29 June 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவாசிரியம் : நம்மாழ்வார் (2578-2584)

நம்மாழ்வார் அருளிய திருவாசிரியத்தினை (2578-2584) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



ஊழிதோறு ஊழி, ஓவாது, வாழிய
என்று, யாம் தொழ, இசையுங்கொல்லோ? யாவகை
உலகமும் யாவரும் இல்லா, மேல் வரும்
பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகித்
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று,
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி,
மூவுலகம் விளைத்த உத்தி
மாயக் கடவுள் மா முதல் அடியே (2581)
மாயங்களை விளைக்க வல்லவனான ஸ்ரீமந்நாராயணன், ஆதிகாரணக் கடவுள் ஆவான். ஒரு காலத்தில் எல்லா உலகங்களும் உயிர்களும் தோன்றாமல் இருந்தன. அப்படிப்பட்ட பெரும்பாழ் எனப்படும் மகாப்பிரளய காலத்தில் எம்பெருமான் கணக்கற்ற ஆத்மாக்களான பொருள்களுக்கெல்லாம் பெறுவதற்குரிய மூவகைக் காரணமும் தானேயாகி நின்றான். உலகைப் படைக்க எண்ணிய அப்பெருமான், பிரம்மாவாகிய ஒரு மூளையைத் தன் உந்தித் தாமரையில் உண்டாக்கினான். அவன் மூலமாகச் சிவன், மற்றும் பல சிறு தெய்வங்களையும் படைத்தான். ஆக இவ்வகையாலே மூன்று உலகங்களையும் படைத்தான். உலகத் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்த கொப்பூழை உடைய அப்பெருமானின் திருவடிகளையே பற்றி எல்லாக் காலங்களிலும் இடைவிடாமல் பல்லாண்டு பாடி வணங்குவோம். நாம் உய்வு பெற அத்திருவடிகளே மூல காரணம் ஆகும். அவைகளைத் தொழுதபடி வாழிய என்று பாடி வணங்கும் பாக்கியம் நமக்குக் கிட்டுமோ?

நளிர் மதிச் சடையனும், நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும், முதலா
யாவகை உலகமும், யாவரும், அகப்பட;
நிலம், நீர், தீ, கால், சுடர், இரு விசும்பும்,
மலர் சுட பிறவும், சிறிது உடன் மயங்க;
ஒரு பொருள் புறப்பாடு இன்றி, முழுவதும்
அகப்படக் கரந்து, ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது, 
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே? (2584)

எம்பெருமானுக்கு எல்லா உலகங்களும் எல்லாத் தெய்வங்களும் அடிமைப்பட்டவை. குளிர்ந்த சந்திரனைத் தலையிலே சூடியுள்ள சிவனும் பிரமதேவனும், ஒளியுள்ள தேவேந்திரனும் ஆகிய இம்மூன்று தெய்வங்களும் எம்பெருமானுக்கு உட்பட்டவராவர். எல்லா உலகங்களும் உயிர்க்கூட்டங்களும் அவனுக்கு உட்பட்டு அடங்குகிறவை. பிரளய காலத்தில் இத் தெய்வங்களும் உலகங்களும் உயிர்க்கூட்டங்களும அப்பெருமான் வயிற்றினுள்ளே அடங்கிக் கிடந்தன. அப்பெருமான் தன் வயிற்றினுள் எல்லாப் பொருளும் கலக்கும்படியாக ஒன்றுகூட வெளிப்படாதபடி இவற்றை வைத்துக் காத்தான். நிலம், நீர், தீ, சூரிய, சந்திரர்களைக் கொண்ட வானம் ஆகிய ஐந்து பூதங்களையும் தன் வயிற்றில் கொண்டான். சூரிய சந்திரர்களும் அவர்களைப் போன்ற பிற ஒளி மிகுந்த பொருள்களும் பகவ்னுக்குள்ளே அடங்குகின்றன. பிரளய காலத்தில் மேற்கண்ட எல்லாவற்றையும் பகவான் தன் வயிற்றில் அடக்கியவாறு மறைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரில் பள்ளிகொண்டான். இது பெருமான் செய்த ஆச்சரியமான செயலன்றோ? மாயப் பெருமானை அல்லாது வேறு எந்தத் தாழ்ந்த தெய்வத்தையும் நாம் தலைவனாகக் கொள்ளமாட்டோம். 

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம்

22 June 2019

அப்பா : கரந்தை ஜெயக்குமார்

நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தந்தையார் அமரர் திரு சி.கிருட்டிணமூர்த்தி (9.11.1940-28.6.2018) அவர்களின் நினைவு மலர், தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் 18 ஜுன் 2019 அன்று காலை வெளியிடப்பட்டது. தன் தந்தையாரோடு பழகிய நண்பர்கள், பணியாற்றிய அலுவலர்கள், பிற துறை சார்ந்தோர், உறவினர்கள் ஆகியோர் பகிர்ந்துகொண்ட, நட்பின் நீங்காத நினைவலைகளைத் தொகுத்து "அப்பா" என்று தலைப்பிட்டு நூலாக்கி, தன் தந்தைக்கு உரிய அஞ்சலியைச் செலுத்தியுள்ளார் திரு ஜெயக்குமார். 


பல பதிவுகள் கவிதை வடிவிலும் உள்ளன. வலைப்பூ மற்றும் முகநூலில் வந்த இரங்கல் செய்திகளையும் நூலில் தந்துள்ளார். நூலினை வாசிக்கும்போது அன்னாரின் புகழினை அறியமுடிகிறது. அவரின் பெருமையை நினைவுகூர்கின்ற பெருமக்களின் சொற்களிலிருந்து சிலவற்றைக் காண்போம்:

“எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தேடிப் பழகி பரிவும் காட்டி தன் பழைய சொந்தத்தை பாலமாக்கி நெருங்கி வாழ்பவர்களும் சிலர் இருக்கின்றார்கள், அவர்களில் ஒருவராக எங்கள் சித்தப்பா” (எங்கள் சித்தப்பா, தமிழ்ச்செல்வி அரசு, ப.7)

“தன் வாழ்நாள் முழுவதும் யாருக்கும் சுமையாக இருந்துவிடாமல், சுமைதாங்கியாகவே வாழ்ந்தார். தன் பிரிவைக்கூட நொடிப்பொழுதில் துன்பமின்றி கடந்துவிட்டவர். இவரது போற்றத்தகுந்த மற்றொரு குணம் எக்காலத்தும், எவரிடத்தும் யாரைப்பற்றியும் விமர்சனங்களை முன்வைக்காதவர் என்பதேயாகும். தான் காணும் மனிதர்களின் நல்குணங்களைப் பெரிதாய் பேசுவாரே தவிர, ஏனையவற்றைச் சிறிதும் குறை கூறி பேசவேமாட்டார்.” (அண்ணனைப் போற்றுவோம், சிலம்புச்செல்வரடிப்பொடி தங்க.கலியமூர்த்தி, ப.15)

“எவ்வளவு கடினமான பாடமானாலும் அவர் அலட்டிக்கொள்ளாமல் மனதில் ஏற்றிக்கொள்வார். அதை எழுத்து வடிவத்தில் சிறப்பாக வெளிப்படுத்துவார். ஒரு சமயம் எங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு/மொழியாக்கம் வந்திருந்தது. நேரு, அவர் மகள் இந்திராவிற்கு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களில் ஒரு சிறு பகுதியை மொழியாக்கம் செய்யச்சொல்லிக் கேட்டிருந்தது. “I cannot send anything solid to you now”. அதை, பௌதீக, வேதியியல் மாணவர்கள், “நான் உனக்கு எதையும் திட வஸ்தாகவோ, திரவ வஸ்தாகவோ இங்கிருந்து அனுப்பமுடியாது” என்று மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார்கள். பாவம் நேரு. என் நண்பர், “என் எண்ண அலைகளை மட்டுமே இங்கிருந்து அனுப்பமுடியும்” என மொழிபெயர்த்து எழுதியிருந்தார்.” (அய்யாறு புத்தன், ஆர்.இராஜமாணிக்கம், ஐ.பி.எஸ்., ப.18)

“அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினை எதுவாக இருந்தாலும், அவர் யோசித்து முடிவாகச் சொல்லிவிட்டார் எனில், நாங்கள் அனைவரும் அம்முடிவைக் கட்டளையாக ஏற்றுக்கொள்வோம். மீறி எதையும் செய்ததாக நினைவில்லை. அந்த அளவிற்கு முன் யோசனையுடன் செயல்டுபவர்.” (ஆருயிர் அண்ணன் எஸ்.கே., என். ஜெகதீசன், ப.24)

“அவர் எனக்கு சுமார் 60 ஆண்டு காலம் நெஞ்சுக்கு நெருக்கமானவர். மற்றவர் துன்பம் அனுபவிப்பதை காணச் சகியாது அவரது துன்பம் துடைத்திட தான் தும்பம் மேற்கொண்டு உழைத்தவர். அவர் பணியாற்றிய புள்ளியல் துறையிலும் சரி, வெளியில் தொடர்பிலிருந்த பெருமக்கள் வரை மிகச் சிறப்காக அவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் கலந்து உறவாடியவர்” (கருணை உள்ளம் பொங்கும் கிருஷ்ணமூர்த்தி வாழ்க, சி.என்.தியாகராசன், ப.30)

“அவருடைய நண்பர்கள் வட்டாரம் ஆல் மரம் போல பரந்து விரிந்தது. எல்லா துறையிலும் நண்பர்கள் உண்டு” (பண்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அ.பிச்சை, ப.35)

“தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியர்கள் அறிக்கை அனுப்ப கால தாமதமானால், உதவி இயக்குநர் என்றும் பாராமல் அவர்கள் இருக்கையில் அமர்ந்து அந்த கோப்பை காட்டுங்கள் என்று வாங்கி அவரே பதிலை தயார் செய்து சற்றும் கோபப்படாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார்கள்.” (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆ.உதயச்சந்திரன், ப.44)

“அவருடைய திறமையால் படிப்படியாக புள்ளியியல் அலுவலர், புள்ளியியல் உதவி இயக்குநர், மண்டலப் புள்ளியியல் துணை இயக்குநராக கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பணியாற்றி பணியிலிருந்து நன்முறையில் ஓய்வு பெற்றார்.” (நெருங்கிய நண்பர் அமரர் கி.பிள்ளை, காலகண்டன், ப.70)

“பொறாமை கொள்ளும் அளவிற்கு பெரிய நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். அவர் கையாண்ட ஆயுதம் மென்மையான பேச்சு மற்றும் அளப்பரிய அன்பினைப் பொழிதலே ஆகும். வயது வேறுபாடு, அந்தஸ்து வேறுபாடு பாராட்டாமல் அனைவரிடமும் அன்பினைப் பொழியும் வல்லமை மிக்கவர். அவர்கள் தம் சுமைகளைத் தனதாகக் கொண்டு சுமக்கக்கூடிய சுமைதாங்கியாகவே தொடர்ந்து வாழ்ந்துள்ளார்.” (சொல்லிமாளா தெய்வத்திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சிங்காரவேலு, ப.87)


அனைத்திற்கும் மேலாக மகன் எழுதியுள்ள பதிவு படிப்போர் மனதில் பெரிய வலியையும், ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
“என் மடியில் படுத்தவாறு, முகத்தில் துன்பத்தின் ரேகையோ, கவலையின் அறிகுறியோ ஏதுமின்றி, சிறு குழந்தை போல் அமைதியான உறக்கத்தில் எந் தந்தை…வாழ்வில் எத்துணையோ துன்பங்களைக் கடந்து வந்தவரின் வாழ்க்கை, பத்தே நிமிடங்களில் முடிந்துவிட்டது…காலை மாலை உடற்பயிற்சி, கடந்த ஒரு வருட காமாக காலையிலி அரைமணி நேரம் யோகா, முறையான மருத்துவம் எனத் தன் உடலைப் பேணிக்காத்தவர் என் தந்தை….உடலில் அவ்வப்போது துன்பங்கள் எட்டிப் பர்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை…ஒரு நாள் கூட உடல்நிலை சரியில்லை எனப் படுக்கையில் வீழ்ந்தவரல்ல என் தந்தை…பத்து நிமிடங்கள்…பத்தே பத்து நிமிடங்களில் எழுபத்து ஒன்பது ஆண்டுக்கால வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது.” (எந்தை மறைந்தார், கரந்தை கி.ஜெயக்குமார், ப.63)

தந்தையின் பெருமையையும், அரிய குணங்களையும் ஆவணப்படுத்திய மகனின் முயற்சி போற்றத்தக்கது. தந்தையின் நினைவுகள் என்றும் அவரையும், குடும்பத்தையும் என்றும் துணை நின்று காக்கும்.

நூல் வெளியீடு புகைப்படம் நன்றி : திரு கரந்தை ஜெயக்குமார்

15 June 2019

நியூசிலாந்தின் தாய் ஜெசிந்தா அர்டேர்ன்

“நியூசிலாந்தின் இருண்ட நேரத்தில் நம்பிக்கைக்கீற்று”, “இரக்கம், மன உறுதி, நேர்மையுடன் நடந்துகொண்டவர் நம் பிரதமர். நான் ஒரு நியூசிலாந்துக்காரர் என்பதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குடிமகனும் அவ்வாறே நினைக்கின்றார்”, “பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பல பத்தாண்டுகளில் செய்யவேண்டியதை ஏழே நாட்களில் செய்து காட்டியவர்”, “அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது. டிவிட்டரில் சிக்கித்தவிக்கிறார் ட்ரம்ப், பிரெக்சிட் இழுபறியில் மாட்டிக்கொண்டுள்ளார் தெரசா. ஆனால் ஜெசிந்தாவின் மன உறுதி அவரை அனைவரும் பேசும்படி செய்துவிட்டது. இக்கட்டான சூழலில் இரும்பு போன்ற உறுதித்தன்மையை அவரிடம் பார்த்துவிட்டோம்” என்று பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.  
 “ஜெசிந்தாவின் அசாதாரணமான செயல்பாட்டிற்காக தன் நாட்டிலும் உலகளவிலும் போற்றப்படுவார்“ என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார் ஒரு அரசியல் விமர்சகர். “துயரங்களையும் சோகங்களையும் எதிர்கொண்டுள்ளார்” என்கிறார் வாஷிங்டன் போஸ்ட் இதழாளர். “அவரால் முடியுமா என்ற கேள்வியானது அனைத்துப் பெண் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதும் கேட்கப்படுகிறது. அவரிடம் உள்ள சக்தி என்ன? உறுதித்தன்மை எங்கேயுள்ளது? இதோ பார்த்துவிட்டோம், மிக மோசமான சூழலை அவர் கையாண்டபோது அந்த உறுதியைக் கண்டோம்” என்கிறார் கார்டியன் பத்தியாளர்.
இவ்வாறாக உலகமே பாராட்டுமளவு பேசப்பட்டு வருபவர் நியூசிலாந்தின் பிரதமரான, போர்ப்ஸ் 2018ஆம் ஆண்டு பட்டியலில் சக்தி வாய்ந்த மகளிர் பட்டியலில் 29ஆம் இடத்தைப் பெற்றுள்ள ஜெசிந்தா அர்டேர்ன் (38) ஆவார். அந்நாட்டின் கிழக்குக்கடற்கரையோர நகரமான கிரைஸ்ட்சர்ச் என்னுமிடத்திற்கு அருகேயுள்ள மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 50 பேர் இறந்தது அண்மைக்கால வரலாற்றில் மிகவும் மோசமானதாகும். தாக்குதல் நிகழ்ந்தபோது ஜெசிந்தா அதிகமான அளவு சோதனைக்குள்ளானார். இவ்வாறான ஒரு சூழல் இதற்கு முன்னர் நியூசிலாந்தின் எந்தத் தலைவருக்கும் அமையவில்லை.
அடுத்து செய்யவேண்டியது பற்றி சிந்தித்து, தாக்குதல் நிகழ்ந்த நாளன்று மாலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அமைதியான ஒரு நாடு பேரதிர்ச்சியை எதிர்கொள்கிறது என்று அவர் கூறியபோது குரலில் தளர்ச்சி இருந்தாலும், ஒற்றுமை மற்றும் இரக்கத்தினை அச்செய்தி உறுதியாக வெளிப்படுத்தியது.  “நியூசிலாந்தின் கருப்பு நாள்களில் ஒன்று இந்நாள். 200  வகையான இனத்தவரையும், 160 மொழிகளையும் கொண்ட பெருமையுடையது நம் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையில் பொது மதிப்புகளை நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்கிறோம். இந்த சோகத்தின் மூலமாகப் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்முடைய இரக்கமும், ஆதரவும் தேவை. இரண்டாவதாக, நாம் விடுக்கும் உறுதியான கண்டனம். இத்தாக்குதலுக்காக நீ எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் - ஆனால் நாங்களோ உன்னை மறுப்பதோடு உன் செயலைக் கண்டிக்கிறோம்“, என்றார்.
மறுநாள் காலை தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்றார். உடன் அவருடைய சக அமைச்சர்களும், எதிர்க்கட்சித்தலைவர்களும் சென்றனர். கருப்பு நிற முக்காடு அணிந்து, சோகத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் இனத்தவரை சந்தித்தார்.  அவர்கள் அழ ஆரம்பிக்கும்போது தன் கைகளில் தாங்கிப்பிடித்தார், ஆறுதல் மொழிகளை மென்மையாக எடுத்துரைத்தார், தன் கன்னத்தை அவர்களுடைய கன்னங்களில் வைத்து சோகத்தைப் பகிர்ந்துகொண்டார். அவருடைய இந்த அரவணைப்புகளைக் கொண்ட வீடியோ உலகம் முழுவதும் வைரலானது.  துக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியபோது அதனை அவர் புகைப்படத்திற்காகச் செய்ததாகத் தெரியவில்லை. அவருடைய கண்களில் இருந்த இயல்பான சோகத்தினையும், முகத்தில் இருந்த அக்கறையையும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் உணர்ந்தனர். பாதிக்கப்பட்டவர்களோடு கைகோர்த்து நடந்தார். அவருடைய இலக்கு அவர்களுடைய துக்கத்தைப் பகிர்வதில்  மட்டுமே இருந்தது. 
 “தாக்குதல் நிகழ்ந்த முதலாக நியூசிலாந்தில் வெறுப்பையோ கோபத்தையோ வெளிப்படுத்தும் பேச்சுகள் காணப்படவில்லை. நாம் இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வோம், இதனை எதிர்கொள்வோம்” என்றார் ஆக்லாந்து பல்கலைக்கழக பொதுக்கொள்கை நிறுவனப் பேராசிரியரான ஜெனிபர் கர்ட்டின்.   மேலும் அவர், ”பிரதமர் மிகவும் அமைதியாகவும் உறுதியாகவும் நடந்துகொண்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார். கொலையாளியைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை”  என்றார்.
”பிரதமர், சிக்கலான சூழலில் நிதானத்தைக் கடைபிடித்து கடமையில் விஞ்சிவிட்டார். அதிகாரத்தை எப்படி பங்களிப்பது என்பதை நன்கு உணர்ந்து அதிர்ச்சியடைந்த நாட்டின் பாதுகாப்புப்பணிகளைப் பிரித்தளித்து கண்காணித்து வருகிறார்” என்றார் 36ஆம் பிரிவினைச் சேர்ந்த பாதுகாவலர் பால் பச்சன். ”நாட்டு மக்களுக்கு அவர் தாயாக இருக்கிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அவருடைய இந்த பாணியானது  மிகவும் நிறைவாக உள்ளது” என்றார் அவர்.
 “தலைமைப்பண்பு என்பதானது நியூசிலாந்துக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. நியூசிலாந்தில் இனவெறி உள்ளது. இருந்தாலும் அவர் இனவெறித்தனத்தை எதிர்கொள்ளவும், எங்களின் வழியை மாற்றியமைத்துக் கொள்ளவும் எங்களுக்கு மிகவும் துணையாக இருக்கிறார்“, என்றார் அவர்.
தெளிந்த நீரோடையான அவருடைய எண்ணத்தில் உறுதியும் காணப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வினைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்க்கவேண்டும் என்றார்.   நிகழ்விற்குப் பின் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியபோது அஸ்ஸலாமு அலைக்கும் என்று அரபியில் பேசத் தொடங்கினார்.  “தாக்குதல் நடத்தியவரின் பெயரை நான் உச்சரிக்க மாட்டேன்” என்று உறுதிபடக் கூறினார். ”இறந்தவர்களைப் பற்றி யோசிக்கவேண்டிய தருணம் இது, கொலையாளியைப் பற்றி அல்ல”, என்றார். அவருடன் மாற்றுக்கருத்து கொண்டவர்கள்கூட அமைதியானார்கள்.  அவருடைய தெளிவிற்காகவும் உறுதிக்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.
நொறுங்கிப்போன நியூசிலாந்து குணமடைய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்மீது கடுமையான தண்டனை பெற்றுத்தரும் வகையில் அவர்மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்கப்படும் என்றும், அவர் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி, இன வெறியர், அவருக்கு வேறு பெயரில்லை என்றும் கூறினார். ராணுவ வகை தானியங்கி மற்றும் உயர் ரக குண்டுகள் அடங்கிய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை நியூசிலாந்தில் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.
அண்மையில் உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் அவர், உலகிலேயே இளம் வயதில் தலைவரான பெண்மணியாவார். 150 ஆண்டு கால நியூசிலாந்தின் வரலாற்றில் குறைந்த வயதில் பிரதமரானவர். 2018இல், பிரதமராக பணியில் இருந்தபோது தாயானவர் என்ற பெருமையைப் பெற்ற இரண்டாவது பெண்மணியாவார். அவருக்கு முன்பாக  1990இல் பாகிஸ்தான் பிரதராக இருந்தபோது பெனாசிர் பூட்டோ குழந்தை பெற்றவர். 
ஐக்கிய நாடுகள் அவையின் கூட்ட அரங்கில் நெல்சன் மண்டேலா அமைதி மாநாட்டிற்குச் சென்றபோது, பிறந்து மூன்று மாதங்களே ஆன, நீவ் என்ற பெயருள்ள, தன் மகளை அழைத்துவந்திருந்தார் ஜெசிந்தா. குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டே மாநாட்டில் பேசினார். அவருடைய கணவருடன் உடன் இருந்தார். அப்போது எங்கு பார்த்தாலும் ஜெசிந்தாமானியா என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. அவர்தான் மனித நேயத்துடனும் உறுதியுடனும் தற்போது நாட்டை நடத்திச் செல்கின்றார்.  முக்காடுடன் உள்ள அவருடைய புகைப்படம் தற்போது உலகளவில் பிரபலமாகி வந்ததோடு, அவருடைய தலைமைப்பண்பையும் வெளிப்படுத்தியது. க்ரைசிஸ் என்ற இதழ் ஜெசிந்தாவைப் பற்றி இவ்வாறு ட்வீட் செய்தது : “கருணை, கண்ணியம், தைரியம்…உண்மையான தலைவர்கள் இன்னும் இருக்கிறார்கள்“.

துணை நின்றவை
  • ஐ.நா.சபை கூட்டத்தில் ஆஜரான மூன்று மாத குழந்தை : அசத்திய நியூசிலாந்து பிரதமர், தினமணி, 25 செப்டம்பர் 2018
  • ‘Real leaders do exist': Jacinda Ardern uses solace and steel to guide a broken nation,  Guardian, 19 March 2019
  • PM Jacinda Ardern Says New Zealand Killer Doesn't Deserve to Be Named, the Internet Agrees, News18.com, 19 March 2019
  • Picture of Grieving New Zealand PM Jacinda Ardern in Hijab After New Zealand Shooting Goes Viral, News18.com, 19 March 2019 New Zealand shooting: The world is praising Jacinda Ardern’s response to terrorist attack  Picture, Independent, 20 March 2019
  • தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை:  நியூஸி பிரதமர் அதிரடி, தினமணி,21 மார்ச் 2019 New Zealand Prime Minister has helped a broken nation, Independent, 23 March 2019
  • An image of hope: how a Christchurch photographer captured the famous Ardern picture, Guardian, 25 March 2019 
  • Forbes, Power Women 2018, #29, Jacindra Ardern, Prime Minister, New Zealand
18 ஜுன் 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

08 June 2019

மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்

30 மே 2019 அன்று தஞ்சாவூர் சரசுவதி மகால் மற்றும் ஆய்வு மையத்தில் தமிழ்த்துறை சார்பாக மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 
இந்நிகழ்விற்கு முதன்மைக்கல்வி அலுவலரும் நூலக நிருவாக அலுவலருமான திருமதி பெ.சாந்தா தலைமையேற்றார். நூலகர் திரு எஸ்.சுதர்ஷன் முன்னிலை வகித்தார். தமிழ்ப்பண்டிதர் திரு மணி.மாறன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வின் நிறைவாக வடமொழிப் பண்டிதர் திரு ஆ.வீரராகவன் நன்றி கூறினார்.
வரவேற்புரையாற்றும் திரு மணி.மாறன். உடன்
திரு ஆ.வீரராகவன், திரு எஸ்.சுதர்ஷன், பா.ஜம்புலிங்கம்  

   


 

இக்கருத்தரங்கில் ஆற்றிய உரையின் பகுதி:
“மொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் என்று கொள்ளும்போது அனைத்துநிலை வாசகர்களுக்கும் சென்றடையும். மொழியாக்கத்தின்போது மிகவும் எளிதாக வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொற்களைத் தெரிவு செய்து பயன்படுத்தவேண்டும். 
மொழியாக்கத்தில் காணப்படுகின்ற சிக்கல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் காண்போம். (சிக்கல்கள் தடித்த எழுத்திலும், அடுத்து அதற்கான தீர்வுகளும் தரப்பட்டுள்ளன)
சொல்லுக்குச்சொல் மொழிபெயர்க்கும்போது தெளிவின்மையையோ, மிகைப்படுத்தலோ அமையும்.
பொருளைப்புரிந்து சொற்றொடர்வாரியாகவோ, பத்திவாரியாகவோ மொழிபெயர்க்கலாம்.
மூல மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் சமமான அளவு திறன் இல்லா நிலையில் மொழிபெயர்ப்பில் தெளிவின்மையைக் காணமுடியாது.
மூல மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் சமமான திறன் இருத்தல் நலம்.
சில சமயங்களில் குறைவான சொற்களைக்கொண்ட சொற்றொடர் முழுமையான பொருளைத் தராத நிலையில்  அமையும்.
இடத்திற்குத் தக்கவாறு சொற்றொடரை மாற்றி மொழியாக்கம் செய்யலாம்.
நீண்ட சொற்றொடர்கள் அமையும்போது மொழிபெயர்ப்பில் குழப்பம் ஏற்படும்.
எளிதில் புரியும் வகையில் சிறிய சொற்றொடர்களாக பிரித்து அமைத்துக்கொள்ளலாம்.
சமூகம் மற்றும் பண்பாடு என்ற சூழலில் தெளிவற்ற சொல் அமையவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ வாய்ப்புள்ளது.
மூல மொழியின் பொருண்மையின் பின்புலத்தை அறிந்துகொள்ளல் இன்றியமையாதது.
கடினமான பொருள் தரும் சொல்லோ, பிற மொழிச்சொல்லோ மூலத்தில் இருப்பது.
மொழியாக்கத்தின்போது பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும்.
மூலக்கட்டுரையின் நோக்கத்தையோ, பின்னணியையோ உள்வாங்கிக்கொள்ள இயலா நிலை.
பல முறை படித்துவிட்டு மொழியாக்கம் செய்யலாம்.
மூலத்தில் குழப்பமோ, தெளிவின்மையோ காணப்படல்.
அதே தலைப்பில் அமைந்துள்ள பிற கட்டுரைகளை ஒப்புநோக்கலாம்.
தடித்த எழுத்து, சாய்ந்த எழுத்து, ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் பயன்பாட்டினை உள்ளடக்கிய செய்திகள் அமைதல்.
இடத்தின் தன்மை அறிந்து உணர்வினை கவனமாக வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
சிக்கல்களுக்கானத் தீர்வுகள் இவ்வாறாக நிலையில் அமைவதற்கு மொழியாக்கம் செய்வோர் அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். நாம் புரிந்துகொண்டதை அப்படியே வாசகர்களுக்கு கடத்துவது மொழியாக்கம் இல்லை.  வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையில் மொழியாக்கம் அமைய வேண்டும். மொழியாக்கத்திற்கு அடிப்படையாக அமைவனவற்றில் வாசிப்பு முக்கியமானது. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை  தொடர்ந்து விடுபாடின்றி படிப்பதன் மூலம் மொழியாக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

நன்றி
வாய்ப்பு தந்த தமிழ்ப்பண்டிதர் திரு மணி.மாறன் மற்றும் தமிழ்த்துறையினர்
கலந்துகொண்ட அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள்
செய்தியினை வெளியிட்ட நாளிதழ்கள்
புகைப்படங்கள் எடுத்து உதவிய என் மூத்த மகன் திரு பாரத்
என் உரையினை தன் தளத்தில் வெளியிட்ட நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் 





01 June 2019

தரங்கம்பாடி மாசிலாநாதர் கோயில்

அண்மையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூருக்குத் தென்கிழக்கில் எட்டு கிமீ தொலைவில் தரங்கம்பாடியிலுள்ள மாசிலாநாதர் கோயிலுக்குச் சென்றோம். கடலுக்கு மிக அருகில் உள்ள கோயில் என்றும், சிறிது சிறிதாக கடல் அரித்துக்கொண்டு வரும் நிலையில் புதிய கோயில் கட்டப்பட்டதாகப் படித்ததன் அடிப்படையிலும் அக்கோயிலுக்குச் செல்லும் ஆவல் எழுந்தது. கோயிலை நெருங்க நெருங்க கடலலைகளின் சத்தம் இனிமையாக காதுகளில் கேட்க ஆரம்பித்தது. 

அப்பர் பெருமான் "அண்ணாமலை யமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாடக்கோயில்......" (6.51.3) என்றும்,  "எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர்..." (6.70.4) என்றும்"...உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்....."  (6.71.4) என்றும்,  சுந்தரர் "ஆரூர் அத்தா ஐயாற்றமுதே அளப்பூர் அம்மானே..." (7.47.4) என்றும் இந்த வைப்புத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.

பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்: "சோழ நாட்டு வைப்புத்தலமான இத்தலம் முன்னர் அளப்பூர் என்றழைக்கப்பட்டது. அளம் என்பது உப்பளத்தைக் குறிக்கும். இக்கோயிலுக்குப் பல உப்பளங்கள் சொந்தமாக இருந்ததால், அளப்பூர் என்றழைக்கப்பட்டது.  தரங்கம்பாடி கடற்கரையில் மே மாதம் முழுவதும் ஓசோ எனப்படுகின்ற சஞ்சீவி பர்வதக்காற்று உடல் நலத்திற்கு மிகவும் உகந்ததாகும். கடல் அலைகள் மோதுவதால் முற்பகுதி அழிந்து, கற்களெல்லாம் கடல் நீரில் விழுந்து கிடக்கின்றன. கடல் அலைகளால் கரைந்துகொண்டிருக்கும் இக்கோயிலைக் காப்பாற்றும் சிவபுண்ணியம் என்று, எவர் மூலம் நிறைவேறுமோ? கோயில் அழிவில் நம் நெஞ்சமும் உருகிக்கரைகிறது."

மேற்கண்ட நூலாசிரியர் தெரிவித்த அந்த ஆசையும், ஏக்கமும் 1 செப்டம்பர் 2013இல் நிறைவேறியுள்ளது. ஆம், இதற்கு அருமையில் புதிய கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு ஆகியுள்ளது. புதிய கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அங்கே கருவறையில் மாசிலாநாதரைக் காணலாம். மூலவரை மாசிலாமணிநாதர் என்றும், மாசிலாமணீஸ்வரர் என்றும்கூட அழைக்கின்றனர். மூலவருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இடது புறத்தில் இறைவி அறம்வளர்த்தநாயகியின் சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பாலமுருகன், அகிலாண்டேஸ்வரி, கஜலட்சுமி, நவக்கிரகம் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.  மூலவரை வணங்கிவிட்டு அங்கிருந்தோரிடம் பழைய கோயிலைப் பற்றி விசாரித்தோம்.







அக்கோயிலின் வழியாகவே பழைய கோயிலுக்குச் செல்லலாம் என்று கூறினர். அதன்படி செல்லும்போது பழைய கோயிலைக் கண்டோம். பழைய கோயிலில் உள்ள இறைவன் சன்னதி கடலை எதிர்கொண்ட வகையில் அமைந்திருந்தது. அக்கோயிலுக்கு மிகவும் நெருக்கமாக கடலலைகள் வந்து செல்வதைக் காணமுடிந்தது.  கோயிலின் முன் பக்கம் பெரும்பாலும் அரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தமிழகத்தில் இந்த அளவிற்கு கடலுக்கு அருகில் வேறு கோயில் இருப்பதாகத் தெரியவில்லை.








கோயிலுக்குச் சென்ற நினைவாக அருகில் சில புகைப்படங்களை எடுத்தோம். அழிந்துகொண்டிருக்கும் கோயிலைப் பார்த்துவிட வேண்டும் என்ற நெடுநாள் கனவு நிறைவேறியது. எம்பெருமானை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். 



நன்றி
24 ஏப்ரல் 2019 பயணத்தில் உடன் வந்ததோடு, குறிப்புகள் எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி

துணை நின்றவை
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
பு.மா.ஜெயசெந்தில்நதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009