29 June 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம்: நினைவுகூர்வோம், நினைவு நாளில்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து, உதவிப்பதிவாளராக 2017இல் பணி நிறைவு பெற்றேன்.   

நான் பணியில் சேர்ந்தபோது முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் முதல் துணைவேந்தராக இருந்தார். அவருடைய காலகட்டத்தில்  அங்கு பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாகும். அவருடைய நேரடி வாய்மொழி ஆணைப்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளைத்  தட்டச்சு செய்யும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுமார் 100+ பக்கங்களை  ஆங்கிலத்தில் ஸ்டென்சிலில் தட்டச்சு செய்து, 150 படிகள் செராக்ஸ் எடுத்து அப்பணியை நிறைவு செய்தேன். தட்டச்சு செய்யும்போது பல புதிய ஆங்கிலச்சொற்களையும், விதிகள் தொடர்பாக பல நுணுக்கங்களையும் அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்போதிருந்த துணைப்பதிவாளரும், பதிவாளரும் இந்தப் பணிக்கு எனக்கு ஊக்கம் தந்தனர்.  இருக்கைப் பணிகளுடன் இதனை மேற்கொண்டேன். 

இந்த பின்புலத்தோடு நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய கடிதங்களில் சிலவற்றை. அன்னாரின் நினைவு நாளில் (29.6.2009)  நினைவுகூர்வோம்.

1.1.83இல் அவர் எங்களுக்கு அனுப்பிய கடிதம் அவருடைய திட்டங்களை முன்வைத்ததோடு, எங்களுக்குப் பணியாற்ற ஊக்கம் தந்தது.

“இன்று ஆங்கில ஆண்டுப்பிறப்பு. பல்கலைக்கழகம் பயன்பெறுமாறு உழைத்தற்கு, எல்லா நலன்களையும் தங்களுக்குத் தருமாறு இறைவனை வேண்டுகிறேன். போன ஆண்டில் பல்கலைக்கழக அமைப்பில் பல முனைகளில் முன்னேற்றமும் சில முனைகளில் சடைவும் நாம் கண்டோம். பல நிறுவனங்களின் ஒத்துழைப்பும், பல குழுக்களின் அனுமதியும், தனி மனிதர்கள் பலரின் மனம் நிறைந்த உழைப்பும் இன்றியமையாத தேவையாக இருந்ததால் சில துறைகளிற் போதிய முன்னேற்றத்தை நாம் பெறவில்லை. இந்தக் குறையை இந்த ஆண்டு சரி செய்ய நாம் எல்லா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

என் கால வரம்பில் 492 பணி நாட்கள்தான் எஞ்சியுள்ளன. இதுவரை 362 பணிநாட்கள் அதாவது 45% கழிந்துள்ளன. மீதமுள்ள நாட்களில் பெரும்பகுதியும் 1983-இல் அடங்கியிருப்பதால் கட்டிடங்கள் முழு உருவம் பெற்று, பல்கலைக்கழகத் துறைகள் அனைத்தும் முழுமையாக இயங்கி, பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி பெற்று, உலகத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வு மையங்களுள் ஒன்றாக தமிழ்ப் பல்கலைக்கழகம் திகழுமாறு செய்யவேண்டும். பல்கலைக்கழக ஆய்வு நூற்கள் பல வெளிவந்து பாராட்டப்பட வேண்டும். அருங்காட்சியகமும், நூலகமும் அறிஞர்களுக்குப் பயன் பெறுமாறு அமைதல் வேண்டும்.

போர்க்காலத்தில், படையினரிடையே எவ்வளவு ஒத்துழைப்புத் தேவையோ அதைப்போல் பல்கலைக்கழக வாழ்வுப் போராட்டத்தில் உங்கள் முழு ஒத்துழைப்பும் வெற்றிக்குத் தேவை. இந்த ஆண்டில் அதனைப் பரிசாகத் தருமாறு வேண்டி உங்களை வாழ்த்துகிறேன். இங்ஙனம், அன்பன், வ.அய்.சுப்பிரமணியம்”.

19.6.84இல், முதல் மூன்றாண்டு பணிக்கால நிறைவு நாளில் “பெறுநர் எல்லா உடனுழைப்போர்களும்” என்று முகவரியிட்டு அனுப்பிய கடிதம் பல்கலைக்கழகத்தோடு அவர் இருந்த ஆத்மார்த்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.



“ஏறத்தாழ மூன்றாண்டுக் காலமாக, எல்லோரும் இணைந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உழைத்து உதவியதற்கு முதன் முதலாக நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். தமிழ்மொழி உணர்வால், தஞ்சையிலும், பிற இடங்களிலும் பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் தமது கடமையைச் செம்மையாகச் செய்துள்ளனர் என்ற நினைவு எனக்குப் பெருமை தருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற் செய்தன சிலவாயினும் செய்யவிரும்புவன மிகப் பலவாகும். ஒரு நிறுவனத்திலுழைப்பவர்களுக்குக் குறைகள், மனத்தாங்கல்கள் இல்லாமல் இருக்காது. அவற்றைப் பெரிதாக்கிப் பகைமையை வளர்த்து, செயற்திறமையை குறைப்பது ஒன்று. அவற்றை மறந்து, இணைந்து, ஆக்க வேலைகளுக்குத் துணை நின்று உழைப்பது மற்றொன்று. இரு வழிகளில், இதுவரை இரண்டாவது வழியைப் பின்பற்றிப் பணியாற்றிய நீங்களனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டுகிறேன்..... என்றேனும் தனி மனித வாழ்வு அல்லது நிறுவனம் என்ற இரண்டில் ஒன்றை அழிக்கும் நிலை ஏற்பட்டால், நம்மையே நாம் அழித்து நிறுவனத்தைக் காத்த பெரு நிலையை உலகறியச் செய்ய வேண்டும். இதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. மணமான பெண்களை அவளுடைய கணவன் வீட்டிற்கு அனுப்பும் தாய், தந்தையரைப் போல் இன்று நான் நிற்கின்றேன். பிறந்தகத்தின் பெருமை பேசாது, புக்ககத்தின் பெருமை பேசி, கணவனையும், அவனைச் சார்ந்தோரையும் பேணி, அறவுணர்வுடன் வாழுமாறு கூறி வழியனுப்பும் பெற்றோர் போன்று, புதிய துணைவேந்தரின் நிர்வாகத்திற்கு எல்லா வகையான ஒத்துழைப்பையும் தந்து என்னைப் பெருமைப்படுத்துக. தொண்டால் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்ந்துள்ளது என்ற இன்சொல்லைக் கேட்டு மகிழுமாறு எனக்குதவுக. தமிழுலகம் உங்களை நன்றியுடன் பாராட்டும். தெய்வம் துணை நிற்கும்”.

பொதுவாக நாங்கள் அலுவலகக்குறிப்பினை அனுப்பும்போது அலுவலர்களின் பெயர்களை வரிசையாகத் தட்டச்சிட்டுவிட்டு, மாண்புமிகு துணைவேந்தரவர்கள் என்று தட்டச்சிடுவோம். இரண்டாவது பணிக்காலத்தில் அவர் எங்களுக்கு அனுப்பிய 1.10.1984 நாளிட்ட சுற்றறிக்கையில்  “துணைவேந்தர் பதவிக்கு முன் ‘மாண்புமிகு’ என்றும் ஆங்கிலத்தில் ‘ஆணரபிள்’ என்றும் அச்சடிப்பதையும், தட்டச்சு செய்வதையும், மேடையில் கூறுவதையும் அருள்கூர்ந்து நிறுத்திவிடுமாறு, கலைமகள் விழா தொடங்குவதற்குமுன் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” பின்னர் நாங்கள் அலுவலகக்குறிப்பு தட்டச்சிடும்போது துணைவேந்தரவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்.  


இரண்டாவது முறை பொறுப்பேற்று சில மாதங்களுக்குப் பின் அனைத்துப்பணியாளர்களுக்கும் அனுப்பிய 24.12.84 நாளிட்ட சுற்றறிக்கையில் நிறுவனத்திற்காகத் தன்னை அழித்துக்கொள்ளல் என்ற உணர்வினை வெளிப்படுத்தியிருந்தார். 

“22.9.84 பிற்பகல் முதல் எனது இரண்டாந் தவணைப் பொறுப்பேற்றவுடன் உங்களனைவருக்கும் எழுத நினைத்திருந்தேன். விடுப்பிற் சென்ற நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் ’ஏன் இவ்வாறு நடந்தது, நான் செய்த தவறு யாது? ’ என்ற மனப்போராட்டம் தணியச் சில வாரம் தேவைப்பட்டன. ’என்னாய்வு வாழ்வு பாழாய்விட்டதே என்ற குற்ற உணர்வும்’ ஓரளவு தொல்லை தந்தது. என்னைப் பற்றியே நான் அறிந்துகொள்ளாத நிலையால் ஏற்பட்ட தளர்ச்சி நிலை. இனிவரும் முப்பத்து மூன்று மாதங்களிற் சில குறிக்கோளை உங்கள் ஒத்துழைப்புடன் நான் நிறைவேற்றியாக வேண்டும்…….

…….சென்ற தவணை என் கொள்கைகளிலும், செயற்பாட்டிலும் இணங்காத எவரும், என் பதவி விலகல் கடிதத்தை, நாளிட்டு, வேந்தருக்கு அனுப்பும் உரிமையுண்டெனத் தெரிவித்து நேர்முக உதவியாளரின் அறையில் வைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் உண்டு. இந்தத் தவணையும் அவ்வாறு பதவி விலகல் கடிதம் அஞ்சல் தலையுடன் வைக்கப்பட்டுள்ளது. கொள்கையில் மாறுபடுவோர் யார் வேண்டுமானாலும், நாளிட்டு அதனை அஞ்சற் பெட்டியில் இடலாம். இம்முறை மற்றொரு உரிமையை உங்களிடம் நான் பெற விரும்புகிறேன். ஆய்வாளர், அலுவலகப்பணியாளர் முதலியவர்களின் பணி எனக்கு மன நிறைவு தராது இருப்பின் நானே அந்த பதவி விலகல் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் இடும் உரிமையையும் நான் மேற்கொள்ள விரும்புகிறேன்………..

’நிறுவனத்தைக் காத்தற்குத் தன்னையே அழித்துக்கொண்டான்’ என்ற புதிய அறநெறியை இன்று முதல் நாம் தோற்றுவிப்போம்”.

பொறுப்பை ஒப்படைத்த 31.7.1986இல், அவர் ஆய்வாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பிய வாழ்த்துக்கடிதம் வாசிப்போரை மனம் நெகிழவைக்கும்படி இருந்தது.



“இன்று (31.7.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல் பிறர்கையில்  மகிழ்ச்சியுடன் விட்டுச்செல்லும் உணர்வு ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயல்பாடும் உறவுமுறையும், தமிழுக்காகச் செய்கின்றோம் என்ற மன நிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்…..

……தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன், பிற மாநிலத்தவர்கூட  உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல்மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில் அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சியிருப்பின் என் முகம் வாடும்.

அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால் நான் காலமானபின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக. நீங்களனைவரும் வளமுற வாழ்த்துகிறேன்.”


அன்னாருடைய அஸ்தியின் ஒரு பகுதி அவர் விருப்பப்படி துணைவேந்தர் இல்ல வளாகத்தின் அருகேயுள்ள மரத்தடியில் புதைக்கப்பட்டு அதில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அவருடைய கடிதம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட முகப்பில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்ப் பல்கலைக்கழகம் தழைத்தோங்க வித்திட்ட அம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூர்வோம். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24.5.2021இல் நடைபெற்ற இரண்டாவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, அவர் முதுமுனைவர் பட்டம் பெற்ற அதே நாளில் அதே மேடையில் முனைவர் பட்டம் பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். 


பட்டமளிப்பு விழாவிற்கு முன்பாக வந்த நாளிதழ் செய்தி 
(நன்றி :The Hindu,  22.5.2001)


பட்டமளிப்பு விழாவிற்கு அடுத்த வந்த நாளிதழ் செய்தி 
(நன்றி :The Hindu , 25.5.2001)


தமிழ்ப் பல்கலைக்கழக முகப்பு, புகைப்படங்கள் நன்றி: 
Tamil University-A Profile, 1983 
தமிழ்ப் பல்கலைக்கழக வரலாறு (1981-2006), 2006 

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

27 June 2026

பல்துறை வித்தகர் கே.பாக்கியராஜ்

திரைப்பட நடிகர் பாக்கியராஜ் அவர்களின் மறைவு திரையுலகிற்கும், அவர்களுடைய கோடானு கோடி ரசிகர்களுக்கும் பேரிழப்பு. அவருடைய குருவான பாரதிராஜாவைத் தொடர்ந்து அவரும் மிக விரைவில் இயற்கையெய்தியது அவர்மேல் வைத்திருந்த பக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய ஆழமான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முற்றிலும் வித்தியாசமான கதையின் முடிவு என்ற வகையில் அவருடைய தனித்துவத்தைக் காணமுடியும். அண்டை வீட்டுப் பையன் என்று கூறுவார்களே அந்த வகையில் நம்மை மிகவும் அணுக்கமாக தம் கதையோடு அழைத்துச்சென்று, அதில் நம்மை ஈடுபட வைத்து, ஒரு நெருக்கத்தை மிகவும் அனாயாசமாக உண்டாக்குவதில் அவருக்கு நிகர் அவரே. தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாக நம்மை எந்த அளவிற்குச் சிரிக்க வைக்கின்றாரோ, அதே அளவிற்கு சிந்திக்கவும் வைத்துவிடுவார். நேர்மறை சிந்தனையையும், சாதிக்கவேண்டும் என்ற ஒரு மன உறுதியையும் அவருடைய பல படங்களில் பார்த்து ரசித்து உணர்ந்திருக்கிறேன். அவருடைய சமூகப்பிரக்ஞையை தன் படங்களில் வெளிப்படுத்தியவிதம் போற்றத்தக்கதாகும்.

16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவோடு ஆரம்பித்த அவரது பயணம் சுவர் இல்லாத சித்திரங்கள், கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், ஒரு கை ஓசை, மௌன கீதங்கள் என்று நீண்டு தொடர்ந்தது.

அப்பாவித்தனமான முகம், இயல்பான புன்னகை, நிதானமான பேச்சு, அதே சமயத்தில் நறுக்கென்று ஒரு செய்தியை நம்முள் கொண்டுவந்து சேர்க்கின்ற பாங்கு என்ற வகையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். அவருடைய பல வசனங்களை நானும், நண்பர்களும் திருப்பித்திருப்பிப் பேசி ரசித்ததுண்டு.

பாக்யா இதழ் மூலமாகவும் அவருடைய பங்களிப்பானது ஒரு முன்னுதாரணமாக அமைந்ததாகும்.

அவருடைய எண்ணற்ற படங்களும், வசனங்களும் என்றென்றும் ரசிகர்களின் மனதில் நிற்கு.ம் என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லஇறைவனை வேண்டுகிறேன்.


1996இல் நான் அனுப்பியிருந்த வாழ்த்திற்கு கையொப்பத்துடன் அவர் அனுப்பியிருந்த நன்றிக்கடிதம் இன்றும் என் கோப்புகளில்...

26 June 2026

அணிலாடு சீறூர் (சங்க இலக்கியக் குறுந்தொகைக் கதைகள்): தஞ்சை சி.கேசவமூர்த்தி

தஞ்சை சி.கேசவமூர்த்தி எழுதியுள்ள “அணிலாடு சீறூர்” என்னும் நூல் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களின் அடிப்படையில் கதை வடிவில் அமைந்துள்ளது.


தன்னுடைய படைப்பின் மூலமாக நூலாசிரியர், வாசகர்களை சங்க காலத்திற்கு அழைத்துச்செல்கிறார். தான் அனுபவித்த இலக்கியத்தின் நுட்பத்தையும், உணர்வையும் அனைவரும் உணரவேண்டும் என்ற நன்னோக்கில் சிறுகதைகளை உருவாக்கி, உரிய மாந்தர்களைப் படைத்து, நிகழ்வுகளை ஒருஙகிணைத்து அமைத்துள்ள விதம் போற்றத்தக்க வகையில் உள்ளது. கதாபாத்திரங்களுக்கு அவர் இட்டுள்ள பெயர்கள் வாசிப்போரை இன்னும் அணுக்கமாக நெருங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.

குறுந்தொகைப் பாடல்களில் தலைவன், தலைவி, தந்தை, நற்றாய், செவிலித்தாய், சிற்றூர், பேரூர், மூதூர், சிறுகுடி என்று கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் கதையை எளிதில் அனைவரும் படித்து புரிந்துகொள்வதற்காக அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கும், ஊர்களுக்கும் தன் கற்பனையில் தோன்றிய பெயர்களைச் சூட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். அவருடைய இந்த உத்தியானது பாராட்டத்தக்கதாகும்.

குறுந்தொகையில் குறிஞ்சி (8), முல்லை (5), மருதம் (3), நெய்தல் (6), பாலை (16) என்ற பகுப்பில் 38 பாடல்களைத் தெரிவு செய்துள்ளார். இதில் அதிகமாக உள்ளவை பாலைத்திணைப் பாடல்களாகும் அவ்வாறாக எடுத்தாளப்பட்ட பாடல்களின் அடிப்படையில் கதையைக் கூறுவதோடு நிறைவுப்பகுதியில் திணைப்பகுப்பு, சொற்பொருள், பொருள், தொடர்புடைய குறிப்புகள் ஆகியவற்றை மிகவும் எளிமையாகத் தந்துள்ளார். கதையை இணைக்கின்ற பாடல்களும், அவற்றிக்கான பொருளும், கதையின் கருவை அதனுடன் ஒன்றிணைத்து அவர் வைக்கின்ற பாங்கும் சிறப்பாக உள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

“அவர் என்னோடு கலந்திருந்த நாளில் தினைப்பயிரின் பசுமையான தாளைப் போன்ற கால்களையுடைய நாரை ஒன்று ஓடையில் ஆரல் மீன் வருகிறதா? என்று ஒற்றைக் காலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது ஓரக்கண்ணால் பார்த்து, கேட்டிருந்தால் உண்டு. அதுவிர வேறு கண்கண்ட சாட்சி இல்லை என்றாள்.” (பக்கம். 42)

“...மேலும் இம்மை மாறி, மறுமையாயினும் நீங்களே எனக்குக் கணவராக வேண்டும். நானே உங்களுக்கு மனைவியாக வேண்டும். ஒரு நாளும் நீங்கள் பரத்தைக்கு கணவர் ஆகமாட்டீர்கள். அவளும் உங்களுக்கு மனைவி ஆகமாட்டாள் என்று பரத்தையிடம் சென்ற தன் கணவரை நினைத்து தலைவி மத்தி வருந்தினாள்.” (ப. 49)

“...காட்டில் தண்ணீர் தேடி அலைந்துகொண்டிருக்கும் பெண் யானைகளுக்கு ஆண் யானை ஓமை மரத்தின் பட்டைகளை தன் தந்தத்தால் குத்தி பெயர்த்துக் கொடுத்து பெண் யானையின் தண்ணீர் வேட்கையை எப்படி தீர்த்துக் காப்பாற்றுகின்றதோ, அதுபோன்று நாமும் நம் மனைவியின் தாகத்தைப் போக்கிக் காப்பாற்ற வேண்டும்…” (ப. 79)

“...இவர்கள் இருவரும் இந்தக் கடுமையான வெயிலிலும், ஆபத்தான பாதையில் நடந்து செல்வதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பாவமாக இருந்தது. இவர்கள் யாராக இருப்பார்கள்?.....யாராக இருந்தாலும் நல்லபடியாக இவர்கள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாகப் போய்ச் சேர வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொண்டோம்…” (ப. 100)

“...தலைவியைச் சந்திக்க இரவு நேரத்தில் வருவதைத் தவிர்த்துவிடுங்கள். உன் தலைவியை விரைவில் திருமணம் முடித்து உன்னுடன் அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை…” (ப. 139)

“...நம்முடைய முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்களை வைத்துக்கொண்டு அவற்றைச் செலவழித்து வாழ்க்கை வாழ்பவர்களைச் செல்வந்தர் என்று ஊரார் மதிக்க மாட்டார்கள். தாமாக உழைத்து மேலும் சம்பாதித்து வாழ முடியாதவர்களுடைய வாழ்க்கை அடுத்தவனிடம் பிச்சை கேட்டு வாழ்வதைக் காட்டிலும் இழிவானது…” (ப. 152)

“...எப்படி ஒரு தாய் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இருவரும் ஒரே நேரத்தில் நஞ்சுண்டால் அந்தத்தாய் எப்படித் துடித்து, தனது இரண்டு குழந்தைகளும் பிழைக்கவேண்டும் என நினைப்பாளோ, அவ்வாறே நானும் நீங்கள் இருவரும் நன்றாக இருக்கவேண்டும், இருவரும் சேர்ந்து இல்லற வாழ்வை இனிதாக வாழவேண்டும் என நினைக்கிறேன்…” (ப. 164)

“...எப்படி யானை தினைக் கதிர்களைத் தான் உண்டு மகிழும் அதே நேரத்தில் தன் குட்டிக்கும் பாலைக் கொடுத்து அதனை மகிழச் செய்கிறதோ அதேபோன்று என் தலைவியை மணம் முடித்து நீயும் இன்புற்று என் தலைவியையும் மகிழ்விக்கச் செய்தால் அதைக்கண்டு மகிழ்ச்சியடைவேன். …” (ப. 171)

“...அந்த வௌவால் எப்படி இரவிலே சுவை மிகுந்த இனிய மாங்கனியை உண்பதற்காக, துவர்ப்பும் புளிப்புச்சுவை கொண்ட நெல்லிக்கனியை உண்டுவிட்டு பகலெல்லாம் மூங்கிலில் தொங்கி தூங்கிவிடுவதுபோல நம் தலைவரும் என்னோடு முறையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தனிமையில், இந்நாள் வரையில் வெளியூரில் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிகொண்டு இருந்து வருகிறார். அவர் வந்ததும் நாங்களும் இல்லறத்து நல்லின்பத்தைப் பருகுவோம்.…” (ப. 188)

செயற்கை நுண்ணறிவும், அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியும் சமுதாயத்தில் பரவி பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள இக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நூலானது முக்கியத்துவம் பெறுகிறது. அக்கால வாழ்வின் பெருமையும், சிறப்பும் வாழும் தலைமுறையினரைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் பெருமுயற்சி மேற்கொண்டு இந்நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு: அணிலாடு சீறூர் (சங்க இலக்கியக் குறுந்தொகைக் கதைகள்)
ஆசிரியர்: தஞ்சை சி.கேசவமூர்த்தி
பதிப்பகம்: வைரமுல்லை பதிப்பகம், தஞ்சாவூர், அலைபேசி 94865 62972
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஜனவரி 2025
விலை: ரூ.250
-----------------------------------------------------------
-----------------------------------------------------------


தமிழ் ஊற்று இலக்கியக் கூடல் தொடக்க விழாவின்போது நூலாசிரியரிடம் நூலைப் பெற்ற இனிய தருணம் (31.5.2026)

24 June 2026

சிவகுரு தரிசனம் திருவடிப்பேறு












நூல்  குறிப்பு
பதிப்பு: முதல் பதிப்பு, டிசம்பர் 2005
விலை: ரூ.250
கிடைக்குமிடம்: திலகவதியார் திருவருள் ஆதீனம், அன்னை சாயிமாதா நினைவு பொது நூலகம், 1120, மச்சுவாடி, தஞ்சை சாலை, 
புதுக்கோட்டை 622 001
தொலைபேசி: 04322 228024
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திருமந்திர ஆய்வுரைக்களஞ்சியம்,
பதிப்பாசிரியர்: திலகவதியார் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரசேகரன்
-------------------------------------------------------------------------------------------

23 June 2026

திருவைகாவூர்-வில்வவனேசுவரர் கோயில்

 












-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்/மா.சந்திரமூர்த்தி
-------------------------------------------------------------------------------------------

செப்டம்பர் 2015இல் குடும்பத்துடன் அக்கோயிலுக்குச் சென்றபோது எடுத்த சில புகைப்படங்கள் (மனைவி பாக்கியவதியுடன் பேரன் தமிழழகன்)




23.6.2026 மதியம் பதிவு மேம்படுத்தப்பட்டது.

22 June 2026

சப்தஸ்தானத் தலங்கள்

கும்பகோணத்தில் கோயில்களையே பார்த்து வளர்ந்த எனக்கு திருவையாற்றை மையமாகக் கொண்டுள்ள சப்தஸ்தானத் தலங்களைப் பற்றி அறிந்ததும் அங்கு செல்லவும், அதனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவும் எழுந்த ஆவல் 2004இல் நிறைவேறியது. அக்கோயில்களுக்கு நேரில் சென்றும், தரவுகளைத் திரட்டியும் நான் எழுதிய "சப்தஸ்தானத் தலங்கள்" என்ற கட்டுரை மகாமகம் சிறப்பு மலர் 2004இல் வெளியானது. இம்மலரின் மலர் பதிப்புக்குழுவில் வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியின் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் பணியாற்றியது நினைவில் நிற்கும் அனுபவமாகும்.

2009. மேற்படி கட்டுரையின் மூலமான தொடக்கமானது பின்னர் புதுதில்லி, நேரு டிரஸ்ட் உதவியுடன் தஞ்சாவூர் மாவட்ட சப்தஸ்தானக் கோயில்களும் விழாவும் என்ற தலைப்பில் ஒரு திட்டம் மேற்கொள்ள துணைபுரிந்தது. மேற்படி கட்டுரையை இன்னும் மேம்படுத்தி, மறுபடியும் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று திட்டத்தை நிறைவேற்றி அந்நிறுவனத்தில் அளித்தேன். இவ்வகையில் சப்தஸ்தானத் தலங்கள் என்னை ஈர்த்த இடங்களாயின.  

2011. வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள் புதுதில்லி, நேரு டிரஸ்ட் மூலமாக சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் என்ற தலைப்பில் திட்டத்தை மேற்கொண்டபோது அதற்கு நெறியாளராக இருந்த வாய்ப்பு கிடைத்தது. 

2014.  கோயில்கள் தொடர்பான கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தபோது .கும்பகோணம், சக்கராப்பள்ளி, மயிலாடுதுறை, கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம்,  திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறான சப்தஸ்தான தலங்கள் இருப்பதை அறிந்தேன். இத்தலங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து, உரிய செய்திகளைத் திரட்டி விக்கிப்பீடியாவில்  சப்தஸ்தானக் கோயில்கள் என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.  

அவ்வகையில் சப்தஸ்தானத் தலங்களைப் பற்றி மகாமகம் மலரில் எழுதிய கட்டுரை பின்னாளில் இரு திட்டங்களை மேற்கொள்ளவும்,  விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளைத் தொடங்கவும் நல்ல ஆரம்பமாக அமைந்தது.  



 





-------------------------------------------------------------------------------------------
நன்றி: மகாமகம் சிறப்பு மலர் 2004
-------------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------------
நன்றி: நேரு டிரஸ்ட், புதுதில்லி
-------------------------------------------------------------------------------------------
2008. 2009இல் சப்தஸ்தானத் தலங்களுக்குச் 
சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



















23.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.