இயக்குநர் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே திரைப்படத்தைப் பார்த்த முதற்கொண்டே நான் அவருடைய பரம ரசிகனானேன். அதற்கு முன்பு அரங்கேற்றம் மூலமாக கே.பாலசந்தர் ரசிகனாக இருந்த நான், பின்னர் பாரதிராஜாவின் ரசிகனாகவும் மாறினேன்.
பதினாறு வயதினிலே படம் வெளியானபோது நான் கும்பகோணம், அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஆத்தா நான் பத்தாவது பாஸ் பண்ணிட்டேன் என்று அறிமுகமாகும் அப்படத்தில் மயிலில் தொடங்கி சப்பாணி, பரட்டை, குருவம்மா என்ற வரிசையில் அனைவரும் தத்தம் கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருப்பர். அதேகாலகட்டத்தில் அக்கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக்கொண்டிருந்த என் நண்பன் சந்தானகிருஷ்ணனும் நானும் இப்படத்தைப் பற்றி அதிகமாகப் பேசிக்கொண்டிருப்போம். சில வருடங்களுக்குப் பிறகு இத்திரைப்படத்தின் ரெகார்டை (வட்ட வடிவத் தட்டு) பல நண்பர்களிடம் விசாரித்துவிட்டு கடைசியில் கும்பகோணம் ராமசாமி கோயில் அருகேயுள்ள நண்பரின் கடையில் பெற்று அதை வாங்கிப் பல முறை போட்டுப்பார்த்து ரசித்தோம். அதற்கான ப்ளேயரை எங்கு வாங்கினோம் என்று நினைவில்லை.
அடுத்து என்னை அதிகம் ஈர்த்த படம் அக்காள் மகள் தம்பி மகன் கதையைக் கொண்டமைந்த அவருடைய மண் வாசனை. அண்டை வீட்டுப்பெண் என்பார்களே அந்தளவிற்கு அதில் வரும் முத்துப்பேச்சியின் பாத்திரம் என்னை அதிகம் கவர்ந்தது. அப்படத்திற்கு முன்போ, பின்போ அவ்வாறான ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. பொதுவாக நான் பாலசந்தர் படங்களை ஒவ்வொரு பிரேமையும் ரசித்துப் பார்த்த நான் அந்தவகையில் ரசித்துப் பார்த்தது பாரதிராஜாவின் மண் வாசனை.
அப்படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜாவிற்கு ஒரு கடிதம் தட்டச்சுப்பொறியில் நானே தட்டச்சிட்டு அனுப்பினேன். கடிதம் முழுக்க நன்றி என்ற சொல் இடம்பெறும் வகையில் இடையில் என் கருத்துகளைக் கூறி அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய மறுமொழிக் கடிதம் இன்னும் என்னுடைய கோப்பில் உள்ளது.
கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் போன்ற கிராமத்துக் கதைகள் மட்டுமின்றி வித்தியாசமான கதைகளைக் கொண்ட சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், போன்றவற்றை அவர் எடுத்துள்ள விதம் பார்ப்போரை வியக்க வைக்கும். இந்தப்படங்களையும் அவர்தான் எடுத்தாரா என்று நம்மை முற்றிலும் யோசிக்க வைக்கும்.
அவருடைய படத்தில் வருகின்ற மரங்கள் அழும், சிரிக்கும். திரை முழுக்க கோழிக்குஞ்சுகள், குளத்தில் பூக்கள் என்ற வகையில் அவர் ரசித்து அமைத்துள்ள பல கிராமத்துக் காட்சிகளைக் காணும்போது இயற்கை நம்முடனே கைகோர்த்து வருவது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். முதன்மைப் பாத்திரங்களுக்கு ஈடாக அமைகின்ற துணைக்கதாபாத்திரங்களும் முக்கியமான இடத்தைப் பெறுவர். போறாளே பொன்னுத்தாயி...என்னும்போது நாமும் உடன் போவதுபோல இருக்கும்.
கல்லூரிப்படிப்பு முடிந்து சில மாதங்களிலேயே வேலையில் சேர்ந்துவிட்டேன். கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஸ்டேன்ஸ் அண்ட் கோ. நிறுவனத்தில் வேலைக்காக இன்டர்வியூ செல்ல நான் ரயிலைவிட்டு இறங்கியபோது என் கண்களில் முதலில் பட்ட போஸ்டர் வறுமையின் நிறம் சிகப்பு. ராயல் தியேட்டரில் அப்படம் ஓடியதாக நினைவு. இன்டர்வியூவிற்கு போய்விட்டு அந்தப் படத்தைப் பார்த்துவிட்டே திரும்பினேன். அதே காலகட்டத்தில் சற்றொப்ப அதே கதையமைப்பில் வந்த படம் பாரதிராஜாவின் நிழல்கள். இருவரின் ரசிகன் என்ற நிலையில் இரு படங்களுமே என்னை அதிகம் ஈர்த்தன. இருந்தாலும் நேர்மறைக் கருத்துடன் முடிந்த வறுமையின் நிறம் சிகப்பு எனக்கு அதிகம் பிடித்திருந்தது.
திரைப்படத்தில் வரும் கிராமத்தையும், இயற்கைக்காட்சிகளையும் பார்க்கும்போது ஒரு ரசிகனுக்கு அந்தந்த இடமும் காட்சியும்தான் நினைவிற்கு வரும். ஆனால் பாரதிராஜா படங்கள் வந்தபிறகு கிராமத்தைச் சூழலையோ, இயற்கைக்காட்சியையோ பார்க்கும்போது பாரதிராஜாவின் படம் நினைவிற்கு வர ஆரம்பித்தது. அந்த அளவிற்கு அவர் நம்மை அதனுடன் ஒன்றிப் போக வைத்தவர். நிழல்கள், வேதம் புதிது, புதுமைப்பெண், என் உயிர்த்தோழன் போன்ற சமூகப் பிரச்னைகளை வெளிப்படுத்தும் சூழலில் அமைந்த அவருடைய படங்கள் பல பாடங்களை உணர்த்தின. வயதான கதாபாத்திரமாகட்டும், இளமையான கதாபாத்திரமாகட்டும் அந்தந்த பாத்திரங்களின் மூலமாக அவர் எடுத்துச்சொல்கின்ற கருத்துகள் மனதில் ஆழப்பதிந்துவிடும். அதுவே அவருடைய தனித்துவம்.
அரசியல் அவலங்களை அப்பட்டமாக எடுத்துரைக்கும் என் உயிர்த்தோழன். என்னை மன்னுச்சிடு தருமா என்ற அந்த கடைசி வார்த்தைகள்.
முதல் மரியாதை படம் பார்ப்போர் உறவின் ஆத்மார்த்தமான நெருக்கத்தை முற்றிலும் உணர்வர். திரைப்படத்தில் இவ்வாறாகக் கொணரமுடியுமா என்று யோசிக்க வைத்த படம். அவள் வருவாள், வந்துவிடுவாள் என்று கடைசியில் நம்மையும் ஆவலோடு எதிர்பார்க்க வைப்பார். அவள் தன்னுடைய காலை வீட்டிற்குள் வைக்கும்போது, படுத்துக்கிடக்கும் அவருடைய மனதிலிருந்து வெளிப்படுத்தப்படுகின்ற உணர்வுகளைக் காணும்போது அந்த யதார்த்தத்தையும் சோகத்தையும் உணர முடியும். கடலோரக் கவிதைகள் ஜெனிபர் டீச்சரையும் சின்னப்பதாஸையும் மறக்க முடியுமா? அவர்களுக்கிடையேயான அன்பின் வெளிப்பாடானது நாகரீகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அடி ஆத்தாடி.. பாடலைக் கேட்போருடைய மனங்களும் இறக்கை கட்டிப் பறக்கும். அவ்வாறு அவர் செய்துவிடுவார். அவர்தான் பாரதிராஜா.
அண்ணன் தங்கை பாசம் தொடர்பாக பல படங்கள் பார்த்திருந்தாலும் கிழக்குச்சீமையிலேக்கு ஈடு கிழக்குச்சீமையிலேதான். அந்தப் படத்தில் பாத்திரங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். போட்டி போட்டுக்கொண்டு அண்ணனும் தங்கையும் பாசத்தால் ஏங்குவர். அவ்வாறே நம் அனைவருடைய மனதிலும் ஆழப்பதிந்தவர் ஊர்ப்பெருமையா, சொத்தா, உறவா, பாசமா என்ற போட்டிக்கிடையில் அவருடைய கருத்தம்மா திரைப்படம் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடு உண்மையை வெளிப்படுத்தும்.
சகோதரன்-சகோதரி, தந்தை/தாய்-மகள்/மகன், அத்தை மகன்-மாமன் மகள் என்ற உறவுகளும், அவை தொடர்பான எண்ணங்களும் இதயத்தின் அடியில் ஆழப்பதிந்த அன்பின் காரணமாக அப்படியே பதிந்திருக்கும். காலம் மாறினாலும் அந்த அன்பானது என்றுமே மாறாது. பந்தபாசங்களின் அந்த அன்பு கிடைக்காமற்போனாலும் அதன் நினைவுகள் தருகின்ற சுகத்தை உணர்வால் மட்டுமே அறியமுடியும் என்பதைத் திரையில் கொணர்ந்திருப்பார் பாரதிராஜா. எவ்வளவுதான் நெருக்கமான அன்பு இருந்தாலும் ஒரு மெல்லிய கோடு போன்ற இடைவெளி இருக்கவேண்டும் என்று அவர் படத்தில் கேட்ட வசனம். அவ்வாறான இடைவெளி இல்லாவிட்டால் அந்த அன்புக்காக ஏங்கி, ஏமாற்றப்பட்டு, முற்றிலும் தன் நிலையையே இழத்தல் என்ற நிலையை அருமையாகக் கூறியிருப்பார்.
எனக்குத் தெரிந்து இயக்குநர் பெயர் போடும்போது கைதட்டல் பெற்றவர் முதல் இயக்குநர் ஸ்ரீதர். அதற்கடுத்தபடியாக அவ்வாறே பாலசந்தர் படங்களில் எவ்வித பின்னொலியும் இன்றி அமைதியாக அவருடைய பெயர் திரையில் தோன்றும்போது என்னையும் அறியாமல் கை தட்டியுள்ளேன். நாளடைவில் அதனை அமைதியாக ரசித்தேன். அவ்வாறே பாரதிராஜாவின் பெயரைப் பார்க்கும்போதும் என்னையறியாமல் ஒரு மகிழ்ச்சி பெறுவேன். ரசிகர்களின் மனதை எவ்வாறு உங்களால் படமெடுக்க முடிகிறது என்று அவரிடம் கேட்கத் தோன்றும். கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமாகி தன்னுடைய முத்திரையைப் பதிக்க ஆரம்பித்த அவர், மட்டுமன்றி தந்தை, தாத்தா போன்ற கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஸ்டுடியோ சூழலில் இயங்கி வந்த சினிமாவை வெளி உலகிற்குக் கொண்டுவந்ததோடு, அதனை கிராமத்துப்பக்கம் திருப்பி அதனையே களமாக்கி நம்முன் கொண்டு சாதனை படைத்தவர் அவர். திரைத்துறையில் அவர் அதிகம் சாதித்துள்ளார். அவருடைய படங்கள் மூலமாக அவர் என்றும் நம்முடன் வாழ்வார்.



No comments:
Post a Comment