தஞ்சாவூரில் 8 அக்டோபர் 2017 அன்று ஏடகம் (ஏடு+அகம் = ஏடு இருக்கும் இடம்) என்ற அமைப்பு நண்பர் திரு மணி.மாறன் முயற்சியாலும் நண்பர்களின் ஒத்துழைப்போடும் தொடங்கப்பெற்று இலக்கியம், வரலாறு, சுவடியியல் என்ற பல துறைகளில் பங்களிப்பினை ஆற்றிவருகிறது. அந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது, ஏடகம் என்ற சொல்லோடு தொடர்புடைய, மதுரை அருகே உள்ள திருவேடகம் கோயிலுக்கு டிசம்பர் 2015இல் சென்றது நினைவிற்கு வந்தது. வாருங்கள், அக்கோயிலுக்குச் செல்வோம்.
திருஏடகம் (திருவேடகம்) ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டம் வட்டத்தில் சோழவந்தான் அருகில் திருவேடகம் என்னுமிடத்தில் அமைந்துள்ள, ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். நகரப் பேருந்துகள் மதுரையிலிருந்து சோழவந்தானுக்கு உள்ளன. சோழவந்தான் தொடர் வண்டி நிலையம் கோயிலிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
திருவேடகம், ஞானசம்பந்தரின் திருப்பதிகம் எழுதிய ஓலை வைகையாற்று வெள்ளத்தினை எதிர்த்து கரையை அடைந்த பெருமையைக் கொண்ட ஊராகும். வைகையின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றபோது பாண்டிய மன்னரின் மந்திரி குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி வைகையாற்றின் நீரோட்டத்தினை எதிர்த்துச் செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து சென்றதாகவும், வைகையாற்றின் கரையில் அது ஒதுங்கியதாகவும், ஏடு ஒதுங்கிய இடத்தில் சிவலிங்கத்தைக் கண்ட மன்னர் அங்கு ஒரு கோயில் அமைத்ததாகவும் கூறுகின்றனர்.
இக்கோயிலில் உள்ள மூலவர் ஏடகநாதர் ஆவார். இறைவி ஏழவார்குழலி. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன.

அடுத்தடுத்து மூலவர் சன்னதியும், இறைவி சன்னதியும் தனித் தனியாக கோபுரங்களைக் கொண்டு அமைந்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்து இரு சன்னதிகளும் தனித்தனியாக இரு சிறிய கோபுரங்களைக் கொண்டுள்ளன.
ஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறையில், இப்பதிகத்தின் பாடலில் ஏடு வைகையாற்றின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல வரலாற்றின் சான்றாகக் கூறப்பட்டுள்ள பாடலின் பொழிப்புரையைக் காணலாம்.
"யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டு வரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்ற திருவேடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற இறைவனை நாடிப் போற்றிய, அழகிய புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன் ஓதவல்லவர்களுக்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினைகளில் இருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்."
திருவேடகம் சென்று திரும்பும்போது ஞானசம்பந்தர் பாடல் பெற்ற மற்றொரு தலமான திருவாப்புடையார் கோயிலுக்குச் சென்றோம். திருஆப்பனூர் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் மூலவர் இடபுசேரர், ஆப்புடையார், அன்னவினோதன் என்றழைக்கப்படுகிறார். இறைவி குரவங்கழல் குழலி ஆவார். கோயில் பூட்டியிருந்தபடியால் உள்ளே செல்லமுடியாமல் போனது. இருப்பினும் அடுத்தடுத்து ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலங்களுக்குச் சென்ற மன நிறைவோடு, வாசலில் இருந்தே இறைவனை தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.
மதுரை மாவட்டத்தில் பாடல் பெற்ற தலங்களாக திருஆலவாய் (மதுரை), திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருஏடகம், கொடுங்குன்றம், திருப்புத்தூர், திருப்புனவாயில், இராமேஸ்வரம், திருஆடானை, திருக்கானப்பேர், திருப்பூவணம் (திருப்புவனம்), திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி ஆகிய 14 தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மதுரை, திருப்பரங்குன்றம், திருப்புத்தூர், இராமேஸ்வரம், திருப்புவனம், குற்றாலம், திருநெல்வேலி ஆகிய தலங்களுக்குச் சென்றுள்ளேன். 7 டிசம்பர் 2015இல் திருஏடகம் மற்றும் திருஆப்பனூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மீதமுள்ள பிற கோயில்களுக்குச் செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
துணை நின்றவை:
திருவேடகம் ஏடகநாதேசுவரர் கோயில் (விக்கிபீடியாவில் உள்ள புகைப்படங்கள் நான் கோயிலுக்குச் சென்றுவந்தபின் இணைக்கப்பட்டவை)