26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா சென்றதைப் பற்றி முந்தைய பதிவில் விவாதித்தோம். அக்கோயில்களில் கட்டடக்கலை நுணுக்கத்தில் சிறப்பு பெற்ற கோயிலான திருவீழிமிழலை வீழிநாதர் கோயிலைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
கட்டடக்கலைஞர்கள் கோயில்கள் கட்டும்போது திருவலஞ்சுழியிலுள்ள பலகணி, ஆவுடையார்கோயிலிலுள்ள கொடுங்கை, திருவீழிமிழலையிலுள்ள வவ்வால் நத்தி மண்டபம் போன்ற பாணியினைத் தவிர பிற அமைப்பில் கட்டுவதாகக் கூறுவார்களாம். அத்தகைய சிறப்பு பெற்ற கோயில்களில் திருவலஞ்சுழியிலுள்ள கோயிலைப் பற்றியும் பலகணியைப் பற்றியும் முன்னர் நாம் பார்த்துவிட்டோம். இப்போது திருவீழிமிழலைக் கோயிலையும், அங்குள்ள வவ்வால் நத்தி மண்டபத்தையும் காண்போம், வாருங்கள்.
தேவார மூவரால் பாடப்பெற்ற பெருமையுடைய இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வீழிநாதர், இறைவி சுந்தரகுசாம்பிகை. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது ராஜ கோபுரம் உள்ளது. ராஜ கோபுரம் வெளியே தெரியாதவாறு நடைபாதைக் கூரை அமைத்துள்ளனர். அதையடுத்து கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அதனைக் கடந்து உள்ளே செல்லும்போது உயர்ந்த தளத்தில் கருவறை உள்ளது. கருவறைக்கு முன்பாக உள்ள முன் மண்டபம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலை நமக்கு நினைவூட்டும். கோயில் விமானத்தை விண்ணிழி விமானம் என்கின்றனர்.
கருவறையில் உள்ள மூலவரை வணங்கும்போது அவருக்குப் பின்புறம் திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும் உள்ளதை காணமுடிந்தது. இவ்வாறாக மூலவருக்குப் பின்புறம் இறைவனையும், இறைவியையும் நல்லூரிலும், வேதாரண்யத்திலும் பார்த்த நினைவு. திருச்சுற்று வழியாக சுற்றிவரும்போது இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்புறம் நந்தியும், பலிபீடமும் உள்ளன.
கருவறையில் உள்ள மூலவரை வணங்கும்போது அவருக்குப் பின்புறம் திருமணக்கோலத்தில் இறைவனும் இறைவியும் உள்ளதை காணமுடிந்தது. இவ்வாறாக மூலவருக்குப் பின்புறம் இறைவனையும், இறைவியையும் நல்லூரிலும், வேதாரண்யத்திலும் பார்த்த நினைவு. திருச்சுற்று வழியாக சுற்றிவரும்போது இடப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்புறம் நந்தியும், பலிபீடமும் உள்ளன.
அம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, (கோயிலுக்கு உள்ளே வரும்போது கோயிலின் இடப்புறத்தில் ராஜ கோபுரத்தின் முன்பாக) மிகவும் புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும்.
இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வவ்வால் நெற்றி அமைப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர். நடுப்பகுதியில் தூண்கள் காணப்படவில்லை. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். வாய்ப்பு கிடைக்கும்போது நம் பெருமையினையும், கட்டடக்கலை நுட்பத்தையும் வரலாற்றுக்கு அறிவிக்கின்ற இந்த மண்டபம் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்வோம்.