06 June 2020

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கடிதங்கள்

குடும்பத்திற்காக ஒரு பெண் கஷ்டப்படுகிறாள் என்ற கதையின் விமர்சனத்தைக் கேட்டதும், நான் பார்த்த திரைப்படம் அரங்கேற்றம் (1973). அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இளம் வயதிலேயே குடும்பப்பொறுப்பு என்பதை உணர்த்தி நாங்கள் வளர்க்கப்பட்டதால் இப்படம் என்னை ஈர்த்துவிட்டது என நினைக்கிறேன். பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியில் வந்தபோது அன்னியோன்னியமானவரை விட்டுப்பிரிந்து வருவதைப் போல உணர்ந்தேன்.

கதையின் நாயகியான லலிதாவிற்கு மட்டுமல்ல, முதன்முதலாக நான் பார்த்த பாலசந்தரின் திரைப்படம் என்ற வகையிலும் எனக்கு அரங்கேற்றம்தான். குடும்ப நிலையின் காரணமாக பணிக்குச் சென்று, காலச்சூழலால் தடம்மாறி தன்னையே இழந்த லலிதாவை ஒரு தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ நினைக்க முடிந்ததே தவிர ஒரு கதாபாத்திரமாக நினைக்கமுடியவில்லை, இன்றுவரை. நான் விரும்பிப்பார்த்த, இன்னும் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் முதன்மையானது இத்திரைப்படம். அரங்கேற்றத்தை அடுத்து அவள் ஒரு தொடர்கதையில் தொடங்கி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடைய பெரும்பாலான திரைப்படங்களை "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்று திருவள்ளுவர் தோன்றுவது முதல் இறுதிக்காட்சி வரை பொறுமையாக அமர்ந்து பார்த்து, ரசித்துப் பார்த்தது மறக்க முடியாத அனுபவங்கள்.  





கே.பாலசந்தரின் 90ஆம் பிறந்த நாளில் (9 ஜுலை 2020) அவரைப் பற்றி ஆவணப்பட இயக்குநர் திரு ரவிசுப்பிரமணியன் இயக்கும் ஆவணப்படம் வெளிவரவுள்ள நிலையில், பல்வேறு காலகட்டங்களில் அவர் பட்டங்களையும், விருதுகளையும் பெற்றபோது (மதிப்புறு டாக்டர் பட்டம், அழகப்பா பல்கலைக்கழகம், 2005, மதிப்புறு டாக்டர் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகம், 2007, இந்திய அரசின் தாதாசாஹிப் பால்கே விருது 2011) அவருக்கு நான் எழுதிய கடிதங்களையும், அதற்கு அவர் தந்த மறுமொழிகளையும் பகிர்வதில் மகிழ்கிறேன்.