26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா சென்றபோது கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சென்றோம். இக்கோயிலைப் பார்க்க வேண்டுமென்ற எனது நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. தமிழகத்தில் செங்கல் கட்டுமானத்திற்கும், கருங்கல் கட்டுமானத்திற்கும் புகழ் பெற்ற கோயில்கள் பல உண்டு. அத்தகைய பெருமையினைக் கொண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள, உயர்ந்த அளவிலான விமானத்தைக் கொண்ட, இடிபாடுற்ற நிலையிலுள்ள வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலுக்கு 2012இல் நாங்கள் சென்று வந்த அனுபவத்தை மார்ச் 2014இல் பகிர்ந்துகொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
துக்காச்சிக்குச் சென்றுகொண்டிருந்தபோது கோயிலின் அமைப்பு, கட்டுமான அமைப்பு போன்றவற்றைப் பற்றிய எண்ணங்கள் எழ ஆரம்பித்தன. வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலைப் போல இடிபாடான நிலையில் உள்ளதா, முற்றிலும் பார்க்க முடியாமா என்பன போன்ற எதிர்பார்ப்புகளோடு துக்காச்சி வந்துசேர்ந்தோம். இடிபாடான ராஜகோபுரத்தினை பார்த்ததும் கோயிலுக்கு வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அருகில் உள்ளோரிடம் விசாரித்து பூட்டியிருந்த கதவு திறக்கப்படும் வரை காத்திருந்தோம். நாங்கள் சென்ற நேரம் கிட்டத்தட்ட நண்பகலாக இருந்த நிலையில் திறப்பார்களோ, மாட்டார்களோ என்ற ஏக்கமும் எங்களை ஆட்டிவைத்தன.
பூட்டு திறந்து உள்ளே வந்தபின் முதலில் உள்ள ராஜகோபுரத்தைக் கண்டோம். இனி எந்த யுகத்தில் இதுபோன்ற ஒரு கட்டுமானத்தைப் பார்க்கப்போகிறோம்?
ராஜ கோபுரத்தின் நடுவே எங்கும் இதுவரை பார்த்திராத வகையில் நான்கு கருங்கல் தூண்களைக் கண்டோம். செடிகள் எங்கும் ஆக்கிரமித்திருக்க அதற்கிடையே ஆனையுரித்த தேவர் உள்ளிட்ட அழகான சிற்பங்களைக் கண்டோம்.
![]() |
| ராஜ கோபுரம், வலப்புறம் |
![]() |
| ராஜ கோபுரம், இடது புறம் |
அந்த கோபுரத்தின் இடது புறத்தில் சிறிய சன்னதி போன்ற அமைப்பில் செங்கல் கட்டுமானம் காணப்பட்டது.
![]() |
| தனி சன்னதி போன்ற நிலையில் செங்கல் கட்டுமானம் |
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றபோது மற்றொரு கோபுரம் காணப்பட்டது. அக்கோபுரமும் சற்றொப்ப ராஜகோபுரத்தைப் போலவே செடிகள் அடர்ந்த நிலையில் காணப்பட்டது.
![]() |
| அடுத்து அமைந்துள்ள கோபுரம் |
இரு கோபுரங்களுக்கும் இடையில் இடது புறத்தில் கருங்கல்லால் ஆன அழகிய மண்டபம் காணப்பட்டது. இடிபாடான நிலையில் இருந்த அந்த மண்டபத்தில் அழகான தூண்களும், சிற்பங்களும் காணப்பட்டன. உள்ளே சென்று புகைப்படம் எடுக்க மிகவும் சிரமமாக இருந்தது. எந்த நேரமும் விழுந்து விடுமோ என்ற நிலையில் ஓர் அச்சம் எங்களிடம் இருந்தது.
சாவி எடுத்து வந்தவரிடம் கோயிலுக்கு உள்ளே செல்வதற்காகத் திறந்துவிடக் கேட்டபோது அதற்கான சாவி உள்ள பொறுப்பாளர் வெளியே சென்றிருப்பதாகவும், அன்று மாலைதான் அவர் வருவார் என்றும் கூறினார். வேறு வழியின்றி இரண்டாவது கோபுரத்தின் வாயிலில் இருந்தபடியே உள்ளே உள்ள மண்டபத்தைப் புகைப்படம் எடுத்தோம்.
இக்கோயிலின் பெருமையை சற்றே அறிவோம். "பல்லவ மன்னனான இரண்டாம் நந்தி வர்ம பல்லவனின் (கி.பி.730-795) பட்டப் பெயரான விடேல் விடுகு என்ற பெயரில் துக்காச்சி என்று வழங்கப்படுகிறது. தென் காளத்தி என்ற பெருமையுடைய இக்கோயிலின் விமானம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலைப் போல உள்ளது. மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் சௌந்தரநாயகி தென் திசை நோக்கியுள்ளார். முதல் திருச்சுற்றில் உள்ள துர்க்கை தென் திசை நோக்கியுள்ளார். மகாமண்டபத்தில் சரபமூர்த்தி தென் திசை நோக்கியுள்ளார். தெற்கில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன் உள்ளிட்டோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் வட திசை நோக்கி தனி சன்னதியில் உள்ளார்." (தினமணி, 16 டிசம்பர் 2016)
சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தற்போது திருப்பணி காணுகின்ற இக்கோயிலை இயலும் விரைவில் சென்று பார்ப்போம். காலம் கடத்தவேண்டாம், நம் கலையழகினை ரசிப்போம், அது வேறு வடிவம் பெறுவதற்குள்.
கோயிலுக்குச் சென்ற நினைவாக நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
இக்கோயிலில் மே 2023இல் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் இவ்வூரின் தொன்மையைப் பறைசாற்றும் வாசகம் இடம்பெற்றுள்ளதாகவும் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்க நிறுவனர் ஆ.கோபிநாத் கூறினார். இக்கோயிலின் குடமுழுக்கு 3.9.2023இல் நடைபெற்றது.
6.4.2026இல் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே பதியப்பட்டுள்ளன.

























