26 October 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவெழுகூற்றிருக்கை : திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய திருவெழுகூற்றிருக்கையினை அண்மையில் நிறைவு செய்தேன். அப்பாடலின் சில அடிகளுக்கான பொருளைக் காண்போம். 



ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்,
ஒரு முறை அயனை ஈன்றனை; ஒருமுறை,
இரு சுடர் மீதினில் இயங்கா மும்மதில் -
இலங்கை இரு கால் வளைய, ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல்வாய் வாளியில் 
அட்டனை; ...
எம்பெருமானே! இவ்வுலகைப் படைப்பதற்காக உன் திருநாபியில் ஒப்பற்றதாய்ப் பெரியதான தாமரை மலரின் இதழ்களான ஆசனத்தில் ஒரு தரம் பிரமனைப் படைத்தாய்; உனக்கு உயிராகிய பிராட்டியை மீட்பதற்கு நீ செய்தது; இரண்டு சுடர்களாகிய சந்திர சூரியர்கள் இலங்கையின் மீது சஞ்சரிக்கவும் அஞ்சுகிற ஒரு காலத்தில் மூவகை அரண் வாய்ந்த இலங்கை அழியுமாறு உன்னுடைய ஒப்பற்ற சார்ங்கத்தின் இரண்டு முனைகளை இணைத்து நாண் பூட்டி வளையச் செய்து அம்புகளை எய்தாய். இந்த அம்புகள் இரண்டு எயிறுகள் வாய்ந்தவை; அழலை உமிழ்வன. 

...ஏழ்உலகு எயிற்றினில் கொண்டனை; கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை;  சுடர் விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை;...
வராகப்பெருமானாய் அவதரித்து ஏழு உலகங்களையும் வெள்ளத்தினின்றும் பெயர்த்தெடுத்து பூமிப் பிராட்டியை எயிற்றில் கொண்டு விளங்கினாய். நூல்களில் கூறப்படுகின்ற மாந்தர் உகக்கும் சுவைகளாகிய தித்திப்பு, உவர்ப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, காரம் இவையாகிய பயனுமாய், உயிர்களைக் காப்பதற்கு என்றே திருக்கைகளில் ஒளி விடுகின்ற சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு இவற்றை ஏந்திய நிலையிலேயே இருக்கிறாய்.

...மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை,
வரு புனல் பொன்னி மாமணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த,
கற்போர் புரிசைக் கனக மாளிகை,
நிமிர் கொடி சும்பில் இளம்பிறை துவக்கு,
செல்வம் மல்கு, தென் திருக்குடந்தை,
அந்தணர் ந்திர மொழியுடன் வணங்க,
ஆடு அரவ அமளியில் அறி துயில் அமர்ந்த
பரம! நின் அடியிணைப் பணிவன்,
வரும் இடர் அகல மாற்றோ வினையே.
திருக்குடந்தையில் வளம்; சோலைகளிலே தேன் வெள்ளம் குறைவதில்லை. எங்கும் கொடிக்கால்களும், நீர் நிலங்களும் வாய்ந்துள்ளன. பெருகிவரும் காவிரியாறு எங்கும் இரத்தினங்களைக் கொழிக்கின்றது. வயல்களில் செந்நெல் அடர்ந்து உள்ளது. தோப்புகள் சூழ்ந்துள்ளன. கற்றோர்கள் வாழப்பெறும் மதில்கள் சூழ்ந்த பொன்மயமான மாளிகைகளும் மலிந்துள்ளன. மாளிகையின் மேல் பறக்கும் துகிற்கொடிகள் ஆகாயத்தில் திரியும் இளஞ்சந்திரனை மறைப்பன. இவ்வாறு பலவகைப்பட்ட செல்வம் அடர்ந்த திருக்குடந்தையில் அந்தணர் வேத மந்திரங்களை ஓதி வணங்கி, விரித்தாடும் படங்களையுடடைய ஆதிசேடனாகிய அணையில் யோக நித்திரை செய்யும் பிரமனே! என்னுடைய துன்பங்களை நீ மாற்றுவாய். உன்னுடைய திருவடிகளை வணங்குகின்றேன்.


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: நம்மாழ்வார் அருளிய பெரிய திருவந்தாதி  (2585-2671)

26 அக்டோபர் 2019 காலை மேம்படுத்தப்பட்டது.

19 October 2019

அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி : 10 நவம்பர் 1919 கல்வெட்டு

நாங்கள் பயின்ற கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப்படவுள்ளது. அது தொடர்பாக வரலாற்று ஆவணங்களைத் திரட்ட முயற்சி மேற்கொண்டபோது அப்பள்ளியில் இருந்த 1919ஆம் ஆண்டின் கல்வெட்டினைக் காணமுடிந்தது. நூற்றாண்டு கால கல்வெட்டினைக் கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.

இப்பள்ளி அப்போது நகராட்சி கவுன்சிலராக இருந்த முகமது ஹபிபுல்லா சாகிப் பகதூர் என்பவரால் 10 நவம்பர் 1919இல் திறந்து வைக்கப்பட்டதாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் அந்தக் கல்வெட்டினைக் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

அந்தக் கல்வெட்டினைப் பார்த்து, புகைப்படம் எடுத்துக்கொள்ள தலைமையாசிரியர் திரு வை.சாரதி அவர்களிடம் கேட்டபோது அவர் தொலைபேசிவழியாக அனுமதி தந்ததோடு, திரு இளையராஜா மற்றும் திரு மலைச்சாமி அவர்களை இப்பணிக்காக எங்களுக்கு உதவும்படி பணித்தார். முனைவர் மு.செல்வசேகரன், திரு ஆ.வடிவேலு, திரு செந்தில்நாதன் ஆகியோர் துணையுடன் கல்வெட்டு இருக்கும் கட்டடத்திற்குச் சென்றோம். கல்வெட்டு சற்றே தெளிவின்றி இருந்தது. பின்னர் எழுத்து தெளிவாகத் தெரியும்படி சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்தோம்.  அரிய செய்திகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் முதல் படியாக இந்த கல்வெட்டு பற்றிய செய்தியை அமைந்தது.




 

50 ஆண்டுகளுக்கு மேலுள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் நோக்கும்போது பள்ளியின் தலைமையாசிரியரின் அலுவலக வாயிலின் வலது புறம் இருந்த கல்வெட்டினைக் கண்டோம். அக்கல்வெட்டில் 31.10.1955 அன்று புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டமைக்கான குறிப்பினைக் கண்டோம். 



அதே கட்டடத்தின் மாடியில் திரு. ப.தி.சோ.குமரசாமி செட்டியார் அவர்கள் நினைவு மன்றம் என்ற குறிப்போடு 13.11.1957 நாளிட்ட கல்வெட்டினைக் கண்டோம்.


நூற்றாண்டு காணவுள்ள எங்கள் பள்ளியின் தொடர்பான பிற முக்கிய விவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம். நண்பர்களின் ஒத்துழைப்பு எங்களை மென்மேலும் செயலாற்ற உதவும் என்று நம்புகிறோம். 

கல்வெட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 6 அக்டோபர் 2019இல் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பகிரப்பட்டன. விழாவிற்காக நிர்வாக அனுமதி பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பெற்று  நன்கொடை பெறல், மலர் வெளியிடல், விழா ஏற்பாடு உள்ளிட்ட பல பணிகளைக் குறித்த ஆயத்தப்பணிகள் நடந்துவருவது, முன்னாள் மாணவர் சங்கம் அண்மையில் முறையாகப் பதிவு செய்யப்பட்டது, விழா தொடர்பான சில ஏற்பாடுகளை தம் பொறுப்பில் எடுத்துக்கொள்வதாக சில மாணவர்கள் முன்னெடுத்து வருவது உள்ளிட்ட பல செய்திகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.


 

  
எங்கள் பள்ளியில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் ஒளிப்படத்தைப் பள்ளியின் நண்பர்கள் ஜூன் 2024இல் அனுப்பிவைத்திருந்தனர். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் என்ற வகையில் கல்வெட்டில் என் பெயரும் இடம்பெற்றுள்ளது. அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.



10 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

12 October 2019

ரியலி கிரேட்டா தன்பர்க் : புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019

ரியலி கிரேட்டா தன்பர்க் என்ற தலைப்பில் 
புதிய தலைமுறை பெண் அக்டோபர் 2019 இதழில் (மலர் 3,இதழ் 4, பக்.88-89) வெளியான கட்டுரையினையும், 
அதன் மேம்படுத்தப்பட்ட வடிவினையும் பகிர்வதில் மகிழ்கிறேன், 
திரு சு.வீரமணி, புதிய தலைமுறை பெண் இதழுக்கு நன்றியுடன்

“2078இல் நான் என்னுடைய 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன். அந்த மகிழ்ச்சியான பொழுதில் என் குழந்தைகளோடு இருப்பேன். அவர்கள் உங்களைப் பற்றி என்னிடம் கேட்பார்கள். பருவ நிலையைக் காக்க போதிய நேரம் இருந்தபோதும் நீங்கள் எங்களுக்காக ஏன் எதுவும் செய்யவில்லை என்பார்கள்.  அனைத்திற்கும் மேலாக நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசிப்பதாகக் கூறுகின்றீர்கள். ஆனால் அவர்களின் கண்களுக்கு முன்பாகவே அவர்களுடைய எதிர்காலத்தை முற்றிலும் சுக்குநூறாக்கிவிடுகின்றீர்கள்”. இப்படிப் பேசியவர் ஒரு மாணவி என்றால் அனைவருக்கும் வியப்பாக இருக்கும். 


பார்ப்பதற்கு நம் அண்டைவீட்டுப் பெண்ணைப் போலக் காணப்படுகிறார். தினமும் நாம் பார்த்த முகம் போலத் தெரிகிறது. பள்ளி மாணவியான இவர் நம்மை வித்தியாசமாகப் பார்க்கவைக்கின்றார்.  இதுவரை வரலாறு கண்டிராத, 20.9.2019 முதல் 27.9.2019 வரை ஒருவார காலம் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் 4000 இடங்களில் நடைபெறுகின்ற, இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போராட்டத்திற்கு வித்தாக அமைந்தவர். உலக கவனத்தை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமன்றி முதன்முதலாக பெரியவர்களும் கலந்துகொண்டனர். இந்தியாவிலும் இப்போராட்டம் நடைபெற்றது. நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொண்டார் கிரேட்டா தன்பர்க்.

உலக வெப்பமயமாதலும், பருவ நிலை மாற்றமும் மனித மற்றும் பிற உயிரினங்களின் அழிவிற்கான தொடக்கம் என்பதால் பருவ நிலை காக்கப்படவேண்டும் என்ற அறைகூவல் விடுத்து, இதுதொடர்பாக அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி ஆகஸ்டு 2018இல், தன்னுடைய 15ஆம் வயதில் (பி.3 ஜனவரி 2003) ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒரு சிறிய பதாகையுடன் போராட்டத்தைத் தொடங்கிய கிரேடடா தன்பர்க் அதனைத் தொடர்கிறார்.
சுற்றுச்சூழல் தொடர்பான அப்பிரச்னையை முன்னெடுத்தபோது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளி வகுப்பினைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்.  இதையடுத்து, ‘எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமாக்கினார்.  இதன் மூலம் உலக மக்களின் கவனம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும் சந்தித்து பருவ நிலை தொடர்பான விழிப்புணர்வினைத் தொடர்ந்து மேற்கொள்ள ஆரம்பித்தார். பள்ளி மாணவியின் இச்சாதனையை உலகமே வியந்து நோக்குகின்றது.


ஜனவரி 2019இல், லண்டனிலிருந்து வெளிவருகின்ற கார்டியன் இதழில் கிரேட்டா தன்பர்க் எழுதுகிறார்: "ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பான கால நிலை மாற்றம் தொடர்பான இடை அரசு, நாம் நம் தவறுகளைச் சரிசெய்யாத நிலையில் 12 ஆண்டுகளுக்கும் குறைவான இடைவெளியில் உள்ளோம் என்று கூறுகிறது. அக்காலகட்டத்திற்குள் எதிர்பார்க்கமுடியாத பலவிதமான மாற்றங்கள் சமூகத்தின் அனைத்துநிலைகளிலும் காணப்படும். அதில் குறைந்த அளவு 50 விழுக்காடு கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வும் அடங்கும்."

அதே இதழுக்கு 11 மார்ச் 2019இல் அளித்த பேட்டியில், “நான் சற்று அதிகமாக நினைக்கிறேன். சிலர் அப்படியே விட்டுவிடுவர். எனக்கு வருத்தம் தருவதையோ, சோகம் தருவதையோ அப்படியே விட்டுவிட முடியவில்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் சிறியவளாக இருக்கும்போது எங்களுடைய ஆசிரியர்கள் எங்களிடம் திரைப்படங்களைப் போட்டுக் காண்பிப்பர். அப்போது கடலில் பிளாஸ்டிக் மிதப்பதையோ, பசியோடு இருக்கின்ற போலார் கரடிகளையோ பார்க்கும்போது முழுதும் அழுதுகொண்டேயிருப்பேன். என் நண்பர்களோ படத்தைப் பார்க்கும்போது மட்டுமே வருத்தப்படுவர், படம் முடிந்ததும் மற்றவற்றைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பர். என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அந்தப் படங்கள் அனைத்தும் என் மனதில் ஆழமாகக் பதிந்துவிட்டன.”

முதல் தர நுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் சேவையாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு 20 நிமிடத்துக்குள் முக்கிய கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்ற டெட் மாநாடு ஸ்டாக்ஹோமில் ஒவ்வோராண்டும் நடைபெறும். 24 நவம்பர் 2018இல் நடைபெற்ற அம்மாநாட்டில் பேசும்போது அவர், பருவநிலை மாற்றம் பற்றி முதன்முதலாக தன் எட்டு வயதில் கேள்விப்பட்டதாகவும், அதற்கு முக்கியத்துவம் தராப்படாததற்குக் காரணம் புரியவில்லை என்றும், தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தாவிட்டால் தான் இறந்துகொண்டிருப்பதாக உணர்வதாகவும் கூறினார். 2018வாக்கிலேயே நீங்கள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தன் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் என்னை நோக்கிக் கேட்பர்” என்ற தன்பர்க், உரையின் நிறைவாக  “விதிமுறைகளுடன் விளையாடிக்கொண்டு நாம் உலகை மாற்றமுடியாது. ஏனென்றால் விதிகள் மாற்றப்படவேண்டும்” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான அந்தோனியோ குத்தேரஸ் தன்பர்க்கால் முன்னெடுக்கப்படும் பள்ளிப்போராட்டங்களைப் பற்றிக் கூறும்போது “என் தலைமுறை பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள என் சந்ததியினர் தவறிவிட்டனர். தற்போது இளம் சமுதாயத்தினரால் அது நன்கு உணரப்படுகிறது. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை, அவர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள்”  என்றார்.

அவருடைய முயற்சிக்கு பல நாடுகளும், அரசுகளும் ஆதரவினைத் தர ஆரம்பித்துள்ளன. பலர் அவரைப் பாராட்டுகின்றனர். பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலர் மைக்கேல் கோவ் கூறுகிறார் :  “உன்னை கவனிக்கும்போது நான் பெருமைப்படுகிறேன். அதேசமயம் பொறுப்புணர்வையும், குற்ற உணர்வினையும் அடைகிறேன்.  நான் உன் பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்தவன். பருவநிலை மாற்றத்தை உணரவோ, சுற்றுச்சூழல் சீரழிவினை சரிசெய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.”

ஐக்கிய ராஜ்யத்தின் பருவநிலைச்சட்டம் அறிமுகக் காரணமான தொழிற்கட்சியின் அரசியல்வாதியான இட் மிலிபான்ட் கூறுகிறார்: “நீ எங்களை விழிக்க வைத்துவிட்டாய். நாங்கள் உனக்கு நன்றி கூறுகிறோம். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு கண்ணாடியாக விளங்கினர். நீ நல்ல பாடத்தைக் கற்பித்துவிட்டாய். கூட்டத்திலிருந்து தனியாக நின்று தெளிவுபடுத்திவிட்டாய்.” 



அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவை செப்டம்பர் 2019இல் சந்தித்தபோது ஒபாமா கூறுகிறார்: “நீயும் நானும் இணைந்து குழுவாக செயல்படுவோம்.” மேலும் அவர் “பருவ நிலை பாதுகாப்பு தொடர்பான தாக்கத்தைப் புரிந்துவைத்துள்ள இந்த இளம் தலைமுறையைக் கொண்டு தன்பர்க்கால் முன்னேற்றத்தை உண்டாக்க முடியும். அவர் சரியான மாற்றத்திற்கான போராடுகிறார்” என்கிறார்.  

அவள் வகுப்பிற்குப் போகாமல் இருப்பதை அவளுடைய தந்தையார் விரும்பவில்லை. இருந்தாலும் அவளுடைய நிலைப்பாட்டை அவர் மதிக்கின்றார். “அவள் வீட்டில் இருந்துகொண்டு மகிழ்ச்சியின்றி இருக்கலாம் அல்லது தன் எதிர்ப்பைத் தெரிவித்து மகிழ்ச்சியோடு இருக்கலாம். வீட்டிலுள்ளோர்  இறைச்சி உண்பதை விட்டுவிடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தாள். எங்களுடைய எதிர்காலத்தை அவர்கள் திருடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று அவள் கூறுகிறாள்.”  அவருடைய தாயார், தன்பர்கும் அவளுடைய சகோதரியும் அஸ்பெர்கர் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார்.

நோபல் அமைதிப் பரிசுக்காக தன்பர்க்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பரிசினை அவர் பெறுவாரேயானால் உலகில் மிக இளம் வயதில் அதைப் பெற்ற பெருமையை அடைவார். இதற்கு முன்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தன்னுடைய 17ஆவது வயதில் நோபல் அமைதிப்பரிசைப் பெற்ற பெருமையுடையவராவார்.

தன் 15ஆம் வயதில், புவி வெப்பமயமாதலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்வீடன் பாராளுமன்றத்தின்முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உலகை தன் பக்கம் இழுத்தார். அதுமுதல் அவர் பருவ நிலை ஆர்வலாகக் கருதப்படுகிறார்.

23 ஜனவரி 2019இல் ஸ்விட்சர்லாந்தில் டாவோஸில் அமைந்துள்ள உலகப்பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேராளர்கள் 1500க்கும் மேற்பட்ட தனியார் சொந்த விமானங்களில் வந்தபோது தன்பர்க் 32 மணி நேர ரயில் பயணத்திற்குப் பின் அங்கு வந்தடைந்தார்.
அதுபோலவே 23 செப்டம்பர் 2019இல் நியூயார்க்கிலும், 2-13 டிசம்பர் 2019இல் சான்டியாகோவிலும் நடைபெறவுள்ள பருவநிலை மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக 14 ஆகஸ்டு 2019இல் அமெரிக்காவிற்குப் படகில் புறப்பட்டு சென்றார். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக விமானத்தில் பயணிக்காமல் படகுப்பயணத்தை மேற்கொண்டார். ஆடம்பரம் என்ற நோக்கில் இல்லாது வேகம் என்ற இலக்கினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட படகில் அவரது இரு வார பயணம் சற்று சவாலானதாகவே இருந்தது. பயணத்தின்போது தினமும் தன் ட்விட்டரில் தன் பயண அனுபவங்களைப் பதிந்தார்.  16 ஆகஸ்டு 2019இல் தன் போராட்டத்தை தொடங்கி 52 வாரம் அதாவது ஓராண்டு ஆவதை தன் கடல்பயணத்தின்போது நினைவுகூர்ந்தார்.  பருவநிலை காக்க பள்ளிப்போராட்டம் என்ற பதாகையுடன் தன் புகைப்படத்தை கடலில் பயணித்தபடியே ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அவரது எண்ணம், செயல் என்ற அனைத்தும் பருவ நிலைக் காப்பது என்பதை நோக்கியே செல்கிறது.

பள்ளி மாணவியின் டைரியில் பொதுவாக ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற வகுப்பினைப் பற்றித்தான் காண்போம். எந்த ஆசிரியர் என்ன வகுப்பு எடுக்கிறார் என்பதையே ஒரு மாணவி சிந்திப்பார். 

டைரியில் இடம் இல்லாத அளவிற்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கிரேட்டா எஃபெக்ட் எனப்படும் கிரேட்டா விளைவினை உண்டாக்கி, பயணித்துக்கொண்டேயிருக்கிறார் இந்தப் பள்ளி மாணவி. அவருடைய ஆதங்கத்தை உணர்ந்து அவருக்குக் கைகொடுத்து, நாமும் செயலில் இறங்கி பருவ நிலை காக்க ஒன்றுசேர்வோம்.



இதற்கு முன் தினமணியில் வெளியான கட்டுரை : 
மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்ர்க்

02 October 2019

காந்தி 150 : எங்கள் இல்லத்தில் காந்தி

காந்தியடிகளின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வினிய வேளையில், எங்கள் இல்லத்தில் என்றும் இருக்கும் காந்தியின் புகைப்படமும் அதற்கான பின்புலமாக எங்கள் தாத்தாவும் அமைந்தது நினைவிற்கு வந்தது. 



1960களின் இறுதியில் கும்பகோணம் திருமஞ்சனவீதியில் நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த நேரம்.  கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதர் அக்கிரகாரத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு எங்கள் தாத்தாவைக் காண ஒருவர் வந்திருந்தார். அவரைப் பற்றி விசாரிப்பதற்குள், அவர் எங்கள் வீட்டு வாசலில் நிலைப்படியின்மேல் பொக்கைவாயுடன் சிரித்துக்கொண்டிருந்த மகாத்மா காந்தியின் படத்தைப் பார்த்து வணக்கம் சொன்னார். அந்த புகைப்படத்துடன் நேரில் பேசுவதைப் போல பேசினார். அதற்குள் எங்கள் தாத்தா வந்துவிடவே, இருவரும் வீட்டிற்குள் வரவேற்பறையில் வந்து பேச ஆரம்பித்தனர். எங்கள் தாத்தா அப்போதைய காங்கிரஸ்காரர். எப்போதும் கட்சிக்காரர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். அரசியல்ரீதியாக எங்கள் தாத்தா கும்பேஸ்வரர் மேலவீதியில் குடியிருந்த பி.ஆர்., தெற்கு வீதியில் இருந்த தேரி, பேட்டைத்தெருப்பள்ளி அருகே இருந்த குமரசாமி உள்ளிட்ட பலருடன் தொடர்பு வைத்திருந்தார்.  பலர் அவரைப் பார்க்க வருவர். அவரும் பல பிரமுகர்களைப் பார்க்கச் செல்வார். அந்த வகையில் அவர் வந்திருந்தார் என்பதை பின்னர் அறிந்தோம். எங்கள் வீட்டில் காங்கிரஸ் கொடியுடன் கூடிய கொடிக்கம்பம் இருந்தது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய விழாக்களின்போது எங்கள் தாத்தா எங்கள் வீட்டில் கொடி ஏற்றுவார் .  தொடர்ந்து நண்பர்கள் அழைப்பிற்கேற்ப ஊரின் பல இடங்களில் சென்று கொடி ஏற்றுவார். பின்னர் இனிப்புகளும் சில சமயங்களில் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்களும் வழங்குவார். அவ்வாறான விழாக்களில் காந்தியின் படம் நடுநாயகமாக இருப்பதைப் பார்த்துள்ளேன்.

பொக்கைவாய்ச்சிரிப்பு
காந்தி படத்துடன் பேசிய அவருடைய அன்னியோன்னியமான பேச்சு என்னுள் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. இரு பக்கங்களும் திண்ணைகளைக்கொண்ட எங்கள் வீட்டில் நிலைப்படியின் இரு புறங்களிலும் மாடங்கள் இருக்கும். அந்த மாடங்களுக்கு மேலே சற்று நடுவில் அமைந்திருந்த அந்த படத்தில் இருந்த காந்தியை பின்னர் அடிக்கடி பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு நல்ல ஆரம்பமாக அதனை நினைத்தேன். அந்தச் சிரிப்பானது பிறரைச் சிந்திக்கவைக்கும் சிரிப்பு, செயலாற்றவைக்கும் சிரிப்பு என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.

வரவேற்பறையில் தலைவர்களின் படங்கள்
கும்பகோணத்தில் எங்களது வீட்டில் வாயிலில் நிலைப்படிக்கு மேலாக புன்சிரிப்புடன் காணப்படுகின்ற மகாத்மா காந்தியின் படம் இருக்கும். முதல் நிலைப்படியைக் கடந்து உள்ளே  செல்லும்போது இரண்டாவது நிலைப்படி. அதில் மிகப்பெரிய அளவில் அமர்ந்த நிலையில் கழற்றிய மூக்குக்கண்ணாடியைக் கையில் வைத்தபடி உள்ள பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கும். இரு நிலைப்படிகளுக்கும் இடையேயுள்ள வரவேற்பறையில்  நடுவில் நின்ற நிலையில் மகாத்மா காந்தி, மார்பளவு வரையிலான  நேரு படங்களும், அறையின் வலது புறச்சுவற்றில் இராணுவ உடையுடன்  சுபாஷ் சந்திரபோஸ் படமும், இடது புறச்சுவற்றில் கம்பீரமாக கைகட்டிக்கொண்டிருக்கும் சுவாமி விவேகானந்தர் படமும் காணப்படும். இவற்றில் காமராஜரின் படம் கிட்டத்தட்ட மூன்றடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டதாகும். மேலிருந்து இதனை இறக்க இருவர் தேவைப்படுவர். மற்ற படங்கள் இப்படத்தைவிட சற்றுச் சிறியதாக இரண்டரை அடி உயரத்தில் இருக்கும். வரவேற்பறையை கம்பீரமாக இவை அலங்கரித்தன. இந்த அறையில்தான் தாத்தாவைக் காண வருவோர் அமர்ந்து பல மணி நேரங்கள் விவாதித்துக்கொண்டிருப்பர். தற்போது தஞ்சாவூரில் எங்கள் வீட்டில் உள்ளே நுழையும்போதே காந்தி மற்றும் காமராஜரின் படங்களே உள்ளன. இல்ல நூலகத்தில் விவேகானந்தர்சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்கள் உள்ளன.

கமலா நேரு வாசகசாலை
எங்கள் தாத்தாவும், பிற நண்பர்களும் கூடும் மற்றொரு இடம் கமலா நேரு வாசகசாலை. கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியும், மேல வீதியும் சந்திக்கும் இடத்தில் அந்த வாசகசாலை இருந்தது. வாசகசாலைக்கு நாளிதழ்கள் வர தாமதமானாலோ, அங்கு இதழ்கள் இல்லையென்றாலோ எங்கள் தாத்தா எங்கள் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் நவசக்தி, மற்றும் நாத்திகம் இதழ்களை அங்குகொண்டுபோய் வைத்துவரச் சொல்வார். படிக்கவேண்டிய அன்றைய நாளுக்கான இதழ்கள் வெளியே இருக்கும். படிக்கப்பட்ட இதழ்கள் அங்குள்ள ஒரு மரப்பெட்டியில் வைத்து மூடப்பட்டிருக்கும். அங்கும் காந்தியின் புகைப்படத்தினைப் பார்த்துள்ளேன். இவையனைத்தும் சுமார் 40 வருடங்களுக்கு முன் நடந்தவை. 

சத்திய சோதனை
எங்கள் வீட்டிலும், வாசகசாலையிலும் காந்தியைப் பார்த்ததும்,  வீட்டில் அப்போது பெரியவர்கள், தலைவர்களைப் பற்றி பேசியதும் மனதாரப் பதிந்தது. நாளடைவில் காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலை வாங்கி, அதனை ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். ஒரு வித்தியாசமான ஆன்மாவாகவே அவர் என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். எங்கள் இல்ல நூலகத்தில் சத்திய சோதனை நூல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இடம்பெற்றுள்ளது.





சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டுப் பிரிந்து, தஞ்சை வந்த பின்னர் தாத்தா வைத்திருந்தபடியே படங்களை வைக்க விரும்பினேன். எங்கள் வீட்டில் காமராஜர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர் ஆகியோரின் படங்களை வைத்தேன். என் தாத்தா அவர்களைப் பற்றிக் கூறிய சொற்கள் இன்னும் மனதில் உள்ளன. 



இன்றும் காந்தி
இன்றும் எங்கள் இல்ல நிலைப்படியின் கதவுகளுக்கு மேல் மகாத்மா காந்தி நின்ற நிலையில் உள்ள படமும், அருகில் பெருந்தலைவர் காமராஜர் நின்ற நிலையில் உள்ள படமும் இடம்பெற்றுள்ளன. வளரும் தலைமுறையினருக்கு இத்தலைவர்களைப் பற்றி எடுத்துச் சொல்வது நம் கடமையாகும். அந்த வகையில் முக்கியமான இடத்தைப் பெறுபவர் மகாத்மா காந்தி ஆவார். காலம் கடந்தும் நிற்கும் காந்தியின் கொள்கைகள்.

------------------------------------------------------------------------
பெருந்தலைவர் காமராஜர் தொடர்பான கட்டுரையைப் பற்றி (அப்பச்சி சாமி, சமஸ், தி இந்து, 17 மார்ச் 2016)  நான் எழுதிய கடிதத்தை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி.
------------------------------------------------------------------------
7 செப்டம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.