குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதிர்கொண்டு, இந்தியாவின் உயரிய நிலையான குடியரசுத்தலைவர் பொறுப்பில் இருந்து, அப்பதவிக்கே பெருமை சேர்த்த பெருமகனாருக்கு அவ்விதழ்கள் (லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், டெய்லி மெயில், இன்டிபென்டன்ட், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான்) சூட்டிய அஞ்சலியை நினைவுகூர்வோம்.
அப்துல் கலாம் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
2002 முதல் 2007 ஓர் அசாதாரண குடியரசுத்தலைவராகத் திகழ்ந்த அவர், அதற்கு முன்பாக சுமார்
40 ஆண்டுகள் அசாதாரண அறிவியலாளராகவும் இருந்தவர். பிரிட்டிஷ் கட்டடக்கலைஞர் சர் எட்வின்
லியூயென்ஸ் கட்டிய வைசிராய் அரண்மனையாக செயல்பட்ட, புதுதில்லியுள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு பொதுமக்களையும்
வரவழைத்தார். எங்கு பயணித்தாலும் மக்களுடன் மிகவும் நெருக்கமான நிலையில் காணப்பட்டார்.
பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அவர் இருந்தார். அவர் “மக்களின் ஜனாதிபதி” என்று
அன்போடு அழைக்கப்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பிலும், இந்திய விண்வெளி
ஆய்வு மையத்திலும், அவருடைய பங்களிப்பு அதிகம். அணு ஆய்வுத்திட்டத்தில் தொழில்நுட்ப
ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் அவருடைய பங்கு அளப்பரியதாக இருந்தது. பிரதம மந்திரியின்
அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு பெரும் தூண்டுகோலாக
இருந்துள்ளார். 1998இல் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது அவர் முக்கியமான பங்கினை
ஆற்றியுள்ளார். “அக்னிச்சிறகுகள்”, “இந்தியா 2020” உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
இந்தியாவின் உயரிய பாரத ரத்னா உள்ளிட்ட பெருமைக்குரிய பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
டெய்லி மெயில்
அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக ஆன சூழல் 2002இல் தற்செயலாக
அமைந்தது. இருந்தாலும் அவர் அப்பொறுப்பினை ஏற்ற காலம் அவருடைய வாழ்நாளில் சிறப்பான
காலம் என்று கூறலாம். நாட்டின் மிகச்சிறந்த குடியரசுத்தலைவர்களில் ஒருவர் என்ற சிறப்பினைப்
பெற்றார். அவர் ஒரு அரசியல்ரீதியிலான ஜனாதிபதி அல்ல. இருந்தாலும் தன் பணியினை மிகவும்
துல்லியமாக மேற்கொண்டார். இது வரை எந்தத் தலைவரும் மேற்கொள்ளாததை அவர் செய்தார். தன்
அலுவலகத்தை மக்களுக்கு மிகவும் அணுக்கமாகக் கொணர்ந்தார். அவருடைய ஆழ்ந்த நாட்டுப்பற்றும்,
இந்தியா வலிமை மிக்க நாடாக அமைய வேண்டும் என்ற அவருடைய பேரவாவும் கலாம் இத்தகு புகழ்
பெறுவதற்குக் காரணங்களாக அமைந்தன. சாதாரண பின்புலத்தில் பிறந்து மக்களுக்காகவே வாழ்ந்தவர்
மக்களின் ஜனாதிபதியான கலாமே. நேருவை, “நேரு
மாமா” என்று அழைக்கக் கேட்டுள்ளோம். ஆனால் குழந்தைகளுடன் கலாம் இருந்த நெருக்கத்தைப்
பார்ப்போரின் மனதில் உண்மையான மாமா யார் என்ற ஐயம் எழ ஆரம்பித்துவிடும். குடியரசுத்தலைவர்
என்ற பதவியால் பலர் சிறப்பு பெற்றுள்ளனர். ஆனால் இவரால் அப்பதவியின் சிறப்பு மேலும்
உயர்ந்தது.
இன்டிபென்டண்ட்
இயற்பியலாளரான அப்துல் கலாம் நாட்டின் ஏவுகணைத்
திட்டத்தின் பெரும்பங்களிப்பு செய்த வகையில் ஏவுகணைத்திட்டத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார்.
குடியரசுத்தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்தபின்னர் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும்
சென்று மாணவர்களோடு உரையாடினார். அவர்களின் கனவுகள் செயல்பட ஊக்குவித்தார். பள்ளி மாணவர்களிடமிருந்தும்,
இளைஞர்களிடமிருந்தும் அறிவுரை கேட்டு வந்த மின்னஞ்சல்கள் பெரும்பாலானவற்றிற்கு அவர்
மறுமொழி கூறிவிடுவார். முதன் முதலாகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் இந்திய ராணுவத்திற்காக
ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்தார். போர் விமானியாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் குறுகிய
இடைவெளியில் அவரால் அவ்விலக்கை அடையமுடியாமல் போனது. குறைந்த அளவு செலவில் அமைந்த கரோனரி
ஸ்டென்ட், கிராமப்புற சுகாதாரத்திற்காக டேப்லெட் கணினி ஆகியவை உருவாக உதவியாக இருந்தார்.
நியூயார்க் டைம்ஸ்
இந்திய செவ்வியல் இசையை ரசித்த அப்துல் கலாம், இந்து
சமயப் புனித நூலான பகவத் கீதையையும் வாசித்தார்.
உலக நாடுகளின் கண்டனங்களுக்கிடையே 1998இல் இந்தியாவின் வடமேற்கில் பாலைவனப்பகுதியில்
அணு ஆயுதச் சோதனை நடத்தியபோது அவரின் செல்வாக்கு வெளிவர ஆரம்பித்தது. அணு ஆயுதத்திட்டங்களுக்கு
பெரிதும் ஊக்கம் தந்தார். அவ்வாறான சோதனை முயற்சிகளின்போது, அரசின் அனுமதி கிடைக்க
தாமதம் ஆன நிலையில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினார். அணுகுண்டு சோதனைக்குப்
பின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர், 2500 ஆண்டுகளாக இந்தியா எந்த ஒரு நாட்டையும்
பிடித்ததில்லை. மாறாக பிற நாட்டவர் இங்கு வந்திருக்கின்றனர் என்றார். மக்களுடன் இருப்பதில்
அவர் ஒரு மகிழ்ச்சியைக் கண்டார். பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் அவரை அதிகம் மதிக்கத்
தொடங்கினர். மாணவர்களை அவர் அதிகம் நேசித்தார். அவருடைய இறுதி மூச்சின்போதுகூட மாணவர்களுடனேயே
செலவிட்டார். அவரை “கலாம் மாமா” என்று அன்போடு அழைத்தனர். இந்தியாவின் முதல் பிரதமரான
நேரு அதற்கு முன்னர் “மாமா” என அழைக்கப்பட்டார்.
வாஷிங்டன் போஸ்ட்
1980களில் பிரித்வி மற்றும் அக்னி ஏவுகணைகள் வடிவாக்கம் பெறுவதில் அப்துல் கலாமின் பங்களிப்பு இருந்தது. தமிழில் கவிதைகள் எழுதினார். இசை நாட்டம் கொண்ட அவர் வீணை வாசிப்பில் ஆர்வம் காட்டினார். 1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனையின்போது மிக முக்கியமான பங்காற்றியவர். அச்சோதனையின் காரணமாக இந்தியாவின்மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் அச்சோதனை அவரை மிகச் சிறந்த கதாநாயகராக ஆக்கிவிட்டது. “கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள், அக்கனவுகளுக்கு சிந்தனை வடிவம் தாருங்கள். அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுங்கள்” என்றார். சிறந்த அறிவியலாளர், நிர்வாகி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற சிறப்புகள் அவருக்கு உண்டு.
டான்
சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியலைப்
படித்த அப்துல் கலாம், அணு ஆயுதங்களைச் சுமந்துசெல்கின்ற ஏவுகணைகளின் தயாரிப்புக்குழுவில்
முன்னணியில் இருந்து செயலாற்றினார். பொக்ரான்-2 எனப்படுகின்ற, 1998இல் இந்தியா அணுகுண்டு
சோதனையின்போது அதில் முக்கியப் பொறுப்பாற்றினார். இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில்
முனைந்து அதிக அக்கறை காட்டினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து விலையுயர்ந்த பொருள்கள்
இறக்குமதி செய்யப்படுவது தவிர்க்கவேண்டும் என்றார். இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று
அழைக்கப்பட்டார். தற்காலத்து அரசியல் தலைவர்கள் மிக அரிதாகவே புகழ்கின்ற ஒரு குணம்
அவரிடம் இருந்தது. இந்த அறிவியலாளர்-குடியரசுத்தலைவர், ஒரு குறிப்பிட்ட ஒரு சமயம் அல்லது
சமூகத்திற்கு மட்டுமன்றி, அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்தியா முழுமைக்குமானவராக செயல்பட்டு
வந்தார்.
அவர் கூறிய “கனவு காணுங்கள்” என்ற இலக்கினை முன்வைத்து அதை நோக்கி முன்னேற முயல்வோம். அதுவே நாம் அவருக்கும், நம் நாட்டிற்கும் செய்கின்ற மிகப்பெரிய சேவையாகும்.
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஆ.பி.ஜெ.அப்துல் கலாம் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி தொடர்பான தினமணி மலரில் (தினமணி, திருச்சி, 27.7.2020) "அயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம்" என்ற என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதனை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி.