30 ஏப்ரல் 2017 அன்று தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெறவுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மனம் மகிழ்கின்றேன்.
கும்பகோணத்தில் வியாபாரப் பின்புலமோ, படிப்புப் பின்புலமோ இல்லாத குடும்பத்தில் பிறந்து (2 ஏப்ரல் 1959), குடும்ப சூழ்நிலையின் காரணமாக சொந்த காலில் நிற்க வேண்டிய நிலையில் பல சிரமங்களை எதிர்கொண்டு கல்லூரிப்படிப்பை முடித்து, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி தொடர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி நிறைவு பெறும் நிலையில் என்னை ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- எனக்குப் பல நிலைகளில் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்த என் பெற்றோர்
- அன்போடும் கண்டிப்போடும் வளர்த்த தாத்தா திரு ரத்தினசாமி
- பேரன்பைப் பொழிந்து ஊட்டிய ஆத்தா திருமதி பிச்சாரம்மாள்
- பாசத்தின் உறைவிடமான, என்றும் என் நினைவில் இருந்துகொண்டு என்னை வழிநடத்திக்கொண்டிருக்கின்ற, என் அத்தை திருமதி இந்திரா
- தட்டச்சு, சுருக்கெழுத்து கற்றபோது எங்களுக்குப் பயிற்றுவித்த ஈஸ்வரன் தட்டச்சு நிறுவன மேலாளர் மற்றும் பாரத் தட்டச்சு நிறுவனத்தின் திரு பாஸ்கரன்
- இந்தி வகுப்பிற்குச் சென்றபோது எங்களுக்குப் பாடத்தோடு பண்பையும் கற்றுத் தந்த திரு பாலசுப்பிரமணியன் (திரு பாலுஜி)
- பள்ளியில் படித்தபோது எனக்கு உடன் பிறவா சகோதரிகளாக இருந்த சந்தானம் அக்கா, செல்வம் அக்கா, தயாளன் அக்கா
- கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தந்த நண்பன் திரு சந்தானகிருஷ்ணன்.
![]() |
| திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணனுடன் (பின் உள்ள புகைப்படத்தில் எங்கள் அப்பா திரு பாலகுருசாமி) |
- கல்லூரி இறுதி வகுப்பில் தேர்வு எழுதவிருந்த காலகட்டத்தில் என் தந்தை இறந்த நிலையில், என் தட்டச்சு சுருக்கெழுத்து தகுதிகளைப் பார்த்து நம் குடும்பத்தில் இவ்வளவு தகுதிகளைக் கொண்டு கல்லூரிப்படிப்பை படித்த ஒருவன் உள்ளானே என்று பெருமைபட்டு என்னை முதன்முதலாக விடுப்புப்பணியிடத்தில் சென்னையில் பணியில் சேர்க்க உதவியதோடு சென்னையில் நான் தங்கியிருந்தபோது எனக்கு ஆதரவாக இருந்த என் மாமா திரு தனஞ்ஜெயன் மற்றும் என் அத்தை திருமதி ஜெண்பகலட்சுமி
![]() |
| திரு தனஞ்செயன் மாமா, திருமதி ஜெண்பகலட்சுமி அத்தை (1 செப்டம்பர் 1985இல் எங்கள் திருமணத்திற்கு வந்திருந்தபோது) |
- அடுத்தடுத்து நானாகவே வேலைக்கு விண்ணப்பம் செய்து கோவையில் பணியில் சேர்ந்தபோது என்னை தன் பிள்ளையாகப் பார்த்துக் கொண்ட நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார்
- கோவையில் வேலை பார்த்தபோது வார விடுமுறை நாள் செலவிற்கு 10 அல்லது 20 ரூபாயாவது வைத்துக்கொள் என்று கூறி அவ்வாறு இல்லாத நிலையில் எனக்கு பணம் கொடுத்து உதவியதோடு எனக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுத் தந்து பழகிய திரு கிருஷ்ணமூர்த்தி
- கோவையில் பழகிய நண்பர்கள், உடன் தங்கியிருந்த நண்பர்கள்
வத்தலகுண்டு ஆறுமுகம், விழுப்புரம் திருநாவுக்கரசு, கும்பகோணம் ஜம்புலிங்கம், திண்டுக்கல் கண்ணன், கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி பெருமாள் (15.8.1982இல் கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்)
- தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது எனக்கு பணிகளைக் கற்றுக் கொடுத்து என் தட்டச்சு, சுருக்கெழுத்து அறிவை மேம்படுத்த உதவிய நிறுவன இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள்
- தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக வந்து பணியில் சேர்ந்தபோது சந்தித்த அறிஞர்பெருமக்கள்
- தஞ்சாவூரில் வேலை பார்த்தபோது ஆரம்ப காலத்தில் தன் வீட்டில் இடம் தந்து என்னை கவனித்துக்கொண்ட என் மாமா திரு பழனிச்சாமி
- முற்றிலும் வியாபாரத்தில் ஈடுபட்ட குடும்பத்தில், வேலை பார்த்த என்னை மருமகனாக ஏற்றுக்கொண்ட என் மாமனார் திரு திருவண்ணாமலை மற்றும் குடும்பத்தார்
- கடந்த 35 ஆண்டுகளில் சந்தித்த தமிழ்ப்பல்கலைக்கழக ஆசிரிய, அலுவலக நண்பர்கள்
- தமிழ்ப்பல்கலைக்கழக முதல் பதிவாளர் தவிர அனைத்துப் பதிவாளர்கள், மற்றும் அனைத்துத் துணைவேந்தர்கள்
![]() |
| தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தட்டச்சுப்பணியில் |
- முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும்போது களப்பணி மூலமாக தமிழக வரலாற்றில் தனியாக முத்திரை பதிக்கமுடியும் என்று அறிவுரை கூறி என்னை ஊக்கப்படுத்திய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள்
- ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்விற்கு வழிகாட்டியாக இருந்து ஆய்வேடுகள் செப்பமாக அமைய தடம் அமைத்துத் தந்த பேராசிரியர் க.பாஸ்கரன் அவர்கள்
- என் ஆய்வினை மனம் திறந்து பாராட்டும் அறிஞர் பெருமக்கள்
- நல்ல கருத்துகளை அவ்வப்போது முகநூலில் பகிர சொல்லித் தந்த எனது மூத்த மகன் பாரத்
- என் எழுத்து அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்று கூறி எனக்கு வலைப்பூ எழுத கற்றுத்தந்த என் இளைய மகன் சிவகுரு
- என் எழுத்துப்பணி சிறப்பாக அமைய அமைதியாக உதவுகின்ற எங்களுக்கு மகளாக அமைந்த மருமகள் திருமதி அமுதா
- தொலைபேசியிலும், நேரிலும் என் எழுத்தையும், ஆய்வையும் பாராட்டும் நண்பர்கள், உறவினர்கள்
- சோழ நாட்டில் பௌத்தம் ஆய்வில் அடியெடுத்து வைத்த முதல் நான் கண்டுபிடித்த சுமார் 30 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட ஊடக நண்பர்கள்
- என் எழுத்தினை ஊக்குவிக்கின்ற வலைப்பதிவர்கள் முக நூல் நண்பர்கள்
- விக்கிபீடியாவில் சுமார் 600 பதிவுகளை என் எழுதக் காரணமாக இருந்த சக விக்கிபீடிய நண்பர்கள்
- பல தேவாரத்தலங்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற தலங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்கள்
- அனைத்திற்கும் மேலாக......
என் மனைவி பாக்கியவதி. "உன் மனசுக்கு ஏத்தபடி நல்ல பொண்ணு உனக்கு மனைவியா வரும்" என்று என் ஆத்தா கூறியபடியே எனக்கு அமைந்த என் மனைவி. வாசகர் கடிதம் எழுதத்தொடங்கி இன்று சுமார் 1000 பதிவுகளை நான் எழுதக் காரணமாக அமைந்தவர். தினமும் காலையில் பணிக்கு உரிய நேரத்திற்குள் கிளம்ப வசதியாக காலை உணவை முடித்து, மதியை உணவையும் தந்து அனுப்பிவைத்தவர். குடும்ப சூழல் காரணமாக தவறான முடிவுகளை எடுக்க நான் முயன்றபோது உரிய ஆறுதல் கூறி தைரியம் தந்தவர். நேர்மை, நேரந்தவறாமை என்ற கொள்கைகளைக் கடைபிடித்த நிலையில் உடன் பிறந்தோர், பெற்றவர் உள்ளிட்ட நெருங்கிய பல உறவுகள் என்னை விட்டுப் பிரிந்தபோது ஆறுதலாக இருந்தவர். என் கொள்கைகளிலும், நேரந்தவறாமையிலும், கடமை தவறாத நிலையில் இருக்க உதவியவர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இந்த 35 வருடங்களில் அலுவலகத்தற்கு தாமதமாக நான் சென்றது நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே. அலுவலக நேரத்திற்கு முன்பாகவே நான் சென்றுவிடுவேன். அலுவலகத்திற்குத் தாமதமாக வந்து ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லும் வழக்கத்தை நான் கொள்ளாமல் இருந்ததற்கும், அந்த அளவு நான் பணிக்குச் செல்ல காரணமாக அமைந்ததற்கும் காரணம் அவரே. இவை மட்டுமல்ல இன்னும்.......
![]() |
| எங்கள் மூத்த பேரன் தமிழழகனுடன் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் |
- மனதில் நிற்கும் திருமஞ்சன வீதி பள்ளி (1963-1972)
- மனதில் நிற்கும் பேட்டைத்தெரு பள்ளி (1972-1975)
- கேட்டு வாங்கிப்போடும் கதை : எங்கள் பிளாக்
- மூன்று முத்துக்களை வாழ்த்துவோமே : மனசு
- வெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா : சாட்டர்டே போஸ்ட்
- தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800 பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்








