத்த பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தையில் ஒரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த UK Millennium Cohort Study என்ற அமைப்பின்மூலமாக மூன்று, ஐந்து, ஏழு வயது என்ற படிநிலைகளில் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளை வைத்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் நடத்தை அடிப்படையில் செய்திகள் திரட்டப்பட்டன. அதன்மூலமாக மூன்று வயதுள்ள குழந்தைகள் அதிக அளவு முறையற்ற நேரங்களில் படுக்கைக்குச் செல்வது தெரியவந்துள்ளது. இப்பிரிவில் ஐந்தில் ஒரு குழந்தை மாறுபட்ட நேரங்களில் தூங்கச் செல்கிறது. ஏழு வயதுள்ள குழந்தைகளைப் பொறுத்தவரை பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் சரியாக இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் தூங்கச் சென்றுவிடுகின்றனர்.

மூன்று முதல் ஐந்து வயதிற்குள்ள அவ்வப்போது நேரத்தை மாற்றி படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள் ஏழு வயதினை எட்டும்நிலையில் சரியான நேரத்தில் படுக்கச் செல்லும் நிலையில் நற்குணத்தோடு இருப்பதைக் காணமுடிகிறது. மாறுபட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் குழந்தைகளின் நன்னடத்தைக் குறைய ஆரம்பிப்பதை பெற்றோரால் உணர முடியும்.

ஆரம்ப காலக்கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சியானது அதன் வாழ்நாள் முழுதுமான அக்குழந்தையின் ஆரோக்கியத்திலும் நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொள்ளை நோயியல் மற்றும் பொது நலத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் யோவ்ன் கெல்லி கூறுகிறார். முறையான படுக்கை நேரம் கொள்ளாதிருத்தலும் தொடர்ந்து காணப்படும் மலம், எச்சம் போன்றவையின் வெளிப்படு உணர்வும் மன நிலையிலும் உடல் நிலையிலும் உள்ளூர் நேரம் வேறுபடும் ஓரிடத்திற்கு நீண்ட நேர விமானப் பயணம் செய்பவர்களுக்கு வழக்கமாக உண்டாகும் ஒருவகையான களைப்பு போன்ற ஓர் உணர்வை  ஏற்படுத்துவதோடு ஆரோக்கிய நிலையிலும் அன்றாடப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக தூக்கத்தில் குறுக்கீடுகள் காணப்படும். குறிப்பாக வளர்ச்சி நிலையில் முக்கியமான நேரங்களில் இதனைக் காணலாம். அதன்விளைவாக உடல் ஆரோக்கியத்தில் ஒரு முக்கியமான வாழ்நாள் முழுதும் தொடரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வகையான விளைவுகள் குழந்தைப்பருவத்தில் தொடர்வதை ஆய்வில் கண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆய்வின்போது ஒன்று அல்லது இரண்டு வயதில் முறையற்ற நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள் முறையான நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளைவிட அதிகம் பாதிக்கப்படுவதை அறியமுடிந்தது.

முறையற்ற படுக்கை நேரங்களைக் கொண்ட குழந்தைகளும் இரவு 9 மணிக்கு மேல் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகளும் சமூக நிலையில் பின் தங்கிய சூழலைக் கொண்டவர்களாக உள்ளனர். தவிரவும் அவர்கள் படுக்கைக்கு உரிய நேரத்திற்கு முன்பாகச் செல்லும் குழந்தைகளோடு ஒப்பிடும்போது அன்றாட வாழ்க்கையில் காலை உணவை உட்கொள்ளா நிலை, தினமும் படிக்காத நிலை, படுக்கையறையில் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுள்ள நிலை, தொலைக்காட்சி முன்பாக அதிக நேரம் செலவழித்தல் நிலை என்ற பல சூழல்களில் இருப்பதைக் காணமுடிகிறது.

'பீடியாட்ரிக்ஸ்' இதழில் வெளியான ஆய்வு பின்வருமாறு கூறுகிறது: "பெற்றோர்கள் அதிகமாகவோ  சமூக நலனுக்கு உகந்ததற்ற நேரத்தில் உழைப்பதாலோ குடும்பத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வதென்பது சிரமமாகிறது. இந்நிலையில் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் வளர குடும்பங்களுக்கு நல்ல நிலையில் ஆதரவு தருவதற்கான சூழலுக்கு கொள்கையளவிலான முன்னேற்றம் தேவைப்படுகிறது."

"முரண்பாடான தூக்க நேரம் என்ற நிலையைத் தடுப்பதற்கு வழக்கமான உடல்நலம் பாதுகாப்பதற்கான உரிய வளமான வாழ்விற்கான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியது அவசியம். அதுபோன்றே உறக்கத் தடைக் காரணங்களை மருத்துவப்பரிசோதனை மூலமாக சரிபார்த்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில் நலத்தைப் பேணும்போது வாழ்வின் வளர்ச்சிநிலையில் நல்ல பலன்களைக் காணமுடியும். இந்நிலையில் தலையீடுகள் என்ற சூழலில் குடும்பத்தின் இயல்பான பழக்கங்களுக்கு உதவி புரியும் வகையில் பல நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவை நீண்ட வாழ்வில் பல தாக்கங்களை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை" என்கிறார் கெல்லி.

தமிழாக்கம் : பா.ஜம்புலிங்கம்
நன்றி : The Guardian 
(கார்டியன் இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்

திரு என்னாரெஸ்பெரியார், விடுதலை ஞாயிறு மலர் 23 மே 2020இல் வெளியானதைத் தெரிவித்து இக்கட்டுரையினை அனுப்பியிருந்தார். அவருக்கும், விடுதலை இதழுக்கும் நன்றி.  



6 ஜுன் 2020 அன்று மேம்படுத்தப்பட்டது.

15 May 2016

கோயில் உலா : 13 மார்ச் 2016

13 மார்ச் 2016 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான திருமங்கலக்குடி, திருக்கோடிக்கா, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி,  குத்தாலம், கொருக்கை, அன்னியூர், தேரழுந்தூர் ஆகிய கோயில்களுக்கும் மங்களாசாசனம் பெற்ற ஒரு கோயிலுக்கும் (உப்பிலியப்பன் கோயில்) சென்றோம்.  உப்பிலியப்பன் கோயில் தவிர மற்ற அனைத்துமே நான் இதுவரை பார்த்திராத கோயில்கள். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். 

1) திருமங்கலக்குடி (கும்பகோணம்-கதிராமங்கலம்-மயிலாடுதுறை சாலை)
பிராணவரதேஸ்வரர்-மங்களநாயகி. (சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது)
உலாவின் முதல் கோயிலான திருமங்கலங்குடிக்குச் சென்றபோது பிரம்மோத்சவ விழா ஏற்பாடுகளைக் காணமுடிந்தது. கோயிலில் உள்ளே சென்றதும் முனைவர் ஜெயபால் அவர்கள் சிவபுராணம் பாட அனைவரும் உடன் பாடினோம். முதலாம் குலோத்துங்க மன்னனின் காலத்தில் வரி வசூலிப்பவர் ஒருவர் அரசுப்பணத்தில் மங்கலக்குடியில் பிராணவரதேஸ்வரருக்குக் கோயில் கட்டியதாகவும் அறிந்த மன்னன் மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டதாகவும், மந்திரியின் மனைவி அத்தலத்து இறைவியிடம் வேண்டியதாகவும், அதே சமயம் மந்திரி அரசனிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்ய வேண்டியதாகவும் மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடல் திருமங்கலக்குடியை அடைந்ததும் இறைவியின் அருளால் அவன் உயிர் பெற்றதாகவும் கூறுகின்றனர். அதனால் இறைவன் பிராணன் தந்த பிராண வரதேஸ்வரர் என்றும் இறைவி மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.  இத்தகு புகழ் பெற்ற இறைவனையும், இறைவியையும் தரிசித்தோம். உற்சவர் கோயிலிலிருந்து உலா வந்தார். கோயிலிலிருந்து அவர் வெளியே வரும் அழகை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.    


திருமங்கலக்குடி
2) திருக்கோடிக்கா (கும்பகோணம்-கதிராமங்கலம் சாலை அல்லது மயிலாடுதுறை-குத்தாலம் வழி கதிராமங்கலம் சாலை)
கோடீஸ்வரர்-திரிபுரசுந்தரி. (சம்பந்தர், அப்பர்)
கோயிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் நம்மை வரவேற்கின்றன. ராஜகோபுரத்தின் கீழே காணப்படுகின்ற இச்சிற்பங்களைப் பார்த்ததும் அங்கேயே அனைவரும் நின்றுவிட்டோம். யானை, குதிரை, காளை என்ற நிலையில் பல உருவங்களைக் காணமுடிந்தது.  கல்லால் ஆன தேர் எங்களைக் கவர்ந்துவிட்டது. மிக நுணுக்கமாகவும் அழகாகவும் இருந்தன. இறைவனையும், இறைவியையும் வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.


திருக்கோடிக்கா
3) வேள்விக்குடி (குத்தாலம் அருகே. மயிலாடுதுறை-மகாராஜபுரம் சாலை)
மணவாளேஸ்வரர்-பரிமளசுகந்தநாயகி. (சம்பந்தர், அப்பர்)
அடுத்து நாங்கள் சென்ற கோயில் வேள்விக்குடி. சிவபெருமானின் திருமண வேள்வி நடந்த தலமாதலால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். இறைவனை வணங்கிவிட்டு திருச்சுற்று வரும்போது அழகான சிற்பத்தைக் கண்டோம். இறைவனும் இறைவியும் திருமணக்கோலத்தில் இருந்த காட்சி காண்போரைக் கவரும் வகையில் இருந்தது. 



வேள்விக்குடி
4) எதிர்கொள்பாடி எனப்படும் மேலைத்திருமணஞ்சேரி (குத்தாலத்திலிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் வந்து அஞ்சார்வார்த்தலை என்னும் ஊரையடைந்து, வாய்க்கால் பாலம் தாண்டி, வலப்புறம் செல்லலாம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாக)
ஐராவதேஸ்வரர்-மலர்குழல்நாயகி. (சுந்தரர்)
வேள்விக்குடியிலிருந்து எதிர்கொள்பாடி சென்றோம். வேள்விக்குடியில் திருமணம் செய்துகொண்டு அத்திருமணக் கோலத்துடன் வந்த தன் அடியவரான அரசகுமாரனை இறைவன் எதிர்கொண்டழைத்ததால் இத்தலம் எதிர்கொள்பாடியானது. கோயில் அமைப்பு சற்றே வித்தியாசமானதாக இருந்தது. உள்ளே நுழையும்போது விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோரின் சன்னதியில் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.  உள்ளே இறைவன் சன்னதிக்கு வலப்புறம் சற்றே முன்னதாக இறைவி சன்னதி உள்ளது.
எதிர்கொள்பாடி
5) திருமணஞ்சேரி எனப்படும் கீழைத்திருமணஞ்சேரி (மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகச்செல்லலாம்)
கல்யாணசுந்தரேஸ்வரர்-கோகிலாம்பாள். (சம்பந்தர், அப்பர்) 
எதிர்கொள்பாடி தலத்தையடுத்து திருமணஞ்சேரி சென்றோம். மேலைத்திருமணஞ்சேரி என்று ஒரு தலமிருப்பதால் இத்தலத்தை கீழைத்திருமணஞ்சேரி என்றழைக்கின்றனர். இறைவன் கல்யாணசுந்தரர் வடிவம் கொண்டு இறைவியைத் திருமணம் செய்ததால் இத்தலம் திருமணஞ்சேரி எனப்படுகிறது.  திருமணம் தடை படுபவர்கள் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அவ்வகையில் இக்கோயிலில் அதிகமான எண்ணிக்கையில் திருமணத்திற்கு வேண்டிக்கொள்வோரையும், புதிய மணத்தம்பதியரையும் அதிகமாகக் காணமுடிகின்றது. மூலவரைச் சுற்றிவரும் திருச்சுற்றில் கல்யாணசுந்தரேசர் சன்னதியில் கல்யாணசுந்தரர் உற்சவமூர்த்தியாக இருக்கிறார். அங்கு எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருப்பதைக் காணமுடிகிறது.
திருமணஞ்சேரி 



6) திருத்துருத்தி எனப்படும் குத்தாலம் (மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ளது)
சொன்னவாறு அறிவார்-பரிமளசுகந்தநாயகி (சம்பந்தர், அப்பர், சுந்தரர்)
இறைவி இறைவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டித் தவம் செய்ததாகவும், இறைவன் காட்சி தந்து விதிப்படி அவரை மணப்பதாகக் கூறிய இடம் என்ற சிறப்பினை இத்தலம் பெற்றுள்ளது. இங்குள்ள உத்தால மரம் வேறு எங்கும் காணப்பெறாத அரிய மரம் என்று கூறுகின்றனர். உமையை மணக்க இறைவன் வந்த வடிவம் மணவாளநாதர் என்றும், பாதுகையாக வந்த வேதம் உத்தால மரமானதென்றும் கூறுவர். அம்மரத்திற்கு எதிர்ப்புறத்தில் திருமணத்திற்கெனக் கோலங்கொண்ட திருமேனியாக உள்ளார். இறைவியை மணந்துகொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் துணைவந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இக்கோயில் அழகான விமானத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அதிலுள்ள பெரிய அளவிலான சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. 
குத்தாலம் 
7) கொருக்கை எனப்படும் திருக்குறுக்கை (மயிலாடுதுறை அருகே 12 கிமீ தொலைவில் உள்ளது)
வீரட்டேஸ்வரர்-ஞானாம்பிகை (அப்பர்)
மதியம் கொருக்கை வந்து சேர்ந்தோம். மதிய உணவுக்குப் பின் சற்றே ஓய்வெடுத்தோம். பின்பு கோயிலுக்குச் சென்றோம். அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்றான மன்மதனை எரித்த தலம் இதுவாகும். காம தகன விழா மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. காமனைத் தகனம் செய்த இடம் விபூதிக்குட்டை என்றழைக்கப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கிமீ தொலைவில் அக்குட்டை அமைந்துள்ளது. சற்றொப்ப திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் உள்ளவாறே இக்கோயில் அழகான விமானத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அதிலுள்ள பெரிய அளவிலான சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. 
கொருக்கை 
8) அன்னியூர் எனப்படும் பொன்னூர் (மயிலாடுதுறையிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது)
ஆபத்சகாயேஸ்வரர்-பெரியநாயகி (சம்பந்தர், அப்பர்) 
கொருக்கை இறைவனைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து அன்னியூர் எனப்படும் பொன்னூர் வந்து சேர்ந்தோம். இத்தலத்திற்கு அருகே நீடூர், மயிலாடுதுறை, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, கொருக்கை முதலிய பல தலங்கள் அமைந்துள்ளன. 
அன்னியூர் ஆபத்சகாயேஸ்வரர்
9) நீடூர் (மயிலாடுதுறை அருகே உள்ளது)
சோமநாதேஸ்வரர்-வேயுறுதோளியம்மை (அப்பர், சுந்தரர்)
சற்றே இருட்ட ஆரம்பித்த நிலையில் அங்கிருந்து நீடூர் சென்றோம். ஊழிக்காலத்திலும் இத்தலம் அழியாமல் நீடித்திருந்ததால் நீடூர் என்ற பெயர் பெற்றது. இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த பெருமையுடையது இங்குள்ள மூலவரின் லிங்கத்திருமேனி. பின்னால் நண்டு பூசித்ததும் அதன் காற்சுவடி அத்திருமேனியில் பதிந்ததாகக் கூறுவர். 
நீடூர் 
10) தேரழுந்தூர் (மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் வந்து கோமல் சாலையில் திரும்பிச் சென்றால் மூவலூரை அடுத்து உள்ளது)
வேதபுரீஸ்வரர்-சௌந்தரநாயகி (சம்பந்தர்)
அங்கிருந்து தேரழுந்தூர் சென்றோம். அகத்தியர் இங்கு இறைவனை வழிபடும்போது அதையறியாத மன்னன் ஒருவன் வான வெளியில் செலுத்திச் சென்ற தேரானது, இங்கு அழுந்திய காரணத்தால் தேரழுந்தூர் என்பர். இக்கோயிலின் முக்கிய சன்னதியாக உள்ளே நுழைந்தபின் இடப்புறம் காணப்படும் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதிகளைக் கூறலாம்.  உள்ளே நேராகச் சென்றால் மூலவர் சன்னதியை அடையலாம். மூலவர் சன்னதிக்கு சற்று முன்பாக வலப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த பெருமையினை உடைய இந்த ஊரில் அவர் வாழ்ந்த இடம் கம்பர் மேடு என்றழைக்கப்படுகிறது.  
தேரழுந்தூர் 
11) உப்பிலியப்பன் கோயில் (கும்பகோணம் அருகே உள்ளது)
உலாவின் நிறைவாக தஞ்சாவூர் வரும்வழியில் மங்களாசாசனம் பெற்ற வைணவத்தலமான உப்பிலியப்பன் கோயில் சென்றோம். நடை மூடப்படும் நேரம் நெருங்கவே அவசரம் அவசரமாக பெருமாளை தரிசனம் செய்துவிட்டு முன்மண்டபத்தில் சற்றே அமர்ந்து இறைவன் புகழைப்பாடினோம். அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்கள், வித்தியாசமான விமானங்களைக் கொண்ட இரு கோயில்கள், அட்டவீரட்டத்தலங்களில் ஒரு தலம் என்ற நிலையில் நாங்கள் இன்று பார்த்த அனைத்து சிவன் கோயில்களும் தேவாரப்பாடல் பெற்ற தலங்களாகும். மங்களாசாசனம் பெற்ற கோயிலாக உப்பிலியப்பனை நிறைவாகத் தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி, மன நிறைவோடு தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.கோயில் உலாக்களில் மறக்கமுடியாத உலாவாக இந்த உலாவும் அமைந்தது.  

உப்பிலியப்பன் கோயில்
நன்றி
கோயில் உலா அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத்தலங்கள் வழிகாட்டி
முனைவர் வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

10 May 2016

கோயில் நகரம் கும்பகோணம் : தி இந்து

21 பிப்ரவரி 2016 அன்று வெளியான தி இந்து நாளிதழின் கும்பகோணம் மகாமகப்பெருவிழா மலர் இணைப்பின் 16ஆம் பக்கத்தில் திரும்பிய திசையெல்லாம் கோபுரங்கள் : கோயில் நகரம் கும்பகோணம் என்ற தலைப்பிலான எனது கட்டுரை என் பெயரின்றி வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி.

கும்பகோணம் மகாமகப்பெருவிழா, தி இந்து, திருச்சி பதிப்பு, 21.2.2016, ப.16

பொதுவாக கும்பகோணத்திலுள்ளோர் முகவரி அடையாளம் கூறும்போதே கும்பேஸ்வரர் மொட்டை கோபுரம் அருகில், கம்பட்ட விஸ்வநாதர் சன்னதி, சக்கரபாணி சன்னதி, சார்ங்கபாணி சன்னதி, யானையடி, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி,  என்று கோயில்களை முன்வைத்தே கூறுகின்றனர். அந்த அளவிற்கு கோயில்கள் கும்பகோணத்திலுள்ளோர் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றன எனலாம். எந்த திசையில் நின்றாலும், இருந்தாலும் ஏதாவது ஒரு கோயில் கோபுரத்தினைக் காணும் பெருமை உடையது கும்பகோணம்.
புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை எழுதிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் என்னும் நூல் கும்பகோணத்திலுள்ள கும்பேசுவரர் கோயிலைப் பற்றியும் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற மகாமகத் திருவிழாவைப் பற்றியும் பல அரிய தகவல்களை நமக்குத் தருகிறது. (வெளியீடு : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992). கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணத்தின் சிறப்பு, மகாமகம், மகாமகத் தீர்த்தங்கள் அளிக்கும் பலன்கள், சிற்பங்களும் ஓவியங்களும், பூசைகளும் திருவிழாக்களும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குடமூக்குப் பதிகங்கள் உள்ளிட்ட பல தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.


இந்நூலில் கும்பகோணத்திலுள்ள கோயில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை கும்பகோணம் வருபவர்களுக்கும், கோயில்களைச் சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கும் மிகவும் துணையாக இருக்கும். கும்பகோணம் நகரிலுள்ள கோயில்கள் என்று நூலாசிரியர் முக்தீசுவரர் கோயில், வராகப்பெருமாள் கோயில், அனுமார் கோயில் (பெரிய கடைத்தெரு, குச்சிக்கட்டிச் சந்து, சடச்சாமி மடத்தெரு), ஆஞ்சநேயர் கோயில்  (ரெட்டியாயர் அக்கிரகாரம், புவனேந்திர அக்கிரகாரம்), கும்பேஸ்வரர் கோயில், ஆண்டவப்பிள்ளையார் கோயில், ஆயத்துறை விநாயகர் கோயில், இலுப்பையடி தர்மராஜர் திரௌபதியம்மன் கோயில் (இரும்பையாடி எனக்குறிப்பிட்டுள்ளார்), உச்சிப்பிள்ளையார் கோயில், உடையவர் சந்நதி, கம்பட்ட விஸ்வநாதர் கோயில், கரும்பாயிரம் பிள்ளையார் கோயில், கற்பக விநாயகர் கோயில், கன்னிகா பரமேசுவரி கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், குமரன் கோயில், சீரட்ட விநாயகர் கோயில், கூரத்தாழ்வார் கோயில், கொத்தன் ஒத்தைத்தெரு கோடியம்மன் கோயில், தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில், கௌதமேஸ்வரர் கோயில், சக்கரபாணி கோயில், சஞ்சீவிராமசாமி கோயில், சார்ங்கபாணி கோயில் (சாரங்கபாணி என்று குறிப்பிட்டுள்ளார்), சரநாராயணப் பெருமாள் கோயில், காமாட்சி சோசியர்தெரு சித்தி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இரு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில்கள், பழனியாண்டவர் கோயில், மூன்று சோமநாதர் கோயில்கள், நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில், தைக்கால் மதகடி திரௌபதியம்மன் கோயில், வட்டிப்பிள்ளையார் கோயில், செட்டிப்படித்துறை விஸ்வநாதசுவாமி கோயில், மேட்டுத்தெரு விஸ்வநாதசுவாமி கோயில், வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் விஸ்வநாதசுவாமி மற்றும் ராஜேந்திரபிள்ளையார் கோயில், பிரளயம் காத்த விநாயகர் கோயில், டபீர் தெரு ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில், எல்லையம்மன் கோயில் தெரு எல்லையம்மன் கோயில் மற்றும் திரௌபதியம்மன் கோயில், சக்கரபாணி கீழ வீதி திரௌபதியம்மன் கோயில், பகவத் விநாயகர் கோயில், வேங்கடேச அக்கிரகாரம் பட்டாபி ராமசாமி கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில், முத்துபிள்ளை மண்டபம் பாடகச்சேரி இராமலிங்கசுவாமி கோயில் (கும்பகோணம் நகருக்கு வெளியே), முத்துபிள்ளைமண்டபம் பாண்டுரங்கசாமி கோயில் (கும்பகோணம் நகருக்கு வெளியே), காவிரி கரைத்தெரு பிரசன்ன வெங்கசலாபதி கோயில், காவிரிக்கரைத்தெரு பொய்யாத பிள்ளையார் கோயில், பெசண்ட் ரோடு மன்னார்சாமி கோயில், பக்தபுரி அக்கிரகாரம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், முச்சந்தி பாதாள காளியம்மன் கோயில் , யானையடி அய்யனார் கோயில், தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் சார்ங்கபாணி மேல சன்னதித்தெரு ஏகதயோகீந்தர சுவாமிகள் கோயில் என்ற நிலையில் சுமார் 60 கோயில்களைக் குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்து மேற்கொண்ட தலப்பயணங்களின்போது இவற்றில் பெரும்பாலான கோயில்களைக் களப்பணியின்போது காணமுடிந்தது. இப்பட்டியலில் ராமசுவாமி கோயில் இல்லை. சஞ்சீவி ராமசுவாமி கோயில் என்று ராமசுவாமி கோயிலைக் குறிப்பிடுகிறார் போலுள்ளது.   நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் போன்ற கோயில்கள் காணப்படவில்லை. மூன்று சோமநாதர் கோயில்களில் ஒன்றாக சோமேஸ்வரர் கோயிலைக் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. சிவபெருமானின் பெயரை பிற நிலையில் கூறும்போது கோயில் பெயரில் சில நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடியும். அதனால் அவ்விடுபாடு இருக்க வாய்ப்புள்ளது. 

இந்நூலை அடிப்படையாக வைத்துப்பார்க்கும்போது 1992இல் சுமார் 60 கோயில்கள் இருந்ததை அறியமுடிகிறது. இந்த பட்டியலில் கும்பகோணம் பவானியம்மன் கோயில், தாய் மூகாம்பிகை கோயில், நந்தவனத்து மாரியம்மன் கோயில், வீரபத்திரர் கோயில், மும்மூர்த்தி விநாயகர் கோயில், பிரமன் கோயில் எனப்படும் வேதநாராயணப்பெருமாள் கோயில், திருமழிசையாழ்வார் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களைக் காண முடியவில்லை. இருப்பினும் கும்பகோணம் நகரம்  நிறைவான கோயில்களைக் கொண்ட ஊர் என்பதனை இதன்மூலம் அறியமுடிகிறது. தொடர்ந்து தலப்பயணம் மேற்கொள்ளும்போது இன்னும் பல கோயில்களை அறிய வாய்ப்புண்டு. இவ்வாறாக கும்பகோணத்தில் உள்ள பல கோயில்களை நமக்கு அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றி கூறி நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட கும்பகோணம் நகருக்குப் பயணிப்போம்.