05 September 2015

தமிழ் நடைக் கையேடு : மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மொழி அறக்கட்டளை, தமிழ்ப் பல்கலைக்கழகம்

எங்கள் இல்ல நூலகத்தில் உள்ள நூல்களில் ஒன்று இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப்பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) இணைந்து உருவாக்கிய தமிழ் நடைக் கையேடு.


இக்கையேடு, பிழையின்றி தமிழில் எழுதுவதற்குத் துணைபுரிகிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பயன்பாட்டு முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளதால்  அதில் தரப்பட்டுள்ள உத்தியைக் கொண்டு தவறின்றி எழுத முடியும். அந்நூலை வாசிப்போம், வாருங்கள்.

இந்தக் கையேடு தற்காலத் தமிழ் உரைநடைய எழுத உதவும் கீழ்க்கண்ட நெறிமுறைகளை விளக்குவதாக நூலட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது:
  • நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை
  • சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள்
  • எளிமையான பட்டியல் முறையில் சந்தி விதிகள்
  • எடுத்துக்காட்டுகள் வழியாகச் சந்தி விளக்கம்
  • பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தும் முறை
  • பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை
  • ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்புகள் தரும் முறை
நிறுத்தக்குறிகள், சொற்களைச்சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல், சந்தி, சொல் தேர்வும் பொருள் தெளிவும், எழுத்துப்பெயர்ப்பு என்ற தலைப்புகளில் இந்நூலில் எழுதப்படுகின்ற முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. எழுதும்போது சில அடிப்படைத் தவறுகளை நாம் செய்கின்றோம். அந்நிலையில் தெரிந்தோ, தெரியாமலோ பல சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறான பல சிக்கல்களுக்கு விடை தந்து சொற்களைப் பயன்படுத்தும் முறைகளைத் தெளிவாகத் தருகிறது இக்கையேடு. 

பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற நிறுத்தற்குறிகளான கால் புள்ளி, அரைப்புள்ளி, முக்கால்புள்ளி, முற்றுப்புள்ளி, புள்ளி, முப்புள்ளி, கேள்விக்குறி, உணர்ச்சிக்குறி, இரட்டை மேற்கோள்குறி, ஒற்றை மேற்கோள்குறி, தனி மேற்கோள்குறி, மேற்படிக்குறி, பிறை அடைப்பு, சதுர அடைப்பு, இணைப்புக்கோடு, இணைப்புச் சிறுகோடு, சாய்கோடு, அடிக்கோடு, உடுக்குறி போன்றவனவற்றின் பயன்பாடு உதாரணங்களுடன் தரப்பட்டுள்ளது.

தனிச்சொற்ளை எழுதும் முறை என்ற தலைப்பில் தனிச்சொற்களை எழுதும் முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. அவ்வாறான சில சொற்களைக் காண்போம்.

தக்க (ப.61) 'செ(ய்)ய' போன்ற வினையெச்சத்தின் பின் இடம்விட்டு எழுதப்படுகிறது.
போற்றத் தக்க மனிதர், காணத் தக்க இடங்கள்

தகாத (ப.61) இது தனித்தே எழுதப்படுகிறது.
பேசத் தகாத வார்த்தைகள்

முடியும், முடியாது (ப.69) இந்த  வினைமுற்று வடிவங்களை இடம்விட்டு எழுதவேண்டும்.
என்னால் ஐந்து மணிக்குள் வந்துவிட முடியும்.
இதை யாராலும் தடுக்க முடியாது. 

வட (ப.71) இது இடம்விட்டே எழுதப்படுகிறது. 
வட புலம், வட  இந்தியா, வட திசை

வெகு (ப.73) அடுத்து வரும் சொல்லோடு சேர்த்து எழுத வேண்டும்.
வெகுநேரம், வெகுதொலைவு, வெகுவிரைவில்

சந்தி மிகும், மிகாத இடங்களுக்கு சில உதாரணங்களைக் காண்போம். (ப.77)
'அந்த''இந்த' முதலிய சுட்டுப் பெயரடைகளின் பின்பும், 'எந்த' என்ற வினாப் பெயரடையின் பின்பும் ஒற்று மிகும். (தொடரும் சொல், விகுதி : க, ச, த, ப).  'என்ன' என்னும் வினாப் பெயரின் பின் மிகாது. எ-டு. என்ன கேள்வி?
அந்த சாலை = அந்தச் சாலை
இந்த + தேர்தல் = இந்தத் தேர்தல்
எந்த பக்கம் = எந்தப் பக்கம்

'போக''வர''படிக்க' போன்ற ('செ(ய்)ய' என்னும்) வினையெச்சங்களின் பின் ஒற்று மிகும்.  (தொடரும் சொல், விகுதி க, ச, த, ப). 
போக + கண்டேன் = போகக் கண்டேன்
வர + சொல் = வரச்சொல்
படிக்க படிக்க = படிக்கப்படிக்க

'நல்ல''இன்ன''இன்றைய' போன்ற பெயரடைகளின் பின்னும் 'படித்த''எழுதாதபோன்ற பெயரெச்சங்களின் பின்னும் ஒற்று மிகாது. (தொடரும் சொல், விகுதி க, ச, த, ப). 
நல்ல + கதை = நல்ல கதை
இன்ன + பெயர் = இன்ன பெயர்
இன்றைய + தமிழ் = இன்றைய தமிழ்
படித்த + புத்தகம் = படித்த புத்தகம்
எழுதாத + கதை = எழுதாத கதை

சொல் தேர்வு, பொருள் தேர்வு நிலையில் தரப்பட்டுள்ள உதாரணங்கள் தகுதியான சொற்களைத் தேர்ந்தெடுப்பதை எடுத்துரைக்கிறது. 

ஒரு பொருள் தரும் பல சொற்கள் (ப.103)
கவிதா...கொஞ்ச வாரத்துக்கு முன்னால ஒரு 
வாரப் பத்திரிகையில சிறுகதை எழுதியிருந்தா
'கொஞ்சம்' என்பதும் 'சில' என்பதும் ஒரே பொருளைத் தரும் சொற்களே. பேச்சு வழக்கில் 'நாள்' என்பதற்கு முன் 'கொஞ்ச(ம்)' என்பது எழுத்து வழக்கில் 'சில' என்பதும் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் கொஞ்சம் என்பது வாரம், மாதம் முதலியவற்றின் முன் பயன்படுத்தப்படுவதில்லை.... மேற்காட்டிய எடுத்துக்காட்டு பேச்சு நடையில் இருப்பதால் அதற்குப் பொருத்தமாக கொஞ்ச நாளைக்கு என்று இருக்கலாம்; 'சில வாரத்துக்கு' என்பது இங்கு பொருத்தமாக இருக்காது. 

மாற்றுப் பெயர்ச் சொற்கள் (ப.116)
உம் உள்ளங்காலில் ஒரு மையைத் தடவுகிறேன். அடுத்த கணமே
நீங்கள் இமயமலையில் இருப்பீர்.
இரண்டாவது வாக்கியத்தில் நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மை வந்திருப்பதால் முதல் வாக்கியத்தில் உங்கள் என்றே இருக்க வேண்டும். அல்லது உம் என்பதை ஏற்றுக்கொண்டால் இரண்டாவது வாக்கியத்தில் நீர் என்று இருப்பதே பொருத்தம். நீங்கள் - உங்கள், நீர் உம் என்பதே பொருத்தமான மாற்றுப் பெயர் வடிவங்கள்.

தமிழ் இலக்கணமோ, இலக்கணம் தொடர்பான சொற்களோ நமது புரிதலுக்குச் சிரமமாக இருந்தால் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டியதில்லை. பெயரடை, சுட்டுப்பெயரடை, வினையடை, வினையெச்சம், பெயரெச்சம், துணை வினை, உடம்படுமெய், தொகைச்சொல் எதிர்மறைப் பெயரெச்சம் என்பன போன்ற சொற்களுக்கு உதாரணம் என்னவென்றோ, அதற்கான விளக்கம் தெரியாத நிலையிலோ அதை விட்டுவிடுவோம். பயன்பாட்டில் எனக்கு இவை போன்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாது. என்னைப் போன்று உள்ளோருக்கு உதாரணங்கள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உதாரணங்களை முழுமையாக எழுதப் பழக வேண்டும். அவ்வாறாகப் பயன்படுத்தினால் முழுமையாகச் சரியாக எழுதுகிறோம் என்பதைவிட குறைவான தவறுடன் எழுதுகிறோம் எனக் கொள்ளலாம். நாளடைவில் தமிழ் இலக்கணச் சொற்கள் தாமாகவே நமக்கு உரிய பொருளைத் தந்துவிடும். இந்நூலில் தந்துள்ள உதாரணங்களை முறையாகப் பயன்படுத்தினால் தவறுகள் குறைய வாய்ப்புண்டு. 

தாய்மொழியில் முறையாக எழுத இக்கையேடு முழுமையாக உதவிசெய்கிறது. இக் கையேட்டை முழுமையாகப் பயன்படுத்துவோம். இலக்கணப் பிழைகளையும், வாக்கியப் பிழைகளையும் தவிர்ப்போம். இந்நூலை வாசிப்போம், எழுதப் பழக அடிப்படையாகக் கொள்வோம், வாருங்கள்.

தமிழ் நடைக் கையேடு, (Tamil Style Manual) உருவாக்கம் : இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப்பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), பதிப்பகம்: அடையாளம், (தொலைபேசி எண்.04332273444), 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310, திருச்சி மாவட்டம், மறுபதிப்பு 2007

-------------------------------------------------------------------------------------------
இந்நூல் தொடர்பாக பதிப்பகத்தார் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரத்தை கீழே தந்துள்ளேன். கூடுதல் விவரம் தேவைப்படின் அவர்களுடைய தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

இணையத்தில் உள்ள பதிப்புக்குப் பிறகு பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்சு படியை வாங்குவதே பயன்படுத்துவதற்கும் நல்லது. தற்போதைய விலை ரூ 110. ஏறக்குறைய 15 ஆண்டுகள் விலை கூடாத நூல் இதுவாகத்தான் இருக்கும். மதுரை நியூசெஞ்சுரி புக் ஹவுஸிலும் புத்தகத்திருவிழாவில் அடையாளம் 201 கடையிலும் கிடைக்கும்.
சாதிக் 944 37 68004 (மாலை 6.30 க்குமேல் பேசலாம்)
Adaiyaalam, 1205/1 Karupur Road, Puthanatham 621 310
Thiruchirappalli District, Tamilnadu, India
email: info@adaiyaalam.net
Tel: (+91) 04333 273444, Fax (+91) 04332 273055
-------------------------------------------------------------------------------------------

7.9.2015 அன்று பதிவு மேம்படுத்தப்பட்டது.