![]() |
| எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.7.2026) |
21 July 2026
சிவனைப் பற்றிய சிந்தனைகள்: குடந்தை கே.என்.நாகராஜன்
17 July 2026
ஒளிரும் தகளி-தகளி வாழ்வியல் முறைகள்: சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத்
சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத் எழுதியுள்ள “ஒளிரும் தகளி” என்னும் நூல், தகளி வாழ்வியல் முறைகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. இதுவரை எவரும் அதிகம் அறிந்திராத தகளி என்னும் சொல், அது புலப்படுத்துகின்ற பொருள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் தந்துள்ள விளக்கம் அதனைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தினைத் தூண்டுகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகராதி, 'தகளி' என்ற சொல்லுக்கு 'அகல்', 'உண்கலம்' என்ற பொருள்களைத் தருகிறது.
![]() |
| எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.5.2026) |
16 July 2026
அனைத்துக் காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன்: ஜான் செரியன்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன். தி இந்து உள்ளிட்ட ஆங்கில இதழ்களிலிருந்து பல கட்டுரைகளையும், செய்திகளையும் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ப்ரண்ட்லைன் இதழில் சே தொடர்பாக வெளியான ஒரு கட்டுரை முழுமையாக மொழிபெயர்த்ததும், அது நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழில் வெளியானதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். அவ்விதழிலிருந்து மொழியாக்கம் செய்த கட்டுரை இது ஒன்று மட்டுமே. என் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை மேம்படுத்திய கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
12 July 2026
பாயும் ஒளி: வாழ்க, வளர்க..
நண்பர் திரு ஆர்.கண்ணன் அவர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு, அவருடைய மறைவிற்குப் பின் அவருடைய மகள் செல்வி சுப்ரஜா கண்ணன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்படுகின்ற "பாயும் ஒளி" இதழின் 100ஆவது இதழ் ஜூலை 2026இல் வெளியானது.
05 July 2026
பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம்
நான் தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்ற கும்பகோணம், பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, பாண்டியகுல நாடார்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் இன்று (5.7.2026) நடைபெற்றது.
"இவ்வாறான ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்த சக முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சி மிகவும் பாராட்டத்தது. கும்பகோணத்தில் எங்கள் தாத்தா, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியின் பெரிய வாத்தியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பெரியவர், ஆகியவர்களைத் தொடர்ந்து திரு பாலுஜி, ஆசிரியர் திரு பாஸ்கரன் மூலமாகப் பண்பினையும், நன்னடத்தையும் கற்றுக்கொண்டேன்.
இங்கு படித்து நான் பல நிறுவனங்களில் தட்டச்சாளராகவும், சுருக்கெழுத்தாளராகவும் பணிக்கு அமர்த்தப்படும் முன்பாக நேர்முகத் தேர்வில் எதிர்கொண்ட சூழலில் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் கற்ற கல்வி துணை நின்றது. அது எனக்குப் பெருமையே.
எந்தவொரு நிகழ்விற்கும் முன்கூட்டியே வருவது மிகவும் முக்கியமானது. அதனையும் இங்குதான் கற்றேன். பயிற்சிக்காலத்தில் பயிற்சியுடன் நான் கற்ற ஒழுங்கு, நேரந்தவறாமை உள்ளிட்ட பழக்கங்கள் என்னை உயர்த்தின. பணியில் சேர்ந்த பின் தொடர்ந்து மேற்கொண்ட தட்டச்சுப் பணியும் அதன் மேலான ஈடுபாடும் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது.
நான் 50 ஆண்டு காலமாக படித்து வரும் 'தி இந்து' நாளிதழ் வாசிப்பு மொழிபெயர்ப்பு ஆர்வத்தைத் தூண்டியதன் காரணமாக அகராதிகளின் துணையின்றி நேரடியாக மொழிபெயர்ப்பினை செய்யும் ஓர் அரிய கலையைக் கற்றேன். இளந்தலைமுறையினர் முற்றிலும் கூகுளை நம்பியிராமல் இவ்வாறு பழக்கத்தினை மேற்கொண்டால் நினைவாற்றலும், மொழியறிவும் மேலும் வளரும்.
நேரத்தின் அருமை கருதி உரையை நிறைவு செய்கிறேன். என் சார்பாகவும், சக மாணவர்கள் சார்பாகவும் நிறுவனத்திற்கும் நிறுவனருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். உரையாற்ற வாய்ப்பு தந்த ஏற்பட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி."
01 July 2026
அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப் பழக்கம்
இளம் வயதில் தோன்றிய வாசிப்பானது பல பரிமாணங்களில் தடம் பதிக்க எனக்கு உதவியதை அனுபவம் மூலமாக உணர்ந்துள்ளேன். மேம்போக்காக இல்லாமல் முழுமையான ஈடுபாட்டோடு வாசிக்கப்படும்போது கற்கின்ற நுட்பங்களும், பெறுகின்ற அனுபவங்களும் எண்ணற்றவையாகும். வாசிப்பானது பல துறை அறிவை ஊட்டும். நினைவாற்றலை மேம்படுத்தும். சிந்திக்கும் திறனை வளர்க்கும். அவ்வகையில் நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். 50 ஆண்டுகள் சற்றே பின்னோக்கிச் செல்வோம்.
1960கள். எங்களுடைய தாத்தா திரு ரெத்தினசாமி அவர்களின் நாத்திகம், நவசக்தி இதழ்களின் வாசிப்பானது பள்ளிக்காலத்தில் என்னுடைய வாசிப்புக்கு ஓர் ஆரம்பமானது. தாத்தாவின் நண்பர் நம்மை மேம்படுத்த வாசிப்புப்பழக்கம் உதவும் என்பார். அவ்வப்போது அவ்விதழ்களைப் படிப்பேன்.
1970கள். எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது என் நண்பரின் தந்தை ஆங்கிலச்சொற்றொடர்களைக் கூறி அதற்கான பொருளையும் கூறுவார். அப்போது ஆங்கில இதழை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அண்டை வீட்டில் இருந்த தி இந்து வாசகர் வீட்டிற்குச் சென்று அதனை வாசிப்பேன்.
கல்லூரியில் படித்தபோது தட்டச்சு போன்றவற்றைக்கற்றேன். புதிய சொற்களைத் தட்டச்சிடும்போது அதற்கான பொருளை அகராதிகளில் பார்த்துத் தெரிந்துகொள்வேன். வகுப்பில் ஆசிரியர் பாடமெடுக்கும்போது தெரியாத சொற்களுக்கு விளக்கம் கேட்பேன். இல்லம், தட்டச்சுப் பயிற்சி நிலையம், கல்லூரி என்ற வகைகளில் தேடலைத் தொடர்ந்தேன்.
நாளிதழ்களில் புதிய சொற்கள் பயன்படுத்தும்விதம், தலைப்புச் செய்திக்கான எழுத்துரு வடிவமைப்பு, பக்க அமைப்பு, பத்திப் பிரிப்பு, உரிய படங்கள் அமைக்கப்படல், பெட்டிச்செய்திகள் போன்றவற்றையும், ஒரே செய்தி பிற இதழ்களில் பல நடைகளில் அமையும் விதத்தையும் கவனிப்பேன்.
1980கள். வெளியூர்களில் பணியாற்றியபோதும் நாளிதழ் வாசிப்பு தொடர்ந்தது. வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன். வங்கித்தேர்வு தொடர்பாக நான் எழுதிய கடிதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியானது. தி இந்துவில் உங்கள் ஆங்கிலத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் என்ற பகுதியில் சில சொற்களுக்கான பொருளைக் கேட்டு நான் எழுதிய கடிதங்கள் என் பெயருடன் வெளியாயின.
இந்திரா காந்தி இறந்தபோது தி இந்துவில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் முதல் பக்கச் செய்தி வெளியாகியிருந்தது. தி இந்து இதழின் சகோதர இதழாக அறிமுகமான பிரண்ட்லைன் இதழின் வாசகனானேன். அதிலும், இந்தியா டுடே உள்ளிட்ட பருவ இதழ்களிலும் நான் எழுதிய கடிதங்கள் வெளியாயின.
1990கள். அடுத்து, சிறுகதை எழுத முயற்சி எடுத்தேன். முதல் சிறுகதை குங்குமம் இதழிலும், தொடர்ந்து பாக்யா, சாவி, குங்குமம், தின பூமி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழரசி, வாசுகி, மேகலா, டி.ராஜேந்தரின் உஷா, ராஜரிஷி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின. சிலவற்றுக்கு காசோலை, மணியார்டர் மூலமாக மதிப்பூதியம் பெற்ற அனுபவமும் உண்டு.
ஒரு முறை தி இந்து நாளிதழில் வந்த, அல்லாடி கிருஷ்ணசாமி கட்டுரையை முதல் முதலாக நேரடியாக சுமார் 65 நிமிடங்களில் தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். பின்னர் இம்முறையில் பல கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்தேன். வாசிப்பு அனுபவமானது மொழியாக்க ஆர்வத்தை மேம்படுத்தியது.
2000கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவு செய்து பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினேன். கதை எழுதுவதிலிருந்து சற்றே மாறுபட்டு, உரிய மேற்கோள்கள், சான்றுடன் எழுதும் முறையை அறிந்தேன். இக்கட்டுரைகளை கருத்தரங்குகளில் வாசித்தபோது மேடைப் பேச்சு அனுபவம் கிடைத்தது.
2010கள். ஒவ்வொரு ஆங்கில அகராதியும் ஒவ்வோராண்டும் ஆண்டின் சிறந்த சொல்லைத் தெரிவு செய்வர். அதனைக் கட்டுரைகளாக மொழிபெயர்த்தேன். 2017ல் சிறந்த சொல் என்ற கட்டுரை தி இந்து தமிழ்ப்பதிப்பிலும், தொடர்ந்து தினமணி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின. இதே காலகட்டத்தில் தி தி கார்டியன், டெய்லி மெயில், டெய்லி எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ், டெய்லி மிர்ரர், இன்டிபென்டன்ட், தி டெலிகிராப், தி சன், தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பில்ட், டான் போன்ற வெளிநாட்டு இதழ்களில் வெளியான கட்டுரைகளில் செய்திகளை மொழிபெயர்த்து முன்னணி தமிழ் இதழ்களில் எழுதினேன்.
2020கள். இதழ்களின் வடிவமைப்பின் மூலமாக, இதழ்கள் வாசகர்களைச் சென்றடைய மேற்கொள்ளும் ரசனை உத்தியை அறியமுடியும். வெளிநாட்டு இதழ்களின் வடிவமைப்பு, டேப்ளாய்ட் இதழ்களின் முக்கியத்துவம், பெரிய எழுத்து பயன்பாடு, ஆக்ஸ்போர்டு காற்புள்ளி போன்ற பதிப்பு, அச்சு நடை தொடர்பாகக் கட்டுரைகள் எழுதினேன்.
தி இந்து நாளிதழை 50+ வருடங்களாகவும், கார்டியன் இதழை 15+ வருடங்களாகவும் வாசிக்கிறேன். வெளிநாட்டு செய்திகளில் காணப்படுகின்ற நம் நாட்டு செய்திகளைக் கவனமாக வாசிப்பேன்.
கைப்பேசியிலும், மடிக்கணினியிலும் பல முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாசிக்கிறேன். குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர் என்பனவற்றுக்கு அப்பாற்பட்டு செய்திகளை அணுகுகிறேன். இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோரின் சமூக இணையதள பக்கங்களைத் தொடர்கிறேன்.
இதுவரை 2,000+ கட்டுரைகளையும், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட 10 நூல்களையும் எழுதியுள்ளேன். தாத்தா மூலமாக ஆரம்பமான வாசிப்புப்பழக்கமானது, வாசகர் கடிதத்தில் தொடங்கி தற்போது குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலவர் ஆகியோரிடமிருந்து பாராட்டுக்கடிதங்கள் வாங்கும் வரை என்னை முன்னேற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பும், மொழிபெயர்ப்பும், எழுத்துப்பணியும் தொடரும். வாசிப்பை நேசிப்போம்.















































