03 August 2015

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில்

கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் கோயில் என்றும் வலஞ்சுழிநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற, தேவாரப்பாடல் பெற்ற, சிவன் கோயில் வளாகத்தில் வெள்ளை விநாயகர் கோயில் உள்ளது. சிவன் கோயிலின் முதன்மை கோபுரத்தைக் கடந்து உள்ளே போகும்போது கோயிலின் வலப்புறம் பைரவர் சன்னதியும், இடப்புறம் ஜடாதீர்த்தமும் ஜடா தீர்த்த விநாயகர் சன்னதியும் உள்ளதைக் காணமுடியும். தொடர்ந்து பலிபீடம், மூஞ்சுறு, கொடி மரம் உள்ளன. அதற்கடுத்து வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது.  கருவறையில் விநாயகர் உள்ளார். அவர் கடல் நுரையால் ஆனவர் என்று கூறப்படுகிறது. 


அழகான வேலைப்பாடுகளைக் கொண்ட தூண் மண்டபமும் கருவறையும் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. தூண்களின் அமைப்பு வித்தியாசமாகக் காணப்படுகிறது.

 

தூண்களைக் கடந்து உள்ளே போகும்போது கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான விளக்குகள் காணப்படுகின்றன.


புகழ்பெற்ற திருவலஞ்சுழி கருங்கல் பலகணி இங்கே உள்ளது. கோஷ்டங்களில் காணப்படும் கருங்கல்லால் ஆன சன்னல்களும் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன. அக்காலத்தில் கட்டிட வல்லுநர்கள் கோயில்களைக் கட்டும்போது திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, திருவீழிமிழலை வௌவால் நத்தி மண்டபம் ஆகியவை போன்ற பணிகளைத் தவிர்த்து பிற பணிகளை மேற்கொள்ளமுடியும் என்று கூறுவார்களாம். இவ்வாறாக நிபந்தனை விதிக்கும் அளவு மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டு அவை அமைந்துள்ளதை நேரில் கண்டால்தான் உணரமுடியும். கருங்கல்லால் ஆன பலகணி எனப்படுகின்ற சன்னல் வழியாகவோ,  வலது புறம் வழியாகச் சென்று  சன்னதிக்குள்ளிருந்தோ விநாயகரை தரிசிக்கலாம்.
சன்னதி தேர் வடிவில் அமைந்துள்ளது. தேர்ச்சக்கரம் சற்றே புதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வாயிலின் மேலே விதானத்தில் கருங்கல்லால் ஆன வேலைப்பாடு அழகாக உள்ளது. வலப்புறமாகச் சென்றால் கருவறையை அடையலாம். அங்கு விநாயகர் காணப்படுகிறார். இவ்விநாயகரைப் பற்றி பலவாறாக பெருமையாக பேசப்படுகிறது. இந்திரன் அனைத்து  தெய்வங்களையும் வணங்கிவிட்டு, விநாயகரை வணங்க மறந்ததாகவும், அதன் காரணமாக நேரடியாக திருவலஞ்சுழி வந்து அங்குள்ள கடல் நுரையால் ஆன  வெள்ளை விநாயகரை, விநாயகர் சதுர்த்தி தினத்தில் வழிபட்டதாகக் கூறுகின்றனர். மகாவிஷ்ணுவும் மார்கழி மாத சஷ்டி திதியில் இங்கு வெள்ளை விநாயகரை நேரில்  வழிபட்டதாகவும் கூறுகின்றனர்.

சென்ற வழியாகவே வரும் நிலையில் கோஷ்டங்களில் அழகான சிற்பங்களைக் காணமுடியும். 


சுற்றிவரும்போது வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கையைக் காணமுடியும். ஆவுடையார்கோயில் கொடுங்கையை நினைவூட்டுமளவு அக்கொடுங்கை அமைந்துள்ளது.


விநாயகரை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும் என்றும், இதனைச் சுவேத விநாயகர் என்றும் வரலாற்றிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தன்னுடைய தஞ்சாவூர் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் சுவேத விநாயகர் கல்பம் என்று ஒரு நூல் உள்ளதாகவும், இவ்விநாயகர் கோயில் சோழர் காலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். இத்தகு பெருமை மிக்க, கபர்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசிப்போம், வாருங்கள்.
-----------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் கீழ்க்கண்ட பதிவைக் காணவருக.
-----------------------------------------------------------------