23 December 2022

சமர்ப்பணம் : இந்திரா அத்தை

"எப்படியும் வாழலாம்னு இருக்கு. இப்படித்தான் வாழலாம்னு இருக்கு. இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான். வாழ்க்கைல எப்படி பொழைக்கப்போறானோ?" என்று என் அத்தை திருமதி இந்திரா (அப்பாவின் தங்கை) என்னைப்பற்றி அடிக்கடிக் கூறிய வார்த்தைகள் என்னை பள்ளிக்காலம் முதல் பக்குவப்படுத்தியதோடு மன உறுதியையும், நம்பிக்கையையும் தந்துவரும் வார்த்தைகளாகும். என் பெற்றோரும் என்னை வளர்த்த என் தாத்தாவும், ஆத்தாவும் என் மீது அன்பு காட்டியபோதிலும் அத்தை வைத்திருந்த பாசமானது சற்றே அதீதமானது.

    பல வருடங்கள் அத்தை குழந்தையின்றி இருந்ததால் தன் அண்ணனின் குழந்தைகளான எங்கள்மீது இயல்பாகப் பற்று ஏற்பட்டது. குழந்தை வேண்டி வேண்டுதல்களை மேற்கொண்டபோது அவருடன் சக்கரபாணி கோயிலுக்கும், வடக்குத்தெரு நந்தவனத்து மாரியம்மன் கோயிலுக்கும் பல முறை சென்றுள்ளேன். கோயிலுக்குச் செல்வதற்காக என்னை அழைக்க வரும்போது "பெரியவனே...." என்று வாசலிலிருந்து அழைப்பார். அடுத்த சில நொடிகளில் அவருடன் கோயிலுக்குக் கிளம்பிவிடுவேன். கோயிலுக்குச் செல்லும்போதும், பிரகாரத்தைச் சுற்றிவரும்போதும் புத்திமதி கூறுவதும் உண்டு. அவருடைய பிரார்த்தனைக்கு விடை கிடைத்தது. அத்தைக்கு மகள் பிறந்த (1972) பின்னர்கூட என்மீது காட்டிய  அன்பு குறையவில்லை.

    1960களின் நிறைவு முதல் 1970களின் நிறைவு வரை அவர் என்மீது அதிக தாக்கத்தை உண்டாக்கியிருந்தார். கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு அவுன்ஸ் அளவு இங்க் பிடிக்கும் அளவிலான பெரிய இங்க் பேனாவை வாங்கித் தந்தது, எட்டாம் வகுப்புத் தேர்வு ஈ.எஸ்.எல்.சி. தேர்வின்போது ஆங்கில அகர வரிசையான, ஏ முதல் இசட் வரையுள்ள எழுத்துக்களைப் பதிந்த இங்க் கண்ணாடிப் பேனாவை வாங்கித் தந்தது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதும் வீட்டிலுள்ள பலர் நான் கல்லூரியில் சேரக்கூடாது, சேர்ந்தால் கெட்டுவிடுவேன் என்று கூறியபோது எனக்கு பக்கபலமாக இருந்தது, இடைவெளிக் காலத்தில் மிளகாய் மண்டிக்கு வேலைக்குப் போன போது முதன்முதலாக எனக்கு வேஷ்டி எடுத்துத் தந்தது, கல்லூரிக்காலத்தில் தட்டச்சுக் கற்றுக்கொள்ள மாதாமாதம் பணமும், பின்னர் தேர்வுகளுக்குப் பணமும் கட்டியது...இவ்வாறாக சொல்லிக்கொண்டே போகலாம். என் வயதையொத்தவர்களை ஒப்புநோக்கி என்னைப்பற்றிப் பெருமையாகப் பேசும்போது அவருடைய சொற்களைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தேன்.           

    மாமா இறந்தபின்னர் தன் மாமியார் வீட்டிலிருந்து அத்தையும், அத்தை மகளும் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவருடைய பெற்றோர் (என் ஆத்தா, தாத்தா), அண்ணன், அண்ணி (என் அப்பா, அப்பா) அவருக்கு ஆதரவாக இருந்தனர். அத்தையும், அத்தை மகளும் நம்முடனே இருக்கப்போகிறார் என்றதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

    ஆயுள் காப்பீட்டுக்கழகம், வங்கிப்பணிகள் தொடர்பாக ஆங்கிலப்பயன்பாடு தேவை என்று கூறி, சில ஆங்கில வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் கற்றுக்கொடுக்க என்னிடம் கேட்டார். ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் பெரிய கூடத்தில் நாங்கள் எதிரெதிராக அமர்ந்துகொள்வோம். சில முக்கிய ஆங்கிலச்சொற்களை நான் கூறியபோது அவற்றை மிகவும் ஈடுபாட்டோடு கேட்டு எழுதவும், படிக்கவும் பழகினார். நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு, நான் ஆங்கிலம் சொல்லித்தந்ததைப் பெருமையாக நினைத்தேன். 

    சில நாள்களில் தாத்தா இறந்தார். சில உறவினர்களும், நண்பர்களும் அத்தையின் மனதை  மாற்றி, பிறிதொரு ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். மகளுக்காக அம்மாவும் (என் ஆத்தா) உடன் சென்றுவிட்டார். எங்களைவிட்டுச் சென்றது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது.  

    என் பெற்றோரிடம் அவர் கடிதத்தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. நான் அப்போது படித்த என் கல்லூரி முகவரிக்குக் கடிதங்கள் எழுதினார்.  அவருடைய கடிதங்களில் பல அறிவுரைகள் இருந்தன. ஒரு கடிதத்தில், "நான் செத்தபின்னர் எனக்குப் பிறந்த இடத்துக்கோடி போட வேண்டாம். நீ நல்லா படி. உன் படிப்புக்கு ஏதாவது பணம் வேணும்னா எனக்கு எழுது". என்று அவர் எழுதிய வரிகள் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டன. பிறந்த இடத்துக்கோடி என்றால் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் எங்கள் குடும்பத்தின்மீது வெறுப்பு தோன்றுமளவு அவர் மனதை சிலர் மாற்றியதை அறியமுடிந்தது. 

    இதற்கிடையில் என் கல்லூரிப்படிப்பு நிறைவடைந்தது. கல்லூரித்தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னர், அவர் சென்ற ஒரு வருடத்திற்குள் அவர் நினைவாகவே என் தந்தை இயற்கையெய்தினார். இறக்கும் முன்பாக எக்காரணம் கொண்டும் அத்தையைப் பார்க்கப் போய்விடாதீர்கள் என்று எங்களிடம் கூறினார். அத்தையை பாப்பா என்றே எங்கள் அப்பா, தாத்தா, ஆத்தா அனைவரும் அழைப்பர்.

    படிப்பு முடிந்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்குச் சேர காரணமான படிப்புக்கு அடித்தளமிட்ட அவரை நினைத்து, பணியில் சேர்ந்த முதல் விடுமுறையில் வட பழனி முருகன் கோயிலுக்குச் சென்று அத்தையின் பெயரில் அர்ச்சனை செய்தேன். 

    அத்தையைப் பார்க்கவேண்டாம் என்ற அப்பாவின் அறிவுரை, அத்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இரண்டிற்கும் நடுவில் பெற்ற பாசத்திற்கும், வளர்த்த பாசத்திற்கும் இடையில் சுமார் 40 ஆண்டுகளாக சிக்கித் தவித்தேன். ஒரு முறை உறவினரின் மரண நிகழ்வில் சந்தித்தேன். மனம் என்னென்னவோ பேச நினைத்தது. வார்த்தைகள் வெளிவரத் தவித்தன. சில நிமிடங்கள் என்னை மறந்தேன். அவரைப் பற்றியும், அத்தை மகளைப்பற்றியும் நலம் விசாரித்தேன். அதற்குப் பின்னர் அவரைப் பார்க்கவேயில்லை. 2021இல் என் உறவினர் மகள் திருமணத்திற்காகச் சென்னை சென்றபோது, அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததை அறிந்தேன். அப்போது என் மனம் பட்ட பாடு சொல்லி மாளாது. 

    அத்தை மாறக் காரணம் என்ன? அப்பாவிற்குத் தன் தங்கைமீது வெறுப்புவரக் காரணம் என்ன? எந்நிலையிலும் எங்கள் குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தவர் தன் நிலையை மாற்றிக்கொள்ளக் காரணம் என்ன? நாளடைவில் அவர் எங்களை மறந்துவிட்டாரா? நாங்கள் ஏதும் தவறு செய்துவிட்டோமா? என்பன போன்ற விடை காணமுடியாத கேள்விகள் என் மனதை இன்னும் உறுத்துகின்றன. அப்பாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து கடைசி வரை அவரைப் பார்க்காமலேயே இருந்துவிட்டேன். எந்த ஒரு காரியத்தை ஆரம்பித்தாலும் அவர்களை நினைக்கிறேன். அவர் என்னருகில் இருப்பது போன்ற ஓர் உணர்வு இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. என் வாழ்விற்கு அடித்தளமிட்ட  அவரைப் பற்றிய நினைவுகள் என்னை வாழவைக்கும், வாழவைக்கிறது.

    என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வேட்டை 2002இல் புதுதில்லி நேரு டிரஸ்ட் அமைப்பிற்காக ஆங்கிலத்தில் எழுதியபோது அவருக்குச் சமர்ப்பணம் செய்தேன். பல வருடங்களாகப் பார்க்காத அத்தைக்கு சமர்ப்பணமாம் என்று என் மகன்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.

    அண்மையில் வெளியான சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, அலைபேசி 9842647101) என்ற என் நூலினை என் வாழ்வில், ஆய்வில், எழுத்துப்பணியில் துணைநிற்கும் என் மனைவிக்கு சமர்ப்பணம் செய்ய விரும்பினேன். ஆனால் என் மனைவியோ, புதுதில்லி நேரு டிரஸ்ட் திட்டத்தினை அத்தைக்கு முன்னரே சமர்ப்பணம் செய்ததால்  பெற்றவர்களுக்கும், வளர்த்தவர்களுக்கும் நூலை சமர்ப்பிக்கும்படி கூற, அவ்வாறே செய்தேன். அத்தையின் மனதைப் போலவே என் நலனில் அக்கரை செலுத்தும் என் மனைவியின் மனதும் பெரிதுதான். 



    இன்றும் கோயில்களுக்குப் போகும்போது அத்தையுடன் கோயிலுக்குச் சென்ற நாள்கள் நினைவிற்கு வந்துவிடும். அவர் என்னுடன் பேசிக்கொண்டே, புத்திமதி கூறிக்கொண்டே வருவது போலிருக்கும். அந்த நினைவுகள் ஒரு பலத்தைத் தருவதை உணர்வேன். உண்மையான அன்பு என்பது இதுதானோ? 

    தொடர்புடைய பதிவு:

    12 December 2022

    கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம்

    பள்ளிக்காலம் தொடங்கி நாங்கள் படித்த, விளையாண்ட, பொழுதுபோக்கிய இடங்களில் ஒன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நானும் என் நண்பர்களும் இக்கோயிலின் பிரகாரங்களை கிட்டத்தட்ட எங்களின் மற்றொரு வீட்டைப் போல நினைத்தோம். எட்டாம் வகுப்பு படிக்கும்போது இங்கு வர ஆரம்பித்து, பி.யு.சி.வரை தொடர்ந்தோம். நண்பர்கள் ஒவ்வொரு பக்கம் பிரிந்து சென்ற நிலையில் கல்லூரிக்காலத்தில் என் படிப்பு பிரகாரத்தில் தொடர்ந்தது. 

    கும்பேஸ்வரர் கோயிலின் மேலவீதி அருகில் சம்பிரதிவைத்தியநாதன் தெருவில் (தற்போது கே.ஜி.கே.தெரு) எங்கள் வீடு இருந்தது.  என் பள்ளி நண்பர்களின் வீடுகள் பெரும்பாலும் கும்பேஸ்வரர் கோயிலைச்சுற்றி  வடக்கு வீதி (கோவிந்தராஜன், பிச்சை, மாசிலாமணி, அசோகன், லலிதா), மேல வீதி (சாருஹாசன், காளிதாசன்), தெற்கு வீதி (முன்பிருந்த பாவஸார ஷத்திரிய மண்டலியை அடுத்து),  வடம்போக்கி (விட்டல்ராவ், தாரா) ஆகிய தெருக்களிலும், அருகிலுள்ள குட்டியாம்பாளையத்தெரு (ராஜு), சிங்காரம் செட்டித்தெரு (மோகன்,  சுரேஷ்தாஸ், விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், ரேவதி, பிருந்தா, நிர்மலா), பழைய அரண்மனைத்தெரு (செல்வம், நாகராஜன், ராஜு), மதகடித்தெரு (திருமலை), கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி 16 கட்டு (ராஜசேகரன், மதியழகன்), கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி சின்னகாளப்பேட்டை (மோகன், பொன்னையா, ராஜா, ஜெயராஜ்),  சாத்தாரத்தெரு (பாலு, பெரியய்யா. தேசிகாச்சாரி), மூர்த்திச்செட்டித்தெரு (சந்திரசேகர்), மௌனசாமி மடத்துத்தெரு (ஓமலிங்கம்),  வியாசராவ் அக்ரஹாரம் (சந்தானகிருஷ்ணன்) ஆகிய தெருக்களிலும் இருந்தன.


    கோயிலின் இரு பிரகாரங்களிலும், சில சமயங்களில் ராஜகோபுரத்தை அடுத்துள்ள மண்டபத்திலும் அமர்வோம். போட்டி போட்டுக்கொண்டு பாடங்களைப் படித்து எங்களுக்குள் ஒப்பித்துக்கொள்வோம். நாம் படிப்பதைவிட பிறரை படிக்கவைத்து நாம் உள்வாங்கிக்கொண்டால் எளிதில் மனதில் பதிந்துவிடும். அந்த உத்தியையும் பயன்படுத்திக்கொள்வோம். முதலில் எங்களுக்காகவும், பிறகு மற்ற நண்பர்களுக்காகவும் மாறி மாறி படித்துக்கொள்வோம்.


    பெரியவர்களிடம் வாங்கிய திட்டு, ஆசிரியரிடம் வாங்கிய அடி தொடங்கி அனைத்தையும் மனம்விட்டுப் பேசுவோம்.  சுமை குறைந்ததுபோல இருக்கும். அவரவர் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வது, கல்வித்தகுதியை பெருக்கிக்கொள்வது,  பெற்றோருக்கு சுமையாக இருக்காமல் நம் காலில் நிற்பது, படித்தபின்னர் வேலைக்குச் செல்வது அல்லது வியாபாரத்தைத் தொடர்வது என்ற வகையில் ஒவ்வொருவரும் எங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பரிமாறிக்கொள்வோம்.  ஒளிவு மறைவின்றி  அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவோம். 

    நடுப்பகல் கோயிலின் நடை சாத்தும்போது வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுபடியும் மாலை நடை திறக்கும்போது திரும்புவோம். இருட்டும்வரை படித்துக்கொண்டே இருப்போம். தேர்வு நேரங்களில் பெரும்பாலும் இங்குதான் இருப்போம். 

    பள்ளிப்படிப்பு முடிந்ததும் சிலரே கல்லூரிப்படிப்பினைத் தொடரும் நிலை அமைந்தது. அடுத்தடுத்து பலர் வியாபாரத்தில்  ஈடுபட, என்னைப் போன்ற சிலர் வெளியூரில் பணியில் சேர்ந்தோம். வாய்ப்பு கிடைக்கும்போது அந்நாள்களை நினைவுகூர்வோம். எங்கள் வாழ்விற்கு அடித்தளமிட்ட வகையிலும், எங்களை நெறிப்படுத்திய வகையிலும் இக்கோயில் எங்கள் மனதில் பதிந்துவிட்டது.

    அண்மையில் கும்பகோணம் சென்றபோது, பல வருடங்கள் கழித்து அந்தப் பிரகாரங்களைச் சுற்றிவந்தேன். பழைய பேச்சுகள், உரையாடல்கள், வாசிப்புகள்  மனதில் வந்துசென்றன. ஒவ்வொரு இடத்திலும் சிறிது நேரம் தனியாக, அமைதியாக அமர்ந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அப்போது யாரோ என்னை "டேய்....ஜம்பு" என்றழைப்பதைப் போல இருந்தது. திரும்பிப்பார்த்தேன். ஒருவருமில்லை. அது என் நினைவே என்று சுதாரித்து, தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். 

    அன்றுமுதல் இன்றுவரை கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் தரிசிக்கும் பாக்கியம் தொடர்கிறது. எல்லாம் அவன் அருள்.  


    ஒளிப்படங்கள் : ஜுலை 2022இல் கும்பகோணம் சென்றபோது எடுக்கப்பட்டவை. (வெளிப்பிரகாரம், முன்மண்டபம்)  

    13 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

    18 November 2022

    சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு : நிகரிலி சோழன் விருது

    சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், தென்னக பண்பாட்டு ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பாக 3 ஆகஸ்டு 2022ஆம் நாள் ஆடிப்பெருக்கன்று மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூடிய 1037ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. வரலாற்றுத்தேடல் குழுவின் தலைவர் திரு உதயசங்கர் தலைமை தாங்க,  தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் கட்டடக்கலைத்துறைத் தலைவரும் தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தலைவருமான முனைவர் கோ.தெய்வநாயகம்  திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சண்முக செல்வகணபதி, திரு கயிலைமாமணி செ.இராமநாதன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் த.ரமேஷ், இந்து அறநிலையத்துறையின் முன்னாள் செயல் அலுவலர் து.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதே மேடையில் நானும் சிற்றுரையாற்றினேன். 



    நிகழ்விற்குப் பின் பெருவுடையாருக்கும், ராஜராஜனுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்த நிகழ்வான மரபு நடையின்போது பெரிய கோயிலின் சிறப்புகளையும் கல்வெட்டுச் செய்திகளையும் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் தெளிவாக எடுத்துரைத்தனர்.





    மாலை தஞ்சை நட்ராஜ் நாட்யாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம், வீணை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழுவின் பொருளாளர் திரு ஆண்டவர் கனி நன்றி கூற விழா இனிதே நிறைவேறியது.









    இவ்விழாவில் நிகரிலி சோழன் விருது வரலாற்று அறிஞர்கள், வளரும் ஆய்வாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டது. நானும் இவ்விருதினைப் பெற்றேன். விருதினை எனக்கு வழங்கிய குழுவினருக்கு என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் காலை முதல் இரவு வரை விழாவினை சிறப்பாக நடத்தினர்.  அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ஒளிப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு

    14 செப்டம்பர் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

    09 November 2022

    தகைசால் தமிழர்



    முகநூலில் என் பெயரை கும்பகோணம் ஜம்புலிங்கம் என்று மாற்றியமைக்கு தமிழ்நாடு புலவர் பேரவையின் தலைவர் திரு வை.வேதரெத்தினம் அவர்கள் வாழ்த்து... நன்றி ஐயா....

    தகைசால் தமிழர் !

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 1959 –ஆம் ஆண்டு பிறந்தவர் திரு.ஜம்புலிங்கம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி 30-04-2017 அன்று ஓய்வு பெற்றவர் !
    பணியில் இருந்து கொண்டே படித்து மதுரை, காமராசர் பல்கலைக் கழகத்தில் 1995- ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 1999 – ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றவர் !
    தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சோழநாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் போன்ற தனது வலைப்பூக்களில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையன்றி, தமிழ்ப் பொழில், தினமணி போன்ற இதழ்களிலும், விக்கிபீடியா மின்ம ஊடகத்திலும் ஆயிரத்துக்கும் மிகையாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் !
    அருள் நெறி ஆசான், பாரதி பணிச் செல்வர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ள இவர் Dr.B.JAMBULINGAM என்ற பெயரில் முகநூல் தொடக்கி இயக்கி வந்தார் !
    “தமிழ்நாடு புலவர் பேரவை” முன்னெடுத்து வரும் ”தமிழுக்கு மாறுவோம்” என்னும் இயக்கத்தினால் ஈர்க்கப்பெற்ற இவர் தனது முகநூல் கணக்கினை “கும்பகோணம் ஜம்புலிங்கம்” என்ற பெயரில் தமிழுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார் !
    பணிவோய்வுக்குப் பின் தஞ்சை, கீழவாசலில் வாழ்ந்து வரும் இந்தத் தகைசால் தமிழரை வளமோடு, நலமோடு வாழ்வாங்கு வாழ்கவென உளமாற வாழ்த்துவோம் !
    வாழிய செந்தமிழ்ச் செல்வரே ! வாழிய நீவிர் வளமோடு, நலமோடு, பொலிவோடு, புகழோடு நீடு வாழ்க !
    -----------------------------------------------
    அன்புடன்,
    வை.வேதரெத்தினம்,
    தலைவர்,
    தமிழ்நாடு புலவர் பேரவை,
    [திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 23]
    {09-11-2022}
    ---------------------------------------------


    01 November 2022

    சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்

    சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும் என்னும் நூல் எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதியைப் பற்றிய அறிமுகம், நேர்காணல், கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிற்பக்கலையைப் பற்றிய அவருடைய கருத்துகளைக் காண்போம். 

    "பெரும்பாலும் என்னுடைய படைப்புகளில் என் தாய்நாட்டு மணம் கமழ வேண்டும், இந்தியக் கலை கலாச்சாரத்தை எல்லா நாட்டவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே செய்யவே ஆசைப்படுகிறேன், செய்தும் வருகிறேன். எனது வளர்கலை சிற்பத்தை ஒரு வெளிநாட்டவர், ஒரு கலைப்பிரியர் வாங்கிச்செல்லும்போது அந்தச் சிற்பத்தில் உள்ள இதிகாச புராண வழிகளை இந்திய மரபு வந்த இதன் நிகழ்ச்சி, கதை, அதன் அடிப்படையில் இருக்கும் அந்த சிற்பம் செல்லும் இடம் எல்லாம் இந்திய மணம் கமழும் என்பது அய்யமில்லை...." (பக்கம் 13)

    "இந்தியாவில் என்ன இல்லை? என்று கூறமுடியும். அயல்நாடுகளில் உள்ள கியூபிசம் முப்பரிமாணம் இயற்கை செயற்கை மற்றும் பல இசங்கள் இங்கு இந்தியாவில் இல்லையா? அதைவிட அதிகமாக இருக்கிறது. இதைக்கூர்ந்து ஆராய்ச்சிகள் செய்து வெளிக்கொண்டுவந்து புதிய வளர்கலை சிற்பங்களாக செய்ய முயற்சிக்கிறேன்...." (ப.15)

    "கலை ஓவியங்களும், சிற்பங்களும் நாம் வாதிப்பதற்காக செய்யப்படவில்லை. கலைப்பொருளை உருவாக்கும் கலைஞனின் முயற்சி அது ரசிக்கப்படவேண்டும் என்பதே. ஒவ்வொரு கலைஞனும் தன் மன திருப்திக்காக கலைப்பொருள்களை உருவாக்கினாலும், அவற்றை ரசிக்கும் ரசிகனால்தான் முழு திருப்தி அடைகிறான்...." (ப.29)

    "ஒரு தட்டையான தகடு என்கிற ஒரு பரிமாணத்தை வைத்து முப்பரிமாணத்துல சிற்பமாகக் கொண்டு வந்துகாட்டினது நான் ஒருவன்தான் 1964இல். அதற்கு அப்புறம்தான் என் சக நண்பர்கள் எல்லாம் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள்...." (ப.44)

    "இங்கிருக்கிற நடராஜர் சிலை லண்டனுக்குப் போனா அது தமிழ்நாட்டுச் சிற்பம் என்று சொல்லுகிறான். ஆனால் லண்டனிலிருந்தோ, நியூயார்க்கிலிருந்தோ வீனஸ் சிலையைக் கொண்டு வந்தால் இங்கிருக்கு யாருக்கும் தெரியாது. அது யாராவது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். படித்தவர்கள் சொன்னால்தான் தெரியும்...." (ப.47)

    "நவீன படைப்புகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் எனது தந்தையாரிடம் மரவுழி சிற்ப சாஸ்திரங்களை இலக்கண சுத்தமாகக் கற்றவன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் கிறுக்கனாகத் தெரியலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை மரபின் அம்சம் மாறாமல் புதுமை நிகழ்த்துபவனாகவே என்னை நான் உணருகிறேன்....." (ப.74)

    "நான் காலத்திற்கேற்ப சிந்தித்தேன். செப்புக்குடங்களின்மீது செய்யப்படும் நகாசு வேலையை மாற்றியதைத்தான் எனது முதல் படைப்பு என்று சொல்லமுடியும்......நடராஜர் சிலையை 'ப்ரேக்' செய்தேன். இதுபோன்ற துணிச்சலான படைப்புகளில் எனக்கான தனித்தன்மையை எடுத்துக்கொண்டேன்....தெள்ளத் தெளிவாக சிற்ப மரபுகளைக் கற்றுத் தேர்ந்த பிறகே உடலில்லாத கை, கால்களில்லாத புதிய படைப்புருவங்களை கற்பனை செய்கிறேன். என்னுடைய சிற்பங்கள் ராகம் தொலைத்த பாடல்கள் போலத் தெரியலாம். ஆனால் அதன் உயிரில் சிற்ப மரபுகள் படிந்திருக்கின்றன....." (ப.86). 

    நூல் : சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்
    விலை ரூ.600
    ஆசிரியர் : எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதி
    பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, தொலைபேசி : 044-25361039
    பதிப்பாண்டு: முதல் பதிப்பு, செப்டம்பர் 2019




    சிற்பகலாரத்னம் கலைச்செம்மல் திரு வித்யா சங்கர் ஸ்தபதி (முன்னாள் முதல்வர். அரசு கவின்கலைக் கல்லூரி. கும்பகோணம்) அவர்களை நானும், அவரது மாணவர் மற்றும் என் நண்பரான சிற்பக்கலைஞர் திரு ராஜசேகரும் கும்பகோணத்தில் 9 செப்டம்பர் 2022இல் அவருடைய இல்லத்தில் சந்தித்த இனிய தருணங்கள்.

    28 October 2022

    ஓவியர் தங்கம்

    புன்னகையுடன்கூடிய முகம், அனைவரையும் வசீகரிக்கும் பேச்சு, எப்போதும் நேர்மறைச்சிந்தனை, அனைவரிடமும் பழகும் பாங்கு, ஓர் முன்னுதாரண அரிய மனிதர் என்ற வகையில் எங்கள் அனைவரையும் ஈர்த்தவர். ஓவியத்துறையில் சாதனைகள் புரிந்தவர். இவரைப் போல ஓர் அரிய மனிதரைக் காணல் அரிது. அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர். எங்கள் குடும்ப நண்பர் திரு தங்கம் அண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    கையால் அவர் ஓவியமாக வரைந்த கல்கியின் பொன்னியின் செல்வன் 10 தொகுதிகளும் அவருடைய பெயரை என்றும் சொல்லிக்கொண்டிருக்கும்.

    பிறந்த ஊர், வளர்ந்த ஊர், சுற்றம், நட்பு, பணியாற்றிய இடங்கள் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நாம் நம்மை மறந்துவிடுவோம். அந்தந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச்சென்றுவிடுவார். என் தந்தைக்கும் மிக நெருக்கமானவர். நாங்கள் உறவினர் என்று கூறுவார். என் தந்தை இறந்தபின்னர் பல வருடங்கள் கழித்து உறவினர் திருமணத்தில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது "உன் அப்பாவைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. நானும் உன் அப்பாவும் கும்பகோணத்தில் ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்கச் செல்வோம்." என்று நினைவுகூர்ந்தார்.

    சந்திக்கச் செல்லும்போதெல்லாம் குடும்பத்தினரைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் அதிகம் பேசுவார். கும்பகோணம் தெற்கு வீதியில் அவர் குடியிருந்த இல்லத்தில் தொடங்கி பல இடங்களில் நடந்த நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிடுவார். பணியாற்றிய நிறுவனங்களை நன்றியோடு நினைவுகூர்வார்.

    இத்தகு மாமனிதர் நம் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் வாழ்வார். அவருடைய சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

    ............

    கண்ணீர் அஞ்சலி
    திருமதி. R. சந்திரோதயம் தங்கம், ஓவிய ஆசிரியை (ஓய்வு) GCHS, அவர்களின் கணவரும், திருமதி. பொன்னியின் செல்வி, உதவி பேராசிரியர், குந்தவை நாச்சியார் கல்லூரி மற்றும் Dr. T. ராஜேந்திரன், USA., அவர்களின் தந்தையுமாகிய.
    திரு. ப. தங்கம், ஆர்டிஸ்ட் & போட்டோகிராபர், நோய் குறியியல் துறை (ஓய்வு), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அவர்கள் 27.10.2022 வியாழக்கிழமை இரவு 11:00 மணி அளவில் இயற்கை எய்தினார்கள்.

    அன்னாரது இறுதி ஊர்வலம், 29.10.2022, சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு எண்.14, 6 வது, மெயின் ரோடு, ஞானம் நகர், தஞ்சாவூர் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    மீளாத்துயறுடன்,
    குடும்பத்தினர் & உறவினர்கள்













    ஒளிப்படம் : திரு கரந்தை ஜெயக்குமார்

    விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றி நான் ஆரம்பித்த பக்கம்

    ............
    ஓவியர் தங்கம் அவர்களின் மனைவி திருமதி சந்திரோதயம் நேற்று (11 அக்டோபர் 2023) மதியம் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். (அவருடைய குடும்பத்தார் அனுப்பிய செய்தி). 


    12 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

    18 October 2022

    ஆத்தாவின் பாசம்

    1970களின் ஆரம்பத்தில், நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டில் தீபாவளிக்காக எங்கள் ஆத்தா (அப்பாவின் அம்மா) பலகாரம் செய்த நாட்களை என்றும் மறக்கமுடியாது. அருகில் நாங்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். ஏதாவது கதையைச் சொல்லிக்கொண்டோ, புத்திமதிகள் கூறிக்கொண்டோ வேலையைப் பார்ப்பார்கள். "பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும், நல்லா படிக்கணும்,  உங்களுக்குள்ள அடிச்சுக்கக்கூடாது, நல்ல பழக்கவழக்கம் கத்துக்கணும்" என்ற வகையில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் பேச்சிற்கு நாங்கள் மறுப்பேதும் கூறமாட்டோம்.  "உம்" போட்டுக்கொண்டே சாதா முறுக்கு, முள் முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, கெட்டி உருண்டை (பொருள்விளங்கா உருண்டை) போன்றவற்றை அவர்கள் செய்வதைப் பார்ப்போம். எங்களையும் அறியாமல் அவர்கள் கூறிய புத்திமதிகள் மனதைப் பக்குவப்படுத்தவும், பண்படுத்தவும் பெரிதும் உதவியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 

    முறுக்கினை பெரிய பித்தளைக்குவளையிலும், பித்தளைப் பானையிலும் அழகாக அடுக்கிவைப்பார்கள். பிற பலகாரங்களையும் அவ்வாறே வைப்பார்கள். சிலவற்றை சாமி படத்தின்முன்பாக வைப்பார்கள். தீபாவளிக்கு முன்பாகவே, அதனை நாங்கள் ருசிக்க ஆரம்பித்துவிடுவோம். எண்ணெய், மாவு, நெய் என்பதையெல்லாம் கடந்து மனதால் வெளிப்படுத்த முடியாத ஒரு ருசி அதில் இருக்கும். ஆத்தாவின் பாசத்தைக் கொண்டு செய்யப்பட்டதல்லவா? தீபாவளியின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கொண்டுபோய் கொடுப்போம். 

    ஆத்தாவிற்குப் பிறகு அவரது மருமகள் (எங்கள் அம்மா) ஆத்தா செய்ததைப் போலவே அதே பேச்சு, உரையாடல்களுடன் தீபாவளி பலகாரம் செய்தார்கள்.  எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். சற்று வளர்ந்துவிட்ட நிலையில் பேச்சுகளில் எங்களுக்குள் நிதானம் இருப்பதை உணரமுடிந்தது. ஆத்தா கூறிய அளவிற்கு புத்திமதி இல்லாவிட்டாலும், பரஸ்பர உரையாடல் இருக்கும். முறுக்கு மற்றும் உருண்டையை அடுக்கும்போது வெளி சுற்றிலிருந்து உள்ளே வரும்படியாக, எடுக்கும்போது உடையாமல் இருக்கும் வகையில் அடுக்குவார்கள். ஆத்தா செய்தபோது பலகாரத்தில் இருந்த அதே ருசியை அதனைக் கண்டேன்.  அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கும், நண்பர்களுக்கும் பலகாரத்தைத் தருவோம்.

    திருமணத்திற்குப் பின் என் மனைவி, தன் மாமியார் செய்ததைப் போலவே தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பித்தார். உருண்டை செய்வதை மாமியாரிடம் கற்றுக்கொண்டதாகப் பெருமையோடு கூறுவார்.  

    இந்தத் தீபாவளிக்காக பலகாரங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் ஆத்தாவிற்கு நாங்கள் உதவியது, ஆத்தா சொன்ன புத்திமதி, பாத்திரங்களில் அடுக்கியது அனைத்தும் நினைவிற்கு வந்தன. முதலில் சாதா முருக்கையும், முள் முருக்கையும்,  காசிப்பானையிலும், பயத்தம்பருப்பு உருண்டையை மற்றொரு பாத்திரத்திலும் அடுக்கினேன். சில முறுக்குகளையும், உருண்டைகளையும் சாமி படத்தின்முன் வைத்துவிட்டு, ஒவ்வொன்றையும் ருசி பார்க்க ஆரம்பித்தேன். அதில் எங்கள் ஆத்தா வைத்தபோது இருந்த ருசியையே உணர்ந்தேன். அதனை என் மனைவியிடம் பகிர்ந்தபோது என் கண்ணில் லேசாக கண்ணீர்த்துளி. என் ஆத்தாவின் அருகில் இருப்பதைப் போல இருந்தது. ஆத்தாவின் பாசமும், வாசமும் அருகில் இருப்பதைக் கண்டேன். நம் முன்னோர்கள் நமக்கு இட்டுச்சென்றது  இந்த நல்ல பழக்கங்களும், பாசமும், பண்பாடும்தான். அந்நாள்கள் சில நொடியில் வந்தன. சிறிது நேரம் வானத்தில் பறப்பதுபோல இருந்தது. சுய நினைவிற்கு வர சற்றே நேரமானது. 

    15 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

    18 September 2022

    கோயில் உலா : திருவஞ்சைக்களம் : 5 ஆகஸ்டு 2022

    5 ஆகஸ்டு 2022 கோயில் உலாவின்போது முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் கேரளாவில் உள்ள ஒரே தேவாரப் பாடல் பெற்ற தலமான, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, திருவஞ்சைக்களம் சென்றோம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமான் நாயனார் ஆகியோரின் குரு பூஜை நாளன்று சென்ற வகையில் எங்களின் இப்பயணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

    கோயிலுக்கு முன் வீதியின் நடுவில் உள்ள மேடையை யானை வந்த மேடை என்று கூறுகின்றனர். கோயிலின் முதன்மை வாயில் மேற்கு நோக்கியதாக இருந்தபோதிலும், மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. கேரள முறைப்படி இத்தலத்திலும் வெடி வெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளதாகக் கூறினர்.

    சுந்தரர் பாடல் பெற்ற இத்தலத்தின் மூலவர் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். உமையம்மை என்றழைக்கப்படும் இறைவிக்குத் தனிச் சன்னதி கிடையாது. மூலவர் வழக்கமாக தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படுவதைப் போலன்றி சற்று வித்தியாசமாக இருப்பதைக் காணமுடிந்தது. கோயில் அமைப்பும் கேரள பாணியில் உள்ளது. 

    சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளில் சுந்தரருக்கும் சேரமானுக்கும் சிறப்புப் பூஜை செய்வதைக் காணமுடிந்தது. அந்நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி பூஜை செய்யப்படுகிறது. திருச்சுற்றில் உள்ள சுந்தரர், சேரமானின் திருமேனிகளைக் கொண்ட சன்னதியில் உள்ளே நுழைய முடியாத அளவிற்குக் கூட்டம் காணப்பட்டது.  இச்சன்னதி கோயிலில் காணப்பட்ட பிற சன்னதிகளைப் போலன்றி சுற்று மண்டபத்தில் அமைந்திருந்தது.








    கோயில் வளாகம் முழுவதும் சைவ அன்பர்கள் தேவாரம் ஓதுதல் ஆங்காங்கே தனியாகவும், குழுவாகவும் ஈடுபட்டிருந்தனர். நாதஸ்வர இசை உள்ளிட்ட இசை காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. கோயில் வளாகத்தில் சொற்பொழிவு நடைபெற்றுக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. வரிசையாகச் சென்று கருவறையில் இறைவனைப் பார்த்துவிட்டுத் திரும்ப சற்றே சிரமப்பட்டோம். இறைவனைக் காணவேண்டும் என்ற ஆவல் பக்தர்களிடம் இருப்பதைக் காணமுடிந்தது.

    திருவஞ்சிக்குளம் செல்வதற்கு முன்பாக திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.   இக்கோயில் வடக்கு பார்த்த நிலையில் உள்ளது. வடக்கு நோக்கிய கருவறையில் பகவதி எட்டு கரங்களுடன் இருந்து அருள் பாலிக்கிறார். இவரை கொடுங்கல்லூர் அம்மை என்றும் அழைக்கின்றனர்.







    அடுத்து திருச்சூரிலுள்ள வடக்குநாதர் கோயிலுக்குச் சென்றோம். இங்கு பூரம் திருவிழா வாண வேடிக்கைகளுடன் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இத்தலத்து லிங்கத்திருமேனி முழுவதும் நெய்யால் ஆனதால் நெய்லிங்கம் என்றழைக்கின்றனர். சிவராத்திரியின்போது கோயிலைச் -சுற்றி லட்சதீபம் ஏற்றப்படுகிறது. 



    நாங்கள் சென்ற நாளில் அவ்வப்போது மழை பெய்த போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி வழிபாட்டினைத் தொடர்ந்தோம். பயணத்தின் ஒரு கூறாக அன்பர்கள் கடற்கரையில் சென்று மணலால் லிங்கத்திருமேனியை அமைத்து வழிபட்டனர்.

    முதல் நாள் இரவு தஞ்சையிலிருந்து கிளம்பி நேரடியாக திருச்சூர் சென்று அங்கு பயணத்தை நிறைவு செய்து மறுநாள் இரவு அங்கிருந்து புறப்பட்டோம். பிற மாநிலத்திற்குச் சென்ற முதல் உலாவாக இவ்வுலா அமைந்தது.  உடன் வந்த அனைவருக்கும் மன நிறைவினை இப்பயணம் தந்தது. மகாதேவரைத் தரிசிக்கச் சென்று, உடன் வடக்குநாதரையும், பகவதியம்மனையும் தரிசித்த தருணங்கள் எங்கள் மனதில் நன்கு பதிந்தன.  இதற்கு முன்னர் இக்கோயில்களுக்கு நான் தனியாகவும், சபரிமலை பயணத்தின்போதும் சென்றபோதிலும் குழுவாகச் சென்று இறைவனைத் தரிசிப்பதில் கிடைக்கும் அனுபவம் சற்றே வித்தியாசமானதாக உள்ளதை உணரமுடிந்தது.  




    3 செப்டம்பர் 2022
    3 செப்டம்பர் 2022 கோயில் உலாவின்போது திருவாரூர் மாவட்டம் ஓகையூர் ஜகதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இதில் ஓகையூர் தவிர பிற கோயில்கள் நான் பல முறை சென்ற கோயில்களாகும்.


    துணை நின்றவை
    • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம்,  சென்னை, 2009
    • விக்கிப்பீடியா, திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் (இக்கட்டுரையில் உள்ள ஒளிப்படங்கள் என்னால் இணைக்கப்பட்டவையாகும்)
    • தினமலர் கோயில்கள், அருள்மிகு வடக்குநாதர் கோயில்
    • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014