26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பதிவின் வழியாக கம்பட்ட வராகப்பெருமாள் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் வடக்குவீதி வழியாகச் சென்று கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி வழியாக காவிரியாற்றை நோக்கிச் செல்லும் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது. சக்கரபாணி கோயிலுக்குத் தென்மேற்கே அமைந்துள்ள இக்கோயிலின் அருகே வராகக்குளம் உள்ளது. பல ஆண்டுகளாக மண் மேடாகக் காணப்பட்ட இக்குளம் தற்போது மகாமகத்தை முன்னிட்டு தூர்வாரப்பட்டுவருகிறது. இக்கோயிலுக்கு அருகே கரும்பாயிரம் விநாயகர் கோயில் உள்ளது.கோயிலின் முகப்பில் ஆதிவராகப்பெருமாள் தேவியருடன் காணப்படும் சுதைச்சிற்பம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து வைணவக் கோயில்களில் இக்கோயிலும் இராஜகோபாலஸ்வாமி கோயிலுமே சிறிய கோயில்களாகும். முகப்பைக் கடந்து உள்ளே வரும்போது அழகான கொடிமரம் காணப்படுகிறது. அடுத்து அமைந்துள்ள மண்டபத்தினை அடுத்து கருவறையில் மூலவர் வராகப்பெருமாள் காணப்படுகிறார். வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் இவர் வராகப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார்.
திருச்சுற்றில் சுற்றிவரும்போது அழகான சிறிய விமானத்தினை கருவறையின்மீதாகக் காணமுடியும்.
ஒரு சமயம் ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து கொண்டு பாதாளத்தில் ஒளிந்துகொண்டதாகவும், வானவர்கள் திருமாலிடம் இதுபற்றி முறையிட திருமால் வராக உருவெடுத்து பாதாளத்தில் புகுந்து அவருடன் போரிட்டு ஒரு கொம்பினால் அவனையும் அவனுடைய சுற்றத்தாரையும் அழித்ததாகவும் மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிகொண்டு மேலே வந்து பூமியை முன்போல நிலைபெறச் செய்ததாகவும் கூறுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் நிலையில் பெருமாள் பூமிதேமியை தமது இடது மடியில் வீற்றிருக்கும் நிலையில் காணப்படுகின்றார்.
இக்கோயிலின் நடை காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் பின்னர் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாமகத்திற்கு முன்னரோ மகாமகத்தின்போதோ வாய்ப்பான நாளில் இக்கோயிலுக்குச் செல்வோம். மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் ஐந்து வைணவக் கோயில்களில் இதுவரை மூன்று கோயிலுக்கு சென்று வந்துள்ள நிலையில் தொடர்ந்து ராஜகோபாலஸ்வாமி கோயிலுக்கும், சக்கரபாணி கோயிலுக்கும் விரைவில் செல்வோம்.

--------------------------------------------------------------------------------------------
மகாமகத்தின்போது காவேரி சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக்கோயில்கள்
மகாமகத்தின்போது காவேரி சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக்கோயில்கள்
- சார்ங்கபாணி கோயில்
- சக்கரபாணி கோயில்
- ராமஸ்வாமி கோயில்
- ராஜகோபாலஸ்வாமி கோயில்
- ஆதிவராகப்பெருமாள் கோயில்
--------------------------------------------------------------------------------------------
நன்றி : மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு