பிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் இன்னும் நாம் பார்க்கவேண்டியவை காசி விசுவநாதர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் மற்றும் நாகேஸ்வரர் கோயில். இப்போது காசி விசுவநாதர் கோயில் செல்வோம்.
இக்கோயில் மகாமகக்குளத்தின் வட கரையில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லும்போது முதலில் கோயிலின் நுழைவாயில் காணப்படுகிறது.
முன் மண்டபத்தை அடுத்து உள்ளே செல்லும்போது உள் மண்டபத்தில் வலப்புறம் வள்ளிதேவசேனாவுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. இடப்புறம் கணபதி, சோமாஸ்கந்தர் சன்னதிகளும், நவகன்னியருக்கான உற்சவர் சன்னதியும் உள்ளன.
இதே மண்டபத்தில் வலப்புறம் சரயு, கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, காவேரி, சரஸ்வதி, நர்மதா, யமுனா, கங்கா ஆகிய நவகன்னியருக்கான சன்னதி உள்ளது.
நவகன்னியர் சன்னதியை அடுத்து பள்ளியறையும், நடராஜர் சன்னதியும் உள்ளன. வெளிச்சுற்றில் ஷேத்திர மகாலிங்கம் எனப்படும் லிங்க பானம் உள்ளது.
மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கா, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி உள்ளனர். கருவறையின் வலப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது. மூலவரும் தேவியும் உள்ள மண்டபத்தின் கருவறையைச் சுற்றிவரும்போது பின்புறம் பைரவர், சூரியன், சனீஸ்வரன், சந்திரன், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் குடமுழுக்கு 9.2.2014இல் நடைபெற்றது.
இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8.30
---------------------------------------------------------------------------------------------------
- காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
- கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
- நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
- சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
- கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
- காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
- கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
- அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
- பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
- அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
- கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
- ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
---------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு