திரு கோ.சு.சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக 29 அக்டோபர் 2017 அன்று திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசாமித் தம்பிரான் சுவாமிகளால் அவர்களால் வெளியிடப்பட நூற்றாண்டு விழா மலரின் (தொகுப்பு : சீ.தயாளன், சி.கோடிலிங்கம், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம், 2017) முதல் படியை பெறும் பேற்றினைப் பெற்றேன்.
![]() |
| நன்றி : தினமணி, 30 அக்டோபர் 2017
இம்மலரில் கோ.நடராச செட்டியார் (மூவெழுத்தாலான மூலவர்), சி.கோடிலிங்கம் (நாம் கண்ட வள்ளல்), ருக்குமணி இரத்தினசபாபதி (மறைந்தும் மலர்ந்தான் குழந்தை சாமிநாதன்), குமரகுரு கோமளவல்லி (தர்மமும் தமிழ்க்கடவுளும்), பி.சோமலிங்கம் (அய்யா அவர்களைப் போற்றுவோம்), சீ.தயாளன் (தயாளன் கண்ட தருமராசா), விமலா தயாளன் (பரிவு, பாசம், பண்பு சார்ந்த பல்கலைக்கழகம்), சீனிவாசன் (உள்ளம் குளிர்ந்தேன்), கோ.மாறன் (என் வாழ்விற்கு வழிகாட்டி), சுந்தரேசன் (தடுத்தாட்கொண்டார்), பா.ஜம்புலிங்கம் (மாமனிதரின் வான்புகழ்),கன்னையன் (அறச்சாலையின் வழியே ஒரு தவப்பயணம்), இராமசேஷன் (மணிவிழா நாயகர்), கோ.பார்த்தசாரதி (நான் கண்ட சாமிநாதப் பெருவள்ளல்), எம்.அப்துல் ஹமீது (அவர் ஆசி என்றும் உண்டு), கோவிந்தராசன் (நன்னகர் கண்ட நயனுடைச் செல்வர்), மா.வைத்தியலிங்கம் (ஜி.எஸ்.எஸ்.அண்ணன்), சென்னையில் ஜி.எஸ்.ஸும் நூலகத்தவமும்) ஆகியோரின் கட்டுரைகளும், சாமிநாதன் அமிர்தவல்லி (ஜி.எஸ்.எஸ்.என்கிற மூன்றெழுத்தின் பெருமை), தெய்வத்தமிழ் மன்றம் (அண்ணலே வாழி), பால.இராசு (வள்ளல் பெருந்தகைக்கு நூற்றாண்டு விழா), கோ.பரிதி (ஜி.எஸ்.எஸ்.என்னும் சகாப்தம்), அரு.காந்தி (வழங்குவதை வாழ்வாக்கிக் கொண்ட வள்ளல்), மேகலா (ஓங்கிய ஒளியின் உத்தமர்), குரு. செயலட்சுமி (நாளும் அவரைப் பாடுவோம்) ஆகியோரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. சாமிநாத செட்டியாரின் (1917-1997) வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
இந்நூற்றாண்டு மலரில் நூலகத்துடனான என்னுடைய சுமார் 40 ஆண்டு கால அனுபவம் குறித்து மாமனிதரின் வான்புகழ் என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது. |
மாமனிதரின் வான்புகழ்
என்னுடைய பள்ளிக்காலத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை
வாசித்துக் காட்டும்படிக் கூறுவார் எங்கள் தாத்தா. கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர்
அக்கிரகாரத்தில் இருந்த எங்கள் வீட்டில் நாங்கள் அவர் முன்பு அமர்ந்து
நூலின் சில பத்திகளைப் படிப்போம். அடுத்த நாள் தொடர்வோம். நூற்கட்டு செய்யப்பட்ட அந்தப்
புதினம் ஐந்து தொகுப்புகளாக இருந்தது. படிக்கப் படிக்க பொன்னியின் செல்வன் மீது ஆர்வம்
ஏற்பட்டது. அந்த ஆர்வமே என்னை சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு இட்டுச் சென்றதோடு
அந்நூலகத்தின் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்ளும்
வாய்ப்பினைத் தந்தது.
தொடர்ந்து பேட்டைத்தெருவிலுள்ள அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில்
9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்தபோது (1972-75) சிவகுருநாதன் செந்தமிழ்
நூல் நிலையத்தைப் பற்றி அறிந்தேன். பிறகு ஒரு நாள் தனியாகச் சென்று அந்நூலகம் இருக்கும்
இடத்தை அறிந்து அங்கு செல்ல ஆரம்பித்தேன். முதன்முதலாக அங்கு சென்றபோது ஐயாவைச் சந்தித்தேன்.
பள்ளி மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என் தாத்தாவைப் பற்றியும், வாசிப்பு ஆர்வத்தைப்
பற்றியும் கூறினேன். அவர் நூலகத்தின் நடைமுறையை
எடுத்துக் கூறினார். முதன்முதலாக அங்கு நான் படிக்க ஆரம்பித்தது வரலாற்றுப் புதினங்களே.
தொடர்ந்து பள்ளியில் உடன் படித்த நண்பர்களை அழைத்துச் சென்றேன். பள்ளி விடுமுறை
நாள்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையமே. நாங்கள்
அனைவரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு நூல்களை வாசிக்க ஆரம்பித்தோம். அதிகமான
பக்கங்களை யார் படிக்கின்றார்கள் என்று எங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்வோம். தொடர்ந்து
நாங்கள் படித்த நூல்களைப் பற்றி விவாதிப்போம். ஒரு நூலை வாசித்து முடிக்கும்போது அடுத்து
வாசிக்க வேண்டிய நூல் குறித்து ஐயாவிடம் விவாதிப்போம். தொடர்ந்து அதனைப் படிப்போம்.
நாங்கள் வாசிக்கும் நூல்களைப் பற்றி அறிந்த அவர் எங்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பு ஆர்வத்தைத்
தூண்டிவிட்டார். அடுத்தடுத்து விடுபாடின்றி நாங்கள் பல நூல்களைப் படிக்க அவருடைய
அந்த கவனிப்பு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
கல்லூரிக்காலம்
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக
வகுப்பும் (1975-76), இளங்களை பொருளாதாரமும்(1976-79) படித்தபோதும்
தொடர்ந்து நூலகத்திற்குச் சென்றேன். அக்காலகட்டத்திலும் அவருடைய ஆலோசனைகள் எனக்கு பேருதவியாக
இருந்தது. வரலாற்றுப் புதினங்கள் தவிர இலக்கியம், வரலாறு என்ற நூல்களை அவரிடம்
கேட்டுத் தெரிவு செய்து வாசிக்க ஆரம்பித்தேன். அவர் கூறிய கருத்துகள் என்னுடைய வாசிப்பின்
வேகத்தை அதிகரிக்க உதவின.
பணிக்காலம்
1979இல் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்த பின்னர் பணி நிமித்தமாக சென்னை,
கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். பணிக்காலத்தில் விடுமுறையில்
கும்பகோணம் வரும்போது நூலகத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டேன். முன்பு வந்து வாசித்ததுபோல
அதிக நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நூலகத்திற்கு வரும் வழக்கத்தினை விட்டுவிடக்
கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பணிச் சூழல் காரணமாக பணியில் சேர்ந்த செய்தியை
ஐயாவிடம் தாமதமாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. நூலகத்திற்கு வருவது குறைந்துவிட்டதே
என்று அவரிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டேன். அப்போது அவர், நேரமிருக்கும்போது வரும்படி
அறிவுரை கூறினார்.
ஆய்வுக்காலம்
ஆய்வுக்காலம்
1993இல் பௌத்தம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய முதல்
இங்கு சென்று பல நூல்களைப் படித்துக் குறிப்பு எடுத்துள்ளேன். புதினம் என்ற நிலையிலிருந்து
மாறி ஆய்வு தொடர்பாக நூல்களைப் படிக்க ஆரம்பித்தபோது அவருடன் ஆய்வினைப் பற்றி பல முறை
விவாதித்துள்ளேன். என் ஆய்வு தொடர்பாக நான் படித்தவற்றில் பூர்வாச்சாரியார்கள் அருளிய
ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரப்ரபாவம் (பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை,
1928), தமிழர் மதம் (மறைமலையடிகள், திருமகள் அச்சுக்கூடம், பல்லாவரம், 1941), தென்னிந்திய
சிற்ப வடிவங்கள் (க.நவரத்தினம், சுன்னாகம் திருமகள் அழுத்தகம், யாழ்ப்பாணம்,
1941), புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் (உவேசா, கபீர் அச்சுக்கூடம்,
சென்னை, 1945), பிற்காலச்சோழர் சரித்திரம் (சதாசிவப்பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1951), முதற்குலோத்துங்கசோழன் (சதாசிவப் பண்டாரத்தார், பாரி நிலையம், 1955), பூம்புகார்
(புலவர் ப.திருநாவுக்கரசு, அஸோஸியேஷன் பப்ளிசிங் ஹவுஸ், சென்னை, 1957), தமிழக வரலாறு
(அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை, 1958) உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும்.
பள்ளிக்காலம் தொடங்கி இன்று வரை இந்நூலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதை
நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 1995இலும், 2015இலும் பார்வையாளர்
குறிப்பேட்டில் நூலகத்தைப் பற்றிய எனது கருத்தை பதியும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிய, ஐயாவினால் நன்கு பேணி பாதுகாக்கப்பட்ட
இந்நூலகத்தைப் பற்றி, 2016இல் மகாமகம் மலரில் எழுத வாய்ப்பு கிடைத்தது. அப்போது நூலகத்திற்கு
வந்து குறிப்புகள் எடுத்தபோதுதான் இந்நூலகம் உருவான வரலாற்றை அறிந்தேன். அதனை
என் கட்டுரையில் பதிவு செய்தேன்.
நூலகம்
உருவான வரலாறு
“1947ஆம் ஆண்டில் கும்பேஸ்வரர் கோயிலில் அறங்காவலராகப் பணியாற்றிக்
கொண்டிருக்கும் போது தேர்த்திருவிழா ஏற்பாட்டிற்காக ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார்
தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கேயிருந்த ஞானசம்பந்தம் நூல் நிலையம்
அமைக்கப்பட்டிருக்கும் முறை அவரைக் கவர்ந்துவிட்டது. அப்போது அவருடைய மனதில்
அவருடைய தந்தையின் தந்தை கோபு சிவகுருநாதன் செட்டியார் எம்.ஏ., பி.எல்., பெயரில் நூல்
நிலையம் அமைக்கும் எண்ணம் உருவானது. அவர் பெயரில் சில ஆண்டுகள் கல்லூரியில் பயிலும்
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார். அவ்வாறு பயின்ற பலர் நல்ல நிலையில்
வாழ்வதை அறிந்த அவர் நூல் நிலையம் ஒன்றும் அவர் பெயரில் அமைத்தால் அனைவரும் பயனடைவர்
என்று எண்ணினார். இந்நூலகம் உருவாவதற்கு அடிப்படை இதுவேயாகும்.”
இந்நூலகத்தின் பெருமையை அனைவரும் அறியவேண்டும் என்ற அவாவின் காரணமாக
நூலகத்திற்குச் சென்று நூலகம் பற்றிய செய்திகளைத் திரட்டி தமிழ் விக்கிபீடியாவிலும்,
ஆங்கில விக்கிபீடியாவிலும் பதிவுகள் தொடங்கி உரிய புகைப்படங்களை இணைத்தேன். கும்பகோணத்தில்
அரை நூற்றாண்டிற்கும் மேலாக நகர மக்களின் வாசிப்புத்தேவையைப் பூர்த்தி செய்துவரும்
இந்நூலகத்தினைப் போற்றும் இந்நேரத்தில் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் ஈடுபாட்டையும்,
ஆர்வத்தையும், மனித நேயத்தையும், வாசகர்களோடு அவர் பழகும் பாங்கினையும் நினைவுகூர்கிறேன்.
தமிழைப் போலவே அம்மாமனிதரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
முன்னர் நாம் வாசித்த இந்நூலகம் தொடர்பான பதிவுகள்
சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்
மகாமகம் சிறப்பு மலர் 2016
கும்பகோணத்தில் 57 ஆண்டுகளாக இயங்குகிறது தமிழ் நூல்களுக்காக உருவான சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம், தி இந்து, 22 செப்டம்பர் 2016
Tamil library celebrates centenary of the founder, The New Indian Express, 15 September 2017
தமிழ் விக்கிபீடியாவில் இந்நூலகத்தைப் பற்றி நான் ஆரம்பித்த பதிவு
ஆங்கில விக்கிபீடியாவில் இந்நூலகத்தைப் பற்றி நான் ஆரம்பித்த பதிவு
மகாமகம் சிறப்பு மலர் 2016
கும்பகோணத்தில் 57 ஆண்டுகளாக இயங்குகிறது தமிழ் நூல்களுக்காக உருவான சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம், தி இந்து, 22 செப்டம்பர் 2016
Tamil library celebrates centenary of the founder, The New Indian Express, 15 September 2017
தமிழ் விக்கிபீடியாவில் இந்நூலகத்தைப் பற்றி நான் ஆரம்பித்த பதிவு
ஆங்கில விக்கிபீடியாவில் இந்நூலகத்தைப் பற்றி நான் ஆரம்பித்த பதிவு
6.1.2026இல் மேம்படுத்தப்பட்டது.




















































