நான் தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்ற கும்பகோணம், பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வு இன்று (5.7.2026) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, பாண்டியகுல நாடார்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெறுகிறது. நண்பர்களையும், முன்னாள் மாணவர்களையும் இந்நிகழ்விற்கு அன்போடு அழைக்கிறேன்.
இந்த இனிய வேளையில் அக்காலத்தில் நான் அங்கு பயின்ற நாள்கள் நினைவிற்கு வருகின்றன. கும்பகோணம், அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்துக்கொண்டிருந்த காலத்தில் (1975-79) முதலில் கும்பகோணம், ரெட்டியார் குளத்தின் கீழ்க்கரையில் இருந்த ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து தட்டச்சு கற்க ஆரம்பித்தேன். பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் ஆரம்பித்தபின்னர், அதன் ஆரம்ப கால மாணவர்களில் ஒருவனானேன். என்னுடன் ராஜசேகரன், மோகன், மதியழகன், சங்கர், ஐயப்பன், லட்சுமிகாந்தன், தயாளன், நாராயணன், ராஜு, மைனாவதி உள்ளிட்டோர் தட்டச்சு பயின்றனர். பலருடைய பெயர் நினைவில்லை. அப்போது பயின்ற மோகன் தற்போது சென்னையில் தட்டச்சுப் பயிற்சி நிலையம் நடத்திவருகிறார்.
தமிழ், ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற்ற காலத்தில் பிழை இல்லாமல் நான் தட்டச்சு செய்த பக்கங்கள் அவ்வப்போது அறிவிப்புப் பலகையில் இடம்பெறுவது கண்டு மகிழ்வேன். உடன் பயின்ற பலரின் தட்டச்சுப் பக்கங்களும் அவ்வாறு இடம்பெற்ற நினைவு உள்ளது. ஒரு மணி நேரத்தில் எந்த அளவிற்கு அதிகமாக பக்கங்களை தட்டச்சிட முடியுமோ அந்த அளவிற்கு தட்டச்சு செய்வேன். ரெமிங்டன், ஹால்டா, காட்ரோஜ் ஆகிய தட்டச்சுப்பொறிகளில் தட்டச்சு பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஹால்டாவில் தட்டச்சிடும்போது மிகவும் வேகமாக அடித்த உணர்வு ஏற்படும்.
பயிற்சி நிலையம் ஆரம்பிப்பதற்கு முன்னரே திரு கு.பாஸ்கரன் அவர்களும், (ஜூன் 2025இல் பொன்விழா கண்ட, நான் ஆரம்பத்தில் ஹிந்தி கற்ற காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் நிறுவனரும், இந்நிகழ்வில் தலைமையுரையாற்றுகின்ற) திரு.பாலுஜி என்று நாங்கள் அழைக்கும் கு.பாலசுப்ரமணியன் அவர்களும் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் நான் படித்த காலம் முதலே எனக்கு அறிமுகம். எங்களுடைய வீடு சம்பிரதி வைத்தியநாதன் தெருவில் இருந்தது. பெரும்பாலான என் பள்ளி நண்பர்களின் வீடுகள் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியிலும், பேட்டையிலும் இருந்தன. அவர்களைப் பார்க்கச் சென்ற வகையிலான தொடர்பும் ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்தியது.
பயிற்சிக்காலத்தில் தட்டச்சு செய்யும்போதும், தேர்வின்போதும், அவ்வப்போது வாராவாரம் வைக்கப்படுகின்ற வகுப்புத்தேர்வின்போதும் மாணவர்களை அக்கறையுட்ன் கவனித்து வழிகாட்டி நடத்துவார். தட்டச்சில் தினசரி காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுவார். மாணவர்கள் உரிய நேரத்தில் வர வேண்டும் என்பதிலும் தட்டச்சு செய்யும்போது அதில் முழு கவனமும் செலுத்தவேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார். சுருக்கெழுத்து கற்கும்போது சற்றொப்ப அத்தகைய கவனத்தைச் செலுத்தி எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். பயிற்சியுடன் அப்போது நாங்கள் கடைபிடித்த ஒழுங்கு தேர்வில் நல்லமுறையில் தேர்ச்சி பெற உதவியது.
கல்லூரிப் படிப்பில் இளங்கலை முடித்த அதே காலகட்டத்தில் ஆங்கிலத் தட்டச்சு உயர்நிலை (நவம்பர் 1976), தமிழ்த் தட்டச்சு உயர்நிலை (நவம்பர் 1977), ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை (டிசம்பர் 1978) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். இத்தகுதிகள் எனக்கு வேலை கிடைக்க பெரிதும் உதவியாக இருந்தன. கல்லூரிப்படிப்பு முடிந்து சில வாரங்களிலேயே தட்டச்சராக 1979இல் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். பின்னர் தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1983இல் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து 2017இல் பணி நிறைவு பெற்றேன். 2004இல் குடும்ப சூழல் காரணமாகத் தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தேன்.
பயிற்சி முடிந்து பல இடங்களில் பணியாற்றிய காலம் முதல் இன்றுவரையில் கும்பகோணம் செல்லும்போது மரியாதைநிமித்தம் அவரைச் சந்தித்துவிட்டு வருவேன். ஒரு மாணவனாகச் சேர்ந்த காலகட்டத்தில் இருந்த அதே அன்பு, பரிவு ஆகிய குணங்களை இப்போதும் அவரிடம் என்னால் காணமுடிகிறது. என்னைப் போல பல மாணவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அவர் இருந்துள்ளார். ஒரு முறை நான் சென்றபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் தட்டச்சுப் பயிற்சி நடைபெறும் சூழலையே கண்டேன். அப்போதிருந்தவாறே மாணவர்களை உரியமுறையில் கண்காணித்தல், அவர்கள் தட்டச்சு செய்த தாள்களைக் கவனமாகத் திருத்துதல், பிழைகளை உரிய முறையில் சுட்டிக்காட்டல், உரிய ஆலோசனைகளை மாணவர்களுக்குக் கூறுதல் என்றவாறு அவர் தன் பணியினை மேற்கொண்டிருந்ததைக் கண்டேன். ஆண்டுகள் பல ஆனாலும் அவருடைய செயல்பாட்டில் சிறிதும் மாற்றமில்லை என்பதை நேரடியாகக் கண்டேன். பணி நிறைவு பெற்றபின்னரும் எங்களுடைய சந்திப்பு தொடர்கிறது. 2018இல் அவ்வாறான ஒரு சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கீழே தந்துள்ளேன்.
அவரும், குடும்பத்தாரும் எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழவும், அவருடைய சேவை தொடரவும், பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் மென்மேலும் வளரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
50 ஆண்டுகளாக நமக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதல், ஆதரவு, அர்ப்பணிப்புகளை நினைவுகூறும் வகையில் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து அவரை கௌரவிப்பதில் ஆரம்ப கால மாணவன் என்பதில் பெருமையடைகிறேன்.
நாங்கள் பயின்ற காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இருக்கறதா என்று ஆசிரியர் திரு கு.பாஸ்கரன் அவர்களிடம் கேட்டபோது உடன் இப்படத்தையும், மேலும் சில படங்களையும் திரு குருகிரி மூலமாக அனுப்பிவைத்தமைக்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. படத்தில் அமர்ந்திருப்போரில் நான் (இடமிருந்து) நான்காவதாக உள்ளேன். இப்படம் அக்கால நினைவுகளை மீட்டுக்கொடுத்தது.





No comments:
Post a Comment