29 September 2019

மறைந்த பனியாற்றுக்கு நினைவுச்சின்னம்

ஐஸ்லாந்தில் தடம்தெரியாமல் மறைந்துபோன ஒரு பனியாற்றுக்கு, முதன்முதலாக, ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பனியாற்றின் பெயர் ஓக்ஜோகல்  என்பதாகும். ஐஸ்லாந்தின் நிலப்பரப்பில் 11 விழுக்காடு பனியாறுகள் உள்ளன. ஒவ்வோராண்டும் ஐஸ்லாந்து 11 பில்லியன் டன் ஐஸை இழக்கிறது. 2200வாக்கில் ஐஸ்லாந்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட பனியாறுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.


ஓக்ஜோகல் பனியாறானது, பனியாறு என்ற நிலையை 2014இல் இழக்க ஆரம்பித்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 1890இல் 16 சதுர கிமீ பரப்பளவில் இருந்த பனியாறு 2012இல் 0.7 சதுர கிமீ அளவிற்குச் சுருங்கிவிட்டதாகவும், 2014இல் எவ்வித நகர்ச்சியும் இல்லாத நிலையில் அது உயிருள்ள பனியாறு என்ற தன்மையை இழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பருவ நிலை மாற்றத்தின் விளைவாகவே இப்பனியாறு மறைந்துவிட்டதாகவும், தொடர்ந்து பல பனியாறுகள் இவ்வாறாக மறைந்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேற்கு ஐஸ்லாந்தில் அந்தப் பனியாறு இருந்து மறைந்த இடத்தில் ஒரு செம்புத்தகட்டில்   “எதிர்காலத்திற்கான ஒரு கடிதம்” என்ற தலைப்பில் பின்வரும் சொற்கள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. “அடுத்த 200 ஆண்டுகளில் அனைத்து பனியாறுகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும். என்ன நடந்துகொண்டிருக்கிறது, என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அறிவோம் என்பதை இந்த நினைவுச்சின்னம் உணர்த்துகிறது. நாம் தான் இதைச்செய்தோம் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள்”. கடந்த மே மாதம் பதிவான கார்பன் டை ஆக்சைடின் அளவைக்குறிக்கின்ற “415 ppm CO2” என்ற சொற்களும் அதில் பதியப்பெற்றிருந்தன.
பனியாற்றுக்குப் பிரியாவிடையாக அமைந்த இறுதிச்சடங்கில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தேவையை வலியுறுத்துகின்ற வகையில் கவிதை வாசிப்பு, சிறிது நேர மௌனம், அரசியல் தலைவர்கள் மற்றும் அறிவியலாளர்களின் உரைகள் இடம்பெற்றிருந்தன. ஐஸ்லாந்தின் பிரதமர் கத்ரோன் ஜாகோப்ஸ்டாட்டிர், முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் மேரி ராபின்சன் மற்றும் இந்த நினைவுச்சின்னத் திட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வானது ஐஸ்லாந்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ளோர் அனைவருக்குமே ஒரு தூண்டகோலாக அமையும் என்றும், பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று என்றும் பிரதமர் கூறினார்.  அந்நிகழ்வில் கலந்துகொண்டோரில் பலர் அதிக சோகத்துடன் காணப்பட்டனர்.  “பருவநிலை மாற்றத்தின் விளைவால் பனியாறு மறைந்ததைக் குறிக்க உலகிலேயே முதன்முதலாக வைக்கப்படுகின்ற நினைவுச்சின்னம் இதுவே” என்று டெக்சாஸைச் சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறினார். ஐஸ்லாந்தின் புவியியல் நிபுணரான ஒட்டர் சிகரோசன், 10 வருடங்களுக்கு முன்பே இப்பனியாறு மறைந்துவிட்டது என்றும், ஊடங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு நினைவுப்பொறிப்பாக ஒரு இறப்புச் சான்றிதழைக் கொண்டு வந்ததாகவும் கூறினார். அந்த பனியாற்றில் இருந்த நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியதை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தனர்.

துணை நின்றவை
Iceland Builds First Monument In Memory of Glacier Lost To Climate Change, NDTV, 18 August 2019
Funeral for lost ice: Iceland bids farewell to glacier, abc news, 18 August 2019
Iceland holds funeral for first glacier lost to climate change, Guardian, 19 August 2019