03 October 2015

ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு

ஆங்கில விக்கிபீடியாவில் 17.5.2015இல் எழுத ஆரம்பித்து அண்மையில் 100ஆவது பதிவினை நிறைவு செய்துள்ளேன். தமிழ் விக்கிபீடியாவில் 250ஆவது கட்டுரையினை இன்று நிறைவு செய்துள்ளேன். வலைப்பதிவுகளின் உறவே என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். புதுக்கோட்டையில் 11.10.2015இல் நடைபெறவுள்ள வலைப்பதிவர் திருவிழாவிற்கு அன்பான அழைப்பு விடுத்து, பதிவைக் காண அழைக்கிறேன். புதுக்கோட்டையில் அனைவரும் சந்திப்போம்.


ஆங்கில விக்கிபீடியாவில் முதல் கட்டுரை 
17.5.2015 அன்று எழுதி ஆங்கில விக்கிபீடியாவால் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் என்ற தலைப்பிலான எனது முதல் கட்டுரை ஏற்கப்பட்டது. வரைவினை ஏற்றுக்கொண்டு, பின்னர் தொடர்ந்து நானே எழுதலாம் என்றும் வரைவினை எழுதி இசைவு பெற வேண்டிய அவசியமில்லை என்றும் விக்கிபீடியாவில் தெரிவித்தனர். அவர்களால் ஏற்கப்பட்ட அக்கட்டுரை காரணம் சுட்டப்பட்டு நீக்கப்பட்டுவிட்டதாக 12.9.2015இல் தகவல் வந்தது. அனைத்தும் நாளிதழ் செய்திகளே இருந்ததால் அது நீக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். நூறாண்டுகள் கழித்து அவ்விழா நடைபெற்ற நிலையில் அக்கட்டுரைக்கு எந்த நூலையும் சான்றாகத் தர இயலா நிலையில் நான் இருந்தேன். 

ஆங்கில விக்கிபீடியாவில் 2ஆவது கட்டுரை 
ஆங்கில விக்கிபீடியாவில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் 63 கோயில்களும், தென் கரையில் 128 கோயில்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால் பல கோயில்கள் பதியப்படாமல் இருந்தது. அந்நிலையில் விடுபட்ட கோயில்களைப் பற்றிக் குறித்துக் கொண்டு ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தேன்.

வாட்போக்கி ரத்னகிரீஸ்வரர் கோயில்  (2ஆவது கட்டுரை)
முதல் கட்டுரை நீக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டுரை வாட்போக்கி ரத்னகிரீஸ்வரர் கோயில் தொடர்பானதாகும். இக்கட்டுரையை நேரிடையாகப் பதிவு செய்தேன். கட்டுரைக்கான புகைப்படம் கோயில் உலா சென்றபோது என்னால் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாகும். பிற கோயில்களுக்கும் அவ்வாறே செய்துள்ளேன்.

தேவாரப் பாடல் பதிவுடன் திருஈங்கோய்மலை மரகதேஸ்வரர் கோயில் 
இவ்வகையில் பதியப்பட்ட மற்றொரு கட்டுரை திருஈங்கோய்மலை மரகதேஸ்வரர் கோயிலைப் பற்றியதாகும். வேறு சில கட்டுரைகளில் தேவாரப் பாடல் தமிழில் தரப்பட்டதைக் கண்டேன். அதனடிப்படையில் ஆங்கில விக்கிபீடியாவில் தமிழில் தேவாரப் பாடலை இணைத்து மேற்கோளாகத் தந்தேன். நாளடைவில் இவ்வாறாக இருப்பதைத் தவிர்க்கலாம் என சில விக்கிபீடியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கடுத்து எழுதும் கட்டுரைகளில் தேவாரப்பாடலை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.  
புதுக்கோட்டை ஞானாலயா (தமிழ் விக்கிபீடியாவிலும் உள்ளது)
நாளடைவில் கோயில்களுடன் வேறு தலைப்பில் எழுத முயற்சிக்கும்போது புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தைப் பற்றிப் பதிந்தேன். அதற்காக அங்கு சென்று விவரங்களைத் தொகுத்தேன். முதன்முதலில் தமிழ் விக்கிபீடியாவிலும் தொடர்ந்து ஆங்கில விக்கிபீடியாவிலும் கட்டுரை எழுதியது ஞானாலயா நூலகத்தைப் பற்றியதேயாகும். 

2016 மகாமகத்தை முன்னிட்டு ஆங்கில விக்கிபீடியாவில் கும்பகோணத்தில், மகாமகம் தொடர்பான கோயில்களை இணைப்பது பற்றிச் சிந்தித்தேன். அதற்கு முன்பாக மகாமகம் என்ற தலைப்பில் இருந்த கட்டுரையில் 15ஆம் நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரையிலான மகாமகம் வாரியாக விவரங்ளைத் தொகுத்து இணைத்தேன். பின்னர் கும்பகோணத்திலுள்ள இந்துக்கோயில்கள் என்ற தலைப்பில் இருந்த ஒரு பதிவினைக் கண்டேன். அப்பதிவில் கும்பகோணத்திலும், கும்பகோணத்திற்கு அண்மையிலும் உள்ள கோயில்கள் ஒழுங்கமைவு இன்றி கலந்திருந்ததைக் கண்டேன். பின்னர் அதில் கும்பகோணத்திலுள்ள சைவக்கோயில்கள், கும்பகோணத்திலுள்ள வைணவக் கோயில்கள், கும்பகோணத்திலுள்ள பிற கோயில்கள், கும்பகோணம் அருகேயுள்ள கோயில்கள் என்று நான்கு துணைத்தலைப்புகள் இட்டுப் பதிவினை மேம்படுத்தியதோடு அதில் விடுபட்டிருந்த  அபிமுகேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஆறு சிவன் கோயில்களையும்,  சேர்த்தேன். 

மகாமகம் தொடர்புடைய கோயில்களில் ஒன்றான ஏகாம்பரேஸ்வரர் கோயில் பற்றி நான் ஆரம்பித்த கட்டுரை
கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 13.7.2015இல் சென்று வந்த மறுநாள் அவ்விழா தொடர்பாக நான் எடுத்த புகைப்படங்களை முன்னரே இருந்த கட்டுரையில் இணைத்தேன்.

முன்னரே இருந்த கட்டுரையில் கும்பாபிஷேகம் தொடர்பான, நான் எடுத்த, புகைப்படங்கள் இணைப்பு
இதே முறையில் கும்பகோணம் கௌதமேஸ்வரர் கும்பாபிஷேகத்திற்கு 9.9.2015இல் சென்று வந்து, நான் எடுத்த புகைப்படங்களை முன்னர் நான் ஆரம்பித்திருந்த இத்தலைப்பிலான கட்டுரையில் இணைத்தேன்.

நான் ஆரம்பித்த கட்டுரையில் கும்பாபிஷேகம் தொடர்பான, நான் எடுத்த, புகைப்படங்கள் இணைப்பு
ஆங்கில விக்கிபீடியாவில் 100ஆவது கட்டுரை 
இவ்வாறாக ஆங்கில விக்கிபீடியாவில் பதிவுகளை எழுதிக்கொண்டிருந்தபோது கும்பகோணத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகப் பணியாற்றிவரும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பற்றி நினைவிற்கு வரவே அங்கு சென்று நூலகம் பற்றிய விவரங்களைத் தொகுத்து, முதலில் தமிழ் விக்கிபீடியாவிலும், பின்னர் ஆங்கில விக்கிபீடியாவிலும் சேர்த்தேன்.

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் (ஆங்கில விக்கிபீடியாவில் 100ஆவது கட்டுரை), 
தமிழ் விக்கிபீடியாவிலும் உள்ளது


தமிழ் விக்கிபீடியாவில் 250ஆவது கட்டுரை 
ப.தங்கம் எழுதியுள்ள அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை என்ற ஒரு தமிழ் ஓவியரின் பயணக்கதையைக் களமாகக் கொண்ட நூல் பற்றிய பதிவினை தமிழ் விக்கிபீடியாவில் 3.10.2015அன்று 250ஆவது கட்டுரையாகப் பதிவேற்றினேன். 
அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை நூல்  (250ஆவது கட்டுரை)
------------------------------------------------------------
நன்றி
கவிஞர் திரு முத்துநிலவன் அவர்கள் 2014இல் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்த பயிற்சிப்பட்டறை விக்கியில் நான் எழுத ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது என்பதை நினைவுகூற விரும்புகிறேன். அப்பட்டறையில் நானும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் கலந்துகொண்டோம்.  திரு பிரின்சுஎன்ஆர்சர்மா விக்கிபீடியாவைப் பற்றி தந்த அறிமுகம் என்னுள் ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் திரு முரளீதரன் அவர்களும் வலைப்பூக்களைப் பற்றி விளக்கவுரை தந்தனர். அவர்களுக்கும் வலைப்பூவில் எனது எழுத்துக்களுக்கு ஆதரவு தரும் சக வலைப்பதிவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும், தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றி. 
------------------------------------------------------------