01 June 2026

தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்: வாழ்க...வளர்க...

கும்பகோணத்தில் நேற்று (31.5.2026)  "தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்" அமைப்பின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. அமைப்பைத் தொடங்கிவைத்து தலைமையுரை ஆற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். அமைப்பினைத் தொடங்கிவைப்பதைக் குறிக்கும் வகையில் பதிவேட்டில் முதல் கையொப்பமிட்டேன்.

திரு எஸ்.வி.சங்கரும், திரு க.மனோகரனும் முன்னிலை வகிக்க, திரு கௌரேஇ கணேசன் வரவேற்புரையாற்ற, திரு செருகுடி செந்தில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நூல்கள் அறிமுகம் நடைபெற்றது. கவிஞர்களும், எழுத்தாளர்களும் தத்தம் கருத்தை முன்வைத்ததோடு  இலக்கியக்கூடலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

என்னுடைய தலைமையுரையில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். 

  • நான் பிறந்து, வளர்ந்த கும்பகோணத்தில் தமிழ் ஊற்று இலக்கியக்கூடல் அமைப்பினைத் தொடங்கிவைத்ததை எனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
  • பள்ளிக்காலத்தில் படிப்பு, பள்ளி என்றாலே நடுங்கும் அளவிற்கு இருந்த என்னை ஓர் ஆய்வாளனாக உயர்த்திய பெருமையுடையது எண்ணற்ற எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும், கவிஞர்களையும் உருவாக்கிய கும்பகோணமாகும். 
  • கட்டடம், சிற்பம் போன்ற கலைகளில் புகழ்பெற்ற இவ்வூரின் அழகு கலைத்தன்மை வாய்ந்ததாகும். அச்சூழலில் வளர்ந்து வாழ்வோருக்கு இயற்கையாகவே அழகியல் ரசனை இருப்பதை உணரமுடியும். அந்த அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன். அதற்கு ஆரம்பமாக தேணுகா போன்றோரின் நட்பு பெரிதும் உதவியது.
  • கடந்த 50 ஆண்டுகளாக தி இந்து நாளிதழின் வாசகராக இருக்கின்ற என்னுடைய எழுத்துப்பணியானது வாசகர் கடிதத்தில் தொடங்கி, சிறுகதைகளில் வேரூன்ற ஆரம்பித்தது. ஆய்வுத்துறையில் தடம் பதித்தபின்னர் என் கவனமானது களப்பணி நோக்கி திரும்பியது. வரலாற்றறிஞர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், கும்பகோணம் சேதுராமன், சோ.ந.கந்தசாமி உள்ளிட்டோரின் வாழ்த்துகளுடன் தொடர்கின்ற ஆய்வின்போது பல புத்தர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்கிப்பீடியாவிலும், வலைப்பூக்களிலும் சுமார் 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10 நூல்கள் என்ற வகையில் எழுத்துப்பணி தொடர்கிறது.
  • கும்பகோணம் தொடர்பாகவும் மகாமகம் தொடர்பாகவும் விக்கிப்பீடியாவிலும், என் வலைப்பூவிலும் கட்டுரைகளை எழுதியதோடு, விழா நடைபெற்றபோது கும்பகோணம் வந்து நேரடியாக புகைப்படமெடுத்து அவற்றை என் பதிவுகளில் இணைத்துள்ளேன்.
  • என் ஆய்வின் முன்னோடியான வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் என்னுடைய ஆங்கிலக்கட்டுரை இடம்பெற்றது எனக்கு மன நிறைவைத் தந்த அனுபவம்.
  • அனைத்தையும் வரும் தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கத்திலும் ஆவணப்படுத்துவதில் முழு கவனம் செலுத்துகிறேன். 
  • எனக்கு முன்பாக பேசிய பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி கும்பகோணம் படைப்பாளிகள் பற்றி தான் கொணர்ந்த தொகுப்பினைப் பற்றிப் பேசினார். அவருடைய முயற்சி போற்றத்தக்கதாகும். அவர் அடுத்து கொணரும் தொகுப்பில் அடிக்குறிப்பிலாவது என் பெயர் இடம்பெறவேண்டும் என்பதே என்னுடைய ஆவல். 
  • தமிழ் ஊற்று இலக்கியக்கூடல் என்பதானது ஓர் அரிய முயற்சி. இதனை நிறுவியுள்ள திரு செல்வகுமார் நிகழ்வுகளைத் தொடர்ந்து சீராக நடத்தி, நிகழ்வுகளை  உரிய முறையில் பதிவு செய்து  ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும். இளம் கவிஞர்களையும், படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்துதல், நூல்களை அறிமுகப்படுத்துதல், மாணவர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என்ற நிலையில் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் நிகழ்வுகளை நடத்தி மென்மேலும் வளர வாழ்த்துகள். 
  • ஒரே நிகழ்வில் பெரும்பாலான இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஓர் அரிய வாய்ப்பாகும். ஒவ்வொவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றி. 

நிறைவாக தமிழ் ஊற்று இலக்கியக்கூடலில் நிறுவனர் திரு மா.செல்வகுமார் நன்றி கூறினார்.   




(பதிவாளர் என்பதை உதவிப்பதிவாளர் என்று வாசிக்கவேண்டுகிறேன்)











-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழ் ஊற்று இலக்கியக்கூடல், கும்பகோணம்
-------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. சிறப்பான நிகழ்ச்சி

    ReplyDelete