19 December 2025

திருவாவடுதுறை ஆதீனம்: சித்தாந்த இரத்தினம்


திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பின் இரண்டாம் தொகுப்பில் (1995-1997) சேர்ந்து சித்தாந்த இரத்தினம் என்னும் சிறப்புப்பட்டத்தைப் பெற்றது நினைவில் நிற்கும் அனுபவம்.

ஆய்வியல் நிறைஞர்ப்பட்ட ஆய்வினை நிறைவு செய்த காலக்கட்டத்தில் சைவ சித்தாந்தம் தொடர்பான ஆர்வம் காரணமாக இவ்வகுப்பில் சேர்ந்தேன். தஞ்சாவூர், (அப்போதைய நகரப் பேருந்து நிலையம் அருகில்) நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இவ்வகுப்பு, மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது. ஆரம்பத்தில் சில வகுப்புகளைப் பேராசிரியர் ச.சௌரிராஜன் அவர்களும், தொடர்ந்து பேராசிரியர் வீ.ஜெயபால் அவர்களும் ஆசிரியர்களாக இருந்து சிறப்பாக நடத்தினர். சைவம் தொடர்பான பல ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள இவ்வகுப்புகள் துணையாக இருந்தன.

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், உண்மை விளக்கம், சித்தாந்த அட்டகம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் பரபக்கம், சிவஞான சித்தியார் சுபக்கம், சைவ சமய வரலாறும் பன்னிரு திருமுறை வரலாறும் என்பன உள்ளிட்ட பல நூல்கள் பாடமாக அமைந்தன. வகுப்புகள் நிறைவு பெற்ற செய்தி (தினகரன், தினமலர், 22.12.1997) நாளிதழ்களில் வெளிவந்தன.



எங்களிடம் தரப்பட்ட தேர்விற்கான வினாத்தாளின் அடிப்படையில் விடைகள் எழுதி மையத்தின் பேராசிரியரிடம் தரப்பட்டன. பிப்ரவரி1998இல் ஆதீனத்தில் நடைபெற்ற நிகழ்வில் சித்தாந்த இரத்தினம் என்ற சிறப்புப்பட்டத்தைப் பெற்றேன்.




சைவ சித்தாந்தப் பயிற்சி மையத்தின் 24ஆம் ஆண்டு நிறைவு விழா மலரில் (10ஆம் தொகுப்பு 2014-2015) வாழ்த்துரை வழங்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன்.




25.1.2025இல் தஞ்சாவூரில் நடைபெற்ற திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் தஞ்சாவூர் மையத்தின் 2025-26ஆம் ஆண்டுத்தொகுப்பிற்கான சைவ சித்தாந்த வகுப்பு தொடக்க விழாவில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பினைப் பெற்றேன். வாய்ப்பு தந்த விழாக்குழுவினருக்கு நன்றி. 1995-97இல் இவ்வகுப்பில் நான் படித்ததைப் பெருமையோடு நினைவுகூர்கிறேன்.


(ஒளிப்படம், வ-இ: தஞ்சாவூர் பில்லுக்காரத்தெரு சக்தி முனியாண்டவர் கோயில் நிர்வாக அறங்காவலர் திரு குரு. சிவசுப்ரமணியன், முனைவர் பா.ஜம்புலிங்கம், தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் சதயவிழாக்குழுத் தலைவர் திரு து. செல்வம் , ஞானியார் முனைவர் வீ.ஜெயபால்)

-----------------------------------------------------------
நன்றி : திருவாவடுதுறை ஆதீனம்,
திருவாளர்கள் சௌரிராஜன், வீ.ஜெயபால்,
நாளிதழ்கள்
-----------------------------------------------------------

17 November 2025

85 வயது இளைஞர் திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம்

மூத்த வலைப்பதிவர்களில் ஒருவரான திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் இயற்கையெய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  85 வயது இளைஞர் என்று அவரைக் கூறலாம். எப்போதும் நற்சிந்தனை, அதனைப் பகிர்தல், சமுதாயம் மீதான அவருடைய ஈடுபாடு என்ற வகையில் அவருடைய குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வலைப்பூவில் அவர் எழுதுகின்ற பதிவுகள் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். சில பதிவுகள் நீண்டு இருந்தாலும் அதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் அதிகமாக இருப்பதைப் பார்த்துள்ளேன். 

திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம்
ஒளிப்படம் நன்றி : எங்கள் ப்ளாக் வலைப்பூ

முன்பெல்லாம் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். அண்மைக்காலமாக அவருடைய பதிவு அவ்வப்போது வெளிவந்ததைக் காணமுடிந்தது. கடைசியாக அவர் எழுதிய பதிவின் ஸ்கிரீன்ஷாட்டைக் கீழே தந்துள்ளேன். இலக்கியம், கவிதை, கட்டுரை, குடும்ப உறவு, ஆன்மீகம், சமுதாயம், அரசியல், வெளிநாட்டுப்பயணம் என்ற வகையில் அவர் எழுதாத துறையே இல்லை என்று கூறலாம். அண்மையில் கடவுளுடன் ஒரு நேர்காணல் என்ற அவருடைய பதிவைக் காணமுடிந்தது. அவருடைய பல மொழியாக்கங்கள் படிப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அவருடைய வலைப்பூ சுமார் 10,00,000 பக்கப் பார்வையினைக் கொண்டிருந்தது என்பதன்மூலமாக அவரைத் தொடர்பவர்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அவருடைய நட்பு வளையமானது மிகவும் பெரியதாகும். அதிகமாக எழுதுவார். ஆனால் தனக்குத் தெரிந்தது குறைந்ததே என்று தன்னடக்கமாக தன் எழுத்தில் வெளிப்படுத்துவார். மனதில் பட்டதைத் தெளிவாக, தைரியமாக எழுதுவார். என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் அச்சுப்பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வலைப்பூ பதிவுகளை தொடர்ந்து படிக்க இயலா நிலையில் இருந்தேன். அவ்வப்போதுதான் அவருடைய பதிவுகளையும் அண்மைக்காலத்தில் பார்த்தேன்.

என் பதிவுகளில் புத்தர், சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய வேறுபாட்டினையும், களப்பணி தொடர்பான அனுபவங்களைப் பாராட்டியும் பல முறை அவர் எழுதியிருந்தார்.


சக வலைப்பதிவர்களின் பதிவுகளில் அவருடைய பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவருடைய வாசிப்பின் ஆர்வத்தை உணரமுடியும். எந்தப் பொருண்மையிலான பதிவென்றாலும் அதற்கேற்ற வகையில் அவர் மறுமொழி தருவது காண்போரை வியக்கவைக்கும். 

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பின்போது மூரான திரு ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருடைய வாழ்வின் விளிம்பில் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தந்ததோடு, தன் எழுத்து தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரைச் சந்தித்தபோது அவரைப் பற்றி மேலும் அறிந்துகொண்டேன்.

அவருடைய வாசிப்பும், பகிர்வும் போற்றத்தக்கதாகும். வலைப்பூவில் பலரை எழுத வைக்கவும், பின்னூட்டம் இடவும் வைத்து அவர்களின் எழுத்தார்வத்திற்கு மிகவும் தூண்டுகோலாக இருந்தவர். எங்கள் பிளாக் தளத்தில் கேட்டு வாங்கிப்போடும் கதையில் அவர் எழுதிய கதை இடம்பெற்றிருந்தது. அவரைப் பற்றிப் பேசாத, எழுதாத சக வலைப்பதிவர்களே இல்லை எனலாம். 

ஒரு நல்ல மனிதரை, பண்பாளரை, பெருமனது கொண்ட ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாரும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எழுத்துக்களின் மூலமாக என்றும் வாழ்வார்.

10 November 2025

விக்கிப்பீடியாவில் எழுதுதல் : அ.வ.வ.கல்லூரி

மயிலாடுதுறை, அ.வ.வ. கல்லூரித் தமிழாய்வுத் துறையின் ஸ்ரீலோசனி வரதராஜுலு அறக்கட்டளை சார்பாக 7.3.2024இல் விக்கிப்பீடியாவில் எழுதுதல் என்னும் பொருண்மையில் நிகழ்ச்சி நிரலில் கண்டபடி பயிலரங்கு நடைபெற்றது.






அப் பயிலரங்கில் திருவாரூர், கருவூலத் துறை துணை அலுவலரும், சக விக்கிப்பீடியருமான திரு கி மூர்த்தி அவர்களுடன் நானும் பயிற்சி உரை வழங்கினோம். நிகழ்விற்குக் கணிப்பொறித் துறைத் தலைவர் தலைமையுரையாற்றினார்.

இப்பயிலரங்கில் விக்கிப்பீடியாவில் எழுதுவது தொடர்பான ஓர் அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விக்கிப்பீடியாவில் நான் எழுத ஆரம்பித்தது முதல், நான் எழுதிவருகின்ற பொருண்மைகளைக் குறித்துப் பேசியதோடு, கட்டுரைகளை ஆரம்பிப்பது மிகவும் எளிதானது என்றும் அந்தந்தப் பகுதி தொடர்பாக மாணவர்கள் கட்டுரை எழுதலாம் என்றும் கூறினேன். திரு கி.மூர்த்தி அவர்களின் உரை மூலமாகப் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 

பேராசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களின் ஈடுபாடு பாராட்டும் வகையில் இருந்தது. அவர்கள் கேட்ட ஐயங்களுக்கு நாங்கள் இருவரும் மறுமொழி கூறினோம்.   மாணவர்களும் ஆசிரியர்களும் எழுதும் நிலையில் இரண்டாவது நிலையில் பயிலரங்கு தொடரும் எனத் தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் தமிழ்வேலு தெரிவித்தார். அவருடைய முயற்சி சிறக்க என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

06 November 2025

ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்) : ஆ.ஜான் ஜெயக்குமார்

திரு ஆ.ஜான் ஜெயக்குமார் எழுதியுள்ள  ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்) என்னும் நூல் தஞ்சாவூர் மண்டலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சியும் ஜெபமாலைபுரமும், தூய ஜெபமாலை மாதா ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம், அந்தோணியார் பொங்கல், ஜெபமாலை மாதா மன்றம், ஜெபமாலைபுரம் பாஸ்கா, புனித அருளானந்தர் பங்கு ஆலயம், மரியாவின் சேனை, புனித வின்செண்ட் தே பால் சபை, இராஜாராம் டாக்கீஸ், ஊராட்சி மன்றம், ஊர்த்திருவிழா உள்ளிட்ட 27 உட்தலைப்புகளைக் கொண்டு  அமைந்துள்ளது. 


இந்நூலை எழுதுவதற்கானப் பின்புலத்தை நன்றியுரையில் அவர் கூறியுள்ளார்.  "நான் வாழ்ந்து வந்த தடம் முன்னோர்களை நினைக்க வைத்துள்ள சில துளிகள். என் முன்னோர்கள் அதாவது என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, என் தலைமுறையினர் என அனைவரது காலத்திலும் நடந்தவை, நடைபெற்று வருபவை என எண்ணிய, என் சிந்தனையில் தோன்றிய உண்மைகளைக் கண்டதும் கேட்டதும் என்ற அடிப்படையில்..என் ஊரில் உள்ள உயர்ந்தோர், உயர் பதவி வகித்து ஓய்வுபெற்றுள்ள அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள் வழி எனக்குக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில்..ஜெபமாலைபுரத்தின் வழி அவர்களுக்குக் கிடைத்த நன்மைகள் போன்ற என் மனதை ஆழமாகத் தொட்டதால் என் ஊர்ப் பெருமைகளை, ஒரு ஒளிவட்டத்தை, நாம்தான் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனித்த என் சிந்தைக்கு மதிப்பளித்து இந்நூலை எழுதியுள்ளேன்". 

தஞ்சாவூரின் சிறப்பைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையைத் தரும் அவர், தான் பிறந்த ஜெபமாலைபுரத்தைப் பற்றிய ஒரு வரலாற்றுக்கண்ணோட்டத்தைப் பல்வேறு தலைப்புகளில் தொகுத்துத் தந்துள்ளார். 

தஞ்சைக்கருகே ஜெபமாலை செய்து விற்கும் கிராமம் ஒன்று உள்ளது என்பது தெரிய வருவதாகவும், ஜெபமாலைபுரத்தில் அவர்கள் ஜெபமாலைகள் வாங்கிவந்ததாக தம் முன்னோர்களால் சொல்லப்பட்டு வருவதாகவும் கூறும் ஆசிரியர், தம் ஊரானது ஊர் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் ஏழு பிரிவினராகப் பிரிக்கப்பட்டு, ஏழு குடும்ப நாட்டாண்மைகளாக இயங்கிவருவதாகக் கூறுகிறார்.  அவர்கள் மேற்கொண்டு வருகின்ற மக்கள் நலப்பணிகளையும் பட்டியலிடுகிறார்.

தற்போது ஜெபமாலைபுரத்தைச் சார்ந்தவர்கள் அனைத்து அரசுத்துறைகளிலும் அடிப்படைப்பணியிலிருந்து உயர் அலுவலகத் தலைமைப்பொறுப்பு வரை பல நிலைகளில் பணிபுரிந்ததாகவும், பணிபுரிந்துவருவதாகவும் பெருமையோடு கூறுகிறார். 

தம் முன்னோர்கள் வாய்மொழி செய்திவழி ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் தம் ஊர் மக்களால் தூய ஜெபமாலை மாதா ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதாகப் பதிவு செய்யும் நூலாசிரியர், அவ்வூரில் அமைந்துள்ள பிற ஆலயங்களைப் பற்றியும், விழாக்களைப் பற்றியும் விவரிக்கிறார். பாஸ்கா நாடகம் தொடங்கி, ஆலய வழிபாடு, பிற நிகழ்வுகள் தொடர்பான பல புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. 

தன்னைப்பற்றியும், தன்னுடைய சமுதாயப் பணிகளைப் பற்றியும் குறிப்பிடும் நூலாசிரியர், தன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைப் பற்றியும், ஊரிலுள்ள குறிப்பிடத்தக்க பெருமக்களைப் பற்றியும் உரிய புகைப்படங்களோடு ஆவணப்படுத்தியுள்ளார்.  இவ்வாறான ஒரு தொகுப்பினை வெளியிடுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சியை நூல் மூலம் தெளிவாக உணரமுடிகிறது. பணிக்குத் துணைநின்ற சான்றோரையும் ஆங்காங்கே நினைவுகூர்கிறார். நூலைப் படிக்கும்போது ஜெபமாலைபுரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றினை அறியமுடிகிறது. பொதுமக்களுக்கும், வளரும் தலைமுறையினருக்கும் தான் பிறந்த மண்ணின் பெருமையை மிகவும் தெளிவாகப் புரியும் வகையில் எழுதியுள்ள நூலாசிரியரின் ஈடுபாடு போற்றத்தக்கதாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி 2024இல் அலுவலக உதவியாளராகப் பணிநிறைவு பெற்றவர் ஜான் ஜெயக்குமார், பல்கலைக்கழகத்தில் நான் பணியில் சேர்ந்த காலகட்டத்தில், 1980களின் ஆரம்பத்தில், எனக்கு அறிமுகமானவர். சக பணியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் அளவிற்குப் பணியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை நான் அறிவேன். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அலுவல்நிலையில் பணியாற்றி நூல்களை வெளியிட்டோர் வரிசையில் இந்நூலாசிரியரும் சேர்ந்துள்ளார் என்பதும், பணி நிறைவு பெற்ற நாளில், தான் எழுதிய இந்நூலை அனைவருக்கும் அன்பளிப்பாகத் தந்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கச் செய்திகளாகும். அவர் மென்மேலும் பல நூல்களை எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்)
ஆசிரியர் : ஆ.ஜான் ஜெயக்குமார் (அலைபேசி 99940 42699)
வெளியீடு : ஸ்ரீசக்தி புரமோஷனல் லித்தோ புரொசெஸ், கோயம்புத்தூர்
பதிப்பாண்டு : ஜூலை 2024
பக்கங்கள் : 248
விலை : ரூ. 200

9.11.2025இல் மேம்படுத்தப்பட்டது.

26 October 2025

தேனுகா : 11ஆம் ஆண்டு நினைவு

தேனுகா அவர்களின் 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று (25.10.2025) மாலை கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் கழக அமைப்பாளர் திரு பாலுஜி என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், காந்தியடிகள் நற்பணிக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளூர்ப்பெருமக்கள்  கலந்துகொண்டு அவருடைய பெருந்தன்மை, கலை ரசனை, விட்டுக்கொடுத்துப்பேசும் தன்மை, மாற்றுக்கருத்துக்கொண்டோரிடமும் இன்முகத்துடன் பழகும் பாங்கு, அவருடைய நட்பினால் தாம் பெற்ற அனுபவம் என்ற பல நிலைகளில் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அவருடனான என்னுடைய நட்பினைப் பற்றிப் பேசும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். 



ஒளிப்படம் : (இ-வ) பா.ஜம்புலிங்கம், பாலுஜி, மோகன்



"தேனுகா என்ற பெயரைக் கேட்டாலே அவருடைய சாதனைகள் நினைவிற்கு வரும். அவரைப் பற்றி சில அனுபவங்களைப் பகிர்வதில்  மகிழ்கிறேன். அவருடைய கலைத்துறை சார்ந்த செயல்பாடு, என்னுடைய ஆய்வு தொடர்பின் காரணமாக ஏற்பட்ட பிணைப்பு என்ற வகையில் அவருடைய நட்பு அமைந்தது. அவ்வப்போது நாளிதழ்களில் அவருடைய செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்தபோதுதான் அவரைப் பற்றி அறிந்தேன். அதனடிப்படையில் அவரை முதன்முதலாக அவர் பணியாற்றிய, கும்பகோணம் பொற்றாமரைக்களக்கரையில், மூர்த்திக்கலையரங்கை அடுத்திருந்த பாரத மாநில வங்கி அலுவலகத்தில் சந்தித்தேன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் என் பௌத்த ஆய்வினைப் பாராட்டினார். திருவலஞ்சுழியிலும், புகழ்பெற்ற களம்கரி ஓவியக்கலைஞர் இருந்த சிக்கல்நாயக்கன்பேட்டை (நான் பேசும்போது இவ்விடத்தில் பெயரை மறந்துவிட்டேன். பின்னர் திரு ஆடலரசன் அவ்வூரின் பெயரை நினைவுபடுத்தினார்) அருகிலும் புத்தர் சிலைகள் இருந்ததாகத் தான் கேள்விப்பட்டதாகக் கூறினார். 

அவர் கூறிய திருவலஞ்சுழி சிலை சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ளதை, 1940இல் மயிலை சீனி வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டிருந்ததை அவரிடம் கூறினேன். பிறிதொரு பயணத்தில் அவர் சொன்ன மற்றொரு சிலையைப் பார்க்கச் சிக்கல்நாயக்கன்பேட்டைக்குச் சென்றபோது பல வருடங்களுக்கு முன் அம்மணசாமி என்ற ஒரு சிலை இருந்ததாகவும், தற்போது இல்லை என்றும் கூறினர். பின்னர் அங்கு ஓவியக்கலைஞரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து திரும்பினேன். 

தமிழ் விக்கிப்பீடியாவில் தஞ்சாவூர் மாவட்டக் கோயில்கள், தஞ்சாவூர் மாவட்ட முக்கிய நபர்கள், நான் படித்த பள்ளி, கல்லூரி, நூலகம் என்ற நிலைகளில் பதிவுகளைப் பதிய ஆரம்பித்தபோது முக்கிய நபர்கள் என்ற வகையில் முதலில் மனதிற்கு வந்தவர் தேனுகா. அவரிடம் சில விவரங்களைப் பெற்று விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய பதிவினை செப்டம்பர் 2014இல் தொடங்கினேன்.  ஒவ்வொன்றாகப் பதிந்துவரும்போது அவருடைய புகைப்படத்தையும் பதிவில் இணைத்தேன். சக விக்கிப்பீடியர்கள் புகைப்படத்தைப் பதியும்போது சில நெறிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்று கூறி அவரிடம் எழுத்து அனுமதி பெற்றுப் பதிவில் இணைத்தால் காப்புரிமை சிக்கல் எழாது என்று கூறவே அவரிடம் அதை அனுப்பும்படிக் கேட்டேன். 

வாய்ப்பிருப்பின் நேராகவே கும்பகோணம் வந்து அவரைப் புகைப்படம் எடுப்பதாகக் கூறினேன்.  மறுநாள் அனுப்புவதாகக் கூறினார். நான் புகைப்படத்தை எதிர்ப்பார்த்த வேளையில் அவர் இயற்கையெய்திய செய்தி இடியாய் வந்தது. கும்பகோணத்தில் அவருடைய வீட்டிற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினேன். அவர் பற்றிய பக்கத்தை ஆரம்பித்து அவருடைய மரணச்செய்தியைப் பதிவில் சேர்க்கவேண்டிய சூழல் எனக்கு ஆழ்ந்த வேதனையைத் தந்தது. நான் பதிய எண்ணி அவருடைய பக்கத்தைத் திறந்தபோது சக விக்கிப்பீடியர், கலை இலக்கிய விமர்சகர் தேனுகா காலமானார் என்ற தலைப்பில் 25.10.2014இல் தினமணி நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி அவர் இயற்கையெய்திய செய்தியை இணைத்திருந்தார். அவருடைய புகைப்படமும் பிறிதொரு விதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

தினமணி நாளிதழில் அவர் எழுதிய தொடரைப் பற்றி அவ்வப்போது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன். அப்போது நான் கூறிய சில தகவல்களை கூடுதல் தகவல்கள் என்று கூறி மனம் மகிழ்ந்தார். அவருடைய இவ்வாறான மற்றவர்களின் கருத்தைக் கூர்ந்து கேட்டு, ஏற்கும் பழக்கம் என்னை அதிசயிக்கவைத்தது.

தஞ்சாவூர், தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு ஒரு விழாவிற்காக வந்திருந்த அவரைக் காணச் சென்றேன். நிகழ்வு ஆரம்பிக்கும் முன்பாக அவர் என்னை அவ்விடத்தைச் சுற்றி அழைத்துச்சென்று அங்குள்ள சிற்பங்களின் பெருமைகளை எடுத்துக்கூறினார். 

தி இந்து நாளிதழின் சகோதர இதழான ப்ரண்ட்லைன் இதழை அவ்வப்போது வடிவமைப்பு மாற்றம் செய்வார்கள். ஒரு முறை அவ்வாறு மாற்றம் பெற்றபோது சத்யஜித்ரே இருந்தால் இந்த வடிவமைப்பை வரவேற்றிருப்பார் என்ற குறிப்பு அவ்விதழில் இடம்பெற்றிருந்தது. அவ்வாறே தற்போது தேனுகா இருந்திருந்தால் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் வடிவமைப்பைப் பாராட்டியிருப்பார். அவருடைய கலை ரசனை அத்தகையது.

இத்தகு புகழ் பெற்ற கலைஞரின் நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வது நம் அனைவரின் கடமை."

ஒளிப்படம் : நிற்போர்: (இ-வ) அயூப்கான், கோபாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வி, சூரியசந்திரன், மோகனகிருஷ்ணன், எம்.எஸ்.பாலு, ஆடலரசன், ரமேஷ்பாபு, ........,ராதாகிருஷ்ணன்
அமர்ந்திருப்போர்: (இ-வ) பா.ஜம்புலிங்கம், பாலுஜி, மோகன்

கழகம் வெளியிடும் மாத இதழ் பாலுஜியின் கவிதையுடன், தேனுகா சிறப்பிதழாக அன்னாரை நினைவுகூரும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. அவ்விதழ் மேடையில் வெளியிடப்பட்டதோடு, நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. 

முன்னதாக தேனுகா நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன.

திரு பாலுஜி அவர்களுக்கும், நண்பர்களுக்கும்  நன்றி கூறிவிட்டு அவரைப் பற்றிய எண்ணங்களோடு  கிளம்பினேன். அந்த நினைவானது என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. அம்மாமனிதரை மறக்கமுடியுமா?

-----------------------------------------------------------
புகைப்படங்கள் நன்றி : திரு ஆடலரசன், 
திரு அயூப்கான்/களஞ்சியம் இதழ்
-----------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்

28.10.2025இல் மேம்படுத்தப்பட்டது.

01 September 2025

கே.ஏ.குணசேகரன்: இரா. காமராசு

இரா. காமராசு எழுதியுள்ள  கே.ஏ.குணசேகரன் என்னும் நூல்  வந்தனம்னா வந்தனம், நாக்குச் சிவந்த குயில், அட்ரா சக்கே, வன்மங்களின் ஆறா வடு, தொட்டில் தொடங்கித் தொடுவானம் வரை,  தொட்டுக் கொள்ளலாம் வாங்க!, கலிகெழு துணங்கை ஆடிய மருங்கு, மனுசங்கடா…நாங்க மனுசங்கடா! என்ற உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. பின்னிணைப்புகளாக கே.ஏ.குணசேகரன் வாழ்க்கைக் குறிப்பு, வெளியிட்ட நூல்கள், எழுதிய நூல்கள், இயக்கிய நாடகங்கள், வெளிவந்துள்ள ஒலி நாடாக்கள், பெற்ற விருதுகள்/சிறப்புகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் நூலின் நாயகரான கே.ஏ.குணசேகரனைக் காணவும், அவ்வப்போது பேசவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இயல்பாகப் பேசுபவர், நன்கு பழகுபவர், சிரித்த முகம், எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுபவர் என்ற வகையில் அவர் என் மனதில் ஆழப்பதிந்தார். இந்நூல் அவரைப் பற்றிய துறை சார்ந்த பல முன்னெடுப்புகளை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறது. இவ்வாறாகச் சாதனை படைத்த ஓர் அரிய மனிதரைக் காண கிடைத்த வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். இளமைக்காலத்தில் அவர் எதிர்கொண்ட பல நிகழ்வுகளே பிற்காலத்தில் மாபெரும் கலைஞனாக உருவெடுக்க உதவியதை இந்நூல் மூலம் அறியமுடிகிறது. கே.ஏ.ஜி. என்றழைக்கப்படுகின்ற குணசேகரனைப் பற்றி அறிந்துகொள்ள நூலின் சில பகுதிகளைக் காண்போம்.



“இளம் வயதில் முறையாக, கட்டணம் செலுத்தி, கலையோ, இசையோ பயில வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. ஏகலைவனைப் போலத் தாமே முயன்று கற்றுத் தேர்ந்தவர். எந்தச் சூழலிலும் ‘கட்டை விரலை’க் காவு தராத, ஞானச்செருக்கு அவரிடம் இருந்தது.” (ப.11)

“கே.ஏ.ஜி. ஒரு குழந்தையைப் போல எப்போதும் பரவசமாக இருப்பார். விடாமுயற்சி, கடும் உழைப்பு ஆகியவை அவரின் உடன் பிறந்தவை. எதற்கும் அஞ்சாத துணிச்சல்காரர். உயரம் குறைந்தவர்தான், ஆனால் உள்ளத்தால் உயர்ந்தவர். கோபம் வரும். அது நிலைக்காது. அடுத்த கணம் மென் புன்னகை வரும். சாந்தமாகிவிடுவார்…” (ப.20)

“கே.ஏ.ஜி. புகழ்பெறாத பொழுதே அவரின் முதல் பேட்டியை வெளியிட்டது தஞ்சையிலிருந்து வெளிவந்த ‘நடப்பு’ இதழ். பா.செல்வபாண்டியன் பேட்டி எடுத்திருந்தார்…” (ப.24)

“கே.ஏ.ஜி. சங்க இலக்கிய ஆய்வு, உரைகளில் ஈடுபட்டது போலவே, ஆர்வம் காரணமாகவும், அவருக்குள் இருந்த கிராமியப் படைப்பு மனத்தின் வெளிப்பாடாகவும் கவிதைகள் எழுதினார். அவை சில இதழ்களில் வெளிவந்தன. மொழிபெயர்க்கவும் பட்டன…” (ப.40)

“நாட்டுப்புறப்பாடல்கள் காதல், பக்தி, பொழுதுபோக்கு என்ற நிலையில் மேடையேற்றப்பட்டன. அத் தருணத்தில் கே.ஏ.ஜி. நாட்டுப்புறப்பாடல்களின் சமூகச் சாரத்துக்கு அழுத்தம் கொடுத்தார். உழைப்பு, பகுத்தறிவு, கல்வி விழிப்புணர்வு, சாதி சமத்துவம், பொருளியல் விடுதலை, பெண் அடிமை ஒழிப்புப் போன்ற கருத்துகள் முதன்மை பெற்றன. நாட்டுப்புறக் கலைநிகழ்வுகளில் பிற இசைக்கருவிகளைக் காட்டிலும், நாட்டுப்புற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். குறிப்பாகப் ‘பறை’ எனும் ஆதி இசையைப் ‘சாப்பறை’யாக்கிய சதியிலிருந்து மீட்டு மீண்டும் ‘போர்ப்பறை’யாக முழங்கச் செய்ததில் கே.ஏ.ஜி.க்குப் பெரும்பங்குண்டு…” (ப.59)

“கே.ஏ.ஜி. நாட்டுப்புறவியல் புலத்தில் அதிகம் ஆர்வம் காட்டி ஈடுபட்டது ‘நாட்டுப்புறக் கலைகள்’ பற்றித்தான். இது குறித்துப் பல ஆய்வுகளில் ஈடுபட்டு, நூல்களையும் தந்துள்ளார்…..நாட்டுப்புறக்கலைகளை அறிமுகம் செய்தல், நாட்டுப்புறக்கலைகளை இலக்கணப்படுத்துதல், சமூகப் பயன்பாட்டை உறுதி செய்தல் ஆகிய வகைகளில் இந்நூற்களின் கருத்துகள் அமைந்துள்ளன.” (ப.68)

“கே.ஏ.ஜியின் நாட்டுப்புறவியல் துறைப் பங்களிப்பில் நாட்டுப்புற இலக்கியங்கள், நாட்டுப்புறக்கலைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நாட்டுப்புறப் பண்பாடு அமைகிறது. குறிப்பாக இரண்டு கருத்து நிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று அதுவரை அதிகம் கவனம் பெறாத பழங்குடி மக்களின் வாழ்வியல். அடுத்து நாட்டுப்புறத்தாரில் பெரும்பான்மையினராகிய ஒடுக்கப்பட்டோர்-தலித்துகளின் பண்பாட்டு நிலை. நாட்டுப்புறவியலை-சேரிப்புறவியல் எனும் அளவுக்கு கே.ஏ.ஜி. சிந்திக்கிறார்.” (ப.74)

“…நாடக உலகில் நுழையும்போது கவனம் பெற்ற கலைஞராக அவர் விளங்கினார். இசைக்கலைஞர், பாடகர், நடிகர், நாடக இயக்குநர், நாடக எழுத்தாளர், நாடகத் தயாரிப்பாளர், நாடகக் கல்வியாளர், நாடகப் பயிற்றுநர் என கே.ஏ.ஜி ஒரு ‘All rounder’ ஆக விளங்கினார்…” (ப.82)

குணசேகரனுடைய குடும்பத்தார், நண்பர்கள், துறைசார்ந்த அறிஞர்கள், கலைஞர்களைச் சந்தித்து விவரங்களைத் தொகுத்தும், அவருடைய, அவரைப் பற்றிய நூல்கள் மூலமாகத் தரவுகளைத் திரட்டியும் ஓர் அருமையான படைப்பினைத் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

நூல் : கே.ஏ.குணசேகரன்
ஆசிரியர் : இரா.காமராசு
பதிப்பகம் : சாகித்திய அகாதெமி, தொலைபேசி 044-24311741/24354815
ஆண்டு : முதல் பதிப்பு, 2025
விலை : ரூ.100

-----------------------------------------------------------
----------------------------------------------------------- 

09 June 2025

அறம் பயில்வோம் : கு.பாலசுப்ரமணியன்

கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழக இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கட்டுரைகளின் தொகுப்பாக அறம் பயில்வோம் என்ற நூலினை வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் கு.பாலசுப்ரமணியன்.  



அறம் வளர்த்த தலைவர்கள், கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை, சிறுகதைகள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல் அறத்தைக் கற்கவும், அதனைத் தொடரவும் ஓர் உந்துதலைத் தருகிறது. பெரும்பாலானவை அறம் என்ற பின்புலத்தில் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. நூலைப் படித்து முடிந்தபின் நம்முள் அறம் என்ற சிந்தனை துளிர்த்துப் பரவுவதை உணரமுடியும். நூலின் சில கட்டுரைகளைக் காண்போம்.


முதல் உட்தலைப்பின்கீழ் காந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்களின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. காந்தியின் தாரக மந்திரம் கரோ பஹலே, கஹோ பீச்சே..உலகம் மாசுபடுவதற்கான சுற்றுச்சூழலில் விஷம் கலப்பதற்கான அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டே அதைப்பற்றிப் பேசுவது நகை முரண் இல்லையா? (ப.3) காந்தியைப் பற்றிய தவறான புரிதலைப் பரப்பும் அறிவுஜீவிகளிடமிருந்து காந்தியைக் காப்பாற்றுவது நமது கடமை (ப.7). மதச்சார்பின்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவராக நேருவை நம்பியதால் தன்னுடன் பல வகையில் முரண்பாடு கொண்ட நேருவை அரசியல் தன் அரசியல் வாரிசாக அறிவித்தார் காந்தி. (ப.12)


நேரு, தான் ஆட்சி செய்த 17 ஆண்டு காலத்தில் வட இந்தியாவைவிட தென் இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். (ப.21) நேருத என்றால் நமக்குத் தோன்று மதச்சார்பின்மைதான். (ப.26) சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ஜனநாயக சோசலிசம் என்ற ஒரு புதிய தத்துவத்தை இந்தியாவின் முன் மட்டுமல்ல உலகின் முன் வைத்தார் நேரு. (ப.31) நேரு, காமராஜரை அவரது நேர்மைக்காகவும் எளிமைக்காகவும் மதித்தார். (ப.41)


உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே காமராஜரின் சிந்தனையாக இருந்தது. (ப.50) அனைத்துக் கல்வியும் இலவசம், அனைவருக்கும் இலவசம் இதுதான் காமராஜர் ஆட்சி. (ப.59) பச்சைத்தமிழன் ஆட்சி..தரமான இலவசக்கல்வி, மது கண்டறியாத மக்கள், அரசியல் தலையிடா காவல்துறை, ஓட்டுகளை எதிர்பார்க்கா திட்டங்கள், கரைபடியா கரம்கொண்ட அமைச்சர்கள்...(ப.66)


அறமே மெய்யின்பம்..அறனையே துணை எனக்கொள்வோம் எனக் கூற பாரதி தேவை. அவ்வாறே பாரதியின் முற்போக்குச் சிந்தனைகள் இக்காலத் தேவையாகும். (ப.72)


கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை என்ற உட்தலைப்பில் உள்ள கட்டுரைகள் தற்கால அரசியல், பொருளாதார, சமுதாயப்பார்வையைத் தருகின்றன. தனியார்மயமாக்கப்பட்ட கல்வியால் தாய்மொழிக்கல்வி புறக்கணிப்பு, சமூகப்பொறுப்பு பற்றிய அறிவுரை நிறுத்தப்படல், கல்விச்செலவுக்காகக் கடன்பட்ட வாழ்க்கை, மனப்பாடம் செய்யும் நிலை, மாணவர்களிடம் காட்டிய கண்டிப்பு குறைவு, மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாறல், வணிக நோக்கு. (ப.93) நீட் தேர்வு மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்ட விஷம் தோய்ந்த அஸ்திரமாகும். (ப.101).

அரசியல் என்பது தொண்டா? வணிகமா? பிழைப்பா? என்றில்லாமல் அரசியல் அறம் என மாற்றப்படவேண்டும். அது அறம் சார்ந்த அரசியலை விரும்புவோர் எண்ணிக்கை மிகும் காலத்தில்தான் மெய்ப்படும். அதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை. (ப.116)


மதம், சாதி, இனம், தீண்டாமை, மது, மூடப் பழக்கவழக்கங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து விடுபடும் நாளே பாரதி கனவு கண்ட விடுதலை நாள். (ப.127) லஞ்சம் உள்ள இடத்தில் ஊழலும், ஊழல் உள்ள இடத்தில் லஞ்சமும் இணைந்தே வாசம் செய்யும். இவை நமது அறப்பண்புகளை அளித்து நம்மை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றுகின்றன. (140).


நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் ஊடாக அறம் என்பதானது பரிணமிப்பதைக் காணலாம்.


இவ்வகையில் இந்நூலில் அறம் என்ற கோட்பாடானது நூல் முழுவதும் விரவியிருப்பதைக் காணமுடிகிறது. அறம் சார்ந்த வாழ்க்கை பல்வகையில் நம்மை உயர்த்தும் என்பதையும், அறத்தை உணர்ந்து பின்பற்றும்போது கிடைக்கும் விளைவுகள் நல்ல பயனைத் தரும் என்பதையும் நூலாசிரியரின் எழுத்து உறுதி செய்கிறது. நன்னெறிகள் கொண்ட ஓர் அரிய நூலைப் படித்த எண்ணத்தைத் தருகின்ற இந்நூலை வாசித்து, அறநெறியைக் கடைபிடிக்க முயல்வோம். அற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


தலைப்பு : அறம் பயில்வோம்   

ஆசிரியர் : கு.பாலசுப்ரமணியன் 
அலைபேசி : 
 99527 93520
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, மே 2025
விலை : ரூ.250

50ஆவது ஆண்டு விழா (5, 7, 8 ஜூன் 2025)


முதல் நாள் நிகழ்வு






இரண்டாம் நாள் நிகழ்வு







அறம் பயில்வோம் நூலை பா.ஜம்புலிங்கம் வெளியிட மா.இரமேஷ்பாபு பெறல்

விழா நினைவுப்பரிசினை சு.செல்வம் வழங்க, பா.ஜம்புலிங்கம் பெறல்

நூல் வெளியிட்ட பின் உரையாற்றல்


மூன்றாம் நாள் நிகழ்வு





காந்தியடிகள் நற்பணிக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அங்கு நானும், என்னுடைய நண்பர்கள் சிலரும் இந்தி வகுப்பில் சேர்ந்தோம். நான் ராஷ்ட்ரபாஷா வரை தேர்ச்சி பெற்றேன். அப்போது நான் கற்ற இந்தியானது சென்னையில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தபோதும், கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின்போதும்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொண்டபோதும்,  வட இந்தியக்கோயில்களுக்குச் சென்றபோதும். எனக்குப் பெரிதும் உதவியது. அவ்வப்போது இன்றும் துணையாக நிற்கிறது. 
அறம் பயில்வோம் நூலினை வெளியிடும் வாய்ப்பினைத் தந்த காந்தியடிகள் நற்பணிக்கழகத்திற்கு நன்றி.

----------------------------------------------------------------------------

ஒளிப்படங்கள் நன்றி : திரு குடந்தை ஆடலரசன், திரு சு.செல்வம்,

காந்தியடிகள் நற்பணிக்கழகம்

----------------------------------------------------------------------------

19 May 2025

மனதில் நிற்கும் இந்தி வகுப்புகள் (1977-79)

1970களின் இடையில்..கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் காவிரியாற்றுக்குச் செல்லும் வழியில் மூர்த்திச்செட்டித் தெரு, பாட்றாச்சாரியார் தெரு தெருக்களை அடுத்து இடது புறத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கிருந்து சிறிது தூரத்தில் வலது புறத்தில்  நாங்கள் தட்டச்சுக்குச் சென்ற ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிறுவனம் ஒரு வீட்டின் மாடியில் இயங்கிவந்தது. அதன் எதிரே வலது புறத்தில் கும்பகோணம் கூட்டுறவு பால் சொஸைட்டியும், இடது புறத்தில் ரேஷன் கடையும் இருந்தன. தட்டச்சுப் பயிற்சி முடிந்தபின் கீழே இறங்கிவருவோம். முதலில் ஆங்கிலத் தட்டச்சு கற்றுக்கொண்டோம். என்னுடைய ஆரம்பக் காலத் தட்டச்சுப் பயிற்சி இங்குதான். பின்னர் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, பாரத் தட்டச்சுப் பயிற்சி நிறுவனத்தில் (தற்போது கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ளது) சேர்ந்து ஆங்கில, தமிழ் தட்டச்சிலும், ஆங்கில, தமிழ் சுருக்கெழுத்திலும் தேர்ச்சி பெற்றேன். அது ஒரு தனி அனுபவம்.

தட்டச்சு நிறுவனம் இயங்கிய வீட்டின் கீழே திண்ணையில் ஒருவர் இந்தி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் நானும், செல்வம் (பழைய அரண்மனைத்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளைமண்டபம்), உள்ளிட்ட பல நண்பர்களும் ஆரம்ப காலத்தில் இந்தி கற்றுக்கொண்டோம். 

எங்கள் அப்பா என்னை பல ஆங்கில, இந்தித் திரைப்படங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து, மொழி தெரியாமல் பாபி, ஷோலே, தீவார் போன்ற இந்தித் திரைப்படங்களைப் பார்த்த சில ஆண்டுகளில்தான் இந்தி வகுப்புக்குச் சென்றோம்.  ஆசிரியர் நடத்திய விதம் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது. தெரியாத சொற்களுக்கு அவ்வப்போது பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வோம். நாங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பொருள் கூறுவார். 

காந்தியடிகள் நற்பணிக்கழகம், காலசந்தி கட்டளை
(ஏப்ரல் 2025இல் சென்றபோது எடுத்த ஒளிப்படம்)

பிறகு, 1970களின் இடையில் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆரம்பிக்கப்பட்ட காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் (தற்போது காலசந்தி கட்டளையில் செயல்பட்டுவருகின்றது) இந்தி வகுப்பினைத் தொடர்ந்தேன். என்னுடன் பள்ளி நண்பர்களான  ராஜசேகரன் (16 கட்டு, திருமஞ்சன வீதி)மதியழகன் (திருமஞ்சன வீதி), மோகன் (சிங்காரம் செட்டித்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளை மண்டபம்) படித்த நினைவு.  

நான் ப்ராத்மிக் (பிப்ரவரி 1978), மத்யமா (ஆகஸ்டு 1978), ராஷ்ட்ரபாஷா (பிப்ரவரி 1979)  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். பணிக்குச் சென்றபின்னர் பிரவேசிகாவில் தேர்ச்சி பெற்றேன். சிலர் இடையிலே நின்றுவிட்டனர். எங்களில் மோகன் மட்டும் ப்ரவின் வரை படித்தார். பின்னர் நான் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது மோகன் எனக்கு  இந்தியில் கடிதம் எழுதியதும் நான் பதில் எழுதியதும் நினைவில் உள்ளது. 

1979இல் சென்னையில்  முதன்முதலாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த போது அங்கு ஆங்கிலமும், இந்தியும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதைக் கண்டேன். நான் கற்ற இந்தி எனக்கு அப்போது கைகொடுத்தது. சேர்ந்த சில நாள்களில் அந்நிறுவன மேலாளர் என்னிடம்  டில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையலுவலகத்திலிருந்து  அவ்வப்போது தொலைபேசி அழைப்பு வருமென்றும், பெறப்படும் செய்தியைத் தட்டச்சுச் செய்துதரவேண்டும் என்றும் கூறினார். அதற்கு முன்னர் ஓரிரு முறை தான் நான் தொலைபேசியில் பேசியுள்ளேன். அதிகம் நான் தொலைபேசியில் பேசியது வழக்கமில்லை என்று கூறியபோது அவர் என்னை ஊக்கப்படுத்தி அனுபவத்தில் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றார். அவர்கள் இந்தியில் பேசக்கூட வாய்ப்புள்ளது என்றார். அவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன். 

அவர் சொன்ன மறுநாளே புதுதில்லி அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது. மேலாளர் தொலைபேசியை என்னிடம் கொடுத்து அவர்கள் பேசுவதைக் கேட்டு, சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு, அதனைத் தட்டச்சிட்டு வரும்படிக் கூறினார். டெல்லியிலிருந்து வந்த, ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒருவர் தொலைபேசியில் பேசிய அலுவலகச் செய்தியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு சுருக்கெழுத்தில் எழுதி, (தெரியாத, புரியாத இடங்களில் புள்ளி வைத்தும், இடைவெளிவிட்டும் சமாளித்து) அதனை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன். மேலாளர் அதனைப் பார்த்துத் திருத்தித் தரவே மறுபடியும் அதனைத் தட்டச்சிட்டேன். அவர் என்னுடைய முதல் முயற்சியை அதிகம் பாராட்டினார். 

அவ்வாறே கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்விற்குச் சென்றபோது வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். பம்பாயிலிருந்து வந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அவ்வப்போது இந்தியிலும் பேசினார். எதிர்கொள்ள சற்றே சிரமப்பட்டாலும், சமாளித்து விடையளித்தேன். வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரில் மூவரைத் தேர்ந்தெடுத்தனர். அம்மூவரில் என்னை முதலாவதாகத் தெரிவு செய்து தலைமையலுவலகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியாற்ற ஆணை தந்தனர். மற்ற இருவரும் கேரளாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர். வந்திருந்தோரில் இந்தி மொழியறிவு, ஆங்கிலத் தட்டச்சு, ஆங்கிலச் சுருக்கெழுத்து ஆகிய தகுதிகளுடன் நான் மட்டுமே இருந்ததாகக் கூறினர்.  ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, நான் நேர்முகத்தேர்வினை எதிர்கொண்ட, அதே அலுவலகத்தில் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் நான் மேற்கொண்ட முனைவர்ப் பட்ட ஆய்விற்காக  இந்திய, வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் ஒளிப்படங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் நான் கடிதம் எழுதியபோது சில அருங்காட்சியகத்தார் இந்தியில் மறுமொழியினை அனுப்பியிருந்தனர். எப்போதோ நான் கற்ற இந்தி அப்போது எனக்குப் பெரிதும் உதவியது.  அதனடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்ற நாகப்பட்டின புத்தர் சிற்பங்கள் தொடர்பான விவரங்களை என் ஆய்வேட்டில் இணைத்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வட இந்தியாவிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் இருந்த இந்தி எழுத்துகளை மிக எளிதாகப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் பெரிதும் உதவியது. சுமார் 20 பேர் கொண்ட குழுவில் நானும், எங்களை அழைத்துச்சென்றவரும் மட்டுமே இந்தி அறிந்திருந்தோம். 

தற்போதெல்லாம் அவ்வப்போது இந்தி செய்தியினைக் கேட்கிறேன். ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாத சொற்களுக்கு, ஆரம்பத்தில் ஆங்கில நாளிதழை வாசித்தபோது பயன்படுத்திய உத்தியின் அடிப்படையில், அகராதிகளை நாடுகின்றேன்.  1977இல் கற்க ஆரம்பித்து, பிரவேஷிகா வரை கற்றபோதிலும் அரிதாகப் பயன்படுத்துவதால் சற்று சிரமம் இருப்பதை உணர்கிறேன். இருப்பினும் நான் அப்போது கற்ற இந்தி அவ்வப்போது கைகொடுப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.  

ஆரம்பத்தில் திண்ணையில் நான் கற்ற இந்தியானது தொடர்ந்து கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் மூலமாக   பிரவேஷிகா வரை தேர்ச்சியடையவும், பணிக்காலத்தில் பல நிலைகளிலும், ஆய்வின்போதும் பெரிதும் உதவியது. இந்நாளில், அப்போது எனக்குக் கற்பித்த திண்ணை இந்தி வகுப்பு ஆசிரியரையும், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் பாலுஜி அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். 

20 மே 2025இல் மேம்படுத்தப்பட்டது.