கும்பகோணத்தில் கோயில்களையே பார்த்து வளர்ந்த எனக்கு திருவையாற்றை மையமாகக் கொண்டுள்ள சப்தஸ்தானத் தலங்களைப் பற்றி அறிந்ததும் அங்கு செல்லவும், அதனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவும் எழுந்த ஆவல் 2004இல் நிறைவேறியது. அக்கோயில்களுக்கு நேரில் சென்றும், தரவுகளைத் திரட்டியும் நான் எழுதிய "சப்தஸ்தானத் தலங்கள்" என்ற கட்டுரை மகாமகம் சிறப்பு மலர் 2004இல் வெளியானது. இம்மலரின் மலர் பதிப்புக்குழுவில் வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியின் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் பணியாற்றியது நினைவில் நிற்கும் அனுபவமாகும்.
2009. மேற்படி கட்டுரையின் மூலமான தொடக்கமானது பின்னர் புதுதில்லி, நேரு டிரஸ்ட் உதவியுடன் தஞ்சாவூர் மாவட்ட சப்தஸ்தானக் கோயில்களும் விழாவும் என்ற தலைப்பில் ஒரு திட்டம் மேற்கொள்ள துணைபுரிந்தது. மேற்படி கட்டுரையை இன்னும் மேம்படுத்தி, மறுபடியும் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று திட்டத்தை நிறைவேற்றி அந்நிறுவனத்தில் அளித்தேன். இவ்வகையில் சப்தஸ்தானத் தலங்கள் என்னை ஈர்த்த இடங்களாயின.
2011. வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள் புதுதில்லி, நேரு டிரஸ்ட் மூலமாக சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் என்ற தலைப்பில் திட்டத்தை மேற்கொண்டபோது அதற்கு நெறியாளராக இருந்த வாய்ப்பு கிடைத்தது.
2014. கோயில்கள் தொடர்பான கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தபோது .கும்பகோணம், சக்கராப்பள்ளி, மயிலாடுதுறை, கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறான சப்தஸ்தான தலங்கள் இருப்பதை அறிந்தேன். இத்தலங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து, உரிய செய்திகளைத் திரட்டி விக்கிப்பீடியாவில் சப்தஸ்தானக் கோயில்கள் என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.
அவ்வகையில் சப்தஸ்தானத் தலங்களைப் பற்றி மகாமகம் மலரில் எழுதிய கட்டுரை பின்னாளில் இரு திட்டங்களை மேற்கொள்ளவும், விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளைத் தொடங்கவும் நல்ல ஆரம்பமாக அமைந்தது.











No comments:
Post a Comment