17 July 2026

ஒளிரும் தகளி-தகளி வாழ்வியல் முறைகள்: சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத்

சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத் எழுதியுள்ள “ஒளிரும் தகளி” என்னும் நூல், தகளி வாழ்வியல் முறைகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. இதுவரை எவரும் அதிகம் அறிந்திராத தகளி என்னும் சொல், அது புலப்படுத்துகின்ற பொருள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் தந்துள்ள விளக்கம் அதனைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தினைத் தூண்டுகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகராதி, 'தகளி' என்ற சொல்லுக்கு 'அகல்', 'உண்கலம்' என்ற பொருள்களைத் தருகிறது.



தான் கற்றதை, உணர்ந்ததை அனைவருக்கும் சென்றுசேரும் வகையில் மிகவும் எளிமையான நடையில் தகுந்த உதாரணங்களோடு விளக்கும் ஆசிரியர் இந்நூல் மூலமாக ஒரு சிறந்த வாழ்வியில் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளார். 

பல முக்கியமான சொற்களுக்கான பொருளை ஆங்கிலத்திலும், சில இடங்களில் கூடுதல்  விளக்கத்தையும்  தந்துள்ள விதம், குணங்களையும், செயல்பாடுகளையும், உரிய இடங்களில் அட்டவணை மூலம் விளக்கியிருக்கும் முறை, பல்வகை யோகாசன நிலைகளுக்கான செய்முறையையும் பயன்களையும் அடுத்தடுத்து அமைத்துள்ள பாங்கு, யோகாசன செய்முறை பற்றிய பட விளக்கங்கள்  போன்றவை இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள மிகச் சிறந்த உத்திகளாகும். நூல் வடிவம், அமைப்பு, தலைப்புப்பிரிப்பு, பின்னிணைப்பு ஆகியவை அமைத்துள்ள விதம் சிறப்பு.     

தன்னை அறிய தலைப்படு, பல்லிளிக்கும் ஓநாய், மாற்றம் ஒன்றே மாறாதது, வழிபாடு அனைத்தும் (மூட) நம்பிக்கை சார்ந்ததே, அன்பே தகளியா, மன ஒழுங்கு, தேடலே வாழ்க்கையின் இனிமை, வாழ்வொழுங்கு, வீடு, கனவு இல்லம், பொது ஒழுங்கு, இயற்கையுடன் இசைவு, நாளொழுங்கு, உடல் ஒழுங்கு என்ற துணைத்தலைப்புகளைத் தந்துள்ள விதம் மனதில் பதியும் வகையில் உள்ளது. அவர் கூறுகின்ற தகளி வாழ்வியல் முறைகளைக் காண்போம். 

“தகளி வாழ்வியலின் அடிப்படை உடலை வலுப்படுத்திட அல்ல. முதலில் உள்ளத்தையும் பின்னர் உடலையும் வலுப்படுத்துவதே ஆகும். உள்ளம் தெளிவானால் உடல் உபாதைகள் பெருமளவு குறைந்துவிடும். உள்ளம் தெளிவடைய முதலில் நான் என்பது ஒன்றுமில்லை என்பதை அறிவுப்பூர்வமாக உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த உணர்வினை கைவரப் பெற உதவிடும் உன்னதக் கலையே தகளி வாழ்வியல்.” (பக்கம். 18)

“...ஒருவன் தன்னைத் தெரிந்துகொண்டால் அவனுக்கு அழிவே இல்லை. நாம் நம்மை உடலாக மட்டும் பார்க்கும்போதுதான் மரணம், நோய் மற்றும் துன்பங்களுக்கு அஞ்சுகிறோம். நாம் அழியாத 'சக்தியின் துளி' என்பதை உணரும்போது பயம் விலகி, பேரானந்தம் பிறக்கிறது...” (ப. 22)

“...சமூகக் கட்டமைப்பில் இன்றும் நீடித்து வரும் ஒரு மிக ஆழமான சமூக அநீதி மற்றும் அதிகாரப் படிநிலையினை தற்காலச் சடங்கு முறைகள் கொண்டிருப்பதனால் அவற்றைத் தவிர்த்தலே நல்லறமென தகளி வாழ்வியல் கருதுகிறது...” (ப. 37)

“தகளி வாழ்வியல் என்பது அன்பு-ஆர்வம்-இன்பம்-ஞானம் என்ற வரிசையில், ஒரு மனிதனின் ஆன்மிக மற்றும் உளவியல் வளர்ச்சியைப் படிநிலைப்படுத்தும் மிகச்சிறந்த சூத்திரமாகும்.” (ப. 50)

“தகளி என்பது அகல் விளக்கு (மண்ணால் ஆன விளக்குத் தட்டு). அதாவது, நம்மிடம் இருக்கும் 'அன்பு' தான் அந்த விளக்குத் தட்டு. ஆன்மிகப் பயணத்திற்கு அடிப்படை அன்புதான். அதுவே மற்றவற்றைத் தாங்கும் ஆதாரக் கருவி…” (ப. 52)

“...அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களையும்  தகளி வாழ்வியல் தத்துவார்த்த தளத்தில் நின்று நோக்காது வாழ்வியல் தளத்தில் நின்று நோக்கிடுமாறு கற்பிக்கின்றது.…” (ப. 71)

“...தகளி வாழ்வியலில் வீட்டிற்கு முன்னால் மரம் வளர்ப்பது வெறும் அலங்காரம் அல்ல, அது ஒரு வாழ்வியில் நெறி” (ப. 96)

“ஒரு வீட்டிற்குள் நுழைந்ததும் அங்குள்ள புத்தக அடுக்குகளைப் பார்த்தே, அந்த வீட்டில் வாழ்பவர்களின் ரசனை, சிந்தனை மற்றும் ஆளுமையை எடைபோட்டு விடலாம் …” (ப. 99)

“சித்த மருத்துவத்தின்படி, நீரை நேரடியாகத் தலையில் ஊற்றக்கூடாது. முதலில் பாதங்கள், பிறகு முழங்கால்கள், இடுப்பு, தோள்பட்டை என நனைக்கவேண்டும். இறுதியாகவே தலையில் தண்ணீர் ஊற்றவேண்டும். இது உடலில் உள்ள வெப்பம் மெதுவாகத் தலை வழியாக வெளியேற உதவும்.” (ப. 129)

“உடல் மற்றும் மனதை சீராகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் வைத்துக்கொள்ள தகளி வாழ்வியில் சில எளிய முறை யோகாசன நிலைகளைப் பரிந்துரைக்கிறது...” (ப. 136)

முறைபடுத்தப்பட்ட வாழ்க்கை நெறியே நூலின் மையப்புள்ளியாக உள்ளது. நேர்மறை சிந்தனையும், செயல்பாடும் சிறந்த வாழ்க்கையின் இலக்கணமாக அமைவதை இந்நூல் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறது.  அரிய கருத்துகளைப் பல்வேறு சான்றுகளுடனும், உதாரணங்களுடனும் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். சிறந்த நெறிமுறைகளை மற்றவர்களும் கடைபிடிக்கவேண்டும் என்ற நன்னோக்கில் நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நாமும் தகளி வாழ்வியல் முறையைக் கடைபிடிக்க முயற்சிப்போம். 

எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.5.2026)

தலைப்பு: ஒளிரும் தகளி-தகளி வாழ்வியல் முறைகள் 
ஆசிரியர்: சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத்
பதிப்பகம்: முடிவிலி, ராம் நகர், ஆறாவது குறுக்கு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 613 004, அலைபேசி 94870 28739, மின்னஞ்சல் samppathtnj37@gmail.com
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, ஜூலை 2026
விலை: ரூ.200

-------------------------------------------------------------------------------------------
நூல் வெளியீட்டு விழா நிகழ்வு
-------------------------------------------------------------------------------------------




No comments:

Post a Comment