புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை எழுதிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992) என்ற நூலில் கும்பகோணத்திலுள்ள கோயில்கள் பட்டியலின் அடிப்படையில் கும்பகோணம் மற்றும் அருகேயுள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்றேன். அப்பதிவில் முத்துப்பிள்ளை மண்டபத்தில் பாடகச்சேரி சுவாமிகள் கோயில் என்ற ஒரு கோயில் இருப்பதற்கான குறிப்பினை முதன்முதலாகக் கண்டேன்.
18 நவம்பர் 2018 அன்று நண்பர் சிற்பக்கலைஞர் ராஜசேகரனுடன் முத்துப்பிள்ளைமண்டபத்தில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை என்ற பெயரோடு இருந்த அவ்விடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முத்துப்பிள்ளை மண்டபம் என்று கூறப்படுகின்ற இவ்விடத்தின் பெயர் முக்திக்குள மண்டபம் என்பதை அங்கு சென்றபின்னர்தான் அறிந்தேன்.
கும்பகோணம் நாகேசுவரர் கோயிலில் திருப்பணி செய்து 1923இல் குடமுழுக்கு செய்துவைத்தவர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் எனப்படுகின்ற பாடகச்சேரி சுவாமிகள். உண்டியல் நன்கொடை மூலமாகவே அப்பணியை செய்துமுடித்ததாகக் கூறுவர். கோயிலின் ராஜ கோபுரத்தில் அவருடைய சுதைச்சிற்பம், கழுத்தில் உண்டியலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளதை இன்றும் காணலாம். (ராஜ கோபுரத்தின் முதல் தளத்தில், நுழைவாயிலக்கு மேலே நடுவில் வெள்ளை ஆடையுடன் உள்ளவர்.)
இக்கூழ்ச்சாலையை பாடகச்சேரி சுவாமிகள் அமைந்த பின்னணியைக் காண்போம். பசிப்பிணியையும், உடற்பிணியையும் போக்கிய சிறந்த யோகியான பாடகச்சேரி சுவாமிகள் 1876இல் கோயம்புத்தூரில் பிறந்தார். தன் 12ஆம் வயதில் கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு 4 கி.மீ. தொலைவில் அமையப்பெற்ற பாடகச்சேரி வந்தார். மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்ட அவரை அருட்பெரும் ஜோதி ராமலிங்கம் ஆட்கொண்டு, உபதேசம் வழங்கினார்.
பைரவரையே வணங்கி வந்த அவர், யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருப்பார். அவருடைய பக்தர்கள் தேடும்போது நாயுடன் அவர்களின் முன் நிற்பார். ஒரே சமயத்தில், 100 தலைவாழை இலைகளில் உணவுகளை இட்டு கண்மூடி நிற்கும்போது 100 நாய்கள் அவற்றை உண்ண வந்துவிடும். பிழைக்க வாய்ப்பில்லாதவர்களையும் விபூதி பூசி காப்பாற்றுவார். கும்பகோணம் கீழ்க்கோட்டம் எனப்படும் நாகேஸ்வரன் கோயிலின் கோபுரக்கட்டுமானப்பணிக்காக தனியாளான அலைந்து திருப்பணியை நிறைவேற்றியவர். அக்கோயிலில் அவருக்கு தனி சன்னதி உள்ளது.
மகாயோகி எரிதாதா சுவாமிகள் அவரை சீடனாக ஏற்றுக் கொண்டார். பாடகச்சேரியிலிருந்து முத்துப்பிள்ளை மண்டபம் வந்து தங்கி யோகமார்க்கத்தில் சென்றார். அங்கு தங்கியிருந்தபோது ஏற்பட்ட பஞ்சம் பட்டினியைப் போக்கவே இந்த கூழ்சாலையைத் தொடங்கினார். மக்களின் பசித்துயர் போக்கும் பணியினை மேற்கொண்டார்.
தற்போது பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் கூழ்சாலையில் எரிதாதா சுவாமிகள் சன்னதி, சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான சபை, சத்திய தரும சாலை, சத்திய வேத வைத்திய சாலை ஆகியவை உள்ளன.
கூழ்சாலையில் வாரந்தோறும் வியாழக்கிழமை குருவார பூஜை, பௌர்ணமி பூஜை, தைப்பூச விழா, மாசி மகம் விழா, ஆடிப்பூரம் குரு பூஜை, விஜய தசமி, பூஜை, சாமண்ணா குரு பூஜை, எரிதாதா சுவாமிகள் குரு பூஜை, திருவாதிரை பூஜை மற்றும் அருள்மிகு நடராஜ சுவாமிகள் அபிஷேக ஆராதனை போன்ற பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
எரிதாதா (எரிசாமி) சன்னதியில் அவருக்கு முன்பாக வலது புறத்தில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளும், இடது புறத்தில் விவேகானந்தரும் உள்ளனர். அவர்களுக்கு எதிராக பைரவரைக் குறிக்கின்ற நாய் சிலைகள், பறவை சிலை உள்ளது.
எரிதாதா சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன.
சத்திய ஞான சபையில் மூன்று தியான அறையும், ஒரு குண்டலி அறையும் உள்ளன. சத்திய ஞான சபையின் அருகே, எரிதாதா சுவாமிகள் சன்னதியின் பின்புறம் எலந்த மரம் உள்ளது.
அதே வளாகத்தில் ஒரு நடராஜர் கோயில் உள்ளது. கோயிலின் கருவறையில் நடராஜப் பெருமான் உள்ளார்.
கூழ்சாலையை அடுத்து மிக அருகில் சித்தி புத்தி விநாயகர் கோயில் உள்ளது. அக்கோயிலில் ராமலிங்க சுவாமிகள் நின்ற கோலத்தில் உள்ளார். கருவறையில் விநாயகர் சித்தி புத்தியுடன் காணப்படுகிறார்.
பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகளைப் பற்றி திரு நல்லி குப்புசாமி செட்டியார் எழுதியுள்ள நூல், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களையும் எடுத்துரைக்கிறது. சுவாமிகளின் குறிப்பேடுகளின் நகல்களையும் நூலாசிரியர் அரிதின்முயன்று திரட்டி நூலில் சேர்த்துள்ளார். நூலாசிரியர் சென்னை, பெங்களூர், கும்பகோணம், பாடகச்சேரி, திருச்சி, செள்ளக்கருக்கி ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று பேட்டிகள் எடுத்துத் தந்துள்ள விதம் பாராட்டும் வகையில் உள்ளது. (பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், 16/2, ஜெகதாம்பாள் தெரு, தி.நகர், சென்னை 600 017, தொலைபேசி 044-2815 1160, விரிவான ஐந்தாம் பதிப்பு, 2014, ரூ.125)
சிற்பக்கலைஞர் திரு இராஜசேகரன்
திரு ஏ.இளங்கோவன், எல்.ஐ.சி.டெவலப்மெண்ட் ஆபீசர், மயிலாடுதுறை, 9443075837 (களப்பணியில் உதவி செய்தததோடு, நூலை அனுப்பி உதவினார்)
துணை நின்றவை :
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ் சாலை, விக்கிபீடியா
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், தினமலர் கோயில்கள்
சித்தர்கள் அறிவோம், பூவுலகில் இது சிவலோகம் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள், இந்து தமிழ் திசை, 1 அக்டோபர்
![]() |
| கூழ் சாலை முன்பாக |
![]() |
| சித்தி புத்தி விநாயகர் கோயிலில் திரு ஏ.இளங்கோவன் உடன் |


















