50 ஆண்டுகளுக்கு முன். கும்பகோணம், சம்பிரதி வைத்தியநாதர் தெருவில் எங்கள் வீட்டில் பள்ளிக்காலத்து நினைவுகள் அவ்வப்போது மனதில் வந்துசெல்லும். வீட்டின் நினைவாக இப்போது எங்களிடம் உள்ளது ஆத்தா, தாத்தாவின் போட்டோ மட்டுமே.
கண்டிப்பின் மறுபெயர் எங்கள் தாத்தா (திரு ரெத்தினசாமி). கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்தபோது பெரும்பாலும் தாத்தாவின் அடி வாங்கியபின்னர் தான் பள்ளிக்குச் செல்வேன். பள்ளிக்கூடம் என்றால் எனக்கு ஓர் ஒவ்வாமை. சில சமயங்களில் தாத்தா, வீட்டின் எதிரே இருக்கும் விறகுக்கடையிலிருந்து கையில் கிடைக்கும் விறகை எடுத்துக்கொண்டு விரட்ட ஆரம்பித்துவிடுவார். ஒருமுறை பள்ளிக்குச் செல்லப் பயந்து வீட்டிற்குத் திரும்பி ஓடிவந்துவிட்டேன். என்னை பள்ளிக்கு இழுத்துச்சென்று பெரிய வாத்தியாரிடம் இவனை நன்றாக அடியுங்கள். இரண்டு கண்களை மட்டும் வைத்துவிட்டு தோலை உரித்துவிடுங்கள், அப்போதுதான் சொன்னபேச்சைக் கேட்பான், நன்றாகப் படிப்பான் என்றார். அப்போது வாத்தியார் கொடுக்கின்ற அடியே தேவலாம் என நினைத்தேன்.
எங்கள் தாத்தா, "நவசக்தி", "நாத்திகம்" ஆகிய நாளிதழ்களின் வாசகர். அவ்வப்போது சிலவற்றைப் படித்துக் காட்டுவார். அந்த வாசிப்பை பார்த்தே எனக்கு நாளிதழ் வாசிப்புப் பழக்கம் தோன்றியது.
சினிமாவுக்குப் போகக்கூடாது, ரேடியோ கேட்கக்கூடாது, என்பன போல பல கண்டிஷன்கள். தாத்தாவுக்குத் தெரியாமல் அப்பா சினிமாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். திரும்பியபின் இருவரும் திட்டு வாங்குவோம். தாத்தா இருந்தவரை எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. சைக்கிளும் கிடையாது.
ஆற்றில் குளிக்க ஆசையாக இருக்கும். ஆனால் ஆற்றில் போனால் நீச்சல் தெரியாமல் மூழ்கிவிடுவேன் எனப் பயந்து ஆற்றுக்கு அனுப்ப மாட்டார்கள். என் நண்பர்கள் அனைவரும் நீச்சல் தெரிந்தவர்கள். நானும் ஆசையாகக் கேட்பேன், விடமாட்டார். அதனால் எனக்கு நீச்சல் கற்கமுடியாமல் போனது.
வெளியே அழைத்துச்செல்லும்போது பெரிய வீடுகளைக் காட்டி, நீ பெரியவனாகி நன்றாகச் சம்பாதித்து இதுபோல வீடு கட்ட வேண்டும் என்பார். முடிந்தவரை கடன்வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.
பாசத்தின் வடிவம் எங்கள் ஆத்தா (பிச்சாரம்மாள்). தாத்தாவைப் போலவே கண்டிப்பு இருந்தாலும் பாசம் அதிகமாகவே இருக்கும். தாத்தா அடித்து வீங்கியிருக்கும் காயங்களுக்கு மஞ்சப்பத்து போடுவார். சில சமயங்களில் சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுப்பார். சின்ன கூடத்தில் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு கால்களை முற்றத்தில் தொங்கவிட்டுக்கொண்டு, முற்றம் வழியாக வானத்தைப் பார்த்தால் நிலா வெளிச்சம் நன்றாகத் தெரியும். நல்ல நல்ல கதைகள் கூறுவார். அடிக்கடி புத்தி கூறுவார். கூடத்தின் நடுவிலோ, நிலைப்படியிலோ அமர்ந்துகொண்டு நகம் வெட்டக்கூடாது, வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது, பெண் பிள்ளைகள் முடியை விரித்துப்போட்டுக் கொண்டு வீட்டில் உட்காரக்கூடாது என்பார்.
எந்த வேலையை ஆரம்பித்தாலும் என்னை வைத்துத்தான் ஆரம்பிப்பார். பெரியவன் கைவைத்தால் நன்றாக இருக்கும என்பார். கொல்லையில் பறிக்கும் தேங்காயை வீட்டில் கொண்டு வைத்தல், வயலிலிருந்து வரும் நெல்லை குதிரில் கொட்டுதல், அரிசிப்பானையில் அரிசி கொட்டுதல், வீட்டுக்கு மளிகை சாமானுக்கு பட்டியல் எழுதுதல், மழைக்காலப் பயன்பாட்டிற்காக கொல்லை நடையின் பரணியில் சமையலுக்கான விறகை அடுக்கிவைத்தல் போன்ற வேலைகளைச் செய்துள்ளேன்.
ஒரு முறை ஆத்தாவின் தங்கை, சின்ன ஆத்தா, எங்கள் வீட்டில் வந்து தன் அக்காளிடம் (என் ஆத்தாவிடம்) வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டே வீட்டுக்கு வந்த மருமகள் குளித்துவிட்டு தலைவிரி கோலமாக நடுவீட்டில் உட்கார்ந்திருக்கிறார், சொன்ன பேச்சைக் கேட்பதில்லை என்று அழுதார். அவருடைய வீட்டில் குலதெய்வம் இருந்தது. செவ்வாய், வெள்ளியில் பூசை போடுவார்கள். சிவராத்திரியின்போது சிறப்புப்பூசை உண்டு. அமைதியாக இருக்கும் குடும்பத்தில் இவ்வாறான ஒரு பூகம்பத்தைம் எங்கள் ஆத்தாவால் நம்பமுடியவில்லை. பின்னர் அங்கு வந்து புத்தி சொல்வதாகக் கூறியது நினைவில் உள்ளது.
ஓட்டு இடுக்குகளில், தாழ்வாரத்தில், உத்தரத்தில், ஏதாவது சிந்தனையில் இருக்கும்போது கண்களுக்கு ஒட்டடை தெரிந்தால் உடனே விளக்குமாற்றை எடுத்து அதனை ஆத்தா தட்டிவிடுவார்கள். வீட்டில் ஒட்டடை இருக்கக்கூடாது, அவ்வாறு இருந்தால் தரித்திரம் என்பார்கள்.
விசிறியை எப்போதும் மோட்டுவளையில் செருகி வைத்திருப்பார்கள். வெயில் காலத்தில் அது மிகவும் உபயோகமாக இருக்கும்.
தாத்தா, ஆத்தாவுடன் வெளியே நடந்துபோகும்போது ஏதாவது கதையோ, புத்திமதியோ கூறிக்கொண்டேதான் வருவார்கள். அவர்கள் அவ்வாறு கூறும்போது எங்கள் கவனம் சிதறாமல் உன்னிப்பாகக் கவனிக்கிறோமா என்று பார்ப்பார்கள். பனியில் வெளியில் சென்றால் காதுகளை மூடி மப்ளர் போல துணியைக் கட்டிக்கொள்ளவேண்டும்.
குளித்துவிட்டு, திருநீறு பூசிக்கொள்ளவேண்டும் என்பது எங்களுக்கான அன்றாட கடமைகளில் ஒன்று. நெற்றி மொட்டையாக இருக்கக்கூடாது, பெண் பிள்ளைகள் பொட்டினைத் தெரியும்படி அழகாக வைக்கவேண்டும் என்பார்கள். வீட்டில் வெட்டப்பட்ட நகமோ, முடியோ கண்ணில் பட்டால் திட்டுவார்கள். பூமி அதிருமபடி நடக்கக்கூடாது என்பார். கை காயும் வரை சாப்பிடக்கூடாது என்பார்கள். அவ்வாறே சீக்கிரம் குளித்துவிட்டு வரவேண்டும் என்பார்கள்.
ஆத்தாவோ, தாத்தாவோ கண்டிக்கும்போதோ அதட்டும்போதோ எங்கள் அப்பா, அம்மா, அத்தை யாரும் வந்து குறுக்கே வந்து தடுக்கமாட்டார்கள், குழந்தைகளின் நலனுக்காகத்தானே என்று இருந்துவிடுவார்கள். அவர்களுடைய கண்டிப்பைப் பற்றி அப்பா, அம்மா, அத்தையிடம் நாங்கள் எதுவுமே சொல்லமாட்டோம். சொல்லவேண்டும் என்ற எண்ணமும் இருக்காது.
அவர்கள் எங்களை வளர்ந்த ஒருவகையான கட்டுப்பாடானது பிற்காலத்தில் என் முயற்சியில் நான் பணியில் சேர்ந்து, வெளியூர்களில் பணியாற்றியபோது தொடர்ந்தது. பணிநிறைவு பெற்று, இன்றுவரைகூட அந்தக் கட்டுப்பாடானது என்னை நெறிப்படுத்துவதை உணர்கிறேன். அந்த உத்தியானது நான் செய்வது சரியா என்று சிந்தித்துச் செய்யுமளவிற்கு ஒரு பக்குவத்தை என்னுள் உண்டாக்கியிருந்தது. என்னையும் அறியாமல் அவர்களுடைய அந்த கட்டுப்பாடு எனக்கு ஓர் அரணாக இருந்தது. இன்னும் இருக்கிறது.
எனக்கு நினைவு தெரிந்துதான் வீட்டில் பேன் போட்டார்கள், ராலிபேன் என்று நினைவு. தாத்தா இருக்கும்வரை எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. அவ்வாறே சைக்கிளும் இல்லை. வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டில் ரேடியோ கேட்போம். அவசர வேலைக்கு அவர்களிடம் சைக்கிளைக் கேட்டு வாங்கிக்கொள்வேன். எங்கும் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழல்.
எங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் கும்பேஸ்வரர் தெற்கு வீதியில் படிதாண்டா பரமேஸ்வரி கோயிலை அடுத்து இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வார்கள். (அரயூர் சுப்பிரமணிய உடையார் மருந்தகம் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை) அல்லது அங்கே அருகேயுள்ள டாக்டர் ஹலிலுல்லா ஆஸ்பத்திரிக்கோ, கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருந்த டாக்டர் பாக்கியம்பிள்ளை ஆஸ்பத்திரிக்கோ அழைத்துச்செல்வார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தென்னை மட்டையைப் பிடித்து விளையாடியபோது என் தலையில் தென்னை மட்டை விழுந்து, நான் மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன். பாக்கியம்பிள்ளை டாக்டரிடம் அழைத்துச்சென்று தையல் போட்டார்கள். தலையில் முடியுடன் சிறிது சதை தென்னையோலையில் ஒட்டியிருந்ததாகக் கூறினார்கள்.
தாத்தாவிற்கு உடல் நலம் சரியில்லை என்றால் சிங்காரம் செட்டித்தெருவில் உள்ள ஜெகதீசன் சித்தப்பா வீட்டில் சென்று போன் செய்யச் சொல்வார்கள். விஜயலட்சுமி டாக்கீஸ் எதிரேயிருந்த டாக்டர் எம்.கே.எஸ். அவருடைய காரில் எங்கள் வீட்டில் வந்து தாத்தாவிற்கு சிகிச்சை எடுத்ததைப் பார்த்துள்ளேன்.
தாத்தாவின் பழக்கம் காரணமாக என் மகன்களுக்கும். மனைவிக்கும் அந்த பழக்கத்தினை உண்டாக்கினேன். நாளிதழில் வரும் செய்திகளைப் படித்து அது பற்றி உரையாடுவது என் வழக்கம். நாளிதழ் வாசிப்பின் மூலமாகக் கிடைக்கும் பலன் மதிப்பிட முடியாததாகும். இன்று வரை தொடர்ந்து நாளிதழ்களைப் படித்து வருகிறேன்.
பெரியவர்கள் நமக்கு நல்லதைத் தான் சொல்வார்கள், செய்வார்கள் என்று புரிந்துகொள்ள சற்றே தாமதமானாலும் பிற்காலத்தில் அதனை முழுமையாக உணர்ந்து அதற்கான நல்ல பயனை நான் பெற்றுள்ளதை உணர்கிறேன்.

No comments:
Post a Comment