நண்பர் திரு ஆர்.கண்ணன் அவர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு, அவருடைய மறைவிற்குப் பின் அவருடைய மகள் செல்வி சுப்ரஜா கண்ணன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்படுகின்ற "பாயும் ஒளி" இதழின் 100ஆவது இதழ் ஜூலை 2026இல் வெளியானது.
நூறாவது சிறப்பிதழின் தலையங்கத்தில் ஆசிரியர், தன் தந்தை 2017இல் ஓய்வு பெற்றபோது ஓய்வுக்காலத்தை உபயோகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் விவாதித்தபோது ஏற்கனவே 40 வருடங்களுக்கு முன் அவர் ஆரம்பித்து நடத்திய கையெழுத்து பத்திரிகையான ‘நவரசம்’ இதழைத் தொடர்ந்து நடத்து முடியாத நிலை, திருவையாற்றில் நண்பருடன் இணைந்து உருவாக்கிய ‘பாரதி இயக்கம்’ அமைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலை, இவற்றுக்கெல்லாம் காரணமாகவிருந்த தனது அரசுப் பணியின் சுமை, தனக்கென ஒரு அங்கீகாரம் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பி பாயும் ஒளி என்ற இதழை ஆரம்பித்ததன் சூழல் உள்ளிட்டவற்றைப் பற்றிக் கூறுகிறார்.
அரசியல், சினிமா ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், இலக்கியம், கிராமியம், அறிவியல், மொழிபெயர்ப்பு, கவிதைகள், சிறுகதை, ஆங்கிலப் படைப்புகள், உள்ளூர் நிகழ்வுகள், புகழ்பெற்றவர்களின் நேர்காணல்கள், அதிகம் அறியப்படாத தொன்மையான இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு கட்டுரைகள் அதில் இடம்பெறவேண்டும் என்றும் அவர் எண்ணியதாகக் கூறியுள்ள அவர், துரதிர்ஷ்டவசமாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவற்றை சரிவர செய்யமுடியாமல் போனதாகவும், அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது கூட தன்னை அழைத்து “பாயும் ஒளிக்கு இந்த மாதம் கட்டுரைகள் வந்தனவா? நீ எதாவது எழுதினாயா?” என்று கேட்டதாகவும், தான் எதுவும் எழுதாமல் இருந்ததை அறிந்து கோபப்பட்ட அவர், ஆங்கிலத்தில் மட்டுமே வலைப்பூவில் எழுதிவந்த தன்னை தமிழில் எழுதச் செய்தது தன் தந்தையே என்று குறிப்பிடுகிறார்.
தந்தை இவ்வுலகத்தை விட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற பணியை அவரின் ஆசிகளோடு என்றும் தொடர்வதாகப் பதிவிட்டுள்ள மகளின் எண்ணம் ஈடேற இறைவனை வேண்டுகிறேன். அவருடைய நினைவாக ஏப்ரல் 2018இல் முதல் இதழில் வெளியான தலையங்கத்தை இவ்விதழில் பகிர்ந்துள்ளார்.
ஆரம்பம் முதல் நான் இவ்விதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பல துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை இவ்விதழில் அவர் வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு இதழும் மெருகேறி முந்தைய இதழைவிட அடுத்த இதழைச் சிறப்பாக அமைத்து வருகிறார். படைப்பாளிகளிடமிருந்து கட்டுரைகளைப் பெறுதல், தேர்ந்தெடுத்தல், பொருண்மைப்படி வகைப்படுத்துதல், உரிய இடங்களில் புகைப்படங்களை இணைத்தல், சிறப்பாக வடிவமைத்து தேவையான வண்ணங்களைப் பயன்படுத்துதல், இதழின் முகப்பின் முக்கியமான பொருண்மைகளுக்கான உட்தலைப்புகளை அமைத்தல் என்ற நிலைகளில் மிகவும் கவனம் செலுத்தி, தந்தை வழியில் மகள் ஆற்றுகின்ற பணி போற்றத்தக்கதாகும். வாசிப்போரின் மனம் கவர்கின்ற வகையில் பக்கங்களை அமைக்கும் விதம் சிறப்பாக உள்ளது.
அன்று முதல் இன்று வரைஇதழைப் படித்துவிட்டு என் கருத்துகளைத் தெரிவிப்பேன். இதழ்களைத் தொடர்ந்து வாசித்தபோதும் என்னுடைய ஆய்வுப்பணி மற்றும் நூல்களின் அச்சுப்பணி காரணமாக சில சமயங்களில் பின்னூட்டம் இட முடியாத நிலையிலும் என் கருத்துகளை அவ்வப்போது இதழாசிரியரிடம் அலைபேசி வழியாகக் கூறுவேன். இதழ் செறிவாக அமைவதற்காக அவர் செலுத்துகின்ற ஈடுபாட்டினை ஒவ்வொரு இதழும் வெளிவரும்போது அறிவேன்.
ஆசிரியரான சுப்ரஜா கண்ணன் நல்ல வாசகர். பறவை ஆர்வலர். இயற்கை விரும்பி. சுற்றுச்சூழல் நேசர். இணையத்தில், நாம் அன்றாடம் காண்கின்ற பறவைகளை அறிமுகப்படுத்தி ஒன் மினிட் பேர்டிங் என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார். அந்த நூல் அச்சு வடிவிலும் வெளிவந்துள்ளதாக அவர் மூலமாக அறிந்தேன். இவற்றைத் தவிர தன்னுடைய இணையதளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அண்மையில் வந்துள்ள இவ்விதழில் அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப்பழக்கம் என்ற தலைப்பிலான என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது.
தந்தையின் ஆசியுடனும், என்னைப் போன்ற சக வாசகர்களின் ஆதரவுடனும் நூறாவது இதழ் கண்ட பாயும் ஒளி மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்.
-------------------------------------------------------------------------------------------
நூறாவது இதழை வாசிக்க: பாயும் ஒளி 100ஆவது இதழ்
-------------------------------------------------------------------------------------------


No comments:
Post a Comment